அமெரிக்க அதிபராகும் முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் - என்ன பேசினார்?

இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, ​​இந்தியாவின் பல கொள்கைகளில் தனக்கு ஆட்சேபனை இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ள அவர், இந்தியாவை குறிவைக்க ஆரம்பித்துவிட்டார். டிரம்புக்கு ஆதரவாக சில இந்திய இந்து அமைப்புகள் கருத்து தெரிவித்து வருவது ஒருபுறம் இருக்க, டிரம்ப் தீவிரமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப், கடந்த சில வாரங்களாக மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம், மிச்சிகனில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், சீனாவை பற்றி பேசியதுடன், இந்தியாவின் பொருளாதார கொள்கையையும் டிரம்ப் கடுமையாக சாடினார்.

"நீங்கள் சீனாவில் ஏதாவது வணிகம் செய்ய விரும்பினால், இங்கே பொருட்களை தயாரித்து அங்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதன் பின்னர் அந்த பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிப்பார்கள். இது எங்களுக்கு வேண்டாம். பிறகு உங்கள் ஆலையை அமைக்க சீனா வாருங்கள் என்று உங்களுக்கு அழைப்பு வரும்.” என்று சீனா குறித்து டிரம்ப் பேசினார்.

அதன் பின்னர் இந்தியா பற்றி பேசிய அவர், “ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இந்தியாவும் இப்படி தான் செய்தது. 200 சதவீதம் வரி விதிப்பால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை அங்கு விற்க முடியவில்லை.” என்று சாடினார்.

இந்தியா பற்றி டிரம்ப் வேறு என்ன சொன்னார்?

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் : நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பிரசாரத்தில் பேசிய டிரம்ப், “ஹார்லி டேவிட்சன் தலைமை நிர்வாகி என்னை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவர் கூறிய விஷயங்கள் என்னை வருத்தமடைய செய்தது” என்றார்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலக அளவில் பிரபலமான பைக் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பைக்குகள் பல லட்சம் ரூபாய் விலையுடையவை. சூப்பர் பைக் என்று அழைக்கப்படும் ஹார்லி டேவிட்சன் பணக்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் இந்தியாவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்குகளை அறிமுகப்படுத்தியது.

"இந்தியாவில் உங்கள் வணிகம் எப்படி நடக்கிறது என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தலைவரிடம் கேட்டேன். எனக்கு கிடைத்த பதில், அது சரியாக இல்லை என்பதுதான். எதற்காக 200 சதவீத வரி கொடுக்கிறோம்? பைக்குகளை விற்பதற்கு நம் மீது ஏன் இவ்வளவு வரி விதிக்கிறார்கள்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “200 சதவீதம் வரி விதிப்பு இருக்கும் பட்சத்தில் அங்கு பைக்குகளை விற்க முடியாது என்று அவரிடம் கூறினேன். ஆனால் இந்தியா ஹார்லி டேவிட்சனை ஆலை அமைக்க அழைப்பு விடுத்தது. நிறுவனமும் ஒப்புக் கொண்டது. அநேகமாக ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் ஒரு ஆலையை உருவாக்கும். இந்த நாடுகளின் செயல்பாடுகள் ஏன் இப்படி இருக்கிறது. இதற்கு நான் இந்தியா தான் பொறுப்பு என்று குற்றம்சாட்ட மாட்டேன். இப்படி நடக்க அனுமதித்ததற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இனிமேல் இப்படி நடக்காது.” என்று விவரித்தார்.

இந்தியா உண்மையில் 200 சதவீத வரி விதிக்கிறதா?

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் : நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் கடந்த கால அறிக்கைகளைப் பார்த்தால், அவர் 2017 முதல் 2024 வரை வெவ்வேறு வரி விகிதங்களைப் பற்றி பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தை பற்றி 2017ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் முதன்முதலில் விவாதம் எழச் செய்தார்.

2018 ஆம் ஆண்டில், இந்த பைக்குகளுக்கு இந்தியா 60-75% வரி விதித்தது தவறு என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதை 50% ஆகக் குறைத்தார்.

