டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதிய இரவில் என்ன நடந்தது? புதிய ஆய்வு

`டைட்டானிக் மிஷன்’ : அந்த துயர இரவில் நடந்த சம்பவங்களை கண்டறிய அதி நவீன டிஜிட்டல் உபகரணங்களுடன் களமிறங்கும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைட்டானிக் அன்றைய காலகட்டத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆடம்பரமான பயணிகள் கப்பலாக இருந்தது
    • எழுதியவர், ஜொனாதன் அமோஸ் மற்றும் அலிசன் பிரான்சிஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

இமேஜிங் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று, வெள்ளிக்கிழமை (ஜூலை 12) டைட்டானிக் கப்பல் விபத்தின் மிக விரிவான புகைப்பட ஆவணங்களை சேகரிக்க புறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸ் நகரத்தில் இருக்கும் பயணக் குழு உறுப்பினர்களை அணுகுவதற்கான பிரத்யேக வாய்ப்பு பிபிசிக்கு இருந்தது. அவர்கள் அனைவரும் துறைமுகத்தை விட்டு வெளியேறுவதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டனர்.

பிரபல டைட்டானிக் கப்பலின் ஒவ்வொரு மூலையையும் ஸ்கேன் செய்து, அது மூழ்கியதைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளைப் பெற, அவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்தாண்டு புறப்பட்டுச் சென்ற `ஓஷன் கேட்’ (OceanGate) என்னும் டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அந்த துயரச் சம்பவத்திற்கு பிறகு டைட்டானிக்கிற்கு மேற்கொள்ளப்படும் முதல் வணிக ஆய்வுப் பயணம் இதுவாகும்.

`ஓஷன் கேட்’ விபத்தில் இறந்தவர்களுக்கும், 1912ல் டைட்டானிக் கப்பலில் இறந்த 1,500 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும் வரும் நாட்களில் கடலில் கூட்டு நினைவேந்தல் நடத்தப்படுகிறது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் புதிய முயற்சி

டைட்டானிக் ஆய்வுக்கான இந்த புதிய பயணம் அமெரிக்க நிறுவனத்தால் (RMS Titanic Inc) மேற்கொள்ளப்படுகிறது. இது, டைட்டானிக் மீட்புக்கான பிரத்யேக காப்புரிமைகளை கொண்ட ஒரே நிறுவனமாகும். இந்நிறுவனம் இதுவரை சேதமடைந்த கப்பலில் இருந்து சுமார் 5,500 பொருட்களைக் கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த சமீபத்திய பயணம் முற்றிலும் ஒரு தகவல் சேகரிக்கும் பணியாகும் என்று அட்லாண்டாவை தளமாகக் கொண்ட ஆர்.எம்.எஸ் டைட்டானிக் (RMS Titanic Inc) கூறுகிறது.

`டைட்டானிக் மிஷன்’ : அந்த துயர இரவில் நடந்த சம்பவங்களை கண்டறிய அதி நவீன டிஜிட்டல் உபகரணங்களுடன் களமிறங்கும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், BBC/Kevin Church

படக்குறிப்பு, ஆறு டன் எடையுள்ள ரோபோக்கள் சிதைந்த கப்பல் தளத்தை மேப்பிங் செய்ய 20 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

லட்சக்கணக்கான உயர் தெளிவுத்திறன் புகைப்படங்களை எடுக்கவும், அனைத்து சேதாரங்களின் 3D மாதிரியை உருவாக்கவும் இரண்டு ரோபோ வாகனங்கள் கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பப்படும்.

"இதுவரை எட்டாத ஒரு தெளிவு மற்றும் துல்லியத்துடன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கப்பல் விபத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என்று பயணத்தின் இணை தலைவர் டேவிட் காலோ விளக்கினார்.

இந்த ஆய்வுப் பணியில், `டினோ சௌஸ்ட்’ (Dino Chouest) என்ற கப்பல் வடக்கு அட்லாண்டிக்கில் இருந்து தளமாக செயல்படும்.

வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், இந்த கப்பல் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு மேலே 3,800 மீட்டர் (12,500 அடி) உயரத்தில், 20 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த மிஷனில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு சில வாரங்களுக்கு பணிகள் இருக்கும்.

பால் ஹென்றிக்கு கடலுக்கடியில் நினைவுப் பலகை

`டைட்டானிக் மிஷன்’ : அந்த துயர இரவில் நடந்த சம்பவங்களை கண்டறிய அதி நவீன டிஜிட்டல் உபகரணங்களுடன் களமிறங்கும் விஞ்ஞானிகள்
படக்குறிப்பு, 2010 இல் அதன் கடைசி ஆய்வின் போது, ​​ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனம் சிதைந்த கப்பல் தளத்தின் சோனார் வரைபடத்தை உருவாக்கியது.

