கான்டாக்ட் லென்ஸால் தமிழ்ப் பட நடிகைக்கு கருவிழி பாதிப்பு - உஷாராக இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
'கண்ணாடி அணிந்துகொண்டு சூடாக தேநீர் குடிப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா?'
'கண்ணாடி அணிந்திருப்பதால் கிண்டல் செய்கிறார்கள்'
'மாஸ்க்குடன் கண்ணாடி அணிந்து, மூச்சு விட்டு பார்த்தால் எங்கள் கஷ்டம் புரியும்'
'3டி படத்திற்கு வர மாட்டேன்'
- கண்ணாடி அணிபவர்கள் இப்படி புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.
கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) என்பது கண் கண்ணாடிக்கு மாற்றாகவும் அழகுக்காகவும் பலரால் பயன்படுத்தப்படும் ஒன்று. வித விதமான நிறங்களில் அவை கிடைப்பதால், அவற்றை அணியும்போது வித்தியாசமான முகத்தோற்றம் கிடைக்கிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.
ஆனால், அதே சமயத்தில் கண் கண்ணாடி அணிவதை விட கான்டாக்ட் லென்ஸ் அணிவது மற்றும் அதை பராமரிப்பது எளிதா என்றால், நிச்சயம் இல்லை. பலரும் விரும்பி அணியும் இந்த கான்டாக்ட் லென்சுகளை முறையாக கையாளாவிட்டால் பல்வேறு கண் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்ப் பட நடிகைக்கு கருவிழி பாதிப்பு

பட மூலாதாரம், jasminbhasin2806/Instagram
வானம், ஜில் ஜங் ஜக், போன்ற தமிழ் திரைப்படங்களிலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தவர் ஜாஸ்மின் பஸின். இவர் சில தினங்களுக்கு முன் கான்டாக்ட் லென்ஸ் காரணமாக தனக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதீத வலியின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கலந்துகொண்டேன். அதை அணிந்த சிறிது நேரத்தில் கண்களில் எரிச்சலும் வலியும் அதிகரித்தது. இருப்பினும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றேன். ஒரு கட்டத்தில் பார்வை மங்கத் தொடங்கியது. எனது குழுதான் மேடையில் நிற்க உதவியது." என்று கூறினார்.
நிகழ்ச்சி முடிந்து மருத்துவரிடம் சென்றபோது தனக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், மீண்டும் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருவிழி பாதிப்பு ஏற்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
சுகாதாரமற்ற கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அல்லது கைகளை முறையாக சுத்தம் செய்யாமல் அதை அணிந்தால் கருவிழி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் மருத்துவர் பத்ம பிரியா.
"பலரும் நினைப்பது போல கான்டாக்ட் லென்ஸ் என்பது கண் கண்ணாடிக்கு மாற்று மட்டும் அல்ல. கண் கண்ணாடியில் எவ்வளவு 'பவர்' வைத்தாலும் கூட இயல்பான பார்வைத் திறன் முழுமையாக கிடைக்காது. ஆனால் கான்டாக்ட் லென்ஸ் மூலம் அதைப் பெறலாம். சிலருக்கு இரு கண்களின் பவர் அளவுகள் மாறுபடும். அப்படிப்பட்டச் சூழலில் இருவிதமான பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ்களை அணியலாம், கண் கண்ணாடியில் இது சாத்தியமில்லை" என்று கூறுகிறார்.
அழகுக்காக மட்டுமே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் போக்கு இன்று அதிகரித்திருக்கும் சூழலில், கண் மருத்துவர்களின் முறையான அறிவுறுத்தல்கள் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தினால் நிச்சயமாக கண் தொடர்பான பல பிரச்னைகள் உருவாகும் என்கிறார் மருத்துவர் பத்ம பிரியா.