2019 இல் டிரம்ப் இந்தியா பற்றி பேசுகையில், "இந்தியா அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கான ஏற்றுமதி வரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைத்துள்ளது, ஆனால் இது இன்னும் கூட குறைக்கலாம். 50% என்பதும் அதிகம் தான். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

`நாங்கள் ஒன்றும் முட்டாள் நாடு அல்ல’ என்று டிரம்ப் கூறியிருந்தார். "நீங்கள் இந்தியாவை பாருங்கள். நரேந்திர மோதி எனது நல்ல நண்பர். ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார் பாருங்கள். பைக்குகளுக்கு 100% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது நாங்கள் எந்த வரியும் விதிக்கவில்லை. மோதி ஒரே தொலைபேசி அழைப்பில் 50% வரியைக் குறைத்தார். இது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியா மேலும் வரி குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.” என்றார்.

இருப்பினும், எகனாமிக் டைம்ஸ் தனது 2018 அறிக்கையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு இந்தியா தேவை என்று கூறியிருந்தது. உலகின் பல நாடுகளில் ஹார்லி டேவிட்சன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்தியா 100 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பதாக டிரம்ப் பேசிய நிலையில், ஏற்கனவே ​​75 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, ​​இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பங்களிப்பு குறைந்திருந்தது. 2013ல், இந்தியாவில் சொகுசுப் பிரிவில் இந்த நிறுவனத்தின் பங்கு 92 சதவீதமாக இருந்தது. 2018ல் இது 56 சதவீதமாக குறைந்தது.

இருப்பினும், 2018 இல் டிரம்ப் இந்த விஷயங்களைக் கூறிய போது, ​​​​இந்திய வெளியுறவு அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. டிரம்ப்-மோதி பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலும் ஹார்லி டேவிட்சன் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியா பற்றி டிரம்பின் நிலைப்பாடு என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு பிப்ரவரி 2020 இல் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் குஜராத்தில் உள்ள மோடேரா மைதானத்தில் டிரம்பை வரவேற்கும் விதமாக 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது, ​​இந்திய வம்சாவளியினர் மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்பும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு `ஹவுடி மோதி’ (Howdy Modi) என்று பெயரிடப்பட்டது.

இருப்பினும், டிரம்ப் தனது மனநிலைக்கு ஏற்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

நவம்பர் 2019 இல், மாசுபாடு தொடர்பாக டிரம்ப் இந்தியாவை குறிவைத்து பேசினார்.

அந்த சமயத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆபத்தான நிலையை எட்டியிருந்தது.

"இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் அசுத்தம், லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பரவுகிறது’’ என்று டிரம்ப் கூறியிருந்தார்.

"இங்கே ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. அமெரிக்காவிடம் ஒப்பீட்டளவில் சிறிய நிலம் தான் உள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் தூய்மை மற்றும் மாசு ஏற்படுத்தும் புகையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் செய்வதில்லை. அவர்கள் தங்கள் அசுத்தங்களை கடலில் கொட்டுகிறார்கள். அது லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பாய்கிறது.” என்றார்

அதிபராக பதவியேற்ற உடனேயே, 'பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக' பாகிஸ்தான் மீது டிரம்ப் தடாலடியாக குற்றம் சாட்டினார். இந்தியாவின் நிலைபாடும் இதே தான்.

இந்தியா - சீனா இடையே கல்வானில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகும், டிரம்ப் மத்தியஸ்தம் செய்வது பற்றிப் பேசினார். அதை இந்தியா நிராகரித்தது. இந்த விவகாரத்தில் டிரம்ப் சீனாவின் பக்கம் நின்றார்.

அமெரிக்கா சீனாவை தனக்குப் போட்டியாகக் கருதுகிறது. அவ்வப்போது இதனை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் டொனால்ட் டிரம்ப், ஹெச்1பி விசா முறையிலும் பல மாற்றங்களைச் செய்திருந்தார். டிரம்பின் இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப் : நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் அமெரிக்க அதிபரானால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சர்வதேச விவகாரங்களில் நிபுணரான சி. ராஜா மோகன், டிரம்ப் மீண்டும் அதிபராகும் பட்சத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எதிர்கொள்ளும் சில சவால்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

இந்த சவால்கள், இந்தியா-அமெரிக்க உறவுகளை பாதிக்கக் கூடிய முக்கியமான 5 பிரச்னைகளுடன் தொடர்புடையவை.

  • வர்த்தகம் மற்றும் பொருளாதார உலகமயமாக்கல்
  • பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகள்
  • ஜனநாயகம் மற்றும் சிக்கல்கள்
  • புலம்பெயர்ந்தோர் மற்றும் திறந்த எல்லைக் கொள்கை
  • காலநிலை மற்றும் ஆற்றல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)