ஓஷன்கேட் விபத்தில் இறந்த ஐந்து பேரில் ஒருவர் பிரெஞ்சுக்காரர் பால்-ஹென்றி ("PH"). ஆர்எம்எஸ் டைட்டானிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராக இருந்த அவர், இந்தப் பயணத்தை வழிநடத்தவிருந்தார்.

அவர் இறந்துவிட்டதால் அவரின் நினைவாக, கடலுக்கு அடியில் அவரது பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகை வைக்கப்படும்.

"எங்கள் ஆய்வுப் பணி கடினமானத் தருணங்களை உள்ளடக்கியது தான், ஆனால் தொடர்ந்து முன்னோக்கி செல்ல எங்களுக்குள் ஒரு உந்துதல் இருந்து கொண்டேயிருக்கும். பால் ஹென்றிக்கு டைட்டானிக் பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ள இருந்த ஆர்வத்தின் காரணமாகவும் நாங்கள் அதைச் செய்கிறோம்" என்று பால் ஹென்றியின் நண்பரும் வரலாற்றாசிரியருமான ரோரி கோல்டன் விளக்கினார். இவர் டினோ சௌஸ்ட் கப்பலில் தலைமை `மன உறுதி’ அதிகாரியாக (chief morale officer) இருப்பார்.

மூழ்கவே மூழ்காது என்று நம்பப்பட்ட பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு, கனடாவின் கிழக்கே உள்ள ஒரு பனிப்பாறையால் மூழ்கடிக்கப்பட்ட கதையை அறியாத ஒரு சிலர் மட்டுமே இருக்கக்கூடும்.

இந்த பேரழிவு நிகழ்வைப் பற்றிய எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் உள்ளன.

1985 இல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சிதைந்து கிடக்கும் கப்பலின் இடிபாடுகளை ஆய்வு செய்ய பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஒரு திட்டவட்டமான வரைபடம் என்று விவரிக்கக் கூடிய எதுவும் இன்று வரை வெளியாகவில்லை.

உயர் தொழில்நுட்ப உபகரணங்கள்

`டைட்டானிக் மிஷன்’ : அந்த துயர இரவில் நடந்த சம்பவங்களை கண்டறிய அதி நவீன டிஜிட்டல் உபகரணங்களுடன் களமிறங்கும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், RMS Titanic Inc

உடைந்த கப்பலின் அனைத்து பாகங்களும் ( bow and stern) விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நன்கு புரிந்து கொள்ளப்பட்டாலும், கப்பலை சுற்றியுள்ள இடிபாடுகளை பற்றி மேலோட்டமான ஆய்வுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

ஆறு டன் கொண்ட ரிமோட் மூலம் இயக்கப்படும் இரண்டு வாகனங்கள் (ROV கள்) டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை சரியாக ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்தில் சிறப்பு ஒளி அமைப்புடன் கூடிய அதி-உயர்-வரையறை கொண்ட ஆப்டிகல் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்; மற்றொன்றில் லிடார் (லேசர்) ஸ்கேனரை உள்ளடக்கிய சென்சார் தொகுப்பைக் கொண்டிருக்கும்.

இந்த இரண்டு வாகனங்களும் 1.3 கிமீ தொலைவுக்கு 0.97 கிமீ கடற்பரப்பில் முன்னும் பின்னுமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும்.

`இமேஜிங்’ (imaging programme) பணிக்கு பொறுப்பேற்றுள்ள இவான் கோவாக்ஸ், அவரது கேமரா அமைப்புகள் மில்லிமீட்டர் அளவிலான துல்லிய காட்சிகளை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.

"வானிலை, கணினி, ஆர்ஒவி, கேமரா என அனைத்தும் வழிவகுத்தால், தடைகள் இன்றி டைட்டானிக் மற்றும் அதனை சுற்றியுள்ள இடிபாடுகளை துல்லியமாக டிஜிட்டல் வரைப்படமாக்க முடியும். உண்மையில் சொல்லப் போனால் கடலுக்கு அடியில் இருக்கும் மணல் துகள்களை கூட எண்ண முடியும்" என்று அவர் பிபிசியிடம் விவரித்தார்.

டைட்டானிக்கில் இருந்த கலைப்பொருட்கள்

2010 இல் அதன் கடைசி ஆய்வின் போது, ​​ஆர்.எம்.எஸ் டைட்டானிக் இன்க் சிதைந்த கப்பல் தளத்தின் சோனார் வரைபடத்தை உருவாக்கியது.

பட மூலாதாரம், BBC/Kevin Church

படக்குறிப்பு, ஒரு வாகனத்தில் சிறப்பு ஒளி அமைப்புடன் கூடிய அதி-உயர்-வரையறை கொண்ட ஆப்டிகல் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்;

சென்சார் ROV-இல் உள்ள காந்தமானி (magnetometer) தரப்போகும் வெளியீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. டைட்டானிக்கை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்வது இதுவே முதல் முறை.

