உங்கள் இதயம் தலைகீழாக அமைந்திருந்தால் என்னவாகும்? இந்த நிலையைக் குணப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
மனித உடலின் உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் அமைந்திருக்கும். எனவே, குறிப்பிட்ட நோய்களைக் கண்டறிவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, குடல்வால் அழற்சி (Appendicitis) அல்லது பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னை உள்ளவர்கள், துல்லியமாக அந்த உறுப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், சில சமயங்களில் உறுப்புகள் தவறான இடங்களில் அமைந்திருக்கும்.
இதற்குச் சிறந்த உதாரணம், 'டெக்ஸ்ட்ரோகார்டியா' (dextrocardia). இது இதயம் ஒரு அசாதாரண (வலது பக்க) நிலையில் அமைந்திருக்கும் நிலையாகும். இதில் இதயம் இடதுபுறமாக (லெவோகார்டியா நிலை) இருப்பதற்குப் பதிலாகச் சற்று வலது பக்கம் அமைந்திருக்கும். இந்த நிலை மிகவும் அரிதானது. தோராயமாக 12,000 பேரில் ஒருவர் இந்த நிலையுடன் பிறக்கிறார்.
'டெக்ஸ்ட்ரோகார்டியா’ இருப்பவர்கள் வேறேதேனும் உடல்நலப் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த நிலை இருப்பதற்கான ஒரே அறிகுறி அவர்களின் எக்கோ கார்டியோகிராமில் (ECG) வித்தியாசமான ரீடிங் (reading) பதிவாகும்.
சிலருக்கு முக்கிய உள்ளுறுப்புகள், அதாவது முழு வயிற்றுப் பகுதி மற்றும் மார்பு பகுதி தலைகீழாக அமைந்திருக்கும். இது 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ (situs inversus totalis) நிலை என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க நடிகை கேத்தரின் ஓ'ஹாரா, பாடகர்கள் டோனி ஆஸ்மண்ட், மற்றும் என்ரிக் இக்லேசியாஸ் ஆகியோர் இந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் பாடகர் ஆஸ்மண்ட் தனக்கு சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் நிலை இருப்பதை மிகவும் தாமதமாகத் தான் கண்டறிந்தார். அவருக்குத் திடீரென இடது பக்க வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு குடல்வால் அழற்சி பிரச்னை இருப்பது தெரிய வந்தது. ஆனால் பொதுவாக குடல்வால் அமைந்திருப்பது வலது பக்கத்தில். அப்போது தான் அவருக்கு 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ நிலை இருப்பது தெரிய வந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
இதயமும் நுரையீரலும் தலைகீழாக இருந்தால் என்னவாகும்?
சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் நிலை ஒப்பீட்டளவில் அரிதானது, இது 10,000 பேரில் ஒருவரை பாதிக்கிறது, அதுவும் அதிகமாக ஆண்களை பாதிக்கிறது. சிலருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மட்டும் தலைகீழாக இருக்கும். இது 'சிட்டஸ் இன்வெர்சஸ்’ என்று அழைக்கப்படுகிறது .
மனித உறுப்புகளின் இயல்பான வளர்ச்சியை உறுதி செய்வதில் பங்கு வகிக்கும் 100-க்கும் மேற்பட்ட மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் இருவரும் ஒரே மரபணுவின் தவறான நகலை (faulty copy of the same gene) குழந்தைக்கு கடத்தும்போது 'சிட்டஸ் இன்வெர்சஸ்’ நிலையுடன் குழந்தை பிறக்கிறது.
இந்த நிலையுடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் எந்த அறிகுறிகளையும் கவனிக்க மாட்டார்கள். இன்வெர்ஸ் நிலையுடன் வாழ்ந்த சிலர் சராசரி ஆயுட்காலத்தை தாண்டி நன்றாக வாழ்ந்ததாகவும், அவர்கள் இறந்த பிறகு தான் அவர்களுக்கு சிட்டஸ் இன்வெர்சஸ் நிலை இருந்தது கண்டறியப்பட்டதாகவும் சில அறிக்கைகள் உள்ளன.
மிகவும் அரிதான சூழ்நிலைகளில், சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ் உள்ளவர்களுக்கு 'லெவோகார்டியா’ (Levocardia) இருக்கலாம், இதனால் இதயம் மற்றும் நுரையீரல்கள் இடது பக்கத்தில் 'சாதாரண' நிலையில் அமைந்திருக்கும்.
'டெக்ஸ்ட்ரோகார்டியா’ மற்றும் 'சிட்டஸ் இன்வெர்சஸ் டோட்டலிஸ்’ ஆகிய உடல் நிலை கொண்டவர்களுக்கு இதயக் குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட் காலத்தை அது பாதிக்கும். மற்றபடி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பொதுவாக பற்களின் அமைப்புகள் பலருக்கு மாறியிருக்கும். சிலருக்கு மூக்கில் பற்கள் வளர்ந்து, மூக்கில் ரத்தக்கசிவு மற்றும் தொற்று போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு கண்களை சுற்றியுள்ள விழிக்குழியில் (eye socket) பற்கள் கண்டறியப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவை கண்களைச் சுற்றியிருக்கும் எலும்பில் உறுதியாக வளர்ந்திருந்தால் அவற்றைப் பிரித்தெடுப்பது கடினம்.

பட மூலாதாரம், Getty Images
குடலிறக்கம் எப்படி ஏற்படுகிறது?
சில சமயங்களில், கட்டமைப்புப் பிரச்னையால் உடல் உறுப்புகள் தவறான இடத்தில் இருக்கும்.
வயிற்றுப் பகுதியின் உள்ளே அமைந்திருக்கும் குடல் அல்லது அதனுடைய கொழுப்புச் சத்துகள் வலுவிழந்த வயிற்றுத் தசைகளில் துவாரம் ஏற்பட்டு, குடல் கீழே இறங்கிவிடும். இது குடலிறக்கம் எனப்படும்.
உதரவிதானத்தில் (diaphragm) சாதாரண துவாரங்கள் இருக்கும். இவை நாம் சுவாசிக்க உதவுகின்றன. இவை ரத்த நாளங்கள் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
உதரவிதானம் மார்புப் பகுதியில் உள்ள உறுப்புகளையும் அடிவயிற்றில் உள்ள உறுப்புகளையும் ஒழுங்கமைப்புடன் வைத்திருக்கிறது.
இருப்பினும், சில சூழ்நிலைகளில், இந்தத் துவாரங்கள் பலவீனமடையும் போது அல்லது இந்தப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது (இருமல், தும்மல் அல்லது சுளுக்கு) துவாரங்களைக் கடந்து உறுப்புகள் சற்றுக் கீழிறங்கும்.
கல்லீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகள் மார்பில் முடிவடையும்.
பொதுவாக, இரைப்பையின் ஒரு பகுதி உணவுக்குழாய் திறப்பின் மூலம் கீழிறங்கி 'குடலிறக்கம்’ ஏற்படுகிறது.
இந்த 'ஹயாடல் ஹெர்னியா' (hiatal hernia) நிலை மிகவும் பொதுவானது, 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவருக்கு இது ஏற்படுகிறது.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55% முதல் 60% வரை அதிகமாக ஏற்படுகிறது, ஆனால் ஹயாடல் ஹெர்னியா பிரச்னை ஏற்படும் பலருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. பெண்கள் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் மத்தியில் இந்த நிலை ஏற்படும்.
அதே சமயம் இந்த ஹயாடல் குடலிறக்கங்களில் ஒரு வகை மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது.
'பாராசோபேஜியல்’ குடலிறக்கங்கள் (paraesophageal hernias) வயிற்றை நெரித்து, முக்கியமான ரத்த விநியோகத்தைத் துண்டித்துவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும்.
குடலிறக்கத்தின் மற்றொரு வகை 'இன்குயினல் குடலிறக்கம்’ (inguinal hernia) ஆகும். இந்த நிலையில், திசுக்கள் அல்லது குடல் பகுதி இன்குயினல் பாதை அல்லது இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தசைச் சுவரில் பலவீனமான துவாரங்களின் வழியே கீழிறங்கும் நிலையை குறிக்கிறது.
இன்குயினல் குடலிறக்கம் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களின் வாழ்நாளில் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட 3% வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு 27% வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு, தீவிரமான குடலிறக்கம் ஏற்பட்டு, குடல் முழங்கால் வரை கீழிறங்கலாம். வயதான ஆண் நோயாளிகளுக்கு இது அரிதாக ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கர்ப்பப்பை இறக்கம்
'ப்ரோலாப்ஸ்’ என்பது பிற உறுப்புகளின் இறக்கம் காரணமாக பிற உறுப்புகளை பாதிக்கும் நிலை. உதாரணமாக பெண்களில் கருப்பை பிறப்புறுப்புப் பகுதி (vagina) வரை கீழிறங்கும்.
மிகவும் தீவிரமான நிலையில், இது பிறப்புறுப்பின் வெளிப்புறம் வரை கீழிறங்கும். இந்த நிலை கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படலாம். மேலும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தலாம்.
வயது, உடல் பருமன், அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது மற்றும் முந்தைய பிரசவங்கள் ஆகியவை கருப்பை இறக்கத்திற்கான ஆபத்து காரணிகளாகும்.
உறுப்புகள் மற்றும் உடலின் கட்டமைப்புகள் தவறான இடத்தில் இருப்பது பெரிய பிரச்னை போன்று தோன்றினாலும், இந்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர், இந்த நிலைமைகளில் பலவற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுள்ளனர். தற்போதைய மருத்துவ முறைகளில் இதுபோன்ற பிரச்னைகள் எளிதில் குணமாக்கப்படுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












