‘வயநாடு சம்பவம் நீலகிரிக்கான எச்சரிக்கை மணி’- மேற்குத் தொடர்ச்சி மலை நிலச்சரிவுகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
"வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு” என்று விவரித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளால், வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில நொடிகளில் மண்ணுக்குள் புதைந்து போயின. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தின் இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
தொடர்ச்சியாக இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படக் காரணம் என்ன? மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்ச்சியாகப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கடவுளின் தேசம்

பட மூலாதாரம், Getty Images
கனமழை, நிலநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பது போன்ற இயற்கை காரணங்களாலும், ஆக்கிரமிப்புகள், காடுகள் அழிப்பு, பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு காரணிகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
பெருமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், நிலச்சரிவுகள், உயிரிழப்புகள் என இத்தகைய சூழ்நிலையை கேரள மாநிலம் சந்திப்பது இது முதல்முறையல்ல. குறிப்பாக 2018ஆம் ஆண்டு, கடவுளின் தேசம் தண்ணீரில் மிதந்தது. ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டது.
கேரளாவின் வயநாடு, இடுக்கி, கண்ணூர், திரிச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். 1924ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இது என்று விவரிக்கப்பட்டது.
“நூற்றாண்டுக்குப் பிந்தைய மோசமான வெள்ளம்” என்று அப்போது கூறினார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.
அடுத்த வருடமும் (2019) மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்ந்தன, இயற்கையின் கோர தாண்டவத்தை சமாளிக்க முடியாமல் திணறியது கேரளா. 2019 ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வயநாடு, மலப்புரம், கண்ணூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரண்டே நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 121 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல 2020, 2021, ஆகிய வருடங்களிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டது கேரளா. இத்தகைய தொடர்ச்சியான பேரிடர்களில் இருந்து கேரளா கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அழிக்கப்படும் கேரளாவின் வனங்கள்
கடந்த 40 வருடங்களில், 9000 சதுர கிலோமீட்டர் காடுகளை கேரளா இழந்துள்ளது என்று கூறுகிறார் வயநாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.
“கடந்த கால தவறுகளில் இருந்து கேரளா பாடம் கற்றுக்கொண்டதா எனக் கேட்டால், நிச்சயமாக கற்றுக்கொண்டது. இம்முறை அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதுமட்டும் போதாது"
"காரணம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்னையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார் தன்யா.
வயநாட்டில் தேயிலை, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம் இருப்பதால், இதுபோன்ற நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய தன்யா, “இம்முறை ஏற்பட்ட நிலச்சரிவை தடுத்திருக்க முடியாதுதான், காரணம் அது இயற்கைப் பேரிடர். ஆனால் அதன் தீவிரத்தையும் உயிரிழப்பையும் குறைத்திருக்கலாம்” என்கிறார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தங்கி இருந்தவர்கள் பலரும் தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்றும் கூறினார் தன்யா.
“கடந்த காலத்தில் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு எவ்வவளோ பரிந்துரைகள் நிபுணர் குழுக்களால் அளிக்கப்பட்டும், அதற்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை. இந்த முறையாவது தற்காலிகத் தீர்வுகளை எடுக்காமல், நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்” என்கிறார் தன்யா.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் 40 விழுக்காடு கேரளாவில்தான் உள்ளது. அதுமட்டுமல்லாது கேரள மாநிலத்தின் 44 நதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மட்டுமே 41 நதிகள் உருவாகின்றன.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கண்டறிய சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் தலைமையில் 13 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை 2010ஆம் ஆண்டு அமைத்தது இந்திய அரசு.
அந்த ஆய்வுக்குழு, 2011ஆம் ஆண்டு இந்திய அரசிடம் 522 பக்கங்களுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் எங்கெல்லாம் என்னென்ன சூழலியல் பிரச்னைகள் இருக்கின்றன, அவை அதன் சுற்றுச்சூழல் சமநிலையை, மக்களின் வாழ்வியலை எப்படிப் பாதிக்கின்றன என்று முழுமையாக ஆராய்ந்து, அதைச் சரிசெய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்தியது.
ஆனால், அந்த அறிக்கையை இந்திய அரசாங்கமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாநிலங்களின் அரசுகளும் நிராகரித்தன.
