டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பின் ‘சர்ஜரி’ நடவடிக்கை - என்ன நடக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?

பட மூலாதாரம், Getty Images
சர்ஜரி, மாற்றம், சீர்திருத்தம் — சமீப நாட்களாக இதுபோன்ற பல வார்த்தைகள் பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் கிரிக்கெட் செய்திகளில் குறிப்பிடப்படுகின்றன.
காரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது நெருக்கடியான சூழலில் உள்ளது. ஒவ்வொரு உலகக் கோப்பைக்குப் பிறகும் அந்தக் கிரிக்கெட் அணியும் கிரிக்கெட் வாரியமும் கடக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தைத் தற்போது கடந்து வருகிறது.
இந்த முறை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவர் மொஹ்சின் நக்வி (பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்) கிரிக்கெட் வாரியத்தை மறுசீரமைக்கும் பணிக்கு 'சர்ஜரி' என்று பெயரிட்டுள்ளார். இந்த சர்ஜரியில் முதல் கட்ட நடவடிக்கையாக அப்துல் ரசாக் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் வீரர்கள் இருவரும் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவிகள் வகித்துள்ளனர். அப்துல் ரசாக் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தார், அதே நேரத்தில் வஹாப் ரியாஸ், தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்து, அணியின் மூத்த மேலாளர் பதவியையும் வகித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மோசமான ஆட்டம் குறித்து பயிற்சியாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூறப்படும் தகவல்கள் செய்திகளில் வெளிவரத் தொடங்கின. பல விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும், அடுத்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி குறிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் ஒஅரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் இந்த செய்தி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை, இது குறித்து பிசிபி செய்தி தொடர்பாளர் சமியுல் ஹசன் பர்னி தனது தரப்பைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், அறிக்கைகள் இனி வரும் நாட்களில் தீவிரமடையலாம். ஆனால் இந்த சலசலப்பு தொடர்பாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி இதுவரை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை.
பயிற்சியாளரும் கேப்டனுமான பாபர் ஆசம் உட்பட ஏழு பேர் கொண்ட தேர்வுக் குழுவில் இருந்து வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் மட்டும் நீக்கப்பட்டது ஏன்?
மேலும் ஒரு சிலரை மட்டும் நீக்குவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் மட்டும் நீக்கப்பட்டது ஏன்?
மொஹ்சின் நக்வி வஹாப் ரியாஸை பதவியில் இருந்து நீக்கியது பெரும், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வஹாப் ரியாஸ் மொஹ்சினுக்கு நெருக்கமானவர். அவரை பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், நெருக்கமானவர்கள் கூட பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை மொஹ்சின் தன் நாட்டிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பிபிசி-யிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் (இந்த முடிவுகளுக்கான காரணங்களை அறிந்தவர்) “கிரிக்கெட் வாரியத்தை பற்றிய விசாரணையில் முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளது,” என்றார்.
மேலும், "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்வு குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்கள் அந்த பட்டியலில் இருந்த சில வீரர்களை மாற்ற விரும்பினர். ஆனால் அவர்கள் இருவரும் கொடுத்த அழுத்தத்தினால் அது முடியாமல் போனது” என்று விளக்கினார்.
"வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் தங்களுக்கு வேண்டப்பட்ட வீரர்களை அணியில் சேர்த்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அந்த வீரர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை," என்றார்.
இந்த அதிகாரியின் கூற்றுப்படி, வஹாப் ரியாஸ், மூத்த அணி மேலாளராக, அணியில் ஒழுக்கத்தை கையாளத் தவறிவிட்டார்.
