கனடாவில் கேள்விக்குறியாகும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் - என்ன நடக்கிறது?

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி
படக்குறிப்பு, கனடாவில் சர்வதேச மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
    • எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கனடாவில் முதுகலைப் பட்டப் படிப்பு முடித்த சர்வதேச மாணவர்களுக்கு, அந்நாட்டில் 18 மாதங்கள் தங்கியிருக்க உதவும் முதுகலைப் பட்டப் பணி அனுமதித் திட்டத்தைக் கனடா அரசு நிறுத்தியிருக்கிறது. அதேசமயம் கனடா குடியுரிமை கோரி சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன. இதனால் தங்கள் ‘கனடா கனவு’ மங்கி வருவதாக, அங்கிருக்கும் பல இந்திய மாணவர்கள் கூறுகின்றனர்.

"இந்தியாவில் வசிக்கும் போது கனடாவைப் பற்றி நான் நினைத்தது உண்மையாகவில்லை. இங்கு வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மோதலும் பதற்றமுமாக உள்ளது."

இவை ஜஷன்பிரீத் சிங்கின் வார்த்தைகள். கனடா முதுகலைப் பட்டதாரி பணி அனுமதி காலாவதியாகிவிட்டதால் தற்போது அவர் கவலையடைந்துள்ளார்.

ஜஷன்ப்ரீத் சிங் இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு 2019-இல் ஒரு சர்வதேச மாணவராகக் கனடாவுக்குச் சென்றார்.

படிப்பை முடித்தபிறகு அவருக்கு மூன்று வருட முதுகலைப் பட்டதாரி பணி அனுமதி கிடைத்தது. அவருடைய நிரந்தரக் குடியுரிமைக்கான விண்ணப்பம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுதான் அவரது தற்போதைய கவலைக்குக் காரணம்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தான், ஒன்டாரியோவில் கிச்சனரில் உள்ள கல்லூரியில் பிசினஸ் மார்க்கெட்டிங் படித்ததாக வின்னிபெக்கில் இருந்து பிபிசி பஞ்சாபியிடம் பேசிய ஜஷன்ப்ரீத் சிங் கூறினார்.

இரண்டு வருடப் படிப்பை முடித்த பிறகு அவருக்கு மூன்று வருட முதுகலைப் பணி அனுமதி கிடைத்தது.

ஜஷன்பிரீத் சிங் நிரந்தரக் குடியுரிமை பெறும் நோக்கத்துடன் 2022-இல் வின்னிபெக்கிற்கு வந்தார்.

ஒரு வருடம் இங்கு பணியாற்றிய பிறகு, கனடா மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program - PNP) கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கான விண்ணப்பத்தை அவர் சமர்ப்பித்துள்ளார். அது இன்னும் பரிசீலனையில் உள்ளது.

உண்மையில் கனடாவின் இந்தத்திட்டம் பல சர்வதேச மாணவர்களுக்கு உயிர்நாடியாகச் செயல்பட்டது.

இதன் மூலம் அவர் கனடாவின் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும். இது தவிர, எக்ஸ்பிரஸ் என்ட்ரி (திறன்சார் பணியாளர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கா திட்டம்) மூலமும் கனடா குடியுரிமை பெறப்படுகிறது.

"பிரச்னை என்னவென்றால், என் பணி அனுமதி காலாவதியாகிவிட்டது. நிரந்தரக் குடியுரிமைக்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் என் எதிர்காலம் பற்றி கவலையாக உள்ளது,” என்று ஜஷன்ப்ரீத் சிங் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான ஒதுக்கீட்டை நிர்ணயித்துள்ளது. (சித்தரிப்புப் படம்)

கவலையில் இருக்கும் இந்திய மாணவர்கள்

ICEF Monitor என்பது சர்வதேச கல்வித்துறையை ஆய்வு செய்யும் ஒரு அமைப்பாகும்.

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்த அமைப்பின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சுமார் 10.4 லட்சம் சர்வதேச மாணவர்கள் படிப்பு அனுமதி மூலம் கனடாவை அடைந்ததாக இந்த அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டை விட 29% அதிகமாகும்.

6 மாதங்கள் முதல் முதுகலை பட்டம் வரையிலான படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கனடாவிற்கு வரும் மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய பாதியளவைக் கொண்டுள்ளன என்று ICEF தரவு காட்டுகிறது.

இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், நைஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

பணி அனுமதிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்ற கனடா அரசின் முடிவைத் திரும்பப் பெறாவிட்டால் இந்திய மாணவர்கள், குறிப்பாக பஞ்சாபி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏனென்றால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால்தான் பஞ்சாபி மாணவர்கள் அதிக கவலையுடன் காணப்படுகிறார்கள்.

மாணவர்கள் சொல்வது என்ன?

