சிவிங்கிப்புலிகள் வந்தால் சிங்கங்களுக்காக காலி செய்த 1600 குடும்பங்களுக்கு என்ன பதில்? காட்டுயிர் விஞ்ஞானி ரவி செல்லம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவுக்கு வரத் தயாராகவுள்ள சுமார் 16 சிவிங்கிப் புலிகளில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரவுள்ளவை அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அடைப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் அதேபோல் வைக்கப்பட்டுள்ளன.
அப்படிக் கொண்டு வரப்படும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஆனால், அந்தப் பகுதிக்கு உலகில் வேறு எங்குமே காணப்படாத, குஜராத்தில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களில் ஒரு பகுதியை அங்கு இடம் மாற்ற வேண்டுமென்று காட்டுயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆசிய சிங்கங்கள் குறித்த ஆராய்ச்சியிலும் காட்டுயிர் பாதுகாப்பு துறையிலும் 1985 முதல் செயல்பட்டு வருகிறார் காட்டுயிர் உயிரியலாளரும் காட்டுயிர் பாதுகாப்பு விஞ்ஞானியுமான முனைவர் ரவி செல்லம். தற்போது மெடாஸ்ட்ரிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகவும் பயோடைவர்சிடி கொலாபரேடிவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரக்கூடிய சிவிங்கிப் புலிகளால் ஆசிய சிங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல் மற்றும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பிபிசி தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. அதை அரசாங்கம் மறுஅறிமுகம் என்று கூறியபோது, நீங்கள் அதை அறிமுகம் எனக் குறிப்பிட்டீர்களே ஏன்?
இதை நான் சொல்லவில்லை, உச்சநீதிமன்றம் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் ஓர் உத்தரவில் இதைக் குறிப்பிட்டுள்ளது. இவை ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள். ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும்போது அது அறிமுகத் திட்டம் தான், மறு அறிமுகத் திட்டம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.
சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவுக்கு வருகின்றன. ஆனால், குஜராத்தில் வாழும் சிங்கங்களில் ஒரு பகுதியை குனோவுக்கு இடம் மாற்ற வேண்டுமென்று நீங்கள் ஒரு முன்மொழிதலைக் கொடுத்திருந்தீர்கள். அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. குனோவுக்கு சிங்கங்களில் ஒரு பகுதியை இடம் மாற்ற வேண்டியது, அவற்றின் பாதுகாப்பில் அவ்வளவு முக்கியமானதா?

சிங்கத்தின் வரலாற்றைப் பார்த்தால், 12 முதல் 20 சிங்கங்களே இந்தியாவில் இருந்தன. அதுவே இப்போதைய கணக்குப்படி தோராயமாக 700 சிங்கங்கள் வரை இருக்கின்றன. ஆனால், அவை அனைத்துமே குஜராத்தின் கிர் காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் வாழ்கின்றன.
ஆனால், அழியும் அபாயமுள்ள உயிரினம் இருந்தால் அவையனைத்தும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்கிறது காட்டுயிர் பாதுகாப்பு அறிவியல். அவற்றை இரண்டு அல்லது மூன்று இடங்களில் பிரித்து பரவலாக்கி வைக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் எதிர்காலம் நன்றாக இருக்கும். தொற்றுப் பரவல், காட்டுத்தீ, சூறாவளி என்று ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், ஒரே இடத்தில் அவை இருக்கும்போது மொத்தமாக அழிவதற்கான அச்சுறுத்தல் உள்ளது.
இதுவே வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்திருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படாது. நாமெல்லாம் எதற்காக ஆயுள் காப்பீடு வாங்குகிறோம்?
எதிர்பாராமல் ஒருவேளை ஏதாவது ஆனால், ஆயுள் காப்பீடு உள்ளது என்பதால் தானே. குனோவுக்கான இடம் மாற்றமும் சிங்கங்களுக்கு ஆயுள் காப்பீடு வாங்குவதைப் போலத் தான்.
ஒருவேளை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால், அது சிங்கங்கள் பாதுகாப்பில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஆப்பிரிக்காவில், கென்யா மற்றும் தான்சானியாவில் செரெங்கெட்டி மாறா என்றொரு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி உள்ளது. ஆயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. உலகிலேயே அதிக அளவிலான சிங்கங்கள் வாழும் பகுதி அது. அங்கு 3,000 சிங்கங்கள் உள்ளன. 1994-ல் அங்கு கெனைன் டிஸ்டெம்பர், பேபியோசிஸ் ஆகிய தொற்று நோய்கள் பரவியதால், இரண்டு-மூன்று வாரங்களிலேயே சுமார் 1,000 சிங்கங்கள் உயிரிழந்தன.
நம்முடைய நிலைமை அப்படியில்லை. இங்கு வாழ்வதே சுமார் 700 சிங்கங்கள் தான். இதுபோன்ற ஏதாவது தொற்றுநோய் பரவல் பெரிதாக ஏற்பட்டால், என்ன செய்வது?

பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக இதுகுறித்த பேச்சு நிலவி வருகிறது. அது ஆப்பிரிக்காவில் தான் நடக்கும், இந்தியாவில் நடக்காது என்று குஜராத்தில் கூறினார்கள். 2018ஆம் ஆண்டில், இங்கும் அதே தொற்றுநோய்கள் பரவின. அதில், அதிகாரபூர்வ பதிவுகளின்படி 30 முதல் 40 சிங்கங்கள் வரை உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதைவிட அதிகமாகவும் இழப்புகள் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 100 சிங்கங்கள் உயிரிழக்கின்றன. உயிரினங்கள் இறப்பது வழக்கம்தான். ஆனால், இந்தக் கணக்கில் சுமார் 20% நோய்த்தொற்று ஏற்பட்டு இறக்கின்றன.
மொத்தமுள்ள 700 சிங்கங்களில், 300 சிங்கங்கள் காட்டிற்குள் வாழவில்லை. அவை வெளியே வயல்களில், கிராமங்களில் வாழ்கின்றன. அங்கிருக்கும்போது, நாய், கால்நடைகள், உயிரிழந்த கால்நடைகளைச் சாப்பிட்டு வாழ்கின்றன. அவற்றுக்கு மருத்துவ சேவைகளுக்கான அணுகல் அவ்வளவாகக் கிடையாது. ஆகவே, அவற்றுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.
2015ம் ஆண்டில் கடும் மழை பெய்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் சிங்கங்கள் உயிரிழந்தன. ஆகவே, சிங்கங்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்தால், அனைத்து விதமான அச்சுறுத்தல்களும் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன.
இதுபோக, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறகு மேல்முறையீடு செய்தார்கள். அப்போதும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை உறுதி செய்தது. அப்படியென்றால், அந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டுமா கூடாதா?

குஜராத்தின் கிர் காடுகளில் வாழும் ஆசிய சிங்கங்களுக்கான பாதுகாப்பின் இப்போதைய நிலை என்ன?
கிர் காட்டிற்குள் வாழும் சிங்கங்களை நன்றாகத்தான் மேலாண்மை செய்து வருகிறார்கள். ஆனால், உள்ளே இருப்பவை அனைத்தும் உள்ளேயே இருக்க வேண்டும் என்றோ வெளியே இருக்கும் சிங்கங்கள் அனைத்தும் வெளியிலேயே இருக்க வேண்டும் என்றோ நாம் சொல்ல முடியாது.
அவை சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லும். வெளியே இருக்கும் சிங்கம் ஏதேனும் நோய்த்தொற்றைச் சுமந்துகொண்டு காட்டுப் பகுதிக்குள் வந்தால், அதனால் இழப்புகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. அதேபோல், உள்ளே இருக்கும் சிங்கம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் காட்டிற்குள் வரும்போது ஏதேனும் தொற்றுநோயைச் சுமந்து வந்தால், அதனாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
காட்டிற்குள் நன்றாகத் தான் மேலாண்மை செய்கிறார்கள். அதனால் தான் சிங்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கிடைத்த வெற்றியையும் நாம் சரியாகக் கையாள வேண்டுமல்லவா!
அதைச் செய்வது குறித்துச் சிந்திப்பதில்லை என்பது தான் இப்போதைய பிரச்னை. சிங்கங்கள் குஜராத்திலேயே இருக்க வேண்டுமென்று மிகவும் குறுகிய சிந்தனையோடு இருக்கிறோம். இந்தச் சிந்தனை எப்படிச் சரியாகும்?
நர்மதாவின் தண்ணீரை மத்திய பிரதேசத்திடமிருந்து வாங்கும்போது மட்டும் எந்தப் பிரச்னையுமில்லையா!
ஆப்பிரிக்காவிலிருந்து வரவுள்ள சிவிங்கிப் புலிகள் விஷயத்திற்கு மீண்டும் வருவோம். தற்போது அங்கிருந்து இந்தியாவுக்கு, புதிய வாழ்விடத்திற்கு வரவுள்ள சிவிங்கிப் புலிகள், இந்தப் புதிய சூழலை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா? அடுத்து என்ன?
அதில் அவ்வளவு பிரச்னை இருக்காது என்றுதான் கருதுகிறேன். ஏனெனில், முதலில் அவர்கள் மென்மையான அறிமுகத்தைச் செய்வார்கள். எடுத்தவுடனேயே காட்டில் சுதந்திரமாக விடுவித்துவிட மாட்டார்கள்.
