சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்குக் கடைசி இடம்: அதிருப்தியில் இந்திய அரசு – காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொரு நாடும் எந்த இடத்தில் உள்ளது என்பதை யேல் பல்கலைக்கழகம் பட்டியலிடும்.
2018-ஆம் ஆண்டு வெளியான, 180 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் இந்தியா 177-வது இடத்தில் இருந்தது. கடைசியிலிருந்து மூன்றாவது இடத்திலிருந்த இந்தியாவுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அப்போது கிடைத்திருந்த மதிப்பெண் 100-க்கு 30.57.
அதற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2020-ஆம் ஆண்டில் வெளியான பட்டியலில் இந்தியா 168-வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவுக்கு 2020-ஆம் ஆண்டில் கிடைத்த மதிப்பெண், 100-க்கு 27.6.
உலக நாடுகள் அனைத்துமே அதற்கு முந்தைய 2018-ஆம் ஆண்டு மதிப்பாய்வின்போது செயல்பட்டுக் கொண்டிருந்ததைவிட மோசமாகச் செயல்பட்டதாக 2020-ஆம் ஆண்டின் அறிக்கையின் சுற்றுச்சூழல் மதிப்பெண்கள் சுட்டிக்காட்டின. அந்த வரிசையில் இந்தியா பட்டியலில் சில இடங்கள் முன்னேறி இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அதன் மதிப்பெண்ணை பொறுத்தவரை பின்தங்கிய நிலைக்குச் சென்றிருந்தது.
கடைசி இடத்தில் இந்தியா
2022-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தரவரிசை பட்டியல் ஜூன் 6-ஆம் தேதியன்று வெளியானது. கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் அது தயாரிக்கப்பட்டது.
காற்றிலுள்ள நுண் துகள்களின் அளவு போன்ற காற்றின் தரம், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பல்லுயிரிய வளம், மீன் வளம், வேளாண்மை, நீர் வளம், கழிவு மேலாண்மை போன்ற 11 பிரிவுகளின் கீழ் 40 வகையான அளவீடுகளைப் பகுப்பாய்வு செய்து, இந்தப் பட்டியல் உருவாக்கப்படுகிறது.
மேலும், நிர்வாகத் திறன், பொருளாதாரத் திறன், மனிதவள மேம்பாடு ஆகியவற்றின் கீழுள்ள தரவுகளும் இந்தப் பகுப்பாய்வில் கடந்த சில ஆண்டுகளில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
தற்போது 2022-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தரவரிசை பட்டியலின்படி, அதிலுள்ள 180 நாடுகளில் இந்தியா தான் 18.90 மதிப்பெண்களோடு கடைசி இடத்தில் உள்ளது. 2018, 2020 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் கிடைத்த மதிப்பெண் மற்றும் இடத்தைவிட மோசமான இடம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. அதோடு, "குறைந்துவரும் காற்றின் தரம், வேகமாக அதிகரித்து வரும் கரிம உமிழ்வு மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளதாக" அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், "டென்மார்க், பிரிட்டன் ஆகிய நாடுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியீட்டில் சமநிலையைக் கொண்டு வரக்கூடிய நிலையில் தற்போது இருக்கின்றன. அதேநேரத்தில், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்த்திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
கொள்கை வகுப்பாளர்கள், காலநிலை கொள்கைகளை வலுப்படுத்தி, பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட உலகளவில் 24 நாடுகள் மட்டும் 2050-ஆம் ஆண்டில் பூமியின் 80% கரிம உமிழ்வுக்குக் காரணமாக இருக்கும்" என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டிற்கான இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு இருந்ததைவிட, கரிம வெளியீட்டு அளவு தற்போது 4.4% அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், EPI 2022
அறிவியல்பூர்வமற்ற மதிப்பீடு: விமர்சிக்கும் இந்தியா
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதன் மதிப்பீட்டு முறை அறிவியல்பூர்வமற்றது என்றும் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிகை வெளியீட்டில், "2050-ஆம் ஆண்டில் இருக்கக்கூடிய கரிம உமிழ்வு அளவுகள்' என்ற அளவீடு புதியது. கடந்த 10 ஆண்டுகளில் உமிழ்வுகளின் சராசரி அளவைப் பொறுத்து, நீண்ட காலத்திற்கான அளவைக் கணிக்கக்கூடிய மாதிரிகளைப் பயன்படுத்தி கணிக்கிறது. இது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் அதிகரிக்கக்கூடிய அளவைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்தியா ஏற்கெனவே 40% புதைபடிம எரிபொருள் சாராத வழிகளில் மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளை நிறுவியுள்ளது.