"உலகக் கோப்பையின் போது தொடர்ந்து வெளிவந்த பல தகவல்களுக்கு பிறகு, இந்த விசாரணை நடத்தப்பட்டது, மேலும் பல சம்பவங்களில் வஹாப் ரியாஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது"
இந்த கருத்துக்கள் தொடர்பாக வஹாப் ரியாஸின் தரப்பை அறிய பிபிசி விரும்பியது ஆனால் இதுவரை அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
வஹாப் ரியாஸைத் தவிர, அணியின் மேலாளர் மன்சூர் ராணாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
வஹாப் ரியாஸ் பதில்
வஹாப் ரியாஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட தனது அறிக்கையில், 'வீண் குற்றச்சாட்டு’ (blame game) ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்வுக் குழு உறுப்பினராக தனது பணி முடிந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், "நான் தூய்மையான இதயத்துடன் பணியாற்றினேன் என்பதை மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தேர்வுக் குழுவில் ஒரு அங்கமாக பணியாற்றியது எனக்கு கிடைத்த மரியாதை. தேசிய கிரிக்கெட் அணியை ஏழு பேர் கொண்ட குழுவின் உறுப்பினராக இருந்து தேர்வு செய்தது எனக்கு கிடைத்த மரியாதையாக பார்க்கிறேன்"
தேர்வுக் குழுவின் முடிவுகள் குறித்த விமர்சனத்தைப் பற்றிப் பேசிய அவர், "கிரிக்கெட் அணியை தேர்வு செய்ததில் குழு உறுப்பினர்களின் பங்களிப்பு சமமாக இருந்தது. ஒரு குழுவாக எடுக்கப்பட்ட முடிவு, அதற்கு அனைவரும் சமமான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். நான் மட்டும் எப்படி விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்திருக்க முடியும். தேர்வுக் குழுவின் கூட்டங்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்துல் ரசாக்கிடமிருந்தும் இதேபோன்று ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், அப்போது பொறுப்பு முதலமைச்சராக இருந்த மொஹ்சின் நக்வி, வஹாப் ரியாஸை தனது அமைச்சரவையில் விளையாட்டு அமைச்சராக அமர்த்தினார் என்பதை நினைவில் கொள்க. இதற்குப் பிறகு, அவர் ஜகா அஷ்ரப்பின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நியமிக்கப்பட்டார், பின்னர் தேர்வுக் குழுவின் தலைவராக ஆனார்.
மொஹ்சின் நக்வி ஏழு உறுப்பினர்களை தேர்வுக் குழுவில் சேர்த்து ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குக்கும் சம முக்கியத்துவம் அளித்தார், ஆனால் தேர்வுக் குழுவின் முடிவுகளில் வஹாப் ரியாஸுக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளது என்பது அங்கு நிலவிய பொதுவான கருத்து.
பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து ஏன் தெளிவான அறிக்கை வெளியிடப்படவில்லை என்று பிசிபி அதிகாரியிடம் கேட்டபோது, இதற்கான காரணம் சட்டபூர்வமானதாக இருக்கும் என்றார். பாதிக்கப்பட்ட நபர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தெளிவற்ற நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வாரியங்கள், உலகக் கோப்பையில் மோசமாக விளையாடினால், அணியில் வாரியத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த மாற்றங்களால் ஏன் இவ்வளவு சர்ச்சை எழுந்துள்ளது?
பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளராக முன்னர் பணியாற்றிய ஊடகவியலாளர் அஹ்சன் இப்திகார் நாகியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மாற்றங்கள் செய்யப்படும் விதமும் அது பற்றிய தெளிவின்மையும் தான் கவலையளிக்கிறது.
கிரிக்கெட் வாரியத் தலைவர் இதுவரை எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை, அணியின் செயல்பாடு குறித்து முறையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து முழுமையான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி குரூப் ஸ்டேஜிலிருந்து வெளியேறிய போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதன் அணியை மதிப்பாய்வு செய்ததாக அவர் கூறினார்.
"அந்த மதிப்பாய்வில், உலகம் முழுவதிலுமிருந்து வெற்றிகரமான கேப்டன்களின் கருத்து கேட்கப்பட்டது, எங்கள் தரவுக் குழு மூலம் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு, இங்கிலாந்து 2019 உலகக் கோப்பையை வென்றது மற்றும் 2022-இல் டி20 உலகக் கோப்பையை வென்றது," என்றார்.
அஹ்சானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதேபோன்ற மதிப்பாய்வை நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு தேர்வாளர்கள் மட்டும் நீக்கப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"நீங்கள் முதலில் ஒரு உத்தியை உருவாக்குங்கள், அதன் பிறகு இந்த நடவடிக்கையை எடுங்கள். இந்த தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இரண்டு பதவிகளை கொண்டிருந்தனர், எனவே இரண்டு உறுப்பினர்களை மட்டும் நீக்கி அவர்களிடம் காரணம் கேட்பது ஏன் என்று புரியவில்லை,” என்றார்.
