உங்கள் குழந்தைகள் அதிகளவு சர்க்கரையை உண்கிறார்களா, எப்படிக் கண்டுபிடிப்பது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
குழந்தைகள் அழுகும்போதோ, அடம்பிடிக்கும்போதோ பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் உடனே சர்க்கரை அல்லது இனிப்பின் உதவியை நாடியே செல்கின்றனர்.
அதிகளவிலான சர்க்கரையை உட்கொள்வது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன், பற்களையும் சொத்தையாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், வீட்டு சமையலறையில் இருக்கும் கண்ணுக்கும் தெரியும் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட ''ஃப்ரீ சுகர்'' (Free) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையையே குழந்தைகள் அதிகம் உட்கொள்வதாக உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS-ம் கூறுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அது என்ன ஃப்ரீ சுகர்?
பாக்கெட் உணவு, பானங்கள் மற்றும் பழச்சாறில் உள்ள சர்க்கரையை ஃப்ரீ சுகர் என அழைக்கின்றனர். அதாவது பிஸ்கட், கேக், சாக்லேட், தானியத்திலிருந்து தயாரிக்கப்பட்டு பாலுடன் சாப்பிடப்படும் உணவு, சாஃப்ட் டிரிங்க், ஜூஸ் ஆகியவற்றில் உள்ள சர்க்கரை ஃப்ரீ சுகர் என குறிப்பிடப்படுகிறது.
தேன், பழச்சாறு, காய்கறி ஜூஸ் போன்றவற்றில் உள்ள இயற்கை சர்க்கரையும் ஃப்ரீ சுகர் என பிரிட்டனின் NHS கூறுகிறது. அதே சமயம் பால், பழம், காய்கறிகளில் உள்ள இயற்கை சர்க்கரை, ஃப்ரீ சுகராக கணக்கிடப்படாது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பழத்தைப் பழச்சாறாக மாற்றும்போது, சர்க்கரை உணவு செல்களில் இருந்து வெளியேறி, ஃப்ரீ சுகராக மாறுகிறது என பிரிட்டன் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
’’பழங்கள், காய்கறிகள் மற்றும் பாலில் காணப்படும் சர்க்கரைகள் நம் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை, அவை நார்ச்சத்து போன்ற கூடுதல் ஊட்டச் சத்துக்களைத் தருகின்றன. ஆனால் பழத்தைப் பழச்சாறாக மாற்றும்போது, சர்க்கரைகள் அவற்றின் செல்களில் இருந்து வெளியேறி ஃப்ரீ சுகராக மாறுகின்றன. பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இழக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்மை அறியாமல் கூடுதல் சர்க்கரையை உட்கொள்கிறோம்’’ என பிரிட்டன் ஹெல்த் பவுண்டேஷன் குறிப்பிட்டுள்ளது.
’’நீங்கள் ஒரு நேரத்தில் நான்கு ஆரஞ்சு பழங்களைச் சாப்பிட முடியாது. ஆனால் வயிறு நிரம்பிய உணர்வைப் பெறாமலே ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸை குடிக்க முடியும்’’ எனவும் உதாரணத்தைக் காட்டியுள்ளது.
மக்களால் இனிப்பு பண்டமாகப் பார்க்கப்படாத பதப்படுத்தப்பட்ட உணவில் ‘’மறைந்திருக்கும்’’ சர்க்கரையையே தற்போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்தானதாக உள்ளது. உதாரணமாக ஒரு டெபிள் ஸ்பூன் கெட்ச்அப்பில் கிட்டதட்ட 4 கிராம் (ஒரு டீஸ்பூன்) ஃப்ரீ சுகர் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
எவ்வளவு ஃப்ரீ சுகரை குழந்தைகள் சாப்பிடலாம்?
12 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் பழச்சாறு தேவையே இல்லையென்றும், அப்படிக் கொடுக்க விரும்பினால் அதிக தண்ணீரைக் கலந்த பழச்சாரை (1 பகுதி பழச்சாறுக்கு 10 பகுதி தண்ணீர்) உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம் என NHS கூறுகிறது. 5 வயது முதல் தண்ணீர் கலக்கப்படாத பழச்சாறை கொடுக்கலாம் எனவும் ஆனால், 1 கிளாசுக்கு (150மில்லி) மேல் கொடுக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பானங்கள் மூலம் நமக்குத் தினமும் கிடைக்கும் கலோரிகளில், 5 சதவீதத்தை ஃப்ரீ சுகர் தாண்டக்கூடாது எனவும், இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு சர்க்கரையே கொடுக்கக்கூடாது எனவும் ’இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்’ சார்பில் வெளியிடப்பட்ட ’இந்தியர்களுக்கான உணவு வழிமுறை’ கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
- மேலும், 4 முதல் 6 வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- 7 முதல் 10 வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- பதினோரு வயதை தாண்டிய ஒரு குழந்தை ஒரு நாளுக்கு 30கிராமிற்கு மேல் ஃப்ரீ சுகரை சாப்பிடக்கூடாது என NHS கூறுகிறது
ஆனால் , ஒரு சாதாரண சாக்லேட் பாரில் 25 கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும், 150மில்லி பழச்சாறில் 12 கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும், 330 மில்லி கோலாவில் 35கிராம் ஃப்ரீ சுகர் உள்ளதென்றும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது.
