ராகுல் காந்தியின் சாதி பற்றி அனுராக் தாக்கூர் என்ன பேசினார்? மோதி என்ன செய்தார்?

ராகுல் காந்தி மற்றும் அனுராக் தாக்கூர்
படக்குறிப்பு, ராகுல் காந்தி மற்றும் அனுராக் தாக்கூர்

பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் ஜூலை 30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை குறி வைத்து, 'எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்' என்று கூறினார்.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி வருகிறார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போதும் ராகுல் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

செவ்வாய் அன்று அனுராக் தாக்கூர் "ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது. மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்” என்று கூறினார்.

அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது, எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தன. அனுராக் தாக்கூர் ஒருவரிடம் சாதி பற்றி எப்படி கேட்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

பலத்த சலசலப்புக்கு இடையே அனுராக் தாக்கூரின் கருத்துக்கு பதிலளித்த ராகுல் காந்தி,"அவர் என்னை அவமதித்துவிட்டார். என்னை பேச விடுங்கள். நீங்கள் என்னை எவ்வளவு அவமானப்படுத்த விரும்புகிறீர்களோ, அதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். அதை தினமும் செய்யுங்கள். ஆனால் இங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றிக் காட்டுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். எவ்வளவு வேண்டுமானாலும் என்னை அவமானப்படுத்துங்கள்,” என்று குறிப்பிட்டார்

அனுராக் தாக்கூரின் இந்த பேச்சுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுபுறம் அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பிரதமர் மோதி அனுராக் தாக்கூரை பாராட்டியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அனுராக் தாக்கூரின் வீடியோ கிளிப்பை பகிர்ந்த பத்திரிகையாளர் ஷீத்தல் சிங், “சாதி அடிப்படையிலான அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பா.ஜ.க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த அவமானகரமான கருத்து ராகுல் காந்திக்கு சாதகமாக அமையும்,” என்று பதிவிட்டார்.

’இந்தக் கருத்து நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே ராகுல் காந்தியை பிரபலமாக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர்வு- தாழ்வு அவமானங்களை சந்தித்த மக்களுக்கு இந்தக் கருத்து ராகுல் காந்தி மீது ஒரு நெருக்கத்தை உருவாக்கும்,’ என்று ஷீத்தல் சிங் எழுதியுள்ளார்.

ஷீத்தல் சிங்கின் இந்தக் கருத்தை மறுபகிர்வு செய்த மூத்த பத்திரிகையாளர் ராகுல் தேவ், "இது ஒரு வரமாக அமையுமா, இல்லையா என்பது ராகுலும் இந்தியா கூட்டணியும் எவ்வளவு திறமையாக அதை தங்களுக்கு சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்து அமையும்" என்று எழுதியுள்ளார்.

'ஆனால் அனுராக் தாக்கூரின் உயர் சாதி ஆணவம் அதன் முழு விஸ்வரூபத்தில் நாடாளுமன்றத்தில் அம்பலமானது. ’நாட்டின் துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள்…’ என்ற அவரது கருத்துக்குப் பிறகு இது இரண்டாவது தவறு. இது பா.ஜ.கவின் எஞ்சியிருக்கும் சித்தாந்த ஒளியை கருமையாக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு

ராகுல் காந்தி தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பிறகு மக்களவையில் பேசிய அனுராக் தாக்கூர், “அவர் உரை நிகழ்த்துவதற்கு முன்பு அவருக்கு சீட்டுகளில் குறிப்புகள் வருகின்றன. ஒவ்வொரு முறையும் அவருக்கு குறிப்புகளுடனான சீட்டு வருகிறது. அறிவை கடன் வாங்கி அரசியலை நடத்த முடியாது. நீங்கள் பேசிவிட்டு நகர்கிறீர்கள். பிறகு மீண்டும் குறிப்புச்சீட்டு வருகிறது..” என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பு குறையவில்லை. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெகதாம்பிகா பால், “சபாநாயகர் இருக்கைக்கு அருகே வராதீர்கள். அவரவர் இருக்கைக்கு திரும்பிச் செல்லுங்கள்,” என்று கூறியதைக் காண முடிந்தது.

