பொறியியல் கலந்தாய்வில் சிறு தவறும் வாழ்க்கையையே மாற்றிவிடும் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
பொறியியல் கலந்தாய்வில் சரியான கல்லூரி, சரியான பாடப்பிரிவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதில் சிறு தவறு ஏற்பட்டாலும் அது பெரிய சிக்கலாக முடிந்துவிடும். மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
செல்வ முத்துக்குமார் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். 2009-ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். 182 கட்-ஆஃப் மதிப்பெண்கள் வாங்கியிருந்த அவர், தனக்குத் தெரிந்தவர்களிடம் தனது மதிப்பெண்களுக்குத் தகுந்த நல்ல கல்லூரிகள் என்னவென்று கேட்டு, நான்கு கல்லூரிகளின் பட்டியலைத் தயார் செய்து வைத்துக்கொண்டார்.
அப்போது பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் நடந்துவந்தது. அவரும் அவரது தமக்கையும் முதல்முறையாகப் பொறியியல் கலந்தாய்வுக்குச் சென்றனர்.
அவர்கள் ஒரு குறிப்பிட்டக் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்ய நினைத்திருந்தனர். ஆனால், புதிய இடம், பல புதிய செயல்முறைகள், கூட்டம், இவற்றையெல்லாம் முதல்முறை பார்க்கும் பதற்றம் ஆகியவற்றால், அவர்கள் தெரிவு செய்து வைத்திருந்த கல்லூரியின் கோட் (Code) நம்பருக்குப் பதில், கிட்டத்தட்ட அதே பெயரில் இருந்த மற்றொரு கல்லூரியின் கோட் நம்பரைத் தேர்வு செய்து விட்டனர்.
“நாங்கள் வெளியே வந்தபின்புதான் நாங்கள் செய்த தவறு எங்களுக்குத் தெரியவந்தது. அப்போது ஒன்றும் செய்ய இயலவில்லை,” என்கிறார் செல்வ முத்துக்குமார்.
அவர் முதலில் தேர்வுசெய்து வைத்திருந்த கல்லூரி பல ஆண்டுகளாக இருந்து வந்த சிறந்த கல்லூரி என்ற பெயரை பெற்றிருந்தது. ஆனால், அவர் வேறு வழியின்றி, தனக்குத் தவறுதலாகக் கிடைத்த கல்லூரிக்கு அட்மிஷனுக்குச் சென்ற போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
“அந்தக் கல்லூரியில் பல கட்டடங்கள் அப்போதுதான் கட்டப் பட்டுக்கொண்டிருந்தன,” என்கிறார் செல்வ முத்துக்குமார்.
தான் சேர விரும்பியக் கல்லூரியில் மெக்கானிக்கல் துறைக்கான ஆய்வுக்கூடங்கள் உட்பட அனைத்து கட்டமைப்புகளும் இருந்தன, என்கிறார் அவர். “ஆனால் நான் தவறுதலாகத் தேர்வு செய்த கல்லூரியில், அப்போதுதான் அவையனைத்தும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன,” என்கிறார்.
நான்கு வருடங்கள் இந்த ஏமாற்றத்துடனேயே மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்த செல்வ முத்துக்குமாருக்கு, அதன்பிறகும் சில பிரச்னைகள் தொடர்ந்தன. அந்தக் கல்லூரி புதிய கல்லூரி என்பதால், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு எந்த நிறுவனமும் வரவில்லை என்கிறார்.
“அதனால், நான்கு வருடங்கள் மெக்கானிக்கல் பொறியியல் படித்து முடித்தவுடன், வேலையின்றி, சென்னையில் பல நிறுவனங்களில் ஏறி இறங்கி, ஒரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டேன். அதன்பிறகு 2018-இல் ஐ.டி துறைக்கு மாறினேன். தற்போது ஹைதராபாத்தில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்கிறேன்,” என்கிறார் செல்வ முத்துக்குமார்.
நடந்த தவற்றை இப்போது திரும்பிப் பார்த்து கவலைப்படவில்லை என்று கூறும் அவர், “ஆனால் நான் அன்று சரியான கல்லூரியைத் தேர்வு செய்திருந்தால், எனக்கு மெக்கானிக்கல் துறையிலேயே நல்ல கேம்பஸ் பணிவாய்ப்பு கிடைத்து, என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் 33 வயதான செல்வ முத்துக்குமார்.