எப்படி கட்டுப்படுத்துவது?
’’தாய்ப்பால், பால், பழங்கள் போன்றவற்றில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். பெரும்பாலும் அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் குழந்தைக்கு இனிப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், சர்க்கரையைப் பிரதான உணவின் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், சர்க்கரை உள்ள பொருட்களை நொறுக்குத்தீனியாகக் கொடுக்காதீர்கள்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார்.
திராட்சை மற்றும் பிற உலர்ந்த பழங்களில் உள்ள சர்க்கரையும் பற்களில் சொத்தையை ஏற்படுத்தும் என்பதால், இவற்றை இடையிடையே சிற்றுண்டியாகக் கொடுப்பதைக் காட்டிலும் உணவோடு குழந்தைக்குக் கொடுப்பது சிறந்தது என NHS கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்குக் குறைவான சர்க்கரையை கொடுக்க வேண்டும் என பல பெற்றோர்களிடம் விழிப்புணர்வு உள்ளது என்றும் ஆனால், அந்த விழிப்புணர்வு முழுமையானதாக இல்லை என்றும் அருண்குமார் கூறுகிறார்.
‘’காலை பாலுக்கு 2 ஸ்பூன் சர்க்கரைக்கு பதில் ஒரு ஸ்பூன் சர்க்கரைதான் போட்டேன், இனிப்பு பண்டங்கள் கொடுப்பதைக் குறைத்து விட்டேன் என கண்ணுக்குத் தெரிந்த சர்க்கரையை மட்டுமே இன்னும் பல பெற்றோர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஃப்ரீ சுகர் எனப்படும் மறைமுக சர்க்கரை பற்றி இன்னும் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.''
''ஒரு நாளைக்கு ஒரு குழந்தை எடுத்துக்கொள்ளும் நேரடி சர்க்கரை மற்றும் ஃப்ரீ சுகரை கணக்கிட்டால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒரு மடங்கு அதிகமாகவே இருக்கிறது. எனவே பெற்றோர் அனைத்து பக்கங்களிலும் யோசிக்க வேண்டும்’’ என்கிறார் அருண்குமார்.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாலே பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கும் மனநிலையிலிருந்து பெற்றோர்கள் வெளிவர வேண்டும் என கூறும் மருத்துவர் அருண்குமார் அது சவால் மிகுந்தது எனவும் கூறுகிறார்.
"சமூக நிலை, சுலபமாகக் கிடைப்பது, அதீத விளம்பரம் போன்ற பல சவால்களை மீறி, மறைமுக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்துக்கள் உள்ள ஸ்நாக்ஸ்களை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது கஷ்டம்தான். ஆனால், குழந்தைகளின் நீண்ட கால உடல்நலனுக்காக மாற்று வழிகளைப் பெற்றோர் கண்டறிய வேண்டும்’’ என்கிறார் அவர்.
"'டைப்-2 எனப்படும் சர்க்கரை நோய், பொதுவாக 25-30 வயதை கடந்தவர்களுக்குத்தான் வந்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது டைப் 2 சர்க்கரை நோய் 8-10 வயதான குழந்தைகளுக்குக் கூட வந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகவும் எச்சரிக்கைக்குரிய விஷயம்.’’ என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடும் பழக்கம் குழந்தைகள் இடையே குறைந்து வருவதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
அதிக சக்கரையை உண்பதைக் கண்டறிவதற்கான அறிகுறிகள் என்ன?
அதிக சர்க்கரை சாப்பிடுவது அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஒருவரின் உடல் எடை அதிகரிக்கும். அதிக உடல் எடையுடன் இருப்பது இதய நோய், சில புற்றுநோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என NHS குறிப்பிட்டுள்ளது.
’’உடல் பருமன் அதிகமாக உள்ள குழந்தைகளின் கழுத்து மற்றும் அக்குளில் கருப்பான பட்டை தோன்றுவது, உடல் சேர்வாக இருப்பது போன்றவற்றை சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகள் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது’’ என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

பட மூலாதாரம், Getty Images
அதிக சக்கரையை எப்படி கண்டறியவது?
