குஜராத்தில் குழந்தைகளின் உயிரைப் பறித்த 'சந்திபுரா வைரஸ்' - பரவாமல் தடுப்பது எப்படி?

சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்தில் பரவி வரும் சந்திபுரா வைரஸ்
    • எழுதியவர், லட்சுமி படேல்
    • பதவி, பிபிசி குஜராத்தி

குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர். இவர்கள் சந்திபுரா வைரஸ் தொற்றால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அம்மாநில அரசு குழந்தைகளின் இறப்புக்கு இந்த வைரஸ் தான் காரணமா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.

இதுவரையில் ஒரு குழந்தையின் உயிரிழப்புக்கு இந்த வைரஸ் தான் காரணம் என்று உறுதியாகியுள்ளது.

மணல் ஈக்கள் (Sandflies) மூலம் பரவும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதன் தீவிரம், உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கினை கருத்தில் கொண்டால், இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 85% என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

குளிர்ச்சியான கால நிலை நிலவும் மழைக் காலத்தில் தான் ஈக்கள், கொசுக்கள் மற்றும் உண்ணிகளால் ஏற்படும் நோய்கள் அதிகமாக பரவும். இவை மனிதர்களை கடிப்பதால் ஏற்படும் நோய்களை வெக்டர்-போர்ன் நோய்கள் (vector-borne diseases) என்று அழைக்கின்றனர் மருத்துவர்கள்.

சந்திபுரா வைரஸும் இத்தகைய நோய்களில் ஒன்று. இது மணல் ஈக்களால் பரவுகிறது. ஆரவல்லி, சபர்கந்தா மாவட்டங்களில் ஏற்பட்ட நோய் தொற்றுகளின் அறிகுறிகள் அடிப்படையில் இவை சந்திபுரா வைரஸ் தொற்று என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சந்திபுரா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது?

இந்த நோய் குறித்து பெற்றோர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. தொற்று ஏற்பட்டதும் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர்களால் குழந்தைகளை காப்பாற்ற இயலவில்லை.

இந்த நோய் தொற்றுக்கு சந்திபுரா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்த, ஹிம்மத் நகர் பொது மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் தலைவர் மருத்துவர் ஆஷிஷ் ஜெய்ன், “மோசமான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளோடு முதல் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் அவரின் மூளை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் சிறுநீரகம் மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது சந்திபுரா வைரஸ் அல்லது ஜப்பான் மூளை வீக்கம் (Japanese encephalitis) காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத வழிவகை செய்தது,” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டும் இந்த தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இது மழைக்காலம் என்பதால் இந்த தொற்று ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

"ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம். அதனால் தான் குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். இதன் முடிவுகள் செவ்வாய் அல்லது புதன்கிழமை நமக்கு தெரியவரும்" என்றும் அவர் கூறினார்.

சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, சந்திபுரா வைரஸ், மணல் ஈக்களால் பரவக்கூடியவை. சில நேரங்களில் கொசுக்கள் மூலமாகவும் இவை பரவுகின்றன.

இந்த நோய் ஏற்பட காரணம் என்ன?

சந்திபுரா வைரஸ், மணல் ஈக்களால் பரவக்கூடியது. சில நேரங்களில் கொசுக்கள் மூலமாகவும் இவை பரவுகின்றன. மண் வீடுகள் மற்றும் ப்ளாஸ்டரால் ஆன வீடுகளில் உள்ள விரிசல்களில் இந்த மணல் ஈக்கள் காணப்படும் என்கிறார் மருத்துவர் ஆஷிஷ்.

சிமெண்ட் வீடுகள் சுத்தமாக இல்லையென்றால் அங்கும் மணல் ஈக்களை பார்க்க முடியும். இருட்டான, குறைந்த சூரிய வெளிச்சம் கொண்ட பகுதிகளில் இந்த ஈக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன என்று மேற்கோள்காட்டுகிறார் மருத்துவர் ஆஷிஷ்.

"இது தொற்று நோய் அல்ல. ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு இது பரவாது. ஆனால் தொற்று இருக்கும் குழந்தையை கடித்த மணல் ஈ, ஆரோக்கியமான குழந்தையை கடிக்கும் போது அவருக்கும் நோய் தொற்று ஏற்படலாம். ஆனால் இதுவரை ஒரே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பாதித்ததாக தகவல்கள் இல்லை. வெவ்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்” என்றும் விவரிக்கிறார் ஆஷிஷ்.

இந்த நோயின் தீவிரம் குறித்து அவர் பேசும் போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 85% என்கிறார். அதாவது இந்நோய் தாக்கத்துக்கு ஆளான 100 குழந்தைகளில் 15 குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற இயலும்.

