மான் வேட்டை, தொடரும் மரணங்கள் - யார் காரணம்? சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?

மான் வேட்டை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்துள்ளன. அதில் ஒரு மான் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கிண்டி பகுதியின் வனத்துறை அதிகாரி பிபிசி தமிழிடம் பேசியபோது, "முதல்கட்ட பரிசோதனைகள் ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்கம் இருப்பதாகக் காட்டுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் வந்த பிறகே உறுதியாகக் கூறமுடியும்," என்றார்.

மற்ற 3 மான்களின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரத்த மாதிரிகள் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியில் மான்கள் உயிரிழப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கதையாக இருந்து வருகிறது. விலங்குநல ஆர்வலர் ஆண்டனி ரூபின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை, சென்னை ஐஐடியில் 45 புள்ளி மான்கள் உயிரிழந்துள்ளன.

அதுமட்டுமின்றி, 5 வெளி மான்கள், 2 புனுகுப் பூனைகள், ஒரு குள்ள நரி, 14 குரங்குகள், ஒரு உடும்பு ஆகியவை உயிரிழந்துள்ளன.

சென்னை ஐஐடியில் மான்கள் உயிரிழப்பிற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அங்கு சேரும் நெகிழிக் கழிவுகளை மான்கள் சாப்பிடுவதால் மரணிப்பது, சாலை விபத்து போன்ற காரணங்களோடு கூடுதலாக, வளாகத்திற்குள் உலவும் நாய்களால் தாக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

பிப்ரவரி மாத இறுதியில் இறந்த ஒரு வயது நிரம்பிய மான் கூட, நாய்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக, வனத்துறை தரப்பில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் தெரியவந்தது. நாய்கள் பலமுறை கடித்ததில் அந்த மான் உயிரிழந்ததாக உடற்கூறாய்வின் முடிவு கூறியது.

மான்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் அதிகமாக உயிரிழப்பது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத கிண்டி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடுவது மான்கள் இறப்பதில் பங்கு வகிக்கின்றன. பொதுவாக ஒரு நாய் மட்டும் தனியாக இருக்கையில் பிரச்னையில்லை.

ஆனால், 3 அல்லது அதற்கும் அதிகமான நாய்கள் கூட்டாக இருக்கும்போது, அவற்றால் ஒரு புள்ளிமானையோ வெளிமானையோ தாக்க முடியும். பொதுவாக காட்டுப் பக்கமாக, கூட்டமாக இருக்கும் நாய்களிடையே இந்தக் குணம் ஓரளவுக்கு வந்துவிடும்.

கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்த மான்களில் ஒன்று ஆந்த்ராக்ஸ் தாக்கத்தால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை முதல்கட்ட பரிசோதனை ஏற்படுத்தியுள்ளது. அதன் இறுதி முடிவுகள் வந்த பிறகே உறுதிசெய்ய முடியும்.

சென்னை ஐஐடியில் உயிரிழக்கும் மான்கள்

பட மூலாதாரம், Getty Images

அதுபோக நெகிழிப் பிரச்னைதான் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. மான்கள் நெகிழியை சாப்பிட்டுவிடுவதால், உயிரிழக்கின்றன. ஆனால், கடைசி 10 ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மான்கள் உயிரிழப்பது பெருமளவு குறைந்துள்ளன.

சாலை விபத்துகளாலும் மான்கள் இறக்கின்றன. ஆனால், முன்பு இருந்த அளவுக்கு இல்லை. மான்கள் உலவும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள், அதிகமான வேகத் தடைகள் போன்றவற்றை அமைத்ததால் விபத்துகளால் உயிரிழப்பது குறைந்துள்ளது.

நெகிழி பிரச்னையை முற்றிலுமாகச் சரிசெய்ய ஐஐடி நிறுவனத்தோடு இணைந்து செயலாற்றினாலும், அது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. ஐஐடியின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து நிறைய நெகிழிக் கழிவுகள் வருகின்றன. அதைத் தடுப்பது சிரமமாக உள்ளது," என்றார்.

ஐஐடியில் மான்கள் உயிரிழப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தரவுகளைப் பெற்ற ஆண்டனி ரூபின் 2020-ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சென்னை ஐஐடியில் மான்கள் உயிரிழப்பது குறித்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மான்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் நிரந்த கமிட்டி ஒன்றை ஐஐடியில் அமைக்க உத்தரவிட்டிருந்தது.

விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின் பிபிசி தமிழிடம் பேசியபோது, "சென்னை மாநகராட்சி, ஐஐடி வளாகத்தில் சுமார் 180 நாய்கள் இருந்தன. அதில் 41 நாய்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. அதுபோக, 56 நாய்கள் உயிரிழந்து விட்டன மற்றும் 34 நாய்கள் தத்து எடுக்கப்பட்டன, என்றும் 14 நாய்கள் வளாகத்திற்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தாலும், தற்போது பெருமளவில் ஐஐடியில் நாய்கள் இல்லை.

அங்கு நாய்கள், பெரும்பாலும் உயிரிழக்கும் மான்களின் சடலங்கலைச் சாப்பிடும் துப்புரவு உயிரினங்களாகவே உள்ளன. ஆனால், நாய்கள் மான்களை வேட்டையாடுவதற்கான ஆதாரம் என்று எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

சமீபத்திய தரவுகளின்படி, மான்கள் பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைச் சாப்பிடுவதால் தான் உயிரிழக்கின்றன. அதுமட்டுமின்றி, பல சடலங்கள் அழுகிய நிலையில் தான் கண்டறியப்படுகின்றன. அதனால், அவற்றுடைய இறப்புக்கான காரணம் தெரிவதில்லை.