கான்டாக்ட் லென்ஸ் முறையாக அணிவது எப்படி?
கான்டாக்ட் லென்ஸை அதற்கான திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்து, கைகளையும் சுத்தம் செய்து விட்டு, நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரல் கொண்டு மெதுவாக கண்களில் பொருத்த வேண்டும் என்கிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ்.
"கான்டாக்ட் லென்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க வருபவர்களிடம் நாங்கள் தெளிவாக விளக்கம் கொடுத்து அனுப்புவோம். லென்ஸ் அணிந்தவுடன் ஒரு 30 வினாடிகளுக்கு எரிச்சல் இருக்கும். பின் சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் எரிச்சல் தொடர்ந்தால், லென்ஸை கழற்றிவிட வேண்டும்." என்று கூறுகிறார்
கண்டிப்பாக, கான்டாக்ட் லென்ஸ்களுக்குக்கென கொடுக்கப்பட்டிருக்கும் திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டுதான் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சீனிவாசன்.
"அந்தத் திரவத்தை ஒருமுறை லென்ஸ் கேசில் (Lens case) ஊற்றி, பயன்படுத்திவிட்டு கொட்டிவிடுவது நல்லது. சிலர் மீண்டும் மீண்டும் அதைக் கொண்டே சுத்தம் செய்வார்கள். அது மிகவும் ஆபத்து" என்று எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கான்டாக்ட் லென்ஸ் வகைகள் என்ன?
சாஃப்ட் (Soft) லென்ஸ், யூனிஃபோக்கல் (Unifocal), மல்டி ஃபோக்கல் (Multifocal), ரிஜிட் (Rigid Gas Permeable) கான்டாக்ட் லென்ஸ், என பல வகைகள் இருப்பதாகத் கூறிய மருத்துவர் பத்ம பிரியா, அதை விளக்கினார்.
"யூனிஃபோக்கல் வகை லென்ஸ் தூரத்துப் பார்வையை மட்டும்தான் சரி செய்யும். அதுவே மல்டிஃபோக்கல் லென்ஸானது தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுப்பார்வை என எல்லாவற்றையுமே சரிசெய்யும். புள்ளிக்குவியமில்குறை (Astigmatism) எனும் கண் குறைபாட்டிற்கு ரிஜிட் லென்ஸ் பயன்படுத்துவார்கள்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கண்ணில் உள்ள கருவிழிப்படலத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் கூட ரிஜிட் லென்ஸ் பயன்படுத்தி அதைச் சரிசெய்யலாம். அதேபோல நீண்ட காலம் பயன்படுத்துவதற்கும், மாதக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் பயன்படுத்தவதற்கும் கூட கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கான்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் என்னவாகும்?
குழந்தைகள் அல்லது இளம் பருவத்தினர் கைகளை முறையாகச் சுத்தம் செய்யாமல் லென்ஸ் அணியும்போது கிருமித் தொற்று ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் பத்ம பிரியா.
"அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் சில சமயங்களில், மறந்து அப்படியே தூங்கிவிடுவார்கள். இதனால் கிருமித் தொற்று ஏற்படலாம். அதுபோல, கான்டாக்ட் லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களில் மேக்கப் சாதனங்களை உபயோகிப்பதும், கண்களில் கிருமித் தொற்றை ஏற்படுத்தலாம். கான்டாக்ட் லென்ஸில் புரதம் (Protein) சேர்ந்து, கண்களில் எரிச்சல், வலி ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் அவர்.
கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது என்பதால், அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் கிருமித் தொற்று ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையை பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம் என்று கூறுகிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ்.
கான்டாக்ட் லென்ஸ்களை முறையாக கையாளாதபோது கருவிழியில் புண், அலர்ஜி மற்றும் கண்களில் கடுமையான வறட்சி ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பத்ம பிரியா.

யாரெல்லாம் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்?
"11 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாராளமாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம், ஆனால் சில வரம்புகள் உள்ளன" என்று கூறுகிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.ஜி.ராவ்.
"ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே கண்களில் வறட்சி இருக்கும். அவர்கள் குறைவான நேரம் அணிவது அல்லது தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கான்டாக்ட் லென்ஸ் அணிவது கண்களின் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும்" என்றார்.
வீட்டில் இருக்கும்போது கண் கண்ணாடியையும், பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகம் செல்லும்போது மட்டும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளவும் பலர் விரும்புகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் சீனிவாசன், "ஒருவர் அதிகபட்சமாக 8 மணிநேரம் வரை தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளலாம்" என்று கூறினார்.
கான்டாக்ட் லென்ஸ், செய்யக்கூடாதவை என்ன?

பட மூலாதாரம், Getty Images
கான்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்குவது, பட்டாசு வெடிப்பது, பிறருடைய கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவது, ஆகியவை கூடாது என்கிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.
மெட்ராஸ் ஐ (Madras eye) போன்ற கண் பிரச்னைகள் வந்தால், கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது. ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, குறைந்தது 14 நாட்கள் கழித்து அணிவது நல்லது என்கிறார் அவர்.
"நாம் கண்களை மிகவும் அலட்சியமாக கையாள்கிறோம். பலர் படிக்கும்போது அல்லது கணினி பார்க்கும்போது கண்களைச் சுருக்கி சுருக்கிப் பார்ப்பார்கள், ஆனால் கண் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். பின் பிரச்னை பெரிதாகும்போதுதான் எங்களிடம் வருவார்கள். அதேபோல அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களும் அவ்வவ்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் கண் மருத்துவர் சீனிவாசன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