இதைக் கணக்கிடும்போது, இந்தியாவின் கரிமத் தொட்டிகளாகச் செயல்பட்டு, கரிமத்தைக் கிரகித்துக் கொள்ளக்கூடிய காடுகள் மற்றும் சதுப்புநிலங்களை இதில் கணக்கில் கொள்ளவில்லை. இந்த அறிக்கையில் கணக்கில் கொள்ளப்பட்ட அளவீடுகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டவற்றில் அதன் அளவீட்டைக் குறைத்ததோடு, சரியாகச் செயல்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அதற்கான காரணம் முறையாக விளக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், "நீரின் தரம், நீர் பயன்பாட்டுத் திறன், தனி நபருக்கான கழிவு உற்பத்தி ஆகியற்றிலுள்ள நிலைத்தன்மை வாய்ந்த நுகர்வு மற்றும் உற்பத்தி கணக்கில் எடுக்கப்படவில்லை. வேளான் பல்லுயிரியவளம், மண்ணின் தரம் போன்ற அளவீடுகள் வளரும் நாடுகளின் விவசாய மக்கள் தொகைக்கு மிகவும் முக்கியமானவை என்றாலும், அவை கணக்கில் எடுக்கப்படவில்லை.
மரப் பரப்பின் அளவு அதிகரிப்பது, சதுப்பு நில அளவு அதிகரிப்பது ஆகியவை, நாட்டின் கரிம கிரகிப்புத் திறனில் சேர்க்கப்படவில்லை. கணிக்கப்பட்டுள்ள உமிழ்வு அளவீட்டில், கரிமத் தொட்டிகளாக செயல்படக்கூடிய காடுகளோ சதுப்புநிலங்களோ கருத்தில் கொள்ளப்படவில்லை," என்றும் கூறியுள்ளது.

பட மூலாதாரம், EPI 2022
அதோடு, இந்திய கானக அளவை நிறுவனத்தின் 2021-ஆம் ஆண்டுக்கான கானகப் பரப்பளவு அறிக்கையை (Indian State Forest Report 2021) கருத்தில் கொள்ளுமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருந்ததாகவும் ஆனால், அதைக் கருத்தில் எடுக்கவில்லை என்றும் இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் பல்லுயிரிய பாதுகாப்பில் இந்தியாவுக்கு 178-ஆவது இடம்
நிலம் சார் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு, கடல் சார் பல்லுயிரிய பாதுகாப்பு, வாழ்விடம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்லுயிரிய வளம் என்ற பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 178, மதிப்பெண் 100-க்கு 19.30.
மரங்களின் பரப்பை இழத்தல், புல்வெளிக் காடுகளை இழப்பது, சதுப்பு நிலங்களின் இழப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சூழலியல் சேவைகள் பிரிவில், இந்தியாவுக்கு 97-ஆவது இடமும் 25 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.
அதேபோல், மீன்பிடித்தலில் 42-ஆவது இடமும், கழிவுநீர் சுத்திகரிப்பில் 112-ஆவது இடமும் சுகாதாரத் துறையில் 178-ஆவது இடமும் காற்று தரத்தில் 179 இடமும் கிடைத்துள்ளன.
180 நாடுகளில் திடக்கழிவு, மறுசுழற்சி, கடலிலுள்ள நெகிழி மாசுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கழிவு மேலாண்மையில் இந்தியா 151-ஆவது இடத்தில் உள்ளது. அதோடு, காலநிலை கொள்கைகளை வகுப்பதிலும் அமல்படுத்துவதிலும் இந்தியா 165-ஆவது இடத்தில் உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தரத்தில் இந்தியாவை விட சூடான் (27.6), துருக்கி (26.3), ஹைத்தி (26.1), லைபீரியா (24.9), பபுவா நியூ கினி (24.8), பாகிஸ்தான் (24.6), பங்களாதேஷ் (23.1), வியட்நாம் (20.1), மியான்மார் (19.4) ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

பட மூலாதாரம், EPI 2022
சுற்றுச்சூழல் செயல்பாடு குறித்த அறிக்கை அறிவியல்பூர்வமற்றதா?
யேல் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வறிக்கையின் முன்னிலை ஆசிரியரான டாக்டர்.மார்ட்டின் வுல்ஃப் பிபிசி தமிழுக்கு ஈமெயில் மூலம் பதிலளித்தபோது, "ஒருதலைபட்சமாகவும் ஆதாயம் தரக்கூடிய வகையிலும் இருக்கும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக, சுற்றுச்சூழல் தரவரிசை மதிப்பீட்டிற்கு நேரடியாக நாடுகளிடமிருந்து தரப்படும் தரவுகளை ஏற்பதில்லை.
அதற்கு மாறாக, உலகின் முன்னணி நிலைத்தன்மை வல்லுநர்களால் சுயாதீனமாகச் சரிபார்க்கப்பட்ட சிறந்த மூன்றாம் தரப்பு தரவைத் தேடி எடுத்து, எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக் கொள்கிறோம். எங்களுடைய பல்லுயிரிய வளம், வாழ்விட அளவீடுகள் பற்றிய விஷயத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பற்றிய உலகளாவிய தரவுத் தளம், ஆஸ்திரேலியாவின் சிஎஸ்ஐஆர்ஓ (CSIRO) ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவு மூலங்கள் அனைத்தும், நாட்டின் சொந்தத் தரவுகள், உலகளவில் கிடைக்கும் தரவுத் தொகுப்புகளில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய இந்திய நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளன," என்று இந்திய கானக அளவை நிறுவனத்தின் அறிக்கையைக் கருத்தில் எடுக்காததற்கான காரணத்தைக் குறிப்பிட்டார்.
மேலும், சிறப்பாகச் செயல்பட்டவற்றில் அதன் அளவீட்டைக் குறைத்ததோடு, சரியாகச் செயல்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அதற்கான காரணம் முறையாக விளக்கப்படவில்லை என்ற இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, "அறிக்கையின் 15-ஆவது அத்தியாயத்தில் விளக்குவதைப் போல் (அமைச்சகம் இதைப் புறக்கணித்ததைப் போல் தெரிகிறது), சமநிலையைச் சரிசெய்யவேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
சமநிலையான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அளவீடுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் உள்ளது. நாங்கள் தன்னிச்சையாக அதைச் சரிசெய்வதில்லை. மாறாக, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த தரவரிசையில் அனைத்து சிக்கல்களையும் பிரதிபலிக்கும் வகையில் அளவீடுகளைத் தேர்வு செய்கிறோம்.
இது, ஒவ்வொரு பிரச்னைக்கும் சமமான இடம் கொடுக்கப்படுவதாக அர்த்தமில்லை. சில சிக்கல்களில் செயல்திறன் வரம்பு மற்ற சிக்கல்களின் வரம்பை விட அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த தரவரிசையில் எந்தவொரு குறிப்பிட்ட அளவீடும் தனிப்பட்ட முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்கிறோம். எங்களின் அனைத்துத் தரவுகளும் எங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. மேலும், நாடுகள் தங்கள் சொந்த பகுப்பாய்வு திட்டத்தைப் பயன்படுத்தி தரவரிசைகளை ஆராய ஊக்குவிக்கிறோம்," என்றார்.