ஒவ்வொரு உணவு பாக்கெட்டின் பின்புறம் அந்த உணவுப் பண்டம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களில் பட்டியல் (ingredients list) இருக்கும். அதைப் படித்தால் அந்த உணவில் அல்லது பானத்தில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது (ஃப்ரீ சுகர்) என்பதை அறிந்துகொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த பட்டியலில் முதலில் எந்த பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதுவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். உதாரணமாக, பட்டியலில் முதலிடத்தில் சர்க்கரை இருந்தால், அந்த உணவு அல்லது பானத்தைத் தயாரிக்க சர்க்கரைதான் அதிகளவில் (எடை) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.
உணவில் அல்லது பானத்தில் சேர்க்கப்படும் சர்க்கரையை, கேன் சுகர், தேன், ப்ரவுன் சுகர், high-fructose corn syrup, fruit juice concentrate, fructose, sucrose, glucose, crystalline sucrose, maple, molasses எனப் பல பெயர்களில் ingredients list-ல் குறிப்பிடுவார்கள் என்றும், மக்கள் அதனையும் கவனமாகப் பார்க்க வேண்டும் எனவும் NHS கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் பின்புறம் சேர்க்கப்பட்ட பொருள்கள் பட்டியல் (ingredients list) உடன், அதில் உள்ள சத்துகள் தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த பட்டியலில் முதலில், அந்த உணவு அல்லது பானத்தில் இருந்து உடலுக்கு எவ்வளவு கலோரிகள் வரும் என்பதைக் கிலோ கலோரிகளில் (kcal) குறிப்பிட்டிருப்பார்கள்.
மேலும் சர்க்கரை, புரதம், நார்ச்சத்து, கொழுப்புகள், கார்போஹைட்ரேட், உப்பு பற்றிய தகவல்களும் அதில் உள்ளடக்கியிருக்கும். அனைத்து சத்து குறித்த தகவல்களையும் 100 கிராம் அல்லது 100 மில்லிலிட்டருக்கு கணக்கிட்டு வழங்கியிருப்பார்கள்.
ஒரு 100 கிராம் உணவு அல்லது 100 மில்லிலிட்டர் பானத்தில் 22.5 கிராமிற்கு மேல் சrக்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அதனை அதிக சர்க்கரை கொண்ட பொருள் என்றும், 5 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அதனை குறைந்த சர்க்கரை கொண்ட பொருள் என்றும் NHS குறிப்பிடுகிறது.
அரசின் புதிய திட்டம் கட்டுப்படுத்துமா?
சமீபத்தில் இந்தியாவில் பரவலாக 6000 பேரிடம் கருத்துகணிப்பு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட Healthy Snacking Report 2024-ல், 73% இந்தியர்கள் எந்த ஒரு தின்பண்டத்தை வாங்குவதற்கு முன்பு அதில் உள்ள மூலப்பொருள் பட்டியல்கள் மற்றும் சத்து குறித்து படிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் மொத்த சர்க்கரை, உப்பு, கொழுப்பு தொடர்பான தகவல்களை பெரிய எழுத்தில் காட்சிப்படுத்தும் முன்மொழிவுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் பொருளின் ஊட்டச்சத்து அளவை நன்கு புரிந்துகொள்வதற்கும், ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என எஃப்எஸ்எஸ்ஏஐ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தத்திற்கான வரைவு அறிவிக்கை பொது களத்தில் வைக்கப்படும் எனவும், அதன் மீது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முன்பக்கமும் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அளவு குறித்த தகவல்களைப் பெரிதாகக் குறிப்பிடுகின்றனர்.
சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் எடை அதிகளவிலிருந்தால் சிவப்பு வண்ணத்திலும், நடுத்தரமாக இருந்தால் மஞ்சள் வண்ணத்திலும், குறைவாக இருந்தால் பச்சை வண்ணத்திலும் முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றனர்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி அவர்களை நகர்த்த முடியும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரும், இணைப் பேராசிரியருமான ராவணக்கோமகன்.
மேலும் அவர், ''ஒரு செல்போனோ அல்லது வேறு பொருட்களோ வாங்குவதற்கு முன்பு அதுகுறித்து ஆயிரம் முறை யூடியூபில் வீடியோ பார்ப்போம் அல்லது கூகுளில் தேடுவோம். இதே அக்கறையைக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு உணவுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கும்போது பெற்றோர்கள் காட்ட வேண்டும். மேற்குலக நாடுகளில் சர்க்கரை எடையை பாக்கெட்டின் முன்பக்கம் பெரியதாகக் குறிப்பிடுவது போல, இந்தியாவிலும் அமல்படுத்தினால் மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படும். குழந்தைகள் சர்க்கரையை உட்கொள்ளும் அளவு குறையும் '' என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