"கிரிக்கெட் ஆய்வாளர்கள் இந்த முடிவை ஒரு கண் துடைப்பு என்று கருதுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 'பிரபலமான’ முடிவுகளை மட்டுமே எடுக்கிறது. அதாவது சமூக வலைதளங்களில் மக்கள் எதை அதிகம் பேசினாலும் அதுதான் முடிவாக இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
“உண்மையான பிரச்னை கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ளது, கலாச்சாரத்தில் உள்ளது. ஏன் பலமான கிரிக்கெட் கலாச்சாரம் உள்ள நாடுகளில் கேப்டன் நீக்கப்பட்டால் எந்தவித சலசலப்பும் அங்கு ஏற்படுவதில்லை. அணியில் கோஷ்டிவாத குரல் இல்லை. ஏனெனில் சிறுவயதிலிருந்தே அந்த வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அங்கு கிரிக்கெட்டுக்கு ஒரு கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது." என்று விளக்கினார்.
இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை, செய்திகளை உருவாக்கி வைரலாகும் விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பயிற்சியாளரின் அறிக்கை கசிந்தது எப்படி?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அணியின் வீரர்கள் பற்றி அளித்த அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் கசிந்த பின்னர் புதன்கிழமை முதல் சமூக ஊடகங்களில் ஷாஹீன் அஃப்ரிடியின் பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்த அஹ்சன் இப்திகார், சில மாதங்களுக்கு முன்பு வரை இதே வீரர்தான் உங்கள் கேப்டனாக இருந்தார். ஆனால் அவரை பற்றி இப்படி செய்திகளை வெளியிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சூழலை மோசமாக்குகிறது என்றும் கூறினார்.
ஷாஹீனுக்கும் மொஹ்சின் நக்விக்கும் இடையிலான தகராறு இதற்கு முன்னரும் பொதுவெளிக்கு வந்துள்ளது என்று அஹ்சன் இப்திகார் கூறுகிறார்.
உலகில் எந்த விளையாட்டு வாரியங்களும் தங்கள் வீரர்களுடன் இதுபோன்ற சிக்கல்களை உருவாக்குவதில்லை. அவர்களைப் பற்றிய உரையாடல்கள் ஒருபோதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.
"நீங்கள் மோசமாக விளையாடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் அவரைப் பற்றிய விஷயங்கள் ஊடகங்களுக்குச் சொல்லக் கூடாது,” என்றார்.
'பிளேயர் மேனேஜ்மென்ட்’ என்பது மிகுந்த விழிப்புணர்வு தேவைப்படும் ஒரு துறை. ஆனால் "துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கியுள்ளது," என்று அஹ்சன் கூறுகிறார்.
இது குறித்து பேசிய கிரிக்கெட் பத்திரிக்கையாளர் சமி சவுத்ரி, 1990-களில் இருந்தே இந்த மனப்பான்மை பாகிஸ்தானில் உள்ளது என்றார்.
அப்போது அச்சு ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இணையத்தளம் மற்றும் சமூக வலைதளங்களின் வருகையால் இதுபோன்ற செய்திகள் பரவுவது அதிகரித்துள்ளது.
ஷாஹீன் அஃப்ரிடி பற்றி பரவும் செய்தி உண்மையா பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி செய்திகள் வெளிவரும் போது அது உண்மையாகவே நடந்துவிடுகிறது. ஆனால், யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். இதற்கு முன்பும், கடந்த உலகக் கோப்பையின் போதும், அதற்குப் பிறகும், பாபரின் நிலைமை இப்படி தான் இருந்தது என்றார்.
மேலும், "அமீர் மற்றும் இமாத் ஆகியோரிடம் அணிக்கு திரும்புவது குறித்து ஷஹீன் பேசி கொண்டிருக்கும் போதே, கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் நடந்துள்ளது. இருவரும் தாங்கள் விமர்சித்த கேப்டனின் தலைமையில் விளையாடினர். அத்தகைய சூழ்நிலையில் கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் அறையில் எப்படி சர்ச்சை பேச்சுகள் இல்லாமல் இருக்கும்?” என்றார்.
"பாகிஸ்தானில், ஊடகங்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை மாற்றியமைக்க முடியும். ஒரு பத்திரிகையாளர் எவ்வளவு பெரிய செய்தியை வெளியிடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் வாரியத்திற்கு பிடித்தவராக மாறுகிறார். இது ஒரு நெருக்கடியான சூழல்” என்றார்.
(இந்தக் கட்டுரை பிபிசி உருதுவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












