நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?

வைபர் ரோவர்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, வைபர் ரோவர் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பிறகு நாசா அந்த திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளது.
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வைபர் ரோவர் (VIPER) என்ற திட்டத்தின் மூலமாக ஒரு இயந்திர ரோவரை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 2021இல் அறிவித்திருந்தது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நாசாவின் இந்தத் திட்டம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3,767.51 கோடிகள்) செலவில் வைபர் இயந்திர ரோவர் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பிறகு நாசா இந்த முடிவை எடுத்துள்ளது.

முழுமையடைந்த ரோவரை ஆர்வமுள்ள விண்வெளி நிறுவனங்களுக்கு கொடுத்துவிட அல்லது அதன் பாகங்களை நாசாவின் எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

நிலவு குறித்த சர்வதேச ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், அதன் இறுதிக் கட்டத்தில் கைவிடப்பட்டது ஏன்? இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இந்தியாவிற்கும் பங்கு உள்ளது, அது என்ன? இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் இந்தத் திட்டத்தை தொடர முடியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாசாவின் வைபர் ரோவர் திட்டம்

நிலவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலவில் தென் துருவத்தின் மேற்கு முனையில் நோபில் க்ரேட்டர் என்கிற பகுதியில் வைபர் ரோவரை தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது.

வைபர் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டபோது, அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. நிலவில் தண்ணீர் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கும், நிலவில் மனிதர்களை குடியேற்றுவது தொடர்பான முயற்சிகளுக்கும் பயனளிக்கும் என்பதே அதற்குக் காரணம்.

"நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்னவெல்லாம் இருக்கின்றன? எத்தனை அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள வைபர் ரோவர் உதவும்" என நாசா முன்னர் கூறியிருந்தது.

நிலவில் தென் துருவத்தின் மேற்கு முனையில் நோபில் க்ரேட்டர் என்கிற பகுதியில் வைபர் ரோவரை தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. இந்த நோபில் க்ரேட்டர் (Nobile crater) என்பது சுமார் 79.27 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளமாகும். இந்தப் பகுதி எப்போதும், சூரிய ஒளி படாமல் நிழலில் தான் இருக்கும்.

நிலவின் தென் முனையில் இதுபோல மேலும் சில க்ரேட்டர்கள் (பள்ளங்கள்) உள்ளன. இந்தப் பகுதிகளில் பல பில்லியன் டன் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதாகவும், அந்தப் பகுதிகள் சூரிய ஒளியையே பார்த்ததில்லை என்றும், அங்கு -223 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பநிலை இருக்கலாம் என்றும் இதுவரையிலான நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் கிடைத்த ஆதாரங்கள் கூறுகின்றன.

க்ரேட்டர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலவின் தென் முனையில் உள்ள க்ரேட்டர்கள் (பள்ளங்கள்)

அப்பகுதிகள் எப்போதுமே நிழலில் இருப்பதால், மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டிகள் பாதுகாக்கப்பட ஏதுவான சூழலும், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும் நிலவுகிறது. இத்தகைய பகுதிகளில் ஒரு ரோவரைத் தரையிறக்கி, தொடர்ந்து ஆய்வு செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம்.

கடுங்குளிரையும், அதேநேரத்தில் வெப்பத்தையும் தாங்கக்கூடிய வகையில் வைபர் ரோவர் வடிவமைக்கப்பட்டது. முகப்பு விளக்குகளோடு (ஹெட் லைட்) உருவாக்கப்பட்ட நாசாவின் முதல் ரோவர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அமெரிக்க அரசால் 433.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3,625.18 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2021ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது.

ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை (நிலவில் ரோவர் தரையிறங்க உதவும் கருவி) உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025, செப்டம்பரில் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 1,473.52 கோடி) தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக சில நாட்களுக்கு முன்பாக நாசா அறிவித்தது.

"இது மிகவும் கடினமான முடிவாகும், ஒரு நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்" என்று நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் கூறியிருந்தார்.

‘இந்தியாவின் சந்திராயன்-1 தான் தொடக்கப்புள்ளி’

சந்திராயன்- 1 அனுப்பிய தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்திராயன்- 1 அனுப்பிய தரவுகளின் மூலம், நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்சில் வடிவத்தில் நீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது.

வைபர் திட்டத்தை நாசா கைவிட்டது குறித்தும், இத்திட்டத்தில் இந்தியாவிற்கு இருக்கும் தொடர்பு குறித்தும் பிபிசி தமிழிடம் பேசினார், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

“வழக்கமாக தண்ணீர் என்றால் ஹைட்ரஜன் டை ஆக்சைடு (H2O)தான். ஆனால் ஹைட்ராக்சில் (Hydroxyl- OH) என்று மற்றொரு வகை உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இந்த ஹைட்ராக்சில் மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன் 1 கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு தான் நிலவு குறித்த ஆய்வுகளில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது” என்கிறார்.

