தாயைப் பிரிந்த தேவாங்கு குட்டி: வனத்துறையின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்ட கதை

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜூன் 17ஆம் தேதியன்று அய்யலூர் அருகே குருந்தம்பட்டி சாலையில் தாய் தேவாங்கு ஒன்று வாகன விபத்தில் உயிரிழந்தது. சாம்பல் நிற தேவாங்கு வகையைச் சேர்ந்த அதைக் கட்டிப்பிடித்தபடி, அதன் இரட்டைப் பிறவி குட்டிகள் இருந்தன.

அவற்றை மீட்டு மகுடீஸ்வரன் என்பவர் வனத்துறையிடம் ஒப்படைத்தார். வனத்துறை அந்த இரண்டு குட்டிகளையும் அய்யலூர் வனச்சரகத்தில் வைத்துப் பராமரித்து வந்தனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதியன்று தேவாங்கு குறித்து ஆய்வு செய்து வரும் கோவை சாலிம் அலி இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த முனைவர்.இரா.சசி, பெங்களூரைச் சேர்ந்த ஆஷிஷா, காந்திகிராம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் தேவாங்கு குட்டிகள் இரண்டையும் நேரில் பார்வையிட்டு, பராமரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தனர்.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

பிறந்த சுமார் ஒரு வாரமே இருந்த நிலையில், குட்டிகள் இரண்டுக்கும் பூச்சிகளை உண்ணும் திறன் குறைவாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவற்றுக்கு மாட்டுப் பால் கொடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.

மஞ்சள் காமாலையால் இறந்த தேவாங்கு குட்டி

இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதியன்று இரண்டு தேவாங்கு குட்டிகளில் ஒன்றுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது. மற்றொரு தேவாங்கு குட்டியைப் பாதுகாத்து, கண்காணிக்க மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு அய்யலூர் வனச்சரக அலுவலகத்தை வலியுறுத்தியதாகக் கூறுகிறார்.

இதுகுறித்துப் பேசியவர், "மீட்கப்பட்ட இரண்டு தேவாங்கு குட்டிகளையும் பராமரிப்பதற்கு, பெங்களூரிலுள்ள இந்திய காட்டுயிர் அறிவியல் நிறுவனம், சாலிம் அலி இயற்கைப் பாதுகாப்பு மையம் ஆகியவற்றிலிருந்து தேவாங்கு குறித்த ஆராய்ச்சியாளர்களை வரவழைத்து அவர்களின் அறிவுறைகளோடு செயல்பட்டோம்.

இருப்பினோம் மீட்கப்பட்ட குட்டிகளில் ஒன்று மிகுந்த மன அழுத்தம் கொண்டிருந்தது. இன்னொரு குட்டியின் மீது ஒட்டியபடியே எப்போதும் இருந்தது. மீட்டுக் கொண்டுவரப்பட்ட 4 நாள்களிலேயே மஞ்சள் காமாலை, ரத்த சோகை பாதிப்புகளால் உயிரிழந்துவிட்டது.

இந்நிலையில், இரண்டாவது குட்டியை கூடுதல் அக்கறையோடு கவனிக்கத் தொடங்கினோம். சிறிது சிறிதாக அதனிடம் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. பிறகு பூச்சிகள், புழுக்கள் போன்ற உணவுகளை வழங்கத் தொடங்கினோம். கூடவே, மரம் ஏறும் பயிற்சியையும் வழங்கத் தொடங்கினோம்.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

இப்போது அது காட்டில் வாழ்வதற்குத் தயாரான நிலையில் இருந்ததால், ஜூலை 25ஆம் தேதியன்று மாலை வேளையில் பண்ணமலை காப்புக்காட்டில், ஏற்கெனவே இரண்டு தேவாங்குகள் இருந்த மரம் ஒன்றின் மீது விடுவித்தோம். அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இப்போது வரை நல்ல நிலையில் இருக்கிறது," என்று கூறினார்.

