இன்னொரு தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு நிகழ்ந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?

மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்ட்ரைக், தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸோ கிளெயின்மேன்
    • பதவி, தொழில்நுட்ப ஆசிரியர்

உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவையில் ஏற்பட்ட பெருங்குழப்பங்கள் தணிந்துவருகின்றன, கணினிகள், செல்போன்களில் மீண்டும் இணையம் செயல்படத் துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உலகளவில் ஏற்பட்ட பெரும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட தாக்கம், டிஜிட்டல் வாழ்க்கையின் அடிப்படைகள் குறித்தும் அது எவ்வளவு வலுவற்றதாக உள்ளது என்பது குறித்தும் சில அசௌகரியமான கேள்விகளை எழுப்புகின்றன.

வலுவான பாதுகாப்பு அமைப்பில் அதிகளவில் முதலீடு மற்றும் நிதியாதாரத்தைக் கொண்டுள்ள பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட, சுயாதீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் மென்பொருள் அப்டேட்டில் திடீரென ஏற்பட்ட தவறு காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மைக்ரோசாஃப்ட் கணினிகள் நம்முடைய தொழில்நுட்பக் கட்டமைப்பின் மையப்புள்ளியாக விளங்குவதால் மோசமான விளைவைச் சந்தித்தது.

தொழில்நுட்பத்தை நாம் எந்தளவுக்குச் சார்ந்திருக்கிறோம் என்பதன் மீது இந்த விவகாரம் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நம்முடைய கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் தவறு நடக்கும்போது நாம் எப்படி உதவியற்றவர்களாக இருக்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கிரவுட்ஸ்ட்ரைக்: தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தொழில்நுட்ப சேவை கட்டமைப்புகள் ஆட்டம் கண்டால், நீங்களோ நானோ ஒன்றுமே செய்ய முடியாது.

மாற்று திட்டம் இருக்காது

இந்தக் கட்டமைப்புகள் ஆட்டம் கண்டால், நீங்களோ நானோ ஒன்றுமே செய்ய முடியாது.

நேற்று தொலைக்காட்சி ஒன்றில் தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், இந்த பரபரப்பில் சிக்கிக்கொண்டவர்களை 'அமைதியாக இருக்குமாறு' அறிவுறுத்துகிறார். அந்தச் சமயத்தில் பலரும் கடைசி கட்டமாகத்தான் அமைதியை உணர்வார்கள். ஆனால், நம்மில் பலருக்கும் அந்த சமயத்தில் அமைதியாக இருப்பது ஒன்றுதான் சாத்தியமானது.

“நம் அனைவரின் முயற்சிகளையும் ஒன்றின் மீது செலுத்தி, அது தோல்வியுற்றால், நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து இது,” என்பதை இந்தச் செயலிழப்பு நிரூபிப்பதாக 'கம்ப்யூட்டர் வீக்லி' என்ற இணைய இதழில் ஓவன் சேயர்ஸ் எழுதியுள்ளார்.

அவர், ஒரே தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தைப் பயன்படுத்தும் பெருவாரியான வணிகங்கள், சேவைகள், மக்களைக் குறிப்பிடுகிறார். அதைப் பயன்படுத்துவது எளிதாகவும் வசதியகவும் இருக்கிறது, ஆனால் அந்தச் சேவையில் ஏதேனும் பிரச்னை என்றால், நமக்கு மாற்றுத் திட்டம் இருக்காது.

ஒரு வாடிக்கையாளராக இந்த தொழில்நுட்ப ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு கடைக்குச் சென்று கார்டு அல்லது செல்போன் மூலம் பணத்தைச் செலுத்தினால், இந்தப் பணப்பரிமாற்றத்தைச் சீராக நிகழ்த்த அங்குள்ள தொழில்நுட்பத்தை நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் வேறு வாய்ப்பும் இருக்காது, இப்போது அதிகளவிலான வணிகங்கள் பணத்தை நேரடியாக வாங்கிக்கொள்வதில்லை.

சிறு வணிகங்களுக்கு பட்ஜெட் நெருக்கடி இருக்கும்.

“சில சந்தர்ப்பங்களில் ஒற்றை விற்பனையாளர் ஒரு தேர்வாக இருக்கும்,” என, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.சி.எஸ்-ஐ சேர்ந்த அலினா டிமோஃபீவா கூறுகிறார்.

“தொழில்நுட்பச் சேவை வழங்கும் நிறுவனம் சக்திவாய்ந்தது என்பதால், அது செயலிழக்கும் என நிறுவனங்கள் கருதவில்லை,” என்கிறார் அவர்.

தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த செயலிழப்பால் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தீர்வு என்ன?

கிரவுட்ஸ்ட்ரைக்: தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, விமானசேவை தொடர்பான தகவல்களை வழங்கும் திரைகள் செயல்படாத நிலையில் விர்ஜின் ஆஸ்திரேலியா, ஜெட்ஸ்டார் நிறுவனங்களின் சில சேவைகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டபட்டன.

உலகளாவிய ஒற்றைத் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துக்குப் பதிலாக, அதிக எண்ணிக்கையிலான சிறிய தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள் ஒரு தீர்வாக இருக்க முடியுமா?

இந்தக் குறிப்பிட்டச் சேவையை குறைந்தளவிலான மக்கள் சார்ந்திருந்தால் இத்தகைய பெரிய சரிவை நீங்கள் சந்தித்திருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சாத்தியமான பலவீனங்களைக் கொண்ட பல அமைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறீர்க. இது ஹேக் செய்வதை எளிதாக்கும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது. எனினும், கிரவுட்ஸ்ட்ரைக்கின் பேரழிவை ஏற்படுத்திய 'ஃபால்கன் அப்டேட்' எப்படி யாராலும் கவனிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எஞ்சியிருக்கிறது.

“இதைச் சரியாகச் செய்யாததால் கிரவுட்ஸ்ட்ரைக்கில் உள்ள யாரோ ஒருவர் இப்போது பெரும் சிக்கலில் இருப்பார்,” என லண்டனில் உள்ள கிரெஷம் கல்லூரியின் பேராசிரியர் விக்டோரியா பைன்ஸ் கூறுகிறார்.

“மேலும் இந்த வார இறுதியில் நிறைய பேர் வேலை செய்வார்கள்,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)