பின்னர், ஆய்வாளர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றுமொரு குழுவை நியமித்தது இந்திய அரசு. அவர்கள் 2013ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
ஆனால், கர்நாடகா, கேரளா போன்ற பெரும்பாலான மாநில அரசுகள் அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
2021-ல் இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதுகாப்பிற்காக, கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
''மேற்குத்தொடர்ச்சி மலையை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிப்பது அப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் கர்நாடக அரசும் அப்பகுதியில் வாழும் மக்களும் இந்த அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்க்கிறோம்" என கூட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள்
- கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 விழுக்காடு பகுதியை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிக்குமாறு பரிந்துரைக்கிறது.
- அதில், 20,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கர்நாடகாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அதோடு, கிரானைட் போன்றவற்றுக்கான அகழ்விடங்கள், சுரங்கங்கள், சிவப்பு வகைப்பாட்டில் வரும் தொழிற்சாலைகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்குமாறு வலியுறுத்தியது.
- மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன்பே, அவை காடு மற்றும் காட்டுயிர்களிடையே என்ன மாதிரியான பின்விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
- புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டங்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் அனுமதிக்கக்கூடாது. ஆனால், நீர்மின் திட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம்.
- கட்டுமானத் திட்டங்களைப் பொறுத்தமட்டில், 20,000 சதுர மீட்டர் வரை அனுமதி வழங்கலாம்.
- காட்டு நிலங்களைத் திசை திருப்புவதை, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
மாதவ் காட்கில் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள்
- மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். இதில், முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரின் 75 விழுக்காடு பகுதி வருகிறது.
- மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிடவேண்டும்.
- காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவேண்டும்.
- காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைதிருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
- அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்கவே கூடாது.
- கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின் வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
- மலைத்தொடரின் பாதுகாப்பு கருதி, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.
- அந்த ஆணையம் மலைத்தொடரில் வாழும் மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகள், பங்கெடுப்புகளோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
- பழங்குடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, காடுகள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
- இந்திய வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுக்க முறையாக அமல்படுத்தவேண்டும்.
‘நீலகிரிக்கு காத்திருக்கும் ஆபத்து’

பட மூலாதாரம், Getty Images
“மாதவ் காட்கில் பல ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலைகள் குறித்து ஆய்வு செய்து வந்தவர். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் கொடுத்த அழுத்தத்தால், மத்திய அரசு அவர் தலைமையில் குழுவை அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளை நிராகரிக்காமல் பின்பற்றியிருந்தால் நிச்சயம் பல பேரிடர்களைத் தவிர்த்திருக்கலாம்.” என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாஸ்.
வயநாட்டிற்கு அடுத்தபடியாக நீலகிரி இத்தகைய நிலச்சரிவு ஆபத்தில் இருப்பதாகக் எச்சரிக்கிறார் காளிதாஸ்.
“எல்லா இடங்களிலும் மனிதர்கள் சென்று வாழ வேண்டும் என நினைப்பதே தவறு. குறிப்பாக நீலகிரியில் கணக்கற்ற கட்டிடங்கள், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கட்டப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.” என்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் நீலகிரியில் பெய்த கனமழை மற்றும் அவலாஞ்சியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை சுட்டிக்காட்டிய அவர், வயநாடு சம்பவம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி என்று கூறுகிறார்.
பசுமையாகத் தெரியும் தேயிலைத் தோட்டங்கள் என்பது காடுகள் அல்ல, அவை வெறும் பசும் பாலைவனங்களே. இதை முதலில் நாம் உணர வேண்டும் என்கிறார் காளிதாஸ்.
“இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால் அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பற்றவும் நம்மால் முடியும். ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து, தோட்டங்களாக மாற்றினார்கள். இப்போது நாம் அதை கட்டிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அதன் கோர விளைவுதான் வயநாடு நிலச்சரிவு போன்ற சம்பவங்கள்” என்று அவர் கூறினார்.
''அதிகமான மனித உயிர்களையும் காடுகளையும் இழந்துவிட்டோம், இப்போதாவது மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார் காளிதாஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