விபத்து நடந்த இடத்தில் உள்ள இடிபாடுகளில் இருக்கும் அனைத்து உலோகங்களையும், வண்டலில் கண்ணுக்குத் தெரியாத வகையில் புதைந்துள்ள பொருட்களையும் இந்த கருவி கண்டறியும்.

"கடற்பரப்புக்கு கீழே டைட்டானிக்கின் முன்பகுதியில் (bow) என்ன நடந்திருக்கும் என்பதை தீர்மானிப்பது ஒரு பெரிய கனவாக இருக்கிறது" என்று புவி இயற்பியல் பொறியாளர் அலிசன் ப்ரோக்டர் விளக்கினார்.

"இந்த ஆய்வின் மூலம் கடலுக்கடியில் டைட்டானிக்கின் முன்புறம் பனிப்பாறையை மோதிய போது நொறுக்கப்பட்டதா இல்லையா என்பதை எங்களால் கண்டறிய முடியும் என்று நம்புகிறேன். " என்றார்.

பிரமாண்டமான கப்பல் இரண்டாக உடைந்தபோது பாய்லர்கள் போன்ற உதிரி பாகங்களுக்கு என்னவானது, அவற்றின் இப்போதைய நிலை என்ன என்பதை அறிய இடிபாடுகளில் இந்த குழு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புகிறது.

முந்தைய ஆய்வுப் பயணங்களின் போது காணப்பட்டதாகக் கருதப்படும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆசையும் இருப்பதாக குழுவினர் கூறுகின்றனர். உதாரணமாக ஒரு மின்சார மெழுகுவர்த்தி (electric candelabra), ஸ்டெய்ன்வே கிராண்ட் பியானோ (Steinway grand piano) ஆகிய பொருட்களின் நிலையை அறிய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த பியானோ இசைக்கருவியின் மரத்தினால் ஆன பாகங்கள் நீண்ட காலம் ஆனதால் சிதைந்து போயிருக்கும், ஆனால் அதன் இரும்புத் தகடு அல்லது சட்டகம் இன்னும் இருக்க வேண்டும்.

பயணிகளின் உடமைகளை கண்டறிவது ஏன் முக்கியம்?

"என்னைப் பொறுத்தவரை, பயணிகளின் உடைமைகள், குறிப்பாக அவர்களின் பைகள் போன்றவற்றை கண்டுபிடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று டைட்டானிக் கலைப் பொருட்களின் சேகரிப்பை கையாளும் டோமசினா ரே கூறினார்.

"கப்பலில் பயணித்தவர்களின் உடமைகளில் பலவற்றை மீட்டெடுக்க முடிந்தால் அவர்களின் கதைகளை தெரிந்து கொள்ள உதவும். இறந்து போனப் பயணிகள் பலரின் பெயர்கள் பட்டியலில் மட்டும் இடம்பெற்றிருந்தது. அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த ஆய்வில் அவர்களின் உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் நினைவுகளை அர்த்தமுள்ளதாக வைத்திருக்க உதவும்" என்றார்.

டைட்டானிக் விபத்து நடந்த இடத்திற்கு ஆர்எம்எஸ் டைட்டானிக் நிறுவனம் மேற்கொள்ளும் ஒன்பதாவது பயணம் இதுவாகும்.

இந்நிறுவனம் சமீப ஆண்டுகளில் பல சர்ச்சைகளை சந்தித்தது. கப்பல் மூழ்கிய அந்த இரவில் துயர அழைப்புகளை அனுப்பிய மார்கோனி ரேடியோ உபகரணங்களின் ஒரு பகுதியைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்று நிறுவனம் கூறியபோது பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த பயணத்தில் அது நடக்க வாய்ப்பில்லை. கப்பலின் உட்புறத்தில் இருக்கும் அந்த ரேடியோ உபகரணத்தை பிரித்தெடுப்பது, சிதைவுற்றிருக்கும் கப்பலின் உள்ளே இருந்து ஒரு பொருளை பிரித்தெடுக்கும் முயற்சியாக இருக்கும். பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

டைட்டானிக் என்பது 1912 இல் அன்று இரவு இறந்த 1,500 பேரின் கல்லறையாக பலரால் பார்க்கப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை அதன் உட்புறத்தை யாரும் தொடக்கூடாது.

"நாங்கள் அவர்களின் மனதை புரிந்துகொள்கிறோம்" என்று நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பென்கா கூறினார்.

"நாங்கள் டைட்டானிக்கில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளவே இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்;

பொதுவாக தொல்பொருள் தளத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்கள் டைட்டானிக் தளத்துக்கு கொடுப்போம். ஆனால் அதனை அப்படியே தனியாக சிதைவுற விட்டுவிட வேண்டும் என்று சொல்வது சரியாகாது.

கப்பலின் பயணிகளும் பணியாளர்களும் வரலாற்றில் அப்படியே தொலைந்து போக அனுமதிப்பது மிகப்பெரிய பிழையாக மாறிவிடும்” என்று அவர் விவரித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)