நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு

நல்ல பாம்பு விஷத்தை முறிக்கும் விலை மலிவான மருந்து - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாம்புக் கடியால் உலக அளவில் இறப்புகள் தவிர, 4,00,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நெக்ரோசிஸ் எனப்படும் திசு இறப்பு ஏற்படுகிறது.

ரத்தம் உறைவதைத் தடுக்கும் விலை மலிவான ஒரு மருந்தை பாம்பு விஷத்தை முறிப்பதற்குப் பயன்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலியா, கனடா, கோஸ்டாரிகா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

உலகம் முழுவதும் நச்சுப் பாம்புகள் கடித்து ஆண்டுக்கு சுமார் 1,38,000 பேர் இறக்கின்றனர். ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கிராமப்புறங்களில் இந்த இறப்புகள் பெரும்பாலும் நடக்கின்றன.

இறப்புகள் தவிர, 4,00,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நெக்ரோசிஸ் எனப்படும் திசு இறப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு பாம்பு கடித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் இறந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் நாகப் பாம்புகள் (Cobra) அதிகம் கடிக்கின்றன. ஹெப்பரின் எனப்படும் மருந்து நாகப் பாம்புகளின் நஞ்சில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கிறது.

எனினும் அனைத்துப் பாம்புகளின் நஞ்சையும் இந்த மருந்து முறிப்பதில்லை. ஆனால் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நஞ்சுமுறிவு மருந்துகளைவிட மிகவும் மலிவானதாகவும் எளிமையாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் இது இருக்கிறது. ஏனென்றால் தற்போதுள்ள நஞ்சுமுறிவு மருந்துகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வகையான பாம்பின் நஞ்சை மட்டுமே முறிக்கக்கூடியவை. திசுக்களின் இறப்பை அவற்றால் தடுக்க முடிவதில்லை.

ஹெப்பரின் மருந்தை நஞ்சு முறிவுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே எலிகள் மீது பரிசோதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பாம்புக் கடிக்கு எதிரான உலகளாவிய போராட்டம்

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் பேராசிரியர் கிரெக் நீலி கூறுககையில் "எங்கள் கண்டுபிடிப்பு நாகப்பாம்பு கடித்தால் ஏற்படும் நெக்ரோசிஸால் ஏற்படும் பயங்கரமான காயங்களை வெகுவாகக் குறைக்கும். நஞ்சு பரவும் வேகத்தைக் குறைக்கும். அதன் மூலும் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்” என்றார்.

"விஷங்கள் மற்றும் நச்சுகள் போன்றவற்றையும் அவற்றை ஏற்கும் மனிதத் தரப்பையும் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே மனித உடலில் நஞ்சு எப்படி தொடர்புகொள்கிறது என்பதைப் பற்றியும் அது எப்படி திசு அழிவுக்கும் இறப்புக்கும் காரணமாகிறது என்பது பற்றியும் எங்கள் ஆய்வு கவனிக்கிறது” என்கிறார் அவர்.

"வெவ்வேறு வகைப் பாம்புகளிடம் இருந்து வெவ்வேறு நஞ்சுகளை எடுக்கும்போது, ​​​​அவை மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்வதற்கான சிறிய எண்ணிக்கையிலான வழிகளே உள்ளன என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.”

"இந்த நஞ்சுகள் ஒட்டுமொத்தமாக உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு வழிகளை அடையாளம் காண முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். பின்னர் அதிக எண்ணிக்கையிலான பாம்பு வகைகளின் நஞ்சுகளை முறிக்கும் திறன் கொண்ட பொதுவான மருந்துகளை உருவாக்கலாம்.”

"நாங்கள் கண்டறிந்த புதிய நாகப்பாம்பு நஞ்சு முறிவு மருந்து, உலகின் ஏழ்மையான சமூகங்களில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்பு மற்றும் காயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய போராட்டத்தில் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்."

