தமிழ்நாட்டிலும் சந்திபுரா வைரஸ் பாதிப்பா? எப்படிப் பரவுகிறது? மருந்து உண்டா? - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சந்திபுரா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மாவட்டச் சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குஜராத்தில் சாபர்கந்தா மாவட்டத்தில் சந்திபுரா வைரஸ் என்செஃபலிடிஸ் பரவல் குழந்தைகள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த நோய் பரவும் வேகமும், அதன் தீவிரத்தன்மையும், அதிகமான இறப்பு சதவீதமும், பொது சுகாதாரத்துறையினரிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த நோய் அறிகுறிகள் கொண்ட 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இந்த நோய்க்கு பலியாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இந்நிலையில், நான்கு வயது பெண் குழந்தை மற்றும் ஆறு வயது ஆண் குழந்தை இந்த வைரஸால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது தேசிய வைராலஜி நிறுவனம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
1. இது எந்த வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது?
சந்திபுரா வெசிகுலோவைரஸ் என்பது ராப்டோவிரிடே என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ராப்டோவிரிடே என்பது நாய்களில் ரேபீஸ், குதிரைகளில் வெசிகுலர் ஸ்டோமடிடிஸ் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பமாகும்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திபுரா வைரஸ், சந்திபுரா என்செஃபலிடிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2. இந்த வைரஸ் எந்த உறுப்பை பாதிக்கும்?
என்செஃபலிடிஸ் என்பது மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். இந்த வீக்கம் ஏதேனும் தொற்று காரணமாகவோ, அல்லது எதிர்ப்பு சக்தியின் எதிர்வினை காரணமாகவோ ஏற்படலாம். இந்தியாவில் குழந்தைகளிடம் பரவலாக ஏற்படும் ஜேபனீஸ் என்செஃபலிடிஸ் நோயும் இதே போன்று மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். மூளையில் ஏற்படும் வீக்கத்தால் பக்கவாதம், கோமா, சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படலாம்.
அதிகமான காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு, உணர்தல் செயல்பாடு இழப்பு, விரைவாக கோமாவுக்கு இட்டுச் செல்வது இந்த நோயின் அறிகுறிகள். இந்த வைரஸ் நோயால் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
3. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன் ?
சந்திபுரா வைரஸ் காரணமாக குழந்தைகளே அதிகமாக பலியாகியுள்ளனர். சிறு பிள்ளைகள் அதிகமாக வெளியில் விளையாடுவதால் அவர்கள் மணல் ஈக்களால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“பெரியவர்களை விட குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் குறைவாக இருக்கும். பொதுவாகவே ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுவது பொதுவானதாகும். எனவே வைரஸ் தொற்று காரணமாக லேசான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவர்களுக்கு அது உயிரை பறிக்கக் கூடியதாக இருக்கும்,” என்று விளக்குகிறார் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பொது மருத்துவர் அஷ்வின்.
மேலும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் இந்த வைரஸ் நோயால் தீவிர பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
4. இந்த வைரஸ் எங்கு காணப்படும்?
இது, முதலில் விலங்குகளிலிருந்து விலங்குகளுக்குப் பரவி, பின் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் zoonotic நோயாக இருந்தது. பின் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வெக்டார்கள் (vectors) எனப்படும் பூச்சிகள் பரவும் நோயாக மாறியுள்ளது.
சந்திபுரா வைரஸ் Phlebotomine எனும் ரத்தத்தைக் குடிக்கும் மணல் ஈக்களால் பிரதானமாகப் பரவுகிறது. சில நேரங்களில், ஒட்டுண்ணிகள் மற்றும் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகை உள்ளிட்ட கொசுக்களால் பரவுகின்றன.
“இந்த வைரஸ் பாதிப்பு முழுவதுமாக மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அது போன்ற பின் தங்கிய கிராமங்களில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும். தொற்று ஏற்பட்டு 72 மணி நேரத்துக்குள் உடலை ஆபத்து நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த வைரஸ். இதன் காரணமாகவும் கிராமப்புறங்களில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் முழுவதும் மணல் வீடுகளாக இருக்கும் கட்டமைப்புகள் கொண்ட பகுதிகள் மிக மிக அரிதானது, மேலும் சுகாதார வசதிகளும் மேம்பட்டுள்ளன,” என்று மருத்துவர் அஷ்வின் விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
5. இது தொற்று நோயா?
சந்திபுரா என்செஃபலிடிஸ் மணல் ஈக்கள் மற்றும் கொசுக்களால் மட்டுமே பரவும், ஒரு மனிதரிடமிருந்து நேரடியாக மற்றொருவருக்கு பரவாது. அதாவது கோவிட் போன்ற பிற வைரஸ் காய்ச்சல் பரவுவது போல், அருகில் இருப்பவரின் சளி, தும்மல், இருமல் மூலம் இந்த வைரஸ் பரவாது. சந்திபுரா என்செஃபலிடிஸ் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தை குடித்த மணல் ஈ அல்லது கொசு மற்றொருவரை கடிக்கும் போது மட்டுமே இந்நோய் பரவும்.
6. இதுபோன்ற வேறு பாதிப்புகள் தமிழ்நாட்டில் உள்ளனவா?
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அஷ்வின் “ஜேபனீஸ் என்செஃபலிடிஸ் எனும் நோய் இதே போன்று மூளையை பாதிக்கும் நோயாகும். வலிப்பு, தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு என அதே மாதிரியான அறிகுறிகளை கொண்ட இந்த நோயும் குழந்தைகளிலேயே அதிக தாக்கத்தை உருவாக்கும். இந்த நோய்க்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது,” என்கிறார்.
மேலும், "எந்த வயதிலும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், பொதுவாக ஐந்து வயதுக்கு உள்ளாக இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். இது அரசின் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய தடுப்பு மருந்துகள் பட்டியலில் இல்லை. எனினும், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் போன்றநோய் பரவல் அதிகம் உள்ள நாடுகளுக்கு செல்லும் போது தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வது அறிவுறுத்தப்படுகிறது,” என்கிறார் பொது மருத்துவர் அஷ்வின்.
7. இந்த நோய்க்கு மருந்து உண்டா?
டெங்கு, கொரோனா போன்ற பல வைரஸ் நோய்களைப் போல இந்த நோய்க்கும், வைரஸை நேரடியாகத் தாக்கும் மருந்து கிடையாது. எனவே வைரஸால் உடம்பில் ஏற்படும் அறிகுறிகளைத் தணிக்கவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
8. இந்த நோய் முதல் முறை ஏற்படுகிறதா?
1960-களில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சந்திபுரா பகுதியில் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
சந்திபுரா வைரஸ் தொற்று 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பரவியது. அப்போது குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.
9. நோய் பரவலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த நோய் பரவலைத் தடுக்கத் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
- முழு கை கால் சட்டை அணிந்து கொள்ள வேண்டும்
- கொசு விரட்டிகள், கொசு வலைகள் பயன்படுத்தலாம்
- வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்
- மனித வசிப்பிடங்களிலிருந்து 150 அடிக்குள்ளாக இருக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டும்
- சுவர்களில் இருக்கும் விரிசல்கள், ஓட்டைகளை அடைக்க வேண்டும்
10. எந்தப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தலாம்?
ஒரு சதுர மீட்டருக்கு 0.25 கிராம் என்ற அளவில், லிண்டேன் எனும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். இதனை மனித வசிப்பிடங்களிலும், கால்நடைகளின் வசிப்பிடங்களிலும் தெளிக்க வேண்டும்.
இந்த வைரஸ் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் சோதித்துப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் சந்தேகப்படும் வகையில் யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களின் ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












