டிரம்பை 200 மீட்டர் அளவுக்கு நெருங்கி துப்பாக்கியால் சுட்ட நபர் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம், Reuters

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் மோதி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரகசிய சேவை முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே, தாக்குதல் நடத்திய நபர் ஓர் உயரமான இடத்திலிருந்து பிரசார மேடையை நோக்கிப் பலமுறை சுட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் (தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்) பார்வையாளர்களில் ஒருவரைக் கொன்றதாகவும் மேலும் இருவரை மோசமாகக் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை ரகசிய சேவை ஏஜென்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

முழுமையான அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூலை 13 அன்று மாலை சுமார் 6:15 மணிக்கு பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில், ​​துப்பாக்கி ஏந்திய சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே, உயரமான ஓரிடத்திலிருந்து இருந்து மேடையை நோக்கிப் பலமுறை சுட்டார்."

"அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் இறந்துவிட்டார். அமெரிக்க ரகசிய சேவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தச் சம்பவத்திற்கு விரைவாகப் பதிலளித்தது."

"முன்னாள் அதிபர் டிரம்ப் பத்திரமாக உள்ளார். பொதுக் கூட்டத்திலிருந்த ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார், இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எஃப்.பி.ஐ (FBI) அமைப்புக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது."

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்?

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பற்றி அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்

குடியரசுக் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தி, டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்றவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

க்ரூக்ஸ் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவை சேர்ந்தவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த நகரம் படுகொலை முயற்சி நடந்த இடமான பட்லரில் இருந்து 70 கிமீ அல்லது சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

"இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால், விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்கள் யாரிடமேனும் இருந்தால் அவை குறித்த புகைப்படங்கள் அல்லது வீடியோவுடன் இணையத்தில் பகிரவும்," என்றும் எஃப்.பி.ஐ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காணொளிக் குறிப்பு, டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தை விளக்கும் காட்சிகள்

நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகள், முன்னாள் அதிபரிடம் இருந்து 200 மீட்டருக்கும் குறைவான தொலைவில், ஒரு கட்டிடத்தின் கூரையின் மீது ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டது குறித்து பேசுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக வெளிவந்துள்ள ஏராளமான வீடியோக்கள் மூலம் அவர்கள் கூறுவது உண்மை தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு முக்கியமான காணொளியில், பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பழுப்பு நிற சுவர்களைக் கொண்ட ஒரு கிடங்கை காண முடிகிறது. அதில் துப்பாக்கியால் சுட்ட நபரின் உயிரற்ற உடல் கிடப்பது போல தெரிகிறது.

இதை கூகுள் வரைபடங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், தாக்குதல் நடத்திய நபர் இந்த கட்டடத்தின் மேல் இருந்ததை உறுதி செய்ய முடிந்தது.

அதை தற்போது அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடையிலிருந்து சிறிது தூரத்தில் தான் அந்த நபர் இருந்துள்ளார். இது பாதுகாப்புப் படையினரின் பணி குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

வெளியான காணொளிகளில் ஒன்று மேடையின் வலதுபுறத்தில் அமர்ந்திருந்த கூட்டத்திலிருந்த ஒரு நபரால் எடுக்கப்பட்டது. அப்போது பேசிக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப், "என்ன நடந்தது என்று பாருங்கள்..." என்கிறார், முதல் துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது.

இந்த நேரத்தில், ஒரு வெள்ளை சட்டை மற்றும் பேஸ்பால் தொப்பி அணிந்த நபர் சரிவதைக் காணலாம். உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், இந்த நபர் முதல் தோட்டாவால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய டிரம்ப்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தாக்குதலின் காரணமாக, தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிந்தார். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் எங்கு சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பேரணிக்குப் பிறகு இன்று நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டரில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

திங்களன்று நடக்கவிருக்கும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்கத்திற்காக, விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவும் முன்னாள் அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

'தாக்குதல் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை'

நைகல்
படக்குறிப்பு, பைடன் கூறிய கருத்துகள் தான், டிரம்பின் மீது வன்முறையாளர்களின் கவனத்தை குவித்ததாக நைகல் கூறுகிறார்

பிரிட்டனின் சீர்திருத்தக் கட்சித் தலைவர் மற்றும் டொனால்ட் டிரம்பின் நீண்டகால நண்பருமான, நைகல் ஃபராஜ், "எனது நண்பர் மீதான தாக்குதலால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன், அதே நேரத்தில் இந்த தாக்குதல் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை." என்றார்.

"அவரை எதிர்க்கும் தாராளவாதிகளால், வெளியிடப்பட்ட மோசமான பிரசார கதைகள் கிட்டத்தட்ட இந்த மாதிரியான வன்முறை நடத்தையை தான் ஊக்குவிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

ஜோ பைடன் சமீபத்தில் கூறிய கருத்துகள் தான், டிரம்பின் மீது வன்முறையாளர்களின் கவனத்தை குவித்ததாக நைகல் சுட்டிக்காட்டுகிறார்.

"அதிகரித்து வரும், தாராளவாத சகிப்பின்மை தான் இந்த பிரச்னையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அதனால் தான் நான் மீண்டும்மீண்டும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானேன். ஆனால் அது நான் என்பதால் யாரும் கவலைப்படுவதில்லை," என்று நைகல் கூறுகிறார்.

கமலா ஹாரிஸ் கண்டனம்

கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தாக்குதலில் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை, நலமாக இருக்கிறார் என்பதைக் கேட்டு ஆறுதல் அடைந்ததாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

"அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஹாரிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அனைவரும் ஒன்றுபட டிரம்ப் வேண்டுகோள்

டொனால்டு டிரம்ப் தன் மீதான படுகொலை முயற்சிக்கு பிறகு இரண்டாவது முறையாக பொது வெளியில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் என்ற தளத்தில், "நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றை நடக்காமல் தடுத்தது கடவுள் மட்டுமே. நாங்கள் பயப்பட மாட்டோம். மாறாக, எங்கள் நம்பிக்கையில் இன்னும் உறுதியாக இருப்போம், தீய செயல்களை உறுதியுடன் எதிர்கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

"காயமடைந்தவர்கள் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட குடிமகனின் நினைவுகள் எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், நாம் ஒன்றுபட்டு இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று கூறியுள்ளார்.

"நான் நம் நாட்டை உண்மையாக நேசிக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விஸ்கான்சினில் இவ்வாரம் நம் தேசத்திற்காக உரையாற்றப் போவதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று டிரம்ப் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மகள் கூறியது என்ன?

டிரம்ப்பின் மகள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இவாங்கா டிரம்ப்

டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என் தந்தைக்காகவும், பென்சில்வேனியாவின் பட்லரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ரகசிய சேவை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். அப்பா! இன்றும் எப்போதும் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோதி, ராகுல் காந்தி கண்டனம்

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதி (கோப்புப் படம்)

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அந்தப் பதிவில், "அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை, அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தாக்குதலில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து அமெரிக்க மக்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்றும் பிரதமர் மோதி கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டுவதாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்டுள்ள கொலை முயற்சி தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு, நான் மிகவும் கவலைப்பட்டேன். இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)