பாம்புக் கடியால் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் உடல் குறைபாடு

நல்ல பாம்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெப்பரின் மருந்தை நஞ்சு முறிவுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே எலிகள் மீது பரிசோதிக்கப்பட்டிருக்கிறது

இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய முன்னேற்றம் என்று கூறுகிறார் சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தியான் டு.

"ஹெப்பரின் மருந்து மலிவானது, எங்கும் கிடைக்கக்கூடியது. உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்து" என்று அவர் கூறினார்.

"வெற்றிகரமான மனித சோதனைகளுக்குப் பிறகு, நாகப்பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மலிவான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்தாக இது ஒப்பீட்டளவில் விரைவாக விற்பனைக்கு வரக்கூடும்."

"பாம்புக்கடிகள் வெப்பமண்டல நோய்களில் மிகவும் கொடியவை. குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார நாடுகளின் கிராமப்புற சமூகங்களில் இதன் சுமை அதிகம்” என்கிறார் லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் சென்டர் ஃபார் ஸ்நேக்பைட் ரிசர்ச் அண்ட் இன்டர்வென்ஷன்ஸ் தலைவர் நிக்கோலஸ் கேஸ்வெல்.

"எங்கள் கண்டுபிடிப்புகள் உற்சாகம் தருகின்றன. ஏனெனில் தற்போதைய நஞ்சுமுறிவு மருந்துகள் கடுமையான நஞ்சுக்கு எதிராகப் பெரும்பாலும் பயனற்றவை. வலிமிகுந்த வீக்கம், கொப்புளங்கள், திசு அழிவு போன்றவையும் இதில் அடங்கும். இது மூட்டு செயல்பாடு இழப்பு, உறுப்பு துண்டிக்கப்படுதல், வாழ்நாள் முழுவதும் உறுப்பு இழப்புக்கு வழிவகுக்கும்" என்கிறார் கேஸ்வெல்.

இந்தியாவில் 90% பாதிப்புக்கு காரணமாகும் 4 வகை பாம்புகள்

நாகப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால்தான் ஏற்படுகின்றன

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால்தான் ஏற்படுகின்றன.

  • கண்ணாடி விரியன்: கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.
  • நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகம்: இவை வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.
  • சுருட்டை விரியன்: இவை நீளத்தில் சிறியதாக இருந்தாலும் அதன் தாக்கும் திறன் அபாயகரமானது. இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • கட்டு வரியன்: கட்டு வரியன் பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிறப் பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

நாகப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரிய வந்தாலோ அது கடித்திருப்பது போல் உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது.

  • எந்த இடத்தில் அந்த நபரைப் பாம்பு கடித்ததோ அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும்.
  • பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.
  • பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.
  • பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி (Pressure immobilisation technique) நச்சு உடலின் பிற பாகங்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக கட்டக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது.
பாம்புக்கடி

பட மூலாதாரம், UNIMELB.EDU.AU

படக்குறிப்பு, எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றைக் கிழித்துப் பயன்படுத்தலாம்.
  • கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.
  • பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.
  • மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷன்-இல் படுக்க வைக்கவும்.

ரெக்கவரி பொசிஷன் எப்படி?

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்
  • மூச்சுப்பாதை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய தலையும் கழுத்தும் நேராக இருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும்.
  • ஒரு கையைப் பக்கவாட்டில் மேல்நோக்கியும் இன்னொரு கையை மடித்து கன்னத்தின் அருகிலும் வைக்க வேண்டும்.
  • முதலுதவி செய்பவரின் எதிர்த் திசையில் இருக்கும் பாதிக்கப்பட்டவரின் முழங்காலை 90 டிகிரிக்கு மடிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் முதலுதவி செய்யும் நபரை நோக்கி இருக்கும் திசையில், அவரது உடலைத் திருப்ப வேண்டும்.
  • மடித்துக் கன்னத்தில் வைக்கப்பட்ட கை தலைக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)