இந்தியாவின் சந்திராயன்-1 அக்டோபர் 2008இல் விண்ணில் ஏவப்பட்டது. இதில் நாசாவின் நிலா கனிமவியல் வரைவி எனும் கருவியும் இணைக்கப்பட்டிருந்தது (Moon Mineralogy Mapper- M3). இந்தக் கருவி அனுப்பிய தரவுகளின் மூலம், சந்திரனின் மேற்பரப்பில் ஹைட்ராக்சில் வடிவத்தில் நீர் இருப்பதை நாசா செப்டம்பர் 25, 2009 அன்று உறுதிப்படுத்தியது.

நிலவில் எப்படி நீர் வந்திருக்கக் கூடும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "விண்கற்களில் 50% உறைபனி இருக்கும். நிலவின் மீது இந்த விண்கற்களும் பாறைகளும் மோதிக் கொண்டே இருக்கும். இதனால் நிலவின் பரப்பில் பள்ளங்கள் உருவாகின்றன. இந்தப் பள்ளங்கள் பெரும்பாலும் இருட்டாகவே இருக்கின்றன. அதனால் வெப்பம் படாமல், அவற்றில் இருக்கும் உறைபனி உருகாமல் இருக்கிறது," என்றார்.

ஆனால், விண்கற்களில் எப்படி உறைபனி வந்தது என்பதற்கு இன்னும் சரியான விளக்கம் இல்லை என்றும் கூறுகிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

வைபர் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் பூமியில் எப்படி தண்ணீர் வந்தது என்ற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும் என்கிறார் அவர்.

‘எரிபொருள் ஆதாரமாக நிலவின் நீர்'

சந்திரன்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நிலவின் மேற்பரப்பு

நிலவில் கிடைக்கும் ஹைட்ராக்சிலை, ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் என பிரித்துவிட்டால் அதை கிரயோஜெனிக் எரிபொருளாக ராக்கெட்டிற்கு பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி வாகனங்களுக்கான எரிபொருளை நிலவில் நிரப்பினால் விண்வெளி பயணத்தின் செலவை கணிசமாக குறைக்கலாம் என்ற நோக்கிலும் நாசா இத்திட்டத்தை முன்னெடுத்தது.

இதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், “நாசா, தன் வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

அமெரிக்க அரசால் இந்த ஆண்டு நாசாவிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 24.875 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,09,306.26 கோடிகள்). ஆனால் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 சதவீதம் குறைவு மற்றும் நாசா கோரிய நிதியை விட இது 8.5 சதவீதம் குறைவு.

யுக்ரேன்- ரஷ்யா போர் மற்றும் பாலத்தீனம்- இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடுகளால் ஏற்பட்ட வீண் செலவுகள் தான் நாசாவின் திட்டங்களைப் பாதித்துள்ளன என்கிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

வைபர் திட்டத்தைத் தொடர 'இஸ்ரோ'வால் முடியுமா?

பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.
படக்குறிப்பு, இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், “வைபர் ரோவரை பல பாகங்களாக பிரித்து, அதை வேறு ஏதாவது விண்வெளித் திட்டத்திற்கு பயன்படுத்தலாமா என நாசா யோசிக்கிறது, இல்லையென்றால் அதை வேறு ஏதாவது நாடுகளுக்கு விற்றுவிடலாமா என்றும் நினைக்கிறது.”

“தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேரவும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த திட்டம் எந்த திசையில் போகும் என்பது இப்போதைக்குச் சொல்ல முடியாது.” என்று கூறினார்.

இந்தியா விரும்பினால் இஸ்ரோவால் இத்திட்டத்தைத் தொடர முடியுமா என கேட்டபோது, “சந்திராயன் போன்ற வெற்றிகரமான திட்டங்களை குறைந்த செலவில் செயல்படுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது, ஆனால் இந்த வைபர் திட்டத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால் இஸ்ரோவால் இதில் இணைய முடியாது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று மையங்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.” என்று கூறினார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்தியாவிடம் இதற்கான ராக்கெட்டோ அல்லது லேண்டரோ கிடையாது என்று கூறிய அவர், ஆனால் நிலவில் நீர் குறித்த இந்தியாவின் ஆய்வுகள் தொடரும் என்றும் சந்திராயன்-4 திட்டத்திலும் நிலவில் நீர் இருப்பது குறித்த ஆய்வுகள் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)