இதற்கிடையில் ராகுல் காந்தி மீண்டும் எழுந்து, "இந்த நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரச்னையை யார் எழுப்பினாலும் அவர்கள் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கிறது," என்றார்.

’இந்த ஏச்சுகளை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு மீனின் கண்கள் மட்டுமே காண தெரிந்தன. அதுபோல என்னாலும் மீனின் கண்களை பார்க்க முடிகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம். நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள். நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

”அனுராக் தாக்கூர் என்னை திட்டியுள்ளார். ஆனால் அனுராக் தாக்கூரிடம் மன்னிப்பு கேட்குமாறு நான் சொல்ல விரும்பவில்லை. நான் போரிடுகிறேன். எனக்கு மன்னிப்பு வேண்டாம். நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமதியுங்கள்,” என்று ராகுல் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ், “ அனுராக் தாக்கூர் மதிப்பிற்குரிய அமைச்சராக இருந்துள்ளார். அவர் ஒரு பெரிய கட்சியில் மதிப்பிற்குரிய தலைவர். பெரிதாகப் பேசினார். மகாபாரதம், சகுனி பற்றி பேசிக் கொண்டிருந்தார். துரியோதனனை பற்றியும் கூட இங்கு பேசினார். நான் அவரிடம் ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்படி சாதி பற்றி கேட்க முடியும்? சொல்லுங்கள்.. நீங்கள் சாதியை பற்றி எப்படி கேட்க முடியும்? சாதியை பற்றி கேட்டுத்தான் பாருங்கள்.. என்று முழங்கினார்.

இந்த சபையில் யாரும் யாரிடமும் சாதி பற்றி கேட்க மாட்டார்கள் என்று அவைக்கு தலைமை வகித்த ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், அவதேஷ் பிரசாத்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, ராகுல் காந்தி, அவதேஷ் பிரசாத் மற்றும் அகிலேஷ் யாதவ் (முன் வரிசையில் இடமிருந்து வலமாக)

அனுராக் பேச்சு பற்றிய விவாதம்

அனுராக் தாக்கூரின் பேச்சைப் பாராட்டிய பிரதமர் மோதி, "என் இளம் மற்றும் ஆற்றல் மிக்க நண்பரான அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும்" என்று சமூக ஊடகங்களில் எழுதினார். 'அற்புதமான முறையில் நையாண்டி மற்றும் உண்மையை கலந்து, இண்டி கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியுள்ளார்', என அவர் பதிவிட்டார்.

அனுராக் தாக்கூரின் பேச்சை விமர்சித்த பிரியங்கா காந்தி வதேரா, "சாதி தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது, சமூக-பொருளாதார-சாதி கணக்கெடுப்பு என்பது இந்த நாட்டின் 80% மக்களின் கோரிக்கை.” என்று சமூக ஊடகங்களில் எழுதினார்.

"இப்போது நாட்டின் 80% மக்களும், நாடாளுமன்றத்தில் ஏச்சு பேச்சுக்கு ஆளாக்கப்படுவார்களா? இது நரேந்திர மோதி உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்," என்று பிரியங்கா பதிவிட்டார்.

"இந்த நாட்டின் முன்னேற்றத்தில் நாம் எவ்வளவு பங்கு வகிக்கிறோம் என்பதை இன்று நாம் அனைவரும் மதிப்பிட வேண்டும். நம்மை பின்தங்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இதை நம்மிடம் இருந்து மறைக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ். சதி செய்கின்றன. இந்த சாக்குப்போக்குகளின் கீழ் இட ஒதுக்கீட்டை பறித்து நம் உரிமைகளை கட்டுப்படுத்த முயல்கிறார்கள்,” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் - அனுராக் தாக்கூர் வாக்குவாதம்

அனுராக் தாக்கூரின் பேச்சின் சில பகுதிகளும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

ராணுவப் பள்ளியில் படித்ததாக அகிலேஷ் யாதவ் கூறியதும் இதில் அடங்கும்.

இதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், "அவர் ராணுவப் பள்ளியில் படிக்க மட்டுமே செய்தார். ஆனால் இன்றும் நான் டெரிடோரியல் ஆர்மியின் 124வது படைப்பிரிவில் கேப்டன் பதவியில் பணியாற்றி வருகிறேன். எனவே அகிலேஷ் அவர்களே, வெறும் தத்துவம் மட்டும் பேசாதீர்கள்,” என்றார்.

அனுராக் தாக்கூருக்கு பதிலடி கொடுத்த அகிலேஷ் யாதவ், “ஒருவேளை அவர் அமைச்சராக இல்லாமல் இருப்பதால், வலி அதிகமாக இருக்கக் கூடும்,” என்றார்.

பிரதமர் மோதி தனது புதிய அமைச்சரவையில் அனுராக் தாக்கூருக்கு இடம் அளிக்கவில்லை. கடந்த அரசுகளில் அவர் முக்கிய பதவிகளை வகித்திருந்தார்.

“உங்கள் வலியை உங்கள் முகத்தில் காண முடிகிறது. உங்கள் வலியை நான் சொல்கிறேன். உத்தரபிரதேசத்தில் தோற்றது முதல் யாரும் உங்களுக்கு வணக்கம் சொல்வதில்லை. அது உங்களுக்கு வலிக்கிறது. யாரும் யாரையும் வரவேற்காத சூழலை அந்த வீடியோவில் நான் பார்த்தேன். யாரும் யாரையும் முகம் கொடுத்து பார்ப்பதில்லை. தங்களை மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டவர்களால், அவர்களைத் தோற்கடித்தவரை நீக்க முடியவில்லை. இப்போதும் உங்களுக்கு விஷயம் புரியவில்லை?, இல்லையா” என்று அகிலேஷ் குறிப்பிட்டார்.

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கும், கேசவ் பிரசாத் மெளரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு வணக்கம் கூறி வரவேற்காத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையே அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.

மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், “இது நிலையான அரசு அல்ல, கவிழப் போகும் அரசு” என்றார். ”சைக்கிள் எங்கள் தேர்தல் சின்னம். சைக்கிள்தான் உங்கள் அரசை இயக்குகிறது. சைக்கிள் நகர்ந்துவிட்டால் நீங்கள் எங்கு அமர்ந்திருப்பீர்கள்?”என்றார்.

தனது உரையின் போது அனுராக் தாக்கூர், நெருக்கடி நிலை பிரகடனம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸைத் தாக்கினார்.

”துச்சாதனனும் துரியோதனனும் மிகவும் கொடூரமானவர்கள் தான். ஆனால் அவர்கள் ஒருபோதும் நெருக்கடி நிலையை விதிக்கவில்லை,” என்றார் அவர்.

ராகுல் காந்தி தனது உரையில், பட்ஜெட்டுக்கு முன் நடக்கும் அல்வா கிண்டும் சம்பிரதாயம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாக்கி பேசினார். அது பற்றிப்பேசிய அனுராக் தாக்கூர் ”காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களின் அல்வாவை சாப்பிட்டது யார்? ராகுல் அவர்களே, அந்த அல்வா இனிப்பாக இருந்ததா இல்லையா,” என்று வினவினார்.

ஆனாலும் இந்த பேச்சுகளில் சாதி தொடர்பாகவே அதிகமாக விவாதிக்கப்பட்டது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

அகிலேஷ் மற்றும் ராகுல் மீதும் கேள்விகள்

சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியதையடுத்து, யாருடைய சாதியையும் கேட்க முடியாது என்று அகிலேஷ் கூறினார்.