பட்டியல் 1-இன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினம்

இந்தத் தேவாங்கு குட்டிகள் மீட்கப்பட்டது முதல் அதில் பிழைத்திருந்த குட்டி மீண்டும் காட்டில் விடுவிக்கப்பட்டது வரையிலான காணொளிகளைப் பதிவு செய்த, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான ஆவணப்படக் கலைஞர் செந்தில் குமரன், "இரண்டில் உயிர்பிழைத்த ஒரு பெண் குட்டி, அய்யலூர் காப்புக்காட்டிற்குள் ஆண் தேவாங்குகள் இருக்கக்கூடிய இடத்தில் ஆரோக்கியமான சூழலில் விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு அது நன்கு செழித்து வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதோடு, தாய் தேவாங்கு அடிபட்டு இறந்தபோது, அதைப் பார்த்த ஆர்வலர் ஒருவர் தாயையும் குட்டிகளையும் மீட்டுக் கொண்டு வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மக்கள் சமூகங்களை காட்டுயிர் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது," என்று கூறினார்.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

தேவாங்கு பட்டியல்-1ன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினம் என்று கூறும் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன், "தேவாங்கு குட்டிக்கு பால் கொடுப்பதை நிறுத்திவிடுமாறும் அதற்கு அரிசி, கத்திரிக்காய் போன்றவற்றில் வரக்கூடிய மீல்வார்ம் எனப்படும் புழுவை அதிகமாகக் கொடுக்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து, குட்டிக்கு புழுக்களை உணவாகக் கொடுக்கத் தொடக்கினோம். அந்தப் புழு உணவு அதற்கு ஊட்டச்சத்து வழங்கியதால், அதன் உடலில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பிறகு, வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளைப் பிடித்து வந்து கொடுத்தோம்.

புச்சிகளை நன்றாகச் சாப்பிட்ட குட்டி, இலைகளின் மீது ஒட்டியிருக்கும் தண்ணீரைக் குடிப்பது, சில நேரங்களில் இலைகளைச் சாப்பிடுவது ஆகியவற்றையும் பார்த்தோம். உயிரிழந்த தாயிடமிருந்து அதை மீட்டு வந்தபோது, பற்கள் கூட முளைக்கவில்லை. பிறகு, பற்கள் நன்றாக முளைத்து, பூச்சிகளை நன்றாகக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது. ஒரு நாளைக்குத் தோராயமாக 50 புழுக்கள் வரை சாப்பிட்டது.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

படக்குறிப்பு, தேவாங்கு குட்டி பண்ணமலை காப்புக் காட்டில் ஜூலை 25ஆம் தேதியன்று விடுவிக்கப்பட்டது

இந்நிலையில், ஆய்வாளர்கள் தேவாங்கு குட்டியை காட்டில் விடுவித்துவிடலாம் என்று பரிந்துரைத்ததன் பேரில், ஜூலை 25ஆம் தேதியன்று, பண்ணமலை காப்புக்காட்டில் விடுவித்தோம்," என்று கூறுகிறார்.

தேவாங்கு குட்டியைப் பராமரிப்பது சவாலான காரியம்

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுபவரும் தேவாங்குகள் குறித்து கடந்த ஐந்தண்டுகளாக ஆய்வு செய்து வருபவருமான ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமாரிடம் இதுகுறித்துப் பேசினோம். அவர், "தேவாங்குகளின் உணவில் 95% பூச்சிகள் தான் இருக்கும். சில குறிப்பிட்ட வண்டு வகைகளைப் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிகளை, ஈசல்களை, விவசாய நிலங்களுக்குப் பிரச்னையாக இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும்.

இதுபோக சில நேரங்களில் ஊர்வன வகைகளைச் சேர்ந்த பல்லி, குட்டிப் பாம்புகள் போன்றவற்றைச் சாப்பிடும்," என்று கூறுபவர், ஒரு காட்டின் சூழலியல் சமநிலையைப் பேணுவதில் கீஸ்டோன் ஸ்பீசிஸ் என்றழைக்கப்படும் ஆதார உயிரினமாகவும் இது செயல்படுவதாகக் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி

அதோடு, அழியக்கூடிய அபாயம் உள்ள உயிரின வகைப்பாட்டில் தேவாங்கு உள்ளது. இதைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால், மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள உயிரினங்கள் பட்டியலுக்கும் தள்ளப்படலாம் என்கிறார்.

மேலும், "இந்தக் குறிப்பிட்ட தேவாங்கு குட்டியைப் பேணிப் பராமரிப்பது சவாலான காரியமாக இருந்தது. தேவாங்குகளை அதீத கவனத்தோடு கவனிக்க வேண்டும், ஒரு சிறு பிழை நிகழ்ந்தாலும் அதன் உயிருக்கே ஆபத்தாகலாம். இதுபோன்ற கடினமான பரமாரிப்பு வெற்றியடைந்து, காட்டிற்குள் விடுவிக்கப்பட்டதே ஆச்சர்யமான விஷயம்தான். அதை விடுவிப்பதற்கு, அதற்கான வாழ்விட வளப்பாங்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை ஆராய்ந்து, சரியான இடத்தைத் தேர்வு செய்து விடுவித்தோம்," என்று கூறினார்.

