ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக பாரிஸில் அரங்கேறும் 5 புதுமைகள்

பட மூலாதாரம், Getty Images
உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் நகரில் களை கட்டியுள்ளது. இதில் குறைந்தது 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் தான் நடந்தன.
நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில், முதன்முறையாக நடைபெறும் ஐந்து விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
1. பாலின சமத்துவம் 50 - 50
“பாரிஸ் நகரில் நடக்கும் 2024-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில், பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்குபெறுகின்றனர். விளையாட்டுத் துறையில் எண் சார்ந்த பாலின சமத்துவத்தை அடையும் முதல் ஒலிம்பிக் போட்டியாக இருக்கும்."
இதைச் சொன்னது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach). இந்த மைல்கல்லை "ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பொதுவாக விளையாட்டிலும், பெண்களின் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று," என்று அவர் விவரித்தார்.
ஏதென்ஸில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1900-ஆம் ஆண்டில் பாரிஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில்தான் முதன்முறையாகப் பெண்கள் கலந்துகொண்டனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில், மொத்த பங்கேற்பாளர்களில் பெண்கள் 2.2% மட்டுமே பெண்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது.
மேலும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், விளையாட்டுகளில் இருந்த ஆணாதிக்கம், பெண்களின் பங்கேற்பை கோல்ஃப் மற்றும் வில்வித்தை போன்ற மிகச் சில விளையாட்டுகளுக்குள் சுருக்கியது. ஆனால் ஆலிஸ் மில்லியட் (Alice Milliat ) வந்ததும் எல்லாம் மாறியது .
1884-இல் பிரான்சில் பிறந்த இவர் ஒரு படகு செலுத்தும் வீராங்கனை. இவர் பெண்கள் தடகள நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒலிம்பிக்கிற்கான பிரசாரத்தை முன்னெடுத்தார்.
இது எளிதாக இருக்கவில்லை, ஆனால் அவர் தோற்றுவித்த ‘ஃபெடரேஷன் ஸ்போர்ட்டிவ் ஃபெமினைன் இன்டர்நேஷனல்’ (FSFI) அமைப்பானது இந்த நீண்ட பாதையில் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
2. திறந்த வெளியில் தொடக்க விழா
வரலாற்றில் முதல் முறையாக ஒரு மைதானத்தில் வைத்து ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடத்தப்படவில்லை. அது பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது.
இதற்காக, சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. அது விளையாட்டு வீரர்களை ஆற்றின் வழியாகக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அழைத்துச் சென்றது.
தொடக்க அணிவகுப்பு 6 கி.மீ வரை சென் நதியைக் கடந்தது. நதியின் இருகரைகளிலும் 3 லட்சம் மக்கள் இதைக் கண்டுகளித்தனர்.
இது பாரிஸின் பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவான ‘ஜார்தாங்க் தே பிளாண்டஸுக்கு’ அடுத்துள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. நகரின் மையத்தில் உள்ள இரண்டு தீவுகளான ஈல் சாங் லூயிஸ் மற்றும் ஈல் த லா சிதே ஆகியவற்றைச் சுற்றிலும், ஒரு டஜன் பாலங்கள் மற்றும் நடைபாதைகளின் கீழ் சென்றது.
விழாவின் நிறைவு நிகழ்ச்சி புகழ் பெற்ற ட்ரோகாடெரோ பகுதியில் நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
3. புதிய விளையாட்டு - பிரேக் டான்ஸ்
‘பிரேக்கிங்’ அல்லது ‘பிரேக் டான்ஸின்’ தோற்றம் 1970-களில் துவங்குகிறது. அப்போது நியூயார்க்கின் பிராங்க்ஸ் சுற்றுப்புறத்தில், ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அக்ரோபாட்டிக் அசைவுகளுடன் நடனமாடுவதன் மூலம் விருந்துகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இது ஹிப் ஹாப் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
பிரபலமான பிரேக் டான்ஸ் போர்களில் DJ மற்றும் MC இருப்பது (போட்டிகளின் மாஸ்டர்கள்) இன்றியமையாதது. இதில் இளைஞர்கள் வட்டமாக நின்றுகொண்டு, ஒவ்வொருவராக மாறி மாறித் தங்களின் சிறந்த நடனத்தை ஆடுகிறார்கள்.
2018-ஆம் ஆண்டில், பியூனர்ஸ் அயர்ஸ் யூத் ஒலிம்பிக்கில், பிரேக் டான்ஸ் அதன் ஒலிம்பிக் அறிமுகத்தை நிகழ்த்தியது.
இப்போது, தடகளம் மற்றும் நகர்ப்புற நடனம் ஆகியவற்றின் கலவையால், இது பாரிஸின் பெரிய மேடையில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
தனி நபர்களுக்கிடையே போட்டி நடைபெறும். காற்றாலைகள் போன்ற நடனங்கள், ஆறு படிகள், மற்றும் பிரபலமான முடக்கம் போன்ற நகர்வுகள் உட்பட, டி.ஜே. டிராக்குகளை பிரேக் டான்சர்கள் மேம்படுத்துவார்கள்.

பட மூலாதாரம், Getty Images
4. கயாக் கிராஸ் - புதிய விளையாட்டு அறிமுகம்
கயாக் கிராஸ் என்பது ‘ஸ்லாலோம் கேனோயிங்’கின் ஒரு பகுதியாகும். இது 1972-ஆம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் அறிமுகமானது.
பெண் மற்றும் ஆண் பிரிவைக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டில், வீரர்கள் விரைவாக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் எதிராகவும் போட்டியிடுவார்கள்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, கயாக் கிராஸ் வேறு எந்த நிகழ்வையும் போன்றதல்ல.
“முதலில், நான்கு துடுப்பு வீரர்கள் ஒரே நேரத்தில் போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக, தண்ணீருக்கு மேல் வைக்கப்பட்டுள்ள வளைவில் பந்தயத்தைத் தொடங்குகிறார்கள்," என்கிறது இணையதளம்.
சமிக்ஞை கொடுக்கப்பட்டவுடன், அவர்கள் அதைத் தாண்ட வேண்டும். போட்டி ‘அதிகபட்சம் ஆறு வாயில்கள் கீழ்நோக்கியும், இரண்டு மேல்நிலை வாயில்கள் கொண்ட ஒரு கால்வாயில்’ நடைபெறும்.
பாரிஸில், மற்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் புதுமை இருக்கும்.
1) தடகளம்: ஆடவர் 50 கி.மீ நடை போட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, கலப்பு ரிலே நடைபயண மாரத்தானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர்கள் நான்கு மாற்று நிலைகளில் கடப்பார்கள்.
2) குத்துச்சண்டை: பெண்களுக்கு ஒரு புதிய எடைப்பிரிவு கூடுதலாகவும், ஆண்களுக்கு ஒரு எடைப்பிரிவு குறைவாகவும் இருக்கும். மொத்தத்தில், முறையே ஆறு மற்றும் ஏழு பிரிவுகள் உண்டு.
3) படகோட்டுதல்: இரண்டு புதிய போட்டிகள் இருக்கும்: iQFOil - இது விண்ட்சர்ஃபிங் துறையில் RS:X-க்கு பதில் இருக்கும். மற்றொன்று கைட்போர்டிங் - இது சர்ஃபிங், விண்ட்சர்ஃபிங், மற்றும் பாராகிளைடிங் ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைக்கிறது.
4) கைப்பந்து: முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் போலல்லாமல், அணிகள் நான்கு பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும்.

பட மூலாதாரம், Getty Images
5. ‘100% புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ பயன்பாடு
முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஒலிம்பிக்கின் கார்பன் உமிழ்வை பாதியாகக் குறைக்க ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
"இது பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்துடன் இணைந்த முதல் ஒலிம்பிக் போட்டி," என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் குறிப்பிடுகிறது.
இந்த நோக்கத்திற்காக, ஒலிம்பிக் வசதிகளை, பொது மின்சார வலையமைப்பு மூலம் இயக்க அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
"மின்சார விநியோக வலையமைப்புடன் இணைக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்க, ஆறு காற்றாலைகள் மற்றும் இரண்டு சோலார் பூங்காக்களில் இருந்து 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை 2024 ஒலிம்பிக் போட்டி பயன்படுத்துகிறது," என்று பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் இணையதளம் கூறுகிறது.
எரிசக்தி நிறுவனமான EDF, விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தும் அதே அளவு மின்சாரத்தை இந்த கிரிட்டிற்கு வழங்கும். இந்த அணுகுமுறை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை பின்பற்றப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, "ஸ்டேட் த பிரான்சில் நடக்கும் போட்டிகளுக்கு டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நெட்வொர்க் மூலம் நேரடியாக மின்சாரம் வழங்கப்படும்."
விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தும் பிரான்ஸின் பாரம்பரியத்தால், ஏற்கனவே பல மைதானங்கள் அங்கு உள்ளன. எனவே, "பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் 95% உள்கட்டமைப்பு தற்காலிகமானது அல்லது ஏற்கனவே உள்ளது" என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












