ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு எதிரொலி - அதிபர் தேர்தலில் பைடன் தரப்பின் 'எதிர்பாராத' முடிவு
- எழுதியவர், சாரா ஸ்மித்
- பதவி, வட அமெரிக்க ஆசிரியர்
டொனால்ட் டிரம்ப், தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு, முகத்தில் ரத்தத்துடன் காட்சியளிப்பது, கையை உயர்த்தி மக்களை நோக்கிக் கத்துவது, பின்னர் அவர் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டு மேடையை விட்டு வெளியேறுவது ஆகியவற்றின் அசாதாரண புகைப்படங்கள் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இடம்பெறுவது மட்டுமல்லாது, நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலின் போக்கையே மடைமாற்றக்கூடும்.
அரசியல் வன்முறையின் இந்த அதிர்ச்சியூட்டும் செயல், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாகக் கருதுவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தன.
காதிலிருந்து ரத்தம் கசிய, காற்றில் கையை உயர்த்தியவாறே செல்லும் டிரம்பின் புகைப்படத்தை தாக்குதல் நடந்தவுடன் அவரது மகன் எரிக் டிரம்ப், "அமெரிக்காவுக்குத் தேவையான போர் வீரர் இவர்தான்" என்ற வாசகத்துடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அதிபர் தேர்தலில் பைடன் தரப்பின் 'எதிர்பாராத' முடிவு

பட மூலாதாரம், Getty Images
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ஜோ பைடன், இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார்.
அதிபர் தேர்தலுக்கான தனது போட்டியாளர் டிரம்ப் குறித்து கவலை தெரிவித்தார் பைடன். இன்று இரவு அவருடன் பேசவிருப்பதாகவும் பைடன் கூறினார்.
பைடனின் தேர்தல் பிரசாரக் குழு அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டிரம்புக்கு எதிரான அதன் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தற்காலிகமாக அகற்றுவதற்கான வேலை நடக்கிறது.
இந்த நேரத்தில் டொனால்ட் டிரம்பை தாக்குவது பொருத்தமற்றது என்று பைடனின் தரப்பு நம்புகிறது. அதற்குப் பதிலாக இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதில் அது கவனம் செலுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், டிரம்புடன் அதிகம் உடன்படாதவர்கள்கூட இதைக் கண்டித்துள்ளார்கள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இந்த வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பது தங்களுக்குப் பெரிய ஆறுதல் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆனால் டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் இந்த வன்முறைக்காக பைடனை குற்றம் சாட்டி வருகின்றனர். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அதிபர் பைடன் ஒரு படுகொலை முயற்சியைத் தூண்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
பைடனின் பிரசார உரைகள்தான் இந்தச் சம்பவத்திற்கு நேரடியாக வழிவகுத்தது என்று செனட்டர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். டிரம்ப் தரப்பின் துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜே.டி.வான்ஸ் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மற்ற குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் இதேபோன்ற கருத்துகளைச் சொல்கிறார்கள். அமெரிக்க அரசியல் ஏற்கெனவே ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என பைடன் தரப்பு கூறுகிறது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், தேர்தல் களத்தில் மிகவும் அசிங்கமான ஒரு சண்டைக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதை நாம் காணலாம். அத்தகைய சண்டைகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரக் களத்தையே மறுவடிவமைக்கும் ஒன்றாக இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