அதோடு, "இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தற்போது மிகப் பெரியதாக உள்ளது. காடுகள் மற்றும் ஈர நிலங்களில் நடக்கும் தற்போதைய கரிம கிரகிப்பைக் கழித்தாலும், இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விளைவுகள் மாறாது. இந்தியா (மற்றும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா) போன்ற நாடுகள் அவற்றின் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க முயல வேண்டும். சதுப்பு நிலங்கள், காடுகளைப் பாதுகாப்பது முக்கியம்.
ஆனால், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கு மாற்றாக அவற்றைக் குறிப்பிடுவதற்காக இதைப் பாதுகாக்கவேண்டும் என்பது இல்லை," என்று கூறினார் டாக்டர் மார்டின் வுல்ஃப்.
"இதுதான் பிரதமர் அளிக்கும் பஞ்சாமிர்தமா?"
இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிக்கையில் இந்த தர மதிப்பீட்டு அறிக்கை அறிவியல்பூர்வமற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலரும் பொறியாளருமான கோ.சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "வரலாற்று ரீதியாக இருக்கக்கூடிய கரிம உமிழ்வைக் கருத்தில் கொண்டு இந்த மதிப்பீட்டைச் செய்யவில்லை என்று அரசுத் தரப்பில் கூறியுள்ளார்கள். வரலாற்று ரீதியாக இருக்கும் உமிழ்வு அளவைக் கருத்தில் எடுத்து இந்த மதிப்பீட்டைச் செய்வதில்லை.

பட மூலாதாரம், Getty Images
இன்று எப்படிச் செயல்படுகிறோம், அதாவது 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், நம்முடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பதைத் தான் கவனத்தில் கொள்கிறார்கள்.
இன்று, இந்தியா காற்று மாசுபாடு குறித்த அளவீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. உலகளவில் மிக அதிகமாக மாசடைந்துள்ள தலைநகரம் என்ற பெயரை தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்திய தலைநகரம் பெற்றுள்ளது.
இந்தச் செயல்பாடுகள் எப்படிப்பட்டது என்பதைத்தான் இந்த மதிப்பீடு சொல்கிறது. 2012-ஆம் ஆண்டு வெளியான இதே மதிப்பீட்டில் இந்தியா 180 நாடுகளில் 125-ஆவது இடத்தில் இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நம்முடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளன என்பதை இப்போதைய மதிப்பீடு காட்டுகிறது.
26-ஆவது காலநிலை உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் உலகத்திற்கு ஐந்து பஞ்சாமிர்தங்களைத் தருவதாகச் சொன்னார். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், நிலப் பயன்பாடு, காடுகள், காற்று மாசுபாடு என்று அனைத்துமே மோசமாக உள்ளது. இதுதான் அந்த பஞ்சாமிர்தமா?" என்றார்.
இந்திய கானக அளவை நிறுவனம் வெளியிட்ட காடுகள் பரப்பளவு கணக்கெடுப்பு அறிக்கையை கருத்தில் எடுக்குமாறு இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டிருந்தும் அதைக் கருத்தில் எடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, "இந்திய கானக அளவை நிறுவனத்தின் அறிக்கையிலேயே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, எப்படி அதைக் கருத்தில் எடுப்பார்கள்," என்று கூறினார்.
மேலும், "இந்திய கானக அளவை நிறுவனம், ஒரு ஹெக்டேருக்கு 10% மரங்கள் இருந்தாலே அது காடு என்று வரையறுத்துள்ளது. அவர்களுடைய கணக்குப்படி, தென்னந்தோப்புகள் கூட காடுகளாகக் கணக்கில் கொள்ளப்படும். இதைச் சரியான கணக்கெடுப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது சரிதான்," என்றவர், "யேல் பல்கலைக்கழகம் இந்த ஆய்வு முறையில் பல ஆண்டுகளாக இந்த ஆய்வைச் செய்து வருகிறது. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இவர்களின் மதிப்பீட்டை ஏற்றுக்கொள்கின்றன. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டும் தான் அதை மறுக்கிறது," என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













