ஜோ பைடன் செய்ய மறுக்கும் 'அறிவாற்றல் சோதனை' என்றால் என்ன? எப்படி செய்யப்படும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனா ஃபாகுய் & கிறிஸ்டல் ஹேய்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வயது மற்றும் மனநலம் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வயது 81. அவருக்கு எதிராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் வயது 78. கடந்த மாதம் பைடன் நடத்திய மிகவும் பலவீனமான விவாத நிகழ்வு, இந்த விவகாரத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது.
அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக இருக்கிறார் பைடன். தற்போது டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இரண்டாவது வயதான அதிபராக அறியப்படுவார்.
அறிவாற்றல் பரிசோதனை எனப்படும் காக்னிடிவ் சோதனையை மேற்கொள்ள மறுப்பதாக ஏ.பி.சி. நியூஸின் நேர்காணலில் பேசிய பைடன், தினம் தினம் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும், அவரின் மருத்துவர்கள் மேலும் ஒரு சோதனை தேவையில்லை எனப் பரிந்துரை செய்ததாகவும் குறிப்பிட்டார்.
டிரம்போ அதிபர் பதவியில் இருந்த போது, மிக சமீபத்தில் என இரண்டு முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதில் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் கூறினார்.
அறிவாற்றல் சோதனை என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது? அது எவ்வளவு கடினமாக இருக்கும்? இங்கு விரிவாகக் காண்போம்.
அறிவாற்றல் தேர்வு என்ன செய்யும்?
மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு சோதனைகள் இருக்கின்றன.
இவை குறிப்பிட்ட நோய்களைக் கண்டறியாது. ஆனால், நோய் அறிதலுக்கு மேலும் பல பரிசோதனைகள் தேவையா இல்லையா என்பதை உறுதி செய்ய உதவும் என்கிறது க்ளீவ்லாண்ட் கிளினிக்.
இந்த அறிவாற்றல் பரிசோதனைகளை யாருக்குப் பரிந்துரைக்கலாம்?
- பொதுவாக நினைவாற்றல், தனிமனித செயல்பாடுகளில் மாற்றங்கள் அல்லது சமநிலையாகச் செயல்படுவதில் ஒருவர் பிரச்னைகளைச் சந்திக்கும் பட்சத்தில்
- கடந்த காலத்தின் சில பகுதிகளை மறந்துவிடும் பட்சத்தில்
- அல்லது, ஒரு தகவலைப் புரிந்துகொள்வதில் சவால்களைச் சந்திக்கும் பட்சத்தில் இத்தகைய பரிசோதனைகளை பரிந்துரை செய்யலாம்.
மான்ட்ரியல் காக்னிடிவ் அசெஸ்மெண்ட் (Montreal Cognitive Assessment (MoCA)) என்ற சோதனை பரவலாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்துப்படி இது சந்தேகத்திற்குரிய குறைபாடுகளைக் கொண்டிருக்கும் மக்களின் அறிவாற்றல் திறனை விரைவாகச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் பரிசோதனை ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சோதனை ஒருவரின் நோக்குநிலை, நினைவு, கவனம் மற்றும் பொருள்களுக்குப் பெயரிடும் திறன், வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட வாசகங்களைப் பின்பற்றுதல் போன்றவற்றை மதிப்பிடுகிறது. இத்தகைய சோதனைகளை நீங்கள் ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம்.
அறிவாற்றல் குறைகள் இல்லாத நபர்களுக்கு இது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும். ஆனால் மனநலம் குறையத் துவங்கும் நபர்களுக்கு இந்தச் சோதனைகள் மிகவும் கடினமானதாக இருக்கலாம்.
இந்தச் சோதனைகளைக் கண்டறிந்த கனடாவை சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஜியாத் நஸ்ரெதின், இது அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அதே நேரத்தில் குறைபாடுகள் இருந்தால் அதையும் கண்டறிய முடியும் என்பதால் பைடன் இந்தச் சோதனையை மேற்கொள்வது நல்லது என்று பிபிசியிடம் கூறினார்.
அறிவாற்றல் சோதனை எப்படி இருக்கும்?
கற்றல் மற்றும் நினைவாற்றல் தொடர்பான கேள்விகளை மருத்துவர்கள் நோயாளிடம் இந்தச் சோதனையின்போது கேட்பர். நீண்ட மருத்துவ மதிப்பீடு என்பது அறிவாற்றல் சோதனைகளுடன் உடல் மற்றும் நரம்பியல் சோதனைகள், நோயாளிகளின் ஆரோக்கிய பிரச்னை குறித்த முழு விவரங்களை உள்ளடக்கியது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் டேவிஸ் அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தின் இணை பேராசிரியர் டான் மங்கஸ், இந்த இரண்டாவது சோதனையானது பைடன் மற்றும் டிரம்பின் முழுமையான அறிவாற்றல் செயல்பாடுகள் குறித்த ஒரு முழுமையான தகவல்களை வழங்கும் எனக் குறிப்பிடுகிறார்.
முதலில் MoCA சோதனைகளைத்தான் மருத்துவர்கள் துவங்குவார்கள். அதன் முடிவுகள் சிறப்பானதாக இல்லாத பட்சத்தில் மிகவும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மிக நுட்பமான அந்தப் பரிசோதனைகளில் ஒருவரின் மொழி, செயல்படும் திறன், பார்வை மற்றும் இடம் சார்ந்த திறன்களை மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள்.
உதாரணத்திற்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கதைகளை வாசித்து அதில் வரும் பகுதிகள் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைச் சோதிப்பார்கள்.
