நிலச்சரிவால் 200 பேர் பலி, சின்னாபின்னமான கிராமங்கள் - வயநாட்டில் என்ன நடக்கிறது? முழு விவரம்

பட மூலாதாரம், Reuters
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை150 உடல் பாகங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 88 நிவாரண முகாம்களில் 8,812 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூரல்மலையில் உள்ள 9 நிவாரண மூகாம்களில் 1,695 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏராளமானோர் தங்களது உறவினர்களை தேடி மூகாம்களுக்கும், மருத்துவமனைகளுக்கு செல்வதாக நேரில் கண்ட பிபிசி செய்தியாளர் கூறுகிறார். நிலச்சரிவு காரணமாக நொடிப் பொழுதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அதிகாலை 2-3 மணியளவில் நிலச்சரிவு
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. நேற்று (ஜூலை 29) கனமழை கொட்டிய நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கண்ணெதிரே நிலச்சரிவை கண்ட நபர்
நிலச்சரிவில் இருந்து உயிர் பிழைத்த முஸ்தபா அகமது என்கிற இளைஞர், ‘ அப்போது மணி அதிகாலை 1:40 இருக்கும் . மிகப் பயங்கர சத்தம் கேட்டது. என் வீட்டில் இருந்து 30 மீட்டர் தொலைவில் இருந்த வீடு முழுவதுமாக சரிந்து விழுந்திருந்தது. உடனே அங்கிருந்து ஓடிவிட்டேன். அப்போதிருந்து நாங்கள் தூங்கவில்லை. இந்நிகழ்வினால் சிலர் அங்கே சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்த கிராம மக்களும் சிக்கியுள்ளனர். என்னை மீட்புக்குழுவினர் மீட்டனர். இப்போது தான் நிம்மதியாக உணர்கிறேன்." என்று ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்
மேப்பாடியில் இருந்து முண்டகை மற்றும் சூரல் மலை செல்வதற்கான சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்துள்ளன. பாலம் ஒன்று முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பாலம் அடித்துச் செல்லப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு சிறிய குழு ஒன்று சென்றடைந்துள்ளது. மேலும், நிறைய உதவிகள் தேவைப்படும்' என மாநிலத்தின் உயர்மட்ட அதிகாரி வி.வேணு கூறினார்.

பட மூலாதாரம், Defence PRO
புதிய பாலம்

பட மூலாதாரம், Defence PRO, Kochi
முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பொறியாளர் பிரிவு ஈடுப்பட்டு வருகிறது. இன்று நண்பகலுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட பிறகு முண்டக்கை பகுதியில் மீட்பு பணிகள் இன்னும் வேகம் பெறும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
முன்னதாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், வயநாடு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.
அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவு மீட்பு நடவடிக்கை பணிகளுக்காக, மக்கள் நிதியுதவி அளிக்கவேண்டும் என்றும் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டார்.
வயநாடு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேதங்களை பார்வையிட இன்று நேரில் செல்கின்றனர்.
தற்காலிக பாலம் மூலம் மீட்கப்பட்ட 700 பேர்
சூரல்மலையில் தற்காலிக பாலம் மூலம் 700 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய தீயணைப்பு அதிகாரி ராகேஷ் ‘இன்று (ஜூலை 30,2024) அதிகாலை அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 800 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தற்காலிக பாலம் அமைத்து 700 பேர் வரையிலும் மீட்கப்பட்டுள்ளனர். இன்றைக்கான மீட்புப் பணியை இத்துடன் நிறுத்த இருக்கிறோம்’ என கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், ANI
முகாம்களில் 3,069 பேர் தங்க வைப்பு
நிலச்சரிவில் காயமடைதோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணலில் புதையுண்டு போன மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3,069 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
350 குடும்பங்கள் வசித்ததாக தகவல்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்து வந்த 350 குடும்பங்கள் வசித்து வந்தனர் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், நிலச்சரிவு ஏற்பட்ட போது தோட்டத்தில் வேலை முடித்து அவர்களது கூடாரங்களில் உறங்கி கொண்டிருந்தவர்கள் ஆவர்.

பட மூலாதாரம், Getty Images
நிலச்சரிவு குறித்து உள்ளூர் மக்கள் கூறியது என்ன?
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய உள்ளூர் வாசி ரஷீத் படிக்கல்பரம்பன், ‘குறைந்தபட்சம் நள்ளிரவில் 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம், இதனால் பாலம் அடித்து செல்லப்பட்டது’ என கூறியுள்ளார்.
மற்றொரு உள்ளூர் வாசியான ராகவன் சி அருணமாலா இந்த பயங்கரமான நிகழ்வை குறித்து பேசிய போது, ‘இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர் ஒருவர் உதவி கேட்டு கூச்சலிடுவதை நான் பார்த்தேன். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடந்த சில மணி நேரங்களாக அவரை நெருங்க முயற்சித்து வருகின்றனர்’ என கூறினார்.

பட மூலாதாரம், Arun Chandra Bose
மீட்புப் பணியில் 200 ராணுவ வீரர்கள்
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்ய 200 -க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விமானப்படை உதவியுடன் வான்வழியாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்புப் பணிக்கு தயார் நிலையில் இருக்கும் கூடுதல் இராணுவ வீரர்கள்
தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இந்திய இராணுவம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. முண்டகை கிராமத்தில் இருந்து ஏறத்தாழ 150 பேர் மீட்கப்பட்டு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
ஏற்கனவே 225 இராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 140 வீரர்கள் திருவனந்தபுரத்தில் தயார் நிலையில் உள்ளனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்கள் விமானம் மூலம் குறுகிய கால அறிவிப்பில் அனுப்பப்படுவார்கள் என இந்திய இராணுவம் கூறியுள்ளது.
சிறப்பு அதிகாரி நியமனம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி சீரம் சம்பசிவ ராவை பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண செயல்பாடுகளை மேற்பார்வையிடும் சிறப்பு அதிகாரியாக நியமித்து அறிவித்துள்ளது கேரள அரசு.

பட மூலாதாரம், Defence PRO
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் இரண்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ,பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் என மத்திய வானி வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை
காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், திருச்சூர் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.
வயநாடு செல்லும் அமைச்சர்கள் குழு
நிலச்சரிவு சேதங்களை மதிப்பிட ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். வனங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று சேதங்களை மதிப்பிட்டு வருகிறார்.
அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி விரைவில் அங்கே செல்ல இருக்கிறார். மேலும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 28 வயதான காளிதாஸ் என்பவரின் உடல் நண்பகலில் மீட்கப்பட்டது. நேற்று மாலை வயநாடு சூரல்மலையில், நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லி பகுதியை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. 60 வயதான இவர், அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு ரூ.5 கோடி நிவாரண உதவி
நிவாரண உதவியாக தமிழ்நாடு ரூ.5 கோடியும், சிக்கிம் மாநில அரசு ரூ.2 கோடியும் வழங்க உறுதியளித்திருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரூ.2 லட்சம் இழப்பீடு
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சத்தை நிதி உதவியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
உதவி எண்கள் அறிவிப்பு
மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு.
மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம்.
சுல்தான் பத்தேரியில் உள்ள தாலுக்கா அளவிலான அவசர செயல்பாட்டு மையத்தை 04936 223355 (அ) 04936 220296 என்ற எண்ணிலும் அழைக்கலாம். மேலும் 6238461385 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04935 241111, 04935 240231 என்ற எண்களிலும், 9446637748 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 256100 என்ற எண்ணிலும், 8590842965, 9447097705 என்ற அலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