பட மூலாதாரம், Selva Muthu Kumar
தொடரும் குழப்பங்கள்
இந்தச் சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் பொறியியல் கலந்தாய்வில் இதுபோல நடக்கும் தவறுகள் தொடர்ந்தபடிதான் உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.
தற்போது பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டதாலும், கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடப்பதாலும் இதுபோன்ற தவறுகள் நடக்கும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இருக்கும் 466 பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திங்கள் (ஜூலை 29) துவங்கியிருக்கிறது. இது ஆன்லைன் முறையில் நடக்கிறது. இதில் ‘choice filling’ முறை பின்பற்றப் படுகிறது. அதாவது மாணவர்கள் தாம் சேர விரும்பும் கல்லூரியில், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளின் தேர்வுகளை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (Tamil Nadu Engineering Admission - TNEA) இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். அவர்களது கட்-ஆஃப் மதிப்பெண்கள், தரவரிசை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது தேர்வில் இருந்து இடம் வழங்கப்படும்.
பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் என்னென்ன தவறுகளைச் செய்யக்கூடும், அதில் எப்படி ஜாக்கிரதையாக இருப்பது என்பது பற்றி பிபிசி தமிழ் கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் ஆகியோரிடம் பேசியது.

பட மூலாதாரம், RajaRajan
‘கல்லூரி பற்றிய தகவல்களை கவனமாகச் சரிபார்க்கவும்’
“எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தாலும், அதன் பெயரைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், பல கல்லூரிகள் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருக்கும். அவற்றின் ‘ஸ்பெல்லிங்’-இல் மட்டும் தான் சிறிய வித்தியாசம் இருக்கும். இது நம்மை எளிதில் குழப்பிவிடும்.
அதனால், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதன் சரியான பெயர், கோட் நம்பர், மற்றும் கல்லூரி இருக்கும் மாவட்டம் ஆகியவற்றை மிகக் கவனமாகப் பொருத்திப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்” என்கிறார் கல்வியாளர் ராஜராஜன். இன்னும் சில கல்லூரிகளில், ஒரே வளாகத்தில், ஒரே நிர்வாகத்தின் கீழ் வெவ்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வரலாம், அதிலும் கவனம் தேவை என்கிறார் அவர்.
கல்வியாளர் நெடுஞ்செழியன், “இன்று ஒரே கடவுளின் பெயரில் சிறுசிறு மாற்றங்களோடு பல கல்லூரிகள் உள்ளன, இதில் உங்களுக்கு குழப்பம் வரலாம். அதனால் கூடுதல் கவனம் தேவை,” என்கிறார்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (Tamil Nadu Engineering Admission - TNEA) இணையதளத்தில் இந்தக் கல்லூரிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
'பாடப்பிரிவு தேர்வில் கூடுதல் கவனம் தேவை'
மாணவர்கள் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.
“சில மாணவர்கள், இந்தக் கல்லூரியில் இந்தப் பாடப் பிரிவு, இது இல்லையெனில் அந்தக் கல்லூரியில் இன்னொரு பாடப் பிரிவு என்று ‘வந்தால் வரட்டும்’ மனப்பான்மையில் choice filling செய்வார்கள். சில சமயம் அவர்கள் வேண்டாம் என்ற மனநிலையில் செய்திருந்த தேர்வு கிடைத்துவிடும்,” என்கிறார் ராஜராஜன்.
அதனால், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, தங்களுக்கு எது தேவையோ அந்தப் பாடப்பிரிவினை, அந்தக் கல்லூரியில் சரியாகத் தேர்வு செய்யவேண்டும், என்கிறார் அவர்.
எந்தக் கல்லூரி என்பதைக் காட்டிலும், தங்களுக்கு எந்தப் பாடப்பிரிவு வேண்டும் என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ராஜராஜன். “ஏனெனில் என்ன இருந்தாலும் மாணவர்கள் படிக்கப் போவது பாடங்களைத்தான், கல்லூரியை அல்ல,” என்கிறார்.
மேலும், எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்கிறோம் என்பதிலும் சரியான திட்டமிடல் தேவை என்கிறார் ராஜராஜன்.
உதாரணமாக, இளநிலைப் படிப்பிலேயே சிலர் ‘ஏரோநாட்டிகல்’ போன்ற மிகக் குறிப்பிட்ட பாடப்பிரிவினைத் தேர்வு செய்துவிடுவார்கள். அதன்பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் குறுகிவிடும். அதனால், இளங்கலைப் பொறியியல் படிப்புகளில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பொதுவான பாடப்பிரிவுகளைத் தேர்வுசெய்து படித்துவிட்டு, முதுகலைப் படிப்புகளில் ஏரோநாட்டிகல், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் போன்ற மிகக் குறிப்பிட்டப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், அதற்கான தேர்வுகளும் அதிகம் இருக்கும் என்கிறார் ராஜராஜன்.

பட மூலாதாரம், Nedunchezhian
‘அதிகபட்சமான தேர்வுகளை வழங்க வேண்டும்’
தற்போதைய ஆன்லைன் கலந்தாய்வு முறையில், ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகளுக்கான தேர்வுகளை உள்ளீடு செய்யமுடியும் என்பதற்கு உச்சவரம்பு இல்லை.
இந்நிலையில், மாணவர்கள் கலந்தாய்வு இணையதளத்தில் தேர்வுகளை வழங்கும் போது (choice filling), அதிகபட்சமான தேர்வுகளை வழங்கவேண்டும் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
“அதிகபட்சமான தேர்வுகளை வழங்கினால் தான் அது ‘லாக்’ ஆகும், இல்லையெனில் ஆன்லைன் சிஸ்டம் அதனை ஏற்றுக்கொள்ளாது,” என்கிறார் அவர்.
அதேபோல், ஒரு மாணவர் அதிகபட்ச priority-யை முதலில் வைத்து, 10 கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் 9-ஆவதாகத் தேர்ந்தெடுத்த கல்லூரியில் இடம் கிடத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்வது நல்லது. அதே சமயம், 1-ஆவது முதல் 8-ஆவதாக தேர்ந்தெடுத்திருந்த கல்லூரிகளில் இனிமேல் இடம் கிடைக்க வாய்ப்பிருந்தால், இதற்கு பதில் அதைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகத் தெரிவிக்கும் ‘upward flow’ முறையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.
‘100% ரிசல்ட் மட்டுமே போதாது’
ஒரு கல்லூரியைத் தேர்வு செய்யும்போது, அக்கல்லூரியின் தேர்ச்சி விகிதம் 100%-ஆக உள்ளதா என்பதை மட்டும் வைத்து அது நல்ல கல்லூரி என்று முடிவு செய்வது சரியானதல்ல, என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.
ஒரு கல்லூரியில் ரிசல்ட் தவிர, கட்டமைப்பு, கற்றுக்கொடுத்தல், வேலைவாய்ப்புகள், ஆகியவை எப்படி இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார் அவர்.
“சில சமயங்களில், 100% ரிசல்ட் பெற்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு வேலையில் அமர்த்தப்படுவதற்கான தகுதியே இருக்காது. எனவே, ஒரு கல்லூரியின் முழுமையான தரத்தை ஆய்ந்தறிய வேண்டும்,” என்கிறார் அவர்.
கல்லூரியின் தரத்தை அறிந்துகொள்வதைப் பற்றிப் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், “ஒரு கல்லூரியைத் தேர்வு செய்யும் முன், அங்கு தரமான கட்டமைப்பு உள்ளதா, ஆசிரியர்கள் உள்ளனரா, எவ்வளவு ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் போன்றவற்றை அறிந்துகொள்வது அவசியம்,” என்கிறார்.
ஆனால், இதனை எப்படி அறிந்துகொள்வது?
இதற்கு பதிலாக ராஜராஜன் மற்றும் நெடுஞ்செழியன் இருவரும் சொல்வது: “தற்போது அக்கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள், இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோரிடம் பேச வேண்டும்.”

பட மூலாதாரம், Getty Images
கலந்தாய்வு இணையதள கணக்கின் ‘பாஸ்வேர்ட்’ பத்திரம்
மாணவர்கள் தங்கள் TNEA இணையதளத்தின் லாக்-இன் (Login ) தகவல்களான பயனர் முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை யாரிடமும் தரக்கூடாது, என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
“சில முகவர்கள் மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி, அவர்களது கணக்கில் இருந்து தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளைத் தேர்வு செய்துவிடுவார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.
அதேபோல ப்ரவுசிங் சென்டர்களிலும் இந்தக் கடவுச்சொல்லைக் கொடுக்கக் கூடாது என்கிறார் நெடுஞ்செழியன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