ஆனால், கடந்த காலங்களில் அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்திற்கு வெளியே சாதி பற்றிக் கேட்டுள்ளனர். இதுபோன்ற சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

2024 பிப்ரவரியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளரிடம், "நீங்கள் சிவ பிரசாத் தானே.. உங்கள் முதலாளியின் பெயர் என்ன? பெயரைச் சொல்லுங்கள். அவருடைய பெயரைச் சொல்லுங்கள். அவர் ஓபிசி யா? இல்லையென்றால் அவர் தலித்தா? இல்லையா... அவர் பழங்குடியினரா? இல்லையா... அவர் ஒரு கோடீஸ்வரரா?,” என்று கேட்பதை பார்க்க முடிந்தது.

அகிலேஷ் யாதவின் ஒரு வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் அகிலேஷ் ஒரு பத்திரிகையாளரிடம் - " பெயர் என்ன? உங்கள் முழுப் பெயரைச் சொல்லுங்கள்… புஷ்பேந்திர சிங்… அவன் சூத்திரன் அல்ல இல்லையா,” என்று சொல்கிறார்.

மற்றொரு வீடியோவில் அகிலேஷ் பத்திரிகையாளரிடம் – ”ஏய் அதை விடு, உன் கேமராவை வேறு எங்காவது எடுத்துச் செல். நீ பிற்படுத்தப்பட்டவனா அல்லது வேறு ஏதாவதா? உன் பெயர் என்ன?” என்று கேட்கிறார்.

அப்போது யாரோ ஒருவர் – ’மிஷ்ரா’, என்று பதில் சொல்கிறார்.

அப்போது அகிலேஷ், "ஏய் மிஷ்ரா ஜி, கொஞ்சமாவது மனசாட்சியுடன் செயல்படு.. செய்தியாளர் வேலையைச் செய்யுங்கள் நண்பரே.” என்று கூறுகிறார்

சாதி சர்ச்சை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பிகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு

மக்களவை தேர்தலின்போது, 'அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்' என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

இந்த விவகாரம் பா.ஜ.கவை பெரிதும் பாதித்ததாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் பலன் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே பா.ஜ.க தலைவர்கள் 400 க்கும் அதிகமான இடங்களை பெறுவோம் என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள் என்று பா.ஜ.கவுடன் தொடர்புடைய தலைவர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி இந்தியா கூட்டணி தனது தேர்தல் பேரணிகளில் கூறியது.

ஆனால் இந்தக் கூற்றை மறுத்த பா.ஜ.க, இது அப்பட்டமான பொய் என்று கூறியது.

முன்னதாக பிகாரில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்புக்குப் பிறகு, பிகாரில் உள்ள பல்வேறு சாதிகளின் எண்ணிக்கை தெரியவந்தது.

பிகாரில் மிகப்பெரிய மக்கள் தொகை ’மிகவும் பின்தங்கிய வகுப்பை’ சேர்ந்தவர்கள் என்று இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டின. இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 36 சதவிகிதம் ஆகும். பிகாரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை சுமார் 27 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட சாதியினர் 19%, உயர் சாதியினர் சுமார் 15% பழங்குடியினர் 1.68%.

நாட்டில் ஓபிசி, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு அதிகார வர்க்கத்திலும், முக்கிய பதவிகளிலும் கிடைக்க வேண்டிய பங்கு கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின் போது கூறி வந்தார்.

மோதி அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் ஓபிசிகளின் எண்ணிக்கை குறித்தும் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பி வருகிறார்.

2024 மார்ச் மாதம் இதற்கு பதிலளித்த பிரதமர் மோதி, "எங்கள் காங்கிரஸ் சகாக்கள் அரசில் உள்ள ஓபிசிகளின் எண்ணிக்கையைக் கண்காணிப்பதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ஓபிசி (நரேந்திர மோதி) கண்ணுக்கு தெரியாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.

1980 இல் மண்டல் கமிஷன் அறிக்கை நாட்டில் ஓபிசி மக்கள் தொகை 52 சதவிகிதம் என்று கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)