சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனானது எப்படி? ஹர்திக் பற்றி கம்பீர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆனந்த் வாசு
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர்
வானிலையைவிட இந்திய கிரிக்கெட் அணியின் நிலவரம் முன்னெச்சரிக்கை இல்லாமலேயே வேகமாக மாறிவிடும்.
சமீபத்தில் தான் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்கு வலுவுடன் திரும்பிவந்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால், ரோஹித் ரசிகர்கள் அவரை பல வழிகளில் குறிவைக்கத் தொடங்கினர்.
ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், ஹர்திக்கை உலகக் கோப்பை நாயகனாக சிலர் நினைத்தனர்.
அந்த தொடர் முழுவதும் ஹர்திக் முக்கிய பங்கு வகித்தார். பவுலிங் மற்றும் நடுவரிசை வீரராக திறமையான பேட்டிங் என அணிக்குத் தேவையானதை அவர் வழங்கினார்.
இறுதிப்போட்டியில் தன் பவுலிங் மூலம் அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.
இதன்பின், சில வீரர்கள் ஜிம்பாப்வே தொடரை முன்னிட்டு ஓய்வில் இருந்தனர்.
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடப் போகும் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. இதில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி மறுக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதன் அர்த்தம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதை வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை என கருதலாம்.
டி20 போட்டிகளில் பெரியளவில் ஸ்கோர் செய்யும் திறன் சூர்யகுமாருக்கு இருந்தாலும், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
எனினும், 50-ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தனது இடத்தை உறுதிப்படுத்த அவரால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை.
இந்திய அணி வரலாற்றை உற்றுநோக்கினால், மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரேயொருவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டு வந்துள்ளார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியபோது, அவரிடமிருந்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் திரும்பி பெறப்பட்டது. பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.
சூர்யாவுக்கு டி20 கேப்டன் பதவியை அளித்திருப்பது வேறு ஒன்றையும் குறிக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா, துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, டி20 உலகக் கோப்பையில் விளையாடாத சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், எல்லா வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் வருங்காலத்தில் சுப்மன் கில் கேப்டனாகலாம் என பிசிசிஐ நம்புவது தெளிவாக தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஹர்திக்கின் உடல்தகுதிதான் அவருக்கு எதிராக இருந்துள்ளது. ஆல்-ரவுண்டராக பாண்டியா பங்கு வகிப்பது எளிதல்ல.
சிலசமயங்களில் ஹர்திக் முழு தொடரிலும் பங்கேற்காமல், கடுமையாக பயிற்சி செய்து திரும்பி வந்திருக்கிறார். சில சமயங்களில் பவுலிங் செய்யாமல், பேட்ஸ்மேனாக மட்டும் இருந்துள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுவது குறித்து குறிப்பாக எதையும் வலியுறுத்தவில்லை என்றும் உடல்தகுதி மற்றும் காயங்கள் காரணமாக அணியிலிருந்து வெளியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரும் ஹர்திக் போன்ற வீரர்களுடன் பணியாற்றுவது அசௌகரியத்தை அளிப்பதாக கம்பீர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தொடரின்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருக்க ஹர்திக் பாண்டியா கேட்ட நிலையில், அவரது கோரிக்கையை பிசிசிஐ-யும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அடுத்த ஒருநாள் போட்டிகளில் சூழல் எப்படி இருக்கும் என்பதை கூறுவது கடினம்.
ஹர்திக் ஆல்-ரவுண்டராக அணிக்கு திரும்புவாரா?
ஹர்திக் பாண்டியாவின் திறனை பார்க்கும்போது, அவர் மீண்டும் வலுவுடன் திரும்பிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய அணியில் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமான ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர், இலங்கையில் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
வருங்காலம் குறித்து யோசிக்கும் பயிற்சியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பது தெளிவு.
34 வயதான அவர், டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். நீண்ட காலத்திற்கு அவர் விளையாடுவதற்கும் சாத்தியமில்லை.
சுப்மன் கில் அடுத்த கேப்டனாவதற்கு சாத்தியமான வீரர். சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றால், விக்கெட் கீப்பராகவும், அனைத்துவித போட்டிகளிலும் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ரிஷப் பந்த் கேப்டனாகும் சாத்தியம் உள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தேர்வின் மூலம், வீரர்களை தேர்ந்தெடுப்பவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திசையை அளிக்க விரும்பியுள்ளனர்.
டி20 போட்டிகளிலிருந்து ரோஹித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வுபெற்ற பின்னர், ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய இளம் வீரர்களுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படாததும் சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது.
30 வயதான அவரிடம் விளையாடுவதற்கு கிரிக்கெட் இன்னும் மிச்சம் உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கி இந்த 9 ஆண்டுகளில் அவர் 16 ஒருநாள் போட்டிகள், 28 டி20 தொடர்களில் விளையாடியுள்ளார்.
வீரர்களை தேர்ந்தெடுப்பவர்களும் பயிற்சியாளர்களும் வருங்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பதாக தெரிகிறது.
ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மா திறமையாக விளையாடி சதம் அடித்தார். ஆனால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அவர் இல்லை. இளம் வீரரான அபிஷேக், தன்னுடைய வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