அச்சுறுத்தும் சாலை விபத்துகள்

சாம்பல் நிற தேவாங்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில்தான் வெள்ளகோயில் போன்ற பகுதிகளில் அவை காணப்படத் தொடங்கியுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக சாலை விபத்துகள் இருந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபுவிடம் கேட்டோம்.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

அவர், "அய்யலூர் மற்றும் கடவூர் காட்டுப்பகுதியை சாம்பல் நிற தேவாங்கு சரணாலயமாக வரையறுக்க சட்டமன்றத்தில் அறிவிப்பு வந்துவிட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூவின் முன்னெடுப்பால் இது சாத்தியமானது.

அதற்கான இறுதி வரைவையும் அனுப்பிவிட்டோம். அதன் பணிகள் முடிவடைந்து அறிவிக்கப்பட்டவுடன், சாலைகள் ஊடுருவக்கூடிய பகுதிகளில் கிலுவை, திருக்கலி ஆகிய தாவரங்களின் உதவியோடு இயற்கை வேலிகள் அமைப்பது, சாலையின் இருபுறம் இருக்கக்கூடிய மரங்களை மேற்பரப்பில் இணைப்பதன் மூலம் ஒருபுறமுள்ள மரத்தின் கிளையிலிருந்து சாலையின் மறுபுறம் இருக்கும் மரத்தின் கிளைக்குச் செல்லும் வகையிலான இயற்கை சார் அமைப்புகள் போன்றவை அமைக்கப்படும்.

தேவாங்குகள் பெரும்பாலும், இப்படியாகத்தான் இடம்பெயரும். இதுபோன்ற மர இணைப்புகள் இல்லாதபோது தான் வேறு வழியின்றி சாலைக்கு வருகின்றன. ஆகையால், சரணாலயமாக அறிவிக்கப்பட்டவுடன் அதற்குரிய தனி திட்டத்தின் கீழ் நிதி பெற்று செயல்படுத்தவுள்ளோம். இதுபோக, எச்சரிக்கைப் பலகைகள், விழிப்புணர்வுப் பலகைகள் ஆகியவற்றையும் அமைக்கவுள்ளோம். இதன்மூலம் சாம்பல் நிற தேவாங்கு பாதுகாப்பு மேம்படும்," என்று கூறினார்.

தேவாங்கு

பட மூலாதாரம், N.Senthil Kumaran

திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான முயற்சியின் இப்போதைய நிலை குறித்தும் தேவாங்கு பாதுகாப்பிற்காக திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாநில சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூவிடம் பேசியபோது, "தேவாங்கு பாதுகாப்பில் முதன்மையாகச் செய்ய வேண்டியது, அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில்தான் தேவாங்குகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் சுமார் 1000 என்ற எண்ணிக்கையில்தான் தேவாங்கு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதைப் பாதுகாக்கவில்லை என்றால் அந்த இனமே அழிந்துவிடும். அதன் வாழ்விடத்தை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம் அவற்றைப் பாதுகாக்க முடியும். சரணாலயமாக அறிவிப்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தோராயமாக அடுத்த 45 நாட்களுக்குள் இந்தப் பணிகள் முடிவடையலாம்.

இவற்றோடு, தேவாங்கு பாதுகாப்பு மையம் ஒன்றையும் திட்டமிட்டுள்ளோம். சரணாலயத்திற்கான பணிகள் முடிந்தவுடன், அதில் தேவாங்கு குறித்த தகவல்கள், ஆராய்ச்சி செய்வதற்கான வசதிகள், நூலகம், உள்ளூர் மக்கள் சமூகங்களை தேவாங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்துவது ஆகியவற்றை அந்தப் பாதுகாப்பு மையத்தின் கீழ் செய்வதற்கான ஒரு திட்டம் இருக்கிறது," என்றார்.

காணொளிக் குறிப்பு, குழிக்குள் விழுந்த குட்டியானைக்காக தானும் விழுந்த தாய் யானை: நெகிழ வைக்கும் காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: