பூமியைப் போலவே நிலவிலும் குகையில் மனித குடியேற்றம் தொடங்குமா? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

Moon Cave

பட மூலாதாரம், NASA

    • எழுதியவர், ஜார்ஜினா ரென்னார்ட்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது நிலவின் மேற்பரப்புக்கு அடியில் கண்டுபிடிக்கப்படாத நூற்றுக்கணக்கான குகைகளுள் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நிலவில் மனிதர்களுக்கு இருப்பிடத்தைக் கட்டமைக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன. ஆனால், நிலவில் உள்ள கதிர்வீச்சு, கடுமையான வெப்பம் மற்றும் மோசமான காலநிலையில் இருந்து அங்கே குடியேறும் மனிதர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமும் நிலவுகிறது.

விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரிட்டிஷ் விண்வெளி வீரரான ஹெலன் ஷர்மன் இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், நிலவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை மனிதர்கள் 20 - 30 ஆண்டுகள் தங்குவதற்கு ஏற்ற நல்ல இருப்பிடமாக அமையலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த குகை ஆழமாக இருப்பதால், விண்வெளி வீரர்கள் உள்ளே செல்ல கயிறு கட்டி (மலையேறுபவர்கள் பயன்படுத்துவது போல) இறங்கலாம் என்றும், வெளியே வர ஜெட் பேக்குகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்பகுதியை இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் (University of Trento) சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் ஆகியோர் மேரே ட்ரன்கியூல்லிட்டாடிஸ் (Mare Tranquillitatis) எனும் பாறைப் போன்ற மட்டமான பகுதியில் ரேடார் மூலம் ஆய்வு மேற்கொண்ட போது கண்டுபிடித்தனர்.

இது பூமியில் இருந்து வெறும் கண்களில் காணும் வகையில் உள்ளது. இது 1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 தரையிறங்கிய இடத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் தெரியும் இந்த குகை வான் வெளிச்சம் கொண்டிருக்கிறது. இது மேற்புறத்தில் இருந்து சாய்ந்த நிலையில் மிக ஆழமாக நிலவில் தரைக்கு அடியில் செல்லலாம்.

இந்த குகை மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலவில் நெருப்புக் குழம்பு வழிந்தோடிய சமயத்தில் பாறையில் இருந்து ஆழமான சுரங்கப்பாதையாக உருவாகி இருக்கலாம்.

நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகைகள், பூமியில் ஸ்பெயினின் லான்சரோட் பகுதியில் அமைந்திருக்கும் எரிமலை குகைகளை ஒத்திருப்பதாக பேராசிரியர் கேரர் கூறுகிறார்.

Moon cave infographic

‘இப்படியான கண்டுபிடிப்புகளை மற்றும் அதன் புகைப்படங்களை மனித வரலாற்றில் காணும் முதல் நபர் நீங்கள் என்று உணரும் போது, இது மிகவும் உற்சாகம் அளிக்கிறது.’ என பேராசிரியர் கேரர் கூறுகிறார். ஒருமுறை பேராசிரியர் புரூசோன் மற்றும் பேராசிரியர் கேரர் இருவரும் இந்த குகை எவ்வளவு பெரியது என புரிந்துகொண்ட போது, இது நிலவில் மனித குடியேற்றங்களை அமைக்க நல்ல இடமாக அமையலாம் என்று உணர்ந்தனர்.

‘எல்லாவற்றுக்கும் மேல், பூமியில் மனித வாழ்க்கை குகைகளில் இருந்து தான் துவங்கியது. ஆகையால், மனிதர்கள் நிலவில் இந்த குகையின் உள்ளே வசிக்கலாம்’ என பேராசிரியர் கேரர் கூறுகிறார்.

50 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் நிலவில் குகைகள் இருக்கலாம் என உணர்ந்தனர். பிறகு, 2010 ஆம் ஆண்டு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்த படி அதன் மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் (Lunar Reconnaissance Orbiter) போது கேமராவில் சில பள்ளங்களின் புகைப்படங்கள் கிடைத்தன. அவை குகைகளின் நுழைவாயிலாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதினர்.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இந்த குகைகள் இத்தனை ஆழமாக இருக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த குகை குறித்து இன்னமும் முழுமையான அளவில் பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்ற போதிலும், பேராசிரியர் புரூசோன் மற்றும் பேராசிரியர் கேரர் ஆகிய இருவரின் பணியும் ஆராய்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.

‘25 செ.மீ அளவுக்கு தெளிவாக நிலவு மேற்பரப்பின் மிகச்சிறந்த புகைப்படங்களை பெற்றுள்ளோம். நம்மால் அப்போலோ தரையிறங்கிய இடத்தையும் காண முடிகிறது. ஆனால், மேற்பரப்புக்கு கீழ் என்ன இருக்கிறது என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அங்கே நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன’ என்று பிபிசியிடம் பிரான்செஸ்கோ சவுரோ கூறினார். இவர், கோள்களில் உள்ள குகைகளை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தின் குகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உதவும் எனவும் இவர் கூறியுள்ளார்.

இது செவ்வாயில் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டுபிடிப்பதற்கான கதவுகளை திறக்கும். அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் எனில், அது பெரும்பாலும் கிரகத்தின் மேற்புறத்தில் அமைந்திருந்து பாதுகாக்கப்படும் குகைகளின் உட்பகுதிகளாக தான் இருக்கும்.

நிலவின் குகைகள் மனிதர்களுக்கு பயன்படுபவையாக இருக்கலாம். ஆனால், அறிவியலாளர்கள் இது நிலவின் வரலாறு குறித்த அடிப்படை கேள்விகள் மட்டுமின்றி, நமது சூரியக் குடும்பம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம் என அழுத்தமாக கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி, சயின்டிஃபிக் ஜர்னல் நேச்சர் ஆஸ்ட்ரோனமி இல் வெளியாகி இருக்கிறது.

கிராஃபிக்ஸ் - ஜெர்ரி ஃப்ளெச்சர்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)