சென்னையின் குறுங்காடுகள்: பார்வை அழகுக்கா பசுமை உயர்வுக்கா? உண்மை என்ன?

குறுங்காடுகள்

பட மூலாதாரம், Thuvakkam

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை நகரத்தின் இருப்பிடப் பகுதிகளுக்கு அருகே மாநகராட்சியால் மியாவாக்கி காடுகள் என்ற குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடத்தில் செயற்கை வனப்பகுதியை ஏற்படுத்தும் மியாவாக்கி காடு வளர்ப்பு முறையால் சென்னை நகரத்தின் பசுமை ஒருபுறம் அதிகரிக்கும் என்றாலும், இயற்கையான காடுகள் தரும் பல்லுயிர் பாதுகாப்பை இந்த குறுங்காடுகள் தராது என்ற விமர்சனங்களும் உண்டு.

மியாவாக்கி முறை

உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் இந்த மியாவாக்கி முறை. இதில், குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும்.

இந்த காடு வளர்ப்பு முறையில், ஆழமான குழிகளை தோண்டி, மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவர்கள். இது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் மண் வளம், காலநிலை, பருவ மாற்றங்கள் என அனைத்தையும் சார்ந்து ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கப்படும் காடு வளர்ப்பு முறை ஆகும். இந்த முறையில் ஒரு சிறிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான மரங்கள் மிகவும் நெருக்கமாக நடப்படும். வெறும் 500 சதுர அடி இடம் இருந்தால் கூட, அதில் இந்த முறையில் காடுகளை வளர்க்கலாம்.

இந்த மரக்கன்றுகளை நெருக்கமாக நடுவதன் மூலம் அவற்றிற்குச் சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும், பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், மரங்கள் சூரிய ஒளியைத் தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மேல்நோக்கி வேகமாக வளரும்.

இதனால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும். பொதுவாக இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

தட்பவெப்பத்தைச் சீர்படுத்த

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் மியாவாக்கி காடுகளை உருவாகிவருகிறது 'துவக்கம்' என்ற தொண்டு நிறுவனம். துவக்கம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் சென்னை நகரத்தில் வளர்ந்து வரும் மியாவாக்கி காடுகள் சென்னைவாசிகள் பலருக்கும் காட்டிற்குள் சென்றுவந்த அனுபவத்தை தருவதாக கூறுகிறார்.

குறுங்காடுகள்

பட மூலாதாரம், Thuvakkam

படக்குறிப்பு, குறுங்காடுகள்

''எங்கள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரங்கள் வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளனர். சென்னை போன்ற நகரத்தில் வசிப்பதால், தங்களது குழந்தைகளுக்கு இயற்கையான காட்டிற்குள் கூட்டிச் செல்லும் அனுபவத்தை தர இந்த மியவாக்கி காடுகள் உதவுகின்றன. இந்த காடுகளை உருவாகும் முன்னர், ஒவ்வோர் இடத்திலும் அங்கு என்ன மரங்கள் பாரம்பரியமாகவளரும் என்று ஆய்வு செய்து பின்னர் நடுகிறோம். மரங்களின் முக்கியத்துவத்தை அறியும் பல குடியிருப்புவாசிகள் இந்த காடுகளை பாதுகாக்க முன்வருகிறார்கள். இது சென்னை நகரத்தின் பசுமையை அதிகரிக்க சென்னைவாசிகளின் இணைந்து செய்யும் கூட்டு முயற்சி,''என்கிறார் கிருஷ்ணகுமார்.

வடசென்னையில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டுவரும் மியாவாக்கி காட்டில் சுமார் 80,000 மரங்கள் வளர்கின்றன. தென்சென்னையில் கோட்டூர்புரம் பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் பலா மரங்கள், புங்கன்,பூவரசு, வேம்பு என பெரிய மரங்களும் உள்ளன என்கிறார். இந்திரா நகர் பகுதியில் உள்ள மியவாக்கி காட்டில், 7,800 மரங்கள் வளர்ந்து வருகின்றன என்கிறார். சென்னை நகரத்தின் உருவாகும் மாசுபாட்டைக் குறைத்து, தட்பவெப்பத்தைச் சீர்படுத்த மியவாக்கி காடுகள் உதவுகின்றன என்கிறார் அவர்.

கணக்கு காட்ட மட்டுமே

ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மியவாக்கி முறையால் ஏற்படும் நன்மை குறைவு என்றும் பெருநிறுவனங்கள் காடு வளர்ப்பதை கணக்கு காட்டுவதற்காக மியவாக்கி திட்டத்தில் இறங்குகிறார்கள் என்கிறார்கள்.

தாவரவியலாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுசூழல் மதிப்பீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள நரசிம்மன் பேசுகையில், மியவாக்கி காடுகள் பார்ப்பதற்க்கு காடுகள் போன்ற தோற்றத்தை தந்தாலும், இயற்கையாக உருவாகும் காடுகளை போன்றவையாக இருக்காது என்கிறார்.

''ஒரு காட்டில் மரங்கள், செடிகள், கொடிகள், சிறுமரங்கள் என பலவகையான தாவரங்கள் இருக்கும். அந்த தாவரங்களுக்கு உகந்த பூச்சிகள், புழுக்கள், பறவைகள், சிறிய மற்றும் பெரியவிலங்குகள் இருக்கும். இயற்கையின் உணவு சங்கிலி பல்வகையான உயிரிகள் காட்டில் வாழ்வதற்கு உதவும். மியாவாக்கி காடுகளில் மரங்கள் அடர்ந்து காணப்படும். ஆனால் பிற உயிரிகள் வாழ்வதற்கான இடமாக இந்த காடுகள் இருக்காது,''என்கிறார்.

மரங்கள் நெருக்கமாக நடப்படுவதால், அவற்றின் வேர்கள் ஒன்றை ஒன்று பிணைந்து சிக்கலாக வளரும் என்பதால், அவற்றின் வளர்ச்சியை நாம் முடக்குவதற்கு சமம் என்கிறார் இவர்.

மேலும், சுற்றுசூழலை மாசுபடுத்துவதை ஈடு செய்