பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது? பாம்புகளை மீட்கும் இந்தப் பெண் கூறுவது என்ன?

- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 16 உலக பாம்புகள் தினமா கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளுடன் தொடர்புடைய ஒருவரைப் பற்றி இந்த நாளில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையை சேர்ந்தவர் வேதப்பிரியா கணேசன். 24 வயது முதுகலை பட்டதாரி மாணவியான இவர், வனப்பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடும் தனியார் தொண்டு நிறுவனத்தில் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.
வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு அவற்றை காட்டில் கொண்டு சென்று விடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தனது குழுவுடன் சேர்ந்து 6000-க்கும் மேற்பட்ட பாம்புகளை இவர் மீட்பதற்கு உதவியதாகக் கூறுகிறார் இவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாம்புகளைப் பற்றிய கட்டுரைகள்
கணிதத்தில் இளங்கலை பட்டம், வன உயிரியல் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது, மரைன் பயாலஜி முதுகலை படித்து வருகிறார்.
“14 வயதில் முதன்முதலாக வீட்டிலிருந்த பாம்பை மீட்டது தான் என்னுடைய முதல் முயற்சி. அதன் பிறகு பாம்பு பிடிப்பதில் பெரும் ஆர்வம் ஏற்படவே பாம்பு பிடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன்.” என்கிறார்.
பாம்புகளை மீட்கும் போது அவற்றின் தன்மையை முதலில் அறிய வேண்டும் என்கிறார். அதேபோல, பாம்புகளை மீட்கும் போது அவற்றிடம் கடி வாங்கமல் இருப்பது அவசியம் என்கிறார் வேதப்பிரியா.
பாம்புகளை மீட்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவற்றை காடுகளில் சரியான இடங்களில் கொண்டு சென்று விடுவது முக்கியம் என்கிறார்.

பிடிபட்ட பாம்பு விஷம் உள்ளதா விஷமற்றதா என்பதே தான் கற்றுக் கொண்ட முதல் பாடம் என்கிறார் அவர்.
“அப்போது தான் யாரையாவது கடித்திருந்தால், அதற்கான சரியான விஷமுறிவு மருந்துகளை மருத்துவர் வழங்க முடியும். வீட்டிற்குள் அகப்பட்ட ஒரு பாம்பை மீட்க செல்லும்போது நம்முடைய கவனம் முழுவதும் அந்த பாம்பின் மீது தான் இருக்க வேண்டும். சுற்றியுள்ள மக்களை அப்புறப்படுத்துவது அவசியம்” என்கிறார்.
மேலும், “இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருக்கின்றன. நான்கு வகையான பாம்புகள் அதிக விஷம் உள்ளதாக கருதப்படுகிறது. அவை நாகப்பாம்பு கட்டுவரியன், சுருட்டை விரியன், கண்ணாடிவிரியன். மேலும் கடல் பாம்பும் அதிக விஷம் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடலில் மிக ஆழமான பகுதியில் கடல் பாம்பு இருப்பதால் அது கரைக்கு வந்து மனிதர்களை கடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு."
"பாம்பு கடித்த இடத்தை பிளேடால் கீறுவது, அந்த இடத்தை கத்தியை வைத்து வெட்டி விடுவது, வாயை வைத்து உறிஞ்சுவது போன்றவை தவறான செயல்கள். பாம்பு ஒருவரை கடித்து விட்டால், அவரை உடனே மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்” என்று கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