ஐந்து முதல் பத்து சதுர கி.மீ பரப்பளவுள்ள அடைப்பிடம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள். நான்கு முதல் பத்து வாரங்களுக்கு அதில்தான் விடுவார்கள். அதற்குள் இருப்பதால் தொடக்கத்தில் பெரிய சிக்கல்களோ அச்சுறுத்தலோ இருக்காது. அவை எங்கே செல்கின்றன, என்ன செய்கின்றன என்பதைக் கவனிக்க முடியும்.
குனோவின் காலநிலையோ வாழ்விட அமைப்போ அவற்றுக்குப் பிரச்னையாக இருக்காது. ஆனால், அந்த வாழ்விடத்தின் பரப்பளவுதான் பிரச்னையாக இருக்கும். சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற பெரும்பூனை இனங்களைவிட சிவிங்கிப் புலிகளுக்கு மிகப்பெரிய பரப்பளவிலான வாழ்விடம் வேண்டும். சராசரியாக, 100 சதுர கி.மீ பரப்பளவில் ஒன்று அல்லது இரண்டு சிவிங்கிப் புலிகளே இருக்க முடியும். ஆனால் அதே பரப்பளவில் 8 முதல் 12 புலிகள் இருக்கலாம். 8 முதல் 12 சிங்கங்கள் அல்லது சிறுத்தைகள் இருக்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
ஆக, சுமார் 50 முதல் 60 சிவிங்கிப் புலிகள் இருக்க வேண்டுமெனில், அதற்கான வாழவிடப் பரப்பு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கான நிலப்பகுதி நம்மிடம் இப்போது இல்லை.
அதுமட்டுமின்றி, குனோ தேசியப் பூங்காவை விட்டு வெளியே வந்தால் மனிதர்கள் வாழ்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் உள்ளது. அவை சமாளித்து வாழும், ஆனால் அப்பகுதியில் தன்னை நிலைநிறுத்தி, எண்ணிக்கையில் பெருகுமா என்றால் அது கேள்விக்குறி தான்.
சிவிங்கிப் புலிகள் வந்த பிறகு, சிங்கங்களில் ஒரு பகுதியை இடம் மாற்றும் திட்டம் என்னவாகும்? சிவிங்கிப் புலிகள் குனோவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் வரை காத்திருக்க வேண்டுமா அல்லது குனோவுக்கு மாற்றாக சிங்கங்களுக்கு வேறு வாழ்விடத்தைத் தேர்ந்தெடுத்து இடம் மாற்றுவது குறித்துச் சிந்திக்க வேண்டுமா?
முதலில், 2013ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தியே ஆகவேண்டும். வேறோர் இடம் என்று நாம் தேடிப்போனால், உச்சநீதிமன்றத்திற்கே மரியாதை கொடுக்காததைப் போல் இருக்கும்.
இரண்டாவதாக, சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்தாலும் நாம் சிங்கங்களின் இடம் மாற்றத்திற்கும் அழுத்தம் கொடுத்துதான் ஆகவேண்டும். ஆப்பிரிக்காவில் சிங்கங்களும் சிவிங்கிப் புலிகளும் ஒரே பகுதியில் வாழ்கின்றன என்று அவர்களே கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இதைத் தாமதப்படுத்துவது மிகவும் தவறு. 2013ஆம் ஆண்டில் 6 மாதங்களில் இடம் மாற்ற வேண்டுமென்று உத்தவிடப்பட்டது. ஆனால், ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. சிங்கங்களைப் பொறுத்தவரை, பக்கத்து மாநிலமான குஜராத்திலிருந்து கொண்டு வர வேண்டியவை தான். ஆயிரம் கிமீ கூட இல்லை. இன்னும் அதைச் செய்யவில்லை.
ஆனால், சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வருவதற்கான உத்தரவு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தான் வந்தது. இரண்டே ஆண்டுகளில், அதுவும் ஆப்பிரிக்காவிலிருந்து சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வர முடிந்துள்ளது.
குனோவில் வாழ்ந்த சஹாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 1,600 குடும்பங்கள், சிங்கத்திற்காக தங்கள் இடத்தை காலி செய்துவிட்டு, வேறு இடத்திற்குச் சென்று சிரமப்பட்டு மீண்டும் குடியமர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு யார் பதில் சொல்வது?
இங்கு, காட்டுயிர் பாதுகாப்பு முறையிலும் பிரச்னையுள்ளது. சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படுவதிலும் பிரச்னையுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