சென்னை ஐஐடியில் உயிரிழக்கும் மான்கள்

பட மூலாதாரம், Susy Varughese

படக்குறிப்பு, சென்னை ஐஐடி, காவேரி விடுதி அருகே வெளிமான் மாமிசத்தைக் கவ்வியபடி செல்லும் நாய்

ஒரேயொரு மானின் உயிரிழப்புக்கு மட்டுமே நாய்களின் தாக்குதல் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்களைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார்.

நாய்கள் கூட்டு சேர்ந்து மான்களை வேட்டையாடுவது குறித்து காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.குமரகுரு பிபிசி தமிழிடம் பேசியபோது, "எந்த உணவுச் சங்கிலியில் எடுத்துக் கொண்டாலும் வேட்டையாடி உயிரினங்கள் தான் உச்சத்தில் இருக்கும். ஆனால், இங்கு பெரியளவில் வேட்டையாடிகள் என்று சொல்லும் அளவுக்கு இருப்பது குள்ள நரிகள் தான். ஆனால், குள்ள நரிகளை விடவே அதிகமாக தெரு நாய்கள் இருக்கின்றன.

சென்னை ஐஐடி பகுதி முன்பு இயற்கையான காட்டுப் பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது அதுவொரு செயற்கையான சூழலியல் அமைப்பாக மாறிவிட்டது. பல்வேறு மனிதத் தலையீடுகள் அந்த நில அமைப்பையே மாற்றிவிட்டது.

இந்நிலையில், தெருநாய்களை அந்தப் பகுதிக்குள் வராமல் தடுக்கத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆகையால் வலியன பிழைக்கும் என்ற நடைமுறையே நிகழ்கிறது.

காட்டுயிர்களுக்கு என இருக்கும் பகுதியில் காட்டுயிர்கள் தான் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், காட்டுயிர்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும். ஐஐடி வளாகத்தை எடுத்துக்கொண்டால், அங்கு தெருநாய்கள் உலவுவது மான்களின் இருப்புக்கு ஆபத்தாகும்." என்று கூறினார்.

தாழைக்கோழியை வேட்டையாடும் நாய்கள்

பட மூலாதாரம், Prof.T.Murugavel

சூழலியலாளர் பேரா.த.முருகவேளிடம் பேசியபோது, "ஒருமுறை சத்தியமங்கலத்தில் காட்டிற்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த நாய்கள் மானைத் துரத்தி வேட்டையாடுவதைப் பார்த்தேன். 2013-ஆம் ஆண்டு பள்ளிக்கரணையில் நீல தாழைக்கோழியை மூன்று நாய்கள் சேர்ந்து வேட்டையாடுவதைப் பார்த்தேன். அதுவும் ஏதோ அதிர்ஷ்டவசமாக பிடித்தது இல்லை. நன்கு திட்டமிட்டு, ஒரு நாய் கரையோரத்தில் நின்றிருக்க, இரண்டு நாய்கள் நீருக்குள் இறங்கி தாக்கிப் பிடிக்க, இறுதியில் மூன்றுமாகச் சேர்ந்து அதை வேட்டையாடியது.

அந்த நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டனவோ காட்டிற்குள் வாழ்வனவோ இல்லை. பள்ளிக்கரணையைச் சுற்றியிருக்கும் நகர்ப்புறத்தில் வாழும் தெரு நாய்கள் தான் அவற்றை வேட்டையாடின. அதே பிரச்னைதான் ஐஐடி வளாகத்திலும் நடக்கிறது.

நாய்களை நாம் ஆசைக்கு வளர்த்து பெருக்கிவிட்டோம். ஆனால், வெளிமான் போன்ற காட்டுயிர்கள் அப்படியல்ல. அவை எண்ணிக்கையில் மிகவும் அருகி வருகின்றன. அவை சென்னை போன்ற நகர்ப்புறக் காட்டில் இருக்கின்றன என்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கும் சூழலில், இருக்கும் இடத்திலாவது நாம் காப்பாற்றியாக வேண்டும். அதுவும் நாம் ஆசைக்காக வளர்க்கும் ஓர் உயிரினம், அருகி வரும் காட்டுயிருக்கு ஆபத்தாக, உயிர்க்கொல்லியாக உருவாகும்போது, நாம் அதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். காடு என்பது நாய்களுக்கான இடமல்ல.

மான்கள் மட்டுமின்றி, நாய்களுக்கு வரக்கூடிய நோய்கள் நரிகளுக்கும் பரவும். நரிகள் தான், கிண்டி வனப்பகுதியின் சுற்றுவட்டாரத்தின் வேட்டையாடி உயிரினம். நாய்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், நாய்களிடமிருந்து நரிகளுக்கும் பிரச்னை வரும். இரண்டாவதாக, இருக்கும் நாய்கள் அனைத்தையுமே வெளியேற்றினாலும், அவை திரும்பி வராமல் இருக்குமா என்பது சந்தேகமே. அதுமட்டுமின்றி, அப்படி வெளியேற்றப்படும் நாய்களை எங்கு கொண்டு போய் விடுகிறார்களோ அங்கும் இந்தப் பிரச்னை வரவே செய்யும். தெருநாய்கள் உட்பட நாய்களின் இனபெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்," என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: