உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜை சிறப்பாக நிர்வகிப்பது எப்படி? ஜப்பான் தரும் தீர்வு

ஃப்ரிட்ஜை நிர்வகிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரேச்சல் நுவர்
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

உங்கள் குளிர்சாதனப் பெட்டியை திறந்து, அதில் இருக்கும் மீதமுள்ள உணவுப் பொருள்கள், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றில் எதை முதலில் சாப்பிடுவது என்று குழம்பியது உண்டா?

குளிர்சாதனப் பெட்டியில் எப்போதோ மிச்சம் வைத்த உணவுப் பொருளை திடீரென ஒருநாள் கவனித்து, அது கெட்டுப் போயிருப்பதை கண்டு அருவருப்பாக உணர்ந்து குப்பையில் வீசிய அனுபவம் உண்டா?

இதுபோன்ற சம்பவங்கள் குளிர்சாதனப் பெட்டி வைத்திருக்கும் பெரும்பாலானோர் வீடுகளில் நடக்கும் ஒன்றுதான்.

டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை ஆராய்ச்சியாளரான கோஹெய் வதனாபே கூறுகையில், "பெரும்பாலும், உணவு கெட்டுப் போவதற்கும், வீணாவதற்கும் காரணம், அது குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதை நாம் மறந்துவிடுவது தான்" என்கிறார்.

பிரிட்டனில் கிட்டத்தட்ட 60% உணவுக் கழிவுகள் வீடுகளில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்த சதவீதம் 40-50% ஆக இருக்கிறது.

ஜப்பானிலும் இதே நிலை தான். 2021 ஆம் ஆண்டில், நாட்டின் 5.2 மில்லியன் டன் உணவுக் கழிவுகளில் 47% வீட்டு சமையலறைகளில் உருவானவை.

இந்தளவுக்கு வீட்டுக் கழிவுகள் சேர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் கலாசாரங்கள் மற்றும் புவியியல் இடங்கள் சார்ந்து சில பொதுவான காரணங்களும் உள்ளது. குளிர்சாதன பெட்டியில் இருக்கும் "மறந்துவிட்ட" உணவும் இதில் அடங்கும்;

உணவுப் பொருள்களில் ஒட்டப்பட்டிருக்கும் காலாவதி தேதிக்கான லேபிள்களை சரியாக கவனிக்காதது, பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்யும் போதெல்லாம் அளவுக்கு அதிகமான பொருள்களை வாங்குவது, திட்டமில்லாமல் ஷாப்பிங் சென்று தேவை அறியாமல் பொருள்கள் வாங்கி குவிப்பது ஆகியவை தான் கழிவுகள் உருவாக முக்கிய காரணம். உணவு வீணாவதை குறைப்பது பற்றிய பொதுவான விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒவ்வொரு நாடும் இந்த பிரச்னைகள் பற்று அறிந்திருக்கிறது. பல நாடுகள் கழிவுகள் உருவாவதை குறைக்க முயற்சி செய்கின்றன.

ஆனால் ஜப்பான் உணவுக் கழிவு விவகாரத்தில் தீர்வுகளை உருவாக்க அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. காரணம் ஜப்பான் மக்களின் உணவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதியை சார்ந்திருக்கிறது. எனவே தீர்வுகளைக் கண்டறிய கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறது.

உணவுப் பொருட்களை குப்பையில் வீசுவதால் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செலவுகளும் அதிகரிக்கிறது.

டோக்கியோவில் உள்ள தைஷோ பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை ஆராய்ச்சியாளரான டோமோகோ ஒகாயாமா கூறுகையில், “ஜப்பான் உணவு விநியோகத்தில் தன்னிறைவு அடையாத ஒரு நாடு. பிற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கிறது.”

"நமக்குத் தேவையானதை விட அதிகமான உணவை இறக்குமதி செய்து, அதை குப்பையில் வீசுவது சரியல்ல" என்று அவர் விளக்கினார்.

குளிர்சாதனப்பெட்டியை ஒழுங்கமைத்தல்

குளிர்சாதனப்பெட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து உணவு வீணாவதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

உணவுக் கழிவுகள் குறித்த உலகின் முன்னணி நிபுணர்களில் இருவரான ஒகயாமா மற்றும் வதனாபே, உணவு ஏன் குப்பையில் வீசப்படுகிறது என்பதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து, பின்னர் ஆதார அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர்.

அவர்களது சமீபத்திய செயல்முறை, கழிவுகள் தேங்கும் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றான குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைக்கும் (fridge tidying) நுட்பங்களைக் கொண்டுள்ளது : `அபாயகரமாக தேக்கி வைக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஒகாயாமா சொல்வது போல் "குளிர்சாதன பெட்டியை நிர்வகிப்பது எப்படி என்பதை மக்களுக்கு கற்றுக் கொடுத்தால், உணவுகள் வைத்துவிட்டு மறந்து போகும் நிகழ்வையும் தவிர்க்க முடியும்” என்கிறார்.

குளிர்சாதனப் பெட்டி முதல் குப்பைத் தொட்டி வரை

2018 ஆம் ஆண்டில், ஒகயாமா 500-க்கும் மேற்பட்ட டோக்கியோவில் வசிப்பவர்களிடம் ஏன் உணவை குப்பையில் வீசினர் என்பதை ஆராய ஒரு கணக்கெடுப்பை நடத்தினார். எதிர்பார்த்தபடியே, புதிய உணவு கெட்டுப் போய்விட்டது அல்லது நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனி சுவையாக இருக்காது என்று கருதியதால் குப்பையில் கொட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

சில நேரங்களில், அவர்கள் ஏன் உணவை குப்பையில் கொட்டினோம் என்பதையே மறந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

உணவு வீணாவதற்கு வழிவகுக்கும் ஒரு குழப்பத்தை ஆராய்ச்சியாளர் அடையாளம் கண்டுள்ளார். ஒரு உணவை பயன்படுத்துவதற்கு காலாவதி தேதியை குறிப்பிடும் லேபிளை மக்கள் சரியாக புரிந்து கொள்வது கிடையாது. "best by" அல்லது "best before" தேதி வந்ததும் பலர் உணவை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

ஆனால், “best by” என்பதும் “use by” என்பதும் ஒரே பொருள்படும் வாக்கியங்கள் அல்ல. அந்த குறிப்பிடப்பட்ட தேதியை வைத்து உணவுப்பொருள் இனி பயன்படுத்த உகந்தது அல்ல என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. குறிப்பாக புளிக்க வைத்த உணவுகளின் (fermented foods) விஷயத்தில் அப்படி நினைக்கவே கூடாது என்று வதனாபே விளக்குகிறார்.

உங்கள் குளிர்சாதனப் பெட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து உணவு வீணாவதை குறைப்பதற்கான எளிய முறை

பட மூலாதாரம், Getty Images

அதே சமயம் "நீண்ட காலம் வைக்கப்பட்ட உணவு படிப்படியாக கெட்டுப்போகும் அபாயம் உள்ளது, எனவே அது நிகழ்வதற்கு முன் நாம் அதை உட்கொள்ள வேண்டும். கெட்டுப் போகும் தடயங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் எச்சரிக்கிறார்.

"ஆனால் சில புளிக்க வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் (fermented foods) நாட்கள் செல்லச்செல்ல சுவை கூடும் தன்மையை கொண்டிருக்கும்” என்றார்.

ஜப்பான் மற்றும் பல நாடுகளில், "best until" என்று உணவுப்பொருள் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு தயாரிப்பு அதன் சுவையின் உச்சத்தில் இருக்கும் தேதியை குறிக்கிறது. அதே நேரத்தில் "use by" என்பது உற்பத்தியாளர் அந்த உணவுப்பொருள் அதுவரை உட்கொள்ளப் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளிக்கும் தேதிகளைக் குறிக்கிறது.

ஆனால் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் இந்த தேதிகளை குழப்பிக் கொள்கின்றனர்.

“best by” மற்றும் “use by” என்ற லேபிள்களின் அடிப்படையில் பொருட்களைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, நுகர்வோர் தங்கள் உணர்வுகளை பயன்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். சில குறைந்த ஆபத்துள்ள பொருட்கள், காண்டிமென்ட்கள் (சாஸ் வகைகள்) காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த பொருட்கள் மற்றும் தயிர் மற்றும் புளித்த உணவுகள் போன்றவற்றைப் பார்த்தும் வாசனை நுகர்ந்து பார்த்தும் பயன்படுத்த வேண்டும் என்று வதனாபே கூறுகிறார்.

உணர்ந்து கொள்வதன் முக்கியத்துவம்

குளிர்சாதன பெட்டிகள்

பட மூலாதாரம், RACHEL NUWER

படக்குறிப்பு, ஸ்கை ஹைட்ஸ் குடியிருப்பாளர்களிடம் உணவு கழிவுகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பற்றி ஒகயாமா (பின்புறம்) பேசுகிறார்.

உணவுக் கழிவுகளைக் குறைக்கும் நம்பிக்கையில், சமூகக் கல்வி மற்றும் குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்குபடுத்தும் நுட்பங்களின் பன்முக உத்திகள் உதவும் என்று ஒகயாமாவும் வதனாபேவும் கருதினர்.

அவர்களின் முறையைச் சோதிப்பதற்காக, வடக்கு டோக்கியோவில் உள்ள அரகாவாவில் விருப்பமுள்ள மக்களை கண்டறிந்தனர். அவர்கள் உணவுக் கழிவுகளைக் குறைப்பதில் உறுதியளித்து செயல்முறையில் பங்களித்தனர்.

2008 ஆம் ஆண்டு முதல், அரகாவா சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவுத் துறை "வீணாகி விட்டதற்காக வருத்தம் தெரிவிக்கவும்" என்ற திட்டத்தை ஊக்குவித்து வருகிறது;

முதலாவதாக, வதனாபே மற்றும் ஒகாயாமா அடுக்குமாடி குடியிருப்பில் பல நாட்கள் சேர்க்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு டன் கழிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் இருந்த அனைத்து உணவுகளையும் வரிசைப்படுத்தி, எடை போட்டு பதிவு செய்தனர்.

பழங்கள் மற்றும் காய்கறிகள், பாஸ்தா, ரொட்டி, தின்பண்டங்கள், இறைச்சிகள், சாஸ்கள், டோஃபு, மீன், பானங்கள் ஆகியவற்றின் முழுமையான சீல் செய்யப்பட்ட பொட்டலங்களில் எஞ்சியிருக்கும் உணவுகளை அவர்கள் கண்டறிந்தனர்.

பரிசுகளாக வழங்கப்பட்ட ருசிக்கப்படாத பிஸ்கட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் கொண்ட உயர் தர பிராண்டட் பெட்டிகளும் இருந்தன. ஒகயாமாவின் கூற்றுப்படி, அவை பரிசுகளாக வழங்கப்பட்வை. ஆனால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

அதிக எண்ணிக்கையிலான புளிக்க வைக்கப்பட்ட உணவுகளும் இருந்ததாக வதனாபே கூறுகிறார்.

குளிர்சாதனப்பெட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து உணவு வீணாவதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

குளிர்சாதன பெட்டியை சரிவர நிர்வகிக்க ஜப்பான் தரும் தீர்வு

அடுத்து, அவர்கள் இருவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஸ்கை ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இந்த திட்டத்தைப் பற்றிச் சொல்ல கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

அவர்கள் உணவை வீணாக்குவது குறித்து ஒரு சிறு உரையை நிகழ்த்தினர். காலாவதி தேதிகள் பற்றி பேசினர். ஸ்மார்ட்டான குளிர்சாதனப் பெட்டி அமைப்பிற்கான நுட்பங்கள் உள்ளன, கழிவுகளைக் குறைக்க விரும்பும் எவரும் அந்த நுட்பங்களை முயற்சி செய்யலாம் என்று ஊக்குவித்தனர்.

வதனாபே மற்றும் ஒகயாமா குடியிருப்பாளர்களுக்கு ஒரு பிரகாசமான சிவப்பு மற்றும் வெள்ளை ரிப்பனை வழங்கினர்.

அந்த ரிப்பன்களை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் உணவுப்பொருட்களை வேற்றுமைப்படுத்தி காட்ட வேண்டும். அதாவது. குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள குறைவான காலாவதி தேதிகள் கொண்ட உணவுகள் அல்லது விரைவாக உட்கொள்ள வேண்டிய பொருட்களில் மீது ரிப்பனை ஒட்ட வேண்டும்.

கெட்டுப்போகும் தருவாயில் உள்ள உணவுகள் தனித்து தெரியும் படி வைப்பதால் விரைவாக அதை காலி செய்ய நமக்கு தோன்றும்.

“என்னை மன்னித்து விடு, என்னால் உன்னை சாப்பிட முடியாது” என்ற லேபிளையும் ஆய்வாளர்கள் விநியோகம் செய்தனர். பங்கேற்பாளர்கள் தாங்கள் தூக்கி எறியும் ஒவ்வொரு உணவிலும் இந்த லேபிளை ஒட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

"மேலும் உணவுப் பொருளை குப்பையில் வீசுவதற்கு முன்பு கொஞ்சம் யோசிக்க வேண்டும். இது ஏன் நடக்கிறது என்பதை உணர வேண்டும். எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். உணர்தல் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

இந்த திட்டத்தின் முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருந்தன: சோதனைக்குட்படுத்தப்பட்ட பகுதியில் உணவுக் கழிவுகள் 10% குறைவதை கண்டறிந்தனர்.

உணவை வீணாக்குவதைப் பற்றி மக்கள் மத்தியில் பேசுவதும், பிரச்னையை பற்றி மக்கள் மனதில் பதிவு செய்வதும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஸ்கை ஹைட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மத்தியில் வதனாபே மற்றும் ஒகயாமா தங்கள் ஆய்வு முடிவுகளை வழங்கியபோது அந்த கூட்டத்தில், 82 வயதான ஹிரோகோ சசாகி என்ற பெண் அனைவரையும் கவர்ந்தார்

82 வயதான ஹிரோகோ சசாகி, போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் வளர்ந்தவர் என்பதால், தனது வாழ்நாள் முழுவதும் உணவை வீணாக்காத அர்ப்பணிப்புடன் இருந்தார். அடுக்குமாடி வளாகத்தின் குப்பைக் கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து உண்ணக்கூடிய பொருட்களின் புகைப்படங்களைப் பார்த்த போது "மிகவும் கோபம் ஏற்பட்டது" கூறினார்.

"ஆனால் கோபம் மட்டும் பிரச்னையை தீர்க்காது, எனவே அதைப் பற்றி பேசுவது மற்றவர்களை மாற்றும்," என்று அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட இந்த சோதனை, ஜப்பானின் பிற பகுதிகளுக்கு அல்லது அதற்கு அப்பால் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படலாம் என்பது வடனாபே மற்றும் ஒகயாமாவுக்குத் தெரியாது.

ஆனால் அவர்கள் யமகட்டா மாகாணத்தில் உள்ள நாகையில் உள்ள 520 வீடுகளில் ஆய்வைப் பிரதிபலிக்கும் மற்றொரு சோதனையை நம்பிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)