சில வார்த்தைப் பட்டியல்கள், படங்களில் உள்ள பொருட்களின் பெயர்கள், குறிப்பிட்ட எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் மற்றும் பொருட்களைக் கூறச் சொல்வார்கள்.
நோயாளிகளிடம் கேள்விகளைக் கேட்பது மட்டுமின்றி, நோயாளிகளிடம் அதிகமாகப் பேசும் நபர்களும் நோயாளிகள் அறிவாற்றலை இழக்கிறார்களா என்பதைக் கூற இயலும் என்று டாக்டர் மங்கஸ் பரிந்துரை செய்கிறார்.
குறிப்பிட்ட காலத்தில் நோயாளியின் அறிவாற்றலில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதையும் காண வேண்டும் எனக் கூறும் டாக்டர் மங்கஸ் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் மதிப்பீடானது தவறான பாதையில் இட்டுச் செல்லலாம் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருவர் முன்பிருந்த அறிவாற்றலை இழக்க ஆரம்பித்திருக்கிறார் என்றால் அவர் முன்பு எந்த நிலையில் இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் மங்கஸ், அறிவாற்றல் சோதனை மட்டுமே அனைத்தையும் முடிவு செய்வதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
"என்னுடைய காலம் முழுவதும் நான் அறிவாற்றல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு சாதாரண அறிவாற்றல் பரிசோதனை முடிவுகள் மட்டுமே ஒருவர் நல்ல அதிபராக இருப்பதை முடிவு செய்ய இயலும் என்பது ஏற்புடையதாக இல்லை," என்று கூறுகிறார் அவர்.
பைடன், டிரம்பின் வயது இந்தப் பரிசோதனைகளில் தேர்ச்சி அடையும் வாய்ப்புகளை வழங்குகிறதா?
சுமார் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, அவர்களின் அறிவாற்றலை அறிந்துகொள்ள இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்கிறது அமெரிக்க நரம்பியல் அகாடெமி.
வயது அதிகரிக்க அதிகரிக்க குறைபாடுகளும் அதிகரிக்கும் என்று பிபிசியிடம் கூறுகிறார் டாக்டர் நஸ்ரிதீன். 75 வயதாகிறபோது, 25% நபர்களுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் அவர்.
"அறிவாற்றல் குறைபாடுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் மக்கள் இந்தக் குறைபாடுகள் இருப்பதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இருக்கின்றனர்" என்று கூறும் அவர் அதிபரைப் பார்க்கவும் இல்லை, அவருக்கு சிகிச்சையும் வழங்கவில்லை.
கடந்த ஒரு வருடத்தில் பைடனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்ததாகக் கூறுகிறார் அவர். "மக்கள் சந்திப்பின்போது அவர் மெதுவாக நடக்கிறார். அவரின் பேச்சு குறைந்துவிட்டது. அவரின் குரல் மிகவும் பலவீனமாக உள்ளது. சில நேரங்களில் அவர் வார்த்தைகளை முணுமுணுக்கிறார்" என்கிறார் நஸ்ரிதீன்.
பைடனின் வயதில் யாரும் இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணியை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் அவர், இந்த வயதில் ஒருவரின் இயல்பு நடவடிக்கைகளை விவரிப்பது கடினமான ஒன்றாக இருப்பதாகவும் கூறுகிறார்.
அதிபரின் இத்தகைய செயல்பாடுகள் சமீபத்தியதாகவே இருக்கின்றன என்று கூறும் அவர் இத்தனை ஆண்டுகளில் அவர் இப்படியாக இல்லை என்றும் குறிப்பிடுகிறார். இருப்பினும்கூட, பைடனை காட்டிலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறியவராக இருக்கும் டிரம்ப் மிகவும் வேகமாகச் செயல்படுவதாகவும் மேற்கோள் காட்டுகிறார் நஸ்ரிதீன்.
25வது சட்ட திருத்தம்: அதிபருக்கு டிமென்சியா அல்லது அல்சைமர் நோய் இருந்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசமைப்பின் சட்டத் திருத்தம் 25, ஒரு அதிபர் இறந்துவிட்டால் அவருக்குப் பின் அந்தப் பதவியை வகிப்பது யார், அதற்கான செயல்முறைகள் என்ன, அவர் தன் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பனவற்றைக் குறிப்பிடுகிறது.
அதிபர் ஒருவர் தன்னுடைய பதவியில் இருந்து விலகும்போது, பணி நீக்கம் செய்யப்படும்போது, உயிரிழக்கும்போது அல்லது பணி செய்ய இயலாதபோது இந்தச் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தலாம்.
சமீபத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கும் இந்தச் சட்டத் திருத்தம் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலைக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டது.
டிரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்க கூட்டாட்சி உறுப்பினர்கள், அதிபரின் உடல் தகுதியை உறுதி செய்ய மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தலைநகர் கலவரத்துக்குப் பிறகு இந்தத் தீர்மானத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் ஒப்புதல் வழங்கி, 25ஆம் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அன்றைய துணை அதிபராக இருந்த மைக் பென்சிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
பைடனின் விவாத நிகழ்வில் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பைடனின் அமைச்சரவையில் இருக்கும் நபர்களிடம் இந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 4இன் படி, துணை அதிபரும், அமைச்சரவையின் பெரும்பான்மையினரும், அதிபர் அவருடைய பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனும் பட்சத்தில், துணை அதிபர் அதிபராகப் பதவி ஏற்கலாம். ஆனால், அறிவாற்றல் குறைவதைக் கருத்தில் கொண்டு இதுநாள் வரை இந்தச் சட்டதிருத்தம் பயன்படுத்தப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