சுகாதாரமற்ற சூழல்களில் வாழும் 9 முதல் 14 வயதிலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்கிறார் மருத்துவர் ஆஷிஷ்.

குஜராத்தில் பரவும் சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, சுகாதாரமற்ற சூழல்களில் வாழும் 9 முதல் 14 வயதிலான குழந்தைகள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்

நோய் அறிகுறிகள் என்ன?

  • தீவிரமான காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி
  • வலிப்பு
  • தூக்கமின்மை
  • உணர்வற்ற நிலை
  • தொற்று ஏற்பட்ட சில மணி நேரத்தில் கோமாவுக்கு செல்லுதல்
  • தோலில் புள்ளிகள் ஏற்படுதல்
குஜராத்தில் பரவும் சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது?

மருத்துவர்களின் கருத்துப்படி இந்த நோய்க்கு குறிப்பிடும் படியான சிகிச்சை முறை இல்லை. நோய் அறிகுறிகளை குறைப்பதற்கான சிகிச்சை மட்டுமே உள்ளது. இந்த நோய்க்கு தடுப்பூசிகளும் இல்லை.

ஹிம்மத் நகர் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளரான மருத்துவர் பரேஷ் ஷிலாதரியா பிபிசி குஜராத்திடம் பேசும் போது, “இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஜூன் 27ம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. ஆனால் மலேரியா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் கூறின. இதனால் அவருக்கு சந்திபுரா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவரின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக புனேவுக்கு அனுப்பினோம். மாநில அரசு இந்த பரவலை தடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது," என்று குறிப்பிட்டார் அவர்.

ஆரவல்லி மாவட்டத்தின் தலைமை சுகாதார அதிகாரி எம்.ஏ. சித்திக்கி பிபிசி குஜராத்திடம் பேசும் போது, "ஆரவல்லியில் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தை ஜூலை 3ம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான காய்ச்சலுக்கு ஆளான அவர் பிலோடா பகுதியை சேர்ந்தவர். அவர் ஷம்லாஜி சமூக சுகாதார மையத்தில் தான் முதலில் அனுமதிக்கப்பட்டார்," என தெரிவித்தார்.

"அந்த குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்படவே ஹிம்மத் நகர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் 48 மணி நேரத்தில், ஜூலை 5ம் தேதி அன்று, அவர் உயிரிழந்தார்," என்று கூறினார் சித்திக்கி.

"ஆரவல்லியைப் பொருத்தவரை, பிலோடா மற்றும் மெக்ரஜ் தாலுக்காக்களில் தலா ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. நோய் பரவலை தடுக்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஈக்கள், கொசுக்களை ஒழிக்க பூச்சிமருந்து தெளிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் பரவும் சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, நோய் தொற்றை தடுக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

இந்த நோய் பரவலை முன்பே தடுப்பது எப்படி?

  • வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
  • குப்பைக் கிடங்குகள் கிராமங்களுக்கு வெளியே இருக்க வேண்டும்
  • தூங்கும் போது கொசுவலை பயன்படுத்த வேண்டும்
  • வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • கொசுக்கள், ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
குஜராத்தில் பரவும் சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, இந்நோய் தாக்கத்துக்கு ஆளான 100 குழந்தைகளில் 15 குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற இயலும்.

குஜராத் அரசு கூறுவது என்ன?

இந்த நோய் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், சந்திபுரா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்றும் ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நோய் ஒன்றும் புதிய தொற்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

"1965ம் ஆண்டு மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய சந்திபுரா தொற்று மகாராஷ்டிராவில் உள்ள சந்திபுராவில் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்திலும் சந்திபுரா தொற்று உறுதி செய்யப்பட்டது," என்றார்.

"இந்த வைரஸ் வெசிகுலோவைரஸ் என்ற குடும்பத்தை சேர்ந்தது. குஜராத்தில் குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய குஜராத் மாவட்டங்களில் இந்த நோய் தொற்று ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஏற்படும் இந்த தொற்று குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது," என்று குறிப்பிட்டார்.

"இதுவரை இந்த தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களில் 6 பேர் இறந்துவிட்டனர். மீதம் உள்ள ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மூவர் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மஹிசாகர், கேதா பகுதிகளில் தலா ஒருவர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்" என்று தெரிவித்தார் அமைச்சர்.

"ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேர், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குஜராத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்களுக்கு சந்திபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய இயலும்" என்றும் குறிப்பிட்டுள்ளார் ருஷிகேஷ்.

சந்திபுரா வைரஸ்

பட மூலாதாரம், Ankit Chauhan

படக்குறிப்பு, வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)