சமீபத்தில் கனடா நகரமான வின்னிபெக்கில், ஜஷன்ப்ரீத் சிங்கைப் போலவே தெற்காசிய பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள், காலாவதியான பணி அனுமதிகளை நீட்டிக்கக் கோரியும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒரு பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் சீனா மற்றும் பிற தெற்காசியப் பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச ஆர்வலர்களுடன் ஏராளமான இந்திய இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

ஜஷன்ப்ரீத் சிங் போன்ற ஆசியப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்கள் 'சர்வதேச மாணவர் மற்றும் வேலைத்திறன் பெற்ற தொழிலாளர்களின் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் பெயரில் பணி அனுமதி காலத்தை நீட்டிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2022-இல் வின்னிபெக்கிற்கு வந்தபோது ஒரு வருடம் இங்கு பணியாற்றிய பிறகு PNP திட்டத்தின் கீழ் தனக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது என்று ஜஷன்ப்ரீத் சிங் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

இப்போது கனடாவின் மாகாண மற்றும் மத்திய அரசு இந்தச் சட்டத்தைத் திடீரென்று மாற்றியுள்ளன. இதன் காரணமாக தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் 'கனடாவில் வாழ வேண்டும்’ என்ற கனவு மங்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பணி அனுமதி நீட்டிக்கப்படாவிட்டால், அவர் கனடாவை விட்டு வெளியேற வேண்டும், அல்லது நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் மதிப்பீடான LMIA (லேபர் மார்க்கெட் பாதிப்பு மதிப்பீடு - Labour Market Impact Assessment) எடுக்க வேண்டும். அதற்கான கட்டணம் இப்போது அதிகமாக உள்ளது.

அடிப்படையில் LMIA என்பது ஒரு குறிப்பிட்ட வேலைக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்துவதற்கு முன், எந்த ஒரு கனடா குடிமக்களும் அந்தப் பதவிக்குத் தகுதியுடையவராக இல்லை என்பதை வேலைக்கு அமர்த்துபவர் நிரூபிக்கும் சான்று. கனடா வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை (ESDC) அதைச்செய்யலாம் என்று கூறும் ஆவணம்.

கனடா குடிவரவுத்துறை கடந்த ஆண்டு முதுகலைப் பட்டதாரி பணி அனுமதியின் 18 மாத நீட்டிப்பை முடித்துவைத்தது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் கனடா அரசு 18 மாத நீட்டிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாற்றப்பட்ட விதிகள் காரணமாக பல பஞ்சாபி மாணவர்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்திய மாணவர்கள் போராடுவது ஏன்?

ஜஸ்பிரீத் சிங்கைப் போலவே வின்னிபெக்கின் மன்தீப் சிங் புல்லரும் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கிறார். புல்லர் டிரக் ஓட்டுநராக உள்ளார்.

மந்தீப் சிங் புல்லர் தற்போது பணி அனுமதியில் உள்ளார். இது அடுத்த சில மாதங்களில் காலாவதியாக உள்ளது. தனது எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

தனது வாழ்நாளின் ஏழு ஆண்டுகளைக் கனடாவில் கழித்ததாகவும், லட்சக்கணக்கான ரூபாயை அங்கு செலவழித்ததாகவும், ஆனால் இப்போதும் தனது எதிர்காலம் இருளில் இருப்பதாகவும் மன்தீப் சிங் புல்லர் கூறுகிறார்.

"என்னைபோல போராட்டப் பாதையில் செல்லும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாது. ஏனென்றால் ஏற்கனவே உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம், வரி மற்றும் இதர செலவுகள் காரணமாக அவர்கள் பெரும் கடனில் சிக்கித் தவிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் வசிக்கும் பிக்ரம் சிங்கும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார். அவரது மூன்றாண்டு முதுகலை பணி அனுமதி காலாவதியாக உள்ளது.

"2019-இல் பல லட்சம் ரூபாய் செலவழித்து ஒரு சர்வதேச மாணவராக நான் கனடா வந்தேன். படிப்பை முடித்து, வரி செலுத்தி, நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை," என்று பிக்ரம் சிங் தெரிவித்தார்.

கனடாவில் மாணவர்கள் மீதான சுரண்டலுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வரும் 'யூத் சப்போர்ட் நெட்வொர்க்' என்ற அமைப்புடன் பிக்ரம் சிங் தொடர்புடையவர்.

கடந்த வாரம் ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் ஒரு பேரணியை நடத்தியதாகவும், இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் என்றும் அவர் கூறினார். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலைப் பட்ட வேலை அனுமதி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கனடாவின் அரசியல் தலைவர்களிடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பிக்ரம் சிங் தெரிவித்தார்.

மாணவர்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்த மாத இறுதி வாரத்தில் கனடா முழுவதும் அரசு கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

"முன்பு, மாணவர்களுக்கு மூன்று ஆண்டுப் பணி அனுமதியின் போதே நிரந்தரக் குடியுரிமை கிடைத்துவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கனடா லட்சக்கணக்கான கல்வி அனுமதிகளை வழங்கியது. ஆனால் நிரந்தரக் குடியுரிமைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக அதைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது,” என்கிறார் பிக்ரம் சிங்.

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி
படக்குறிப்பு, முதுகலைப் பட்ட பணி அனுமதி வழங்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்

நாடு கடத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய பயம்

முதுகலைப் பட்டப் பணி அனுமதி காலாவதியாகும் இளைஞர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

முதுகலைப் பட்டப் பணி அனுமதி அதிகரிக்கப்படாவிட்டால் தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேறு மாற்று வழி ஏதும் இருக்காது என்று பிக்ரம் சிங் தெரிவித்தார்.

“அத்தகைய சூழ்நிலையில், சிலர் தஞ்சம் கோருவார்கள். சிலர் எல்.எம்.ஐ.ஏ ஆவணங்களைப் பெற முயற்சிப்பார்கள். இதன் விளைவாக அவர்கள் பொருளாதார மற்றும் மனக் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

கனடாவில் சட்டவிரோதமாகத் தங்குவது மூன்றாவது வழி என்று அவர் குறிப்பிட்டார்.

கனடாவில் ஏற்கனவே வேலை கிடைக்காத பிரச்னையை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இரண்டாவதாகப், பணி அனுமதிக் காலத்தை நீட்டிக்கப் போராட வேண்டியுள்ளது, என்றும் அவர் கூறுகிறார்.

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

நிபுணர்களின் கருத்து

முதுகலைப் பட்டப் பணி அனுமதிக் காலத்தை மூன்றிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கக்கோரி 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கனடா நாடாளுமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் அரசு எதையும் செய்யவில்லை என்றும் கனடாவின் குடியேற்ற நிபுணர் கன்வர் சுமீத் சிங் சிரா தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் பணி அனுமதி காலாவதியாகிவிடும் என்றும் அவர்களின் எதிர்காலம் என்ன என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"தற்போது முதுகலைப் பட்டப் பணி அனுமதிச்சிக்கலை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு 2022-23ல் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன," என்று கன்வர் சுமீத் சிங் சிரா கூறினார்.

"2023-இல் கனடா 10 லட்சம் சர்வதேச மாணவர்களுக்குப் படிப்பு அனுமதிகளை வழங்கியது. ஆனால் அதற்கேற்ப குடியிருப்பு வசதிகளை வழங்கவில்லை, நிரந்தர குடியுரிமை ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை. அதன் விளைவு இப்போது அனைவருக்கும் முன்னால் உள்ளது,” என்கிறார்.

பெரும்பாலான மாணவர்கள் கனடா குடியுரிமை பெறும் மனநிலையுடன் இங்கு வந்துள்ளனர் என்றும் அதன் காரணமாகவே வீதியில் இறங்கி அரசின் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

கனடா வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க ஒரு நிலையான எண்ணை அறிவித்துள்ளது. இதன் கீழ் 2024-இல் 4.85 லட்சம் பேருக்கும், 2025-இல் 5 லட்சம் பேருக்கும் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

இதில், தஞ்சம் புகுவோர், மாணவர்கள், பாயிண்ட் சிஸ்டம், மற்றும் பிற வகைகளும் அடங்கும்.

இந்த 5 லட்சத்தில், 'பொருளாதாரத் திட்டத்தின்' ஒதுக்கீடு 3 லட்சம். இதில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் கனடாவில் படிக்கும் மாணவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறுகிறார்கள், என்று கன்வர் சுமித் சிங் சிரா குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு எல்.எம்.ஐ.ஏ, சுற்றுலா விசா, மற்றும் மேலதிக படிப்புகளுக்கான மாற்று விருப்பங்கள் இருந்தாலும், இவை அனைத்திலும் பல்வேறு சவால்கள் உள்ளன என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

கனடாவின் முடிவால் ஆயிரக்கணக்கான பஞ்சாபி மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பணி அனுமதி காலாவதியாகும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது.

மெளனம் காக்கும் கனடா அரசு

இருப்பினும் 2024-ஆம் ஆண்டு மே மாதம் மனிடோபா அரசு, சுமார் 6,700 பணியாளர்களின் பணி அனுமதியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தது.

ஆனால், பணி அனுமதி காலாவதியாக இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது.

மனிடோபா மாகாண அரசு பணி அனுமதிகளை நீட்டிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி அதைச் செயல்படுத்தியது.

பணி அனுமதி நீட்டிப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மனுவிற்கு 2024-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி பதிலளித்த கனடாவின் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை, கனடாவில் இரண்டு ஆண்டுகள் படிப்புக்கு பிறகு மூன்று வருடப் பணி அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தது.

ஆனால் கோவிட் தொற்றுநோய் காலத்தின்போது கனடாவில் பணியாளர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு 18 மாத வேலை அனுமதி நீட்டிப்புத் திட்டம் ஒரு தற்காலிகக் கொள்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.

ஆனால் இந்தத் திட்டத்தைக் கடந்த ஆண்டு அரசு நிறுத்தியது.

2024-இல் முதுகலைப் பணி அனுமதி காலாவதியாகும். கனடாவில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் சர்வதேச மாணவர்கள் தகுதியுள்ள தனி பணி அனுமதி பெறவேண்டும். அதற்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூன்று வருட முதுகலை பணி அனுமதி காலத்தை நீட்டிக்கும் மனநிலையில் கனடா அரசு தற்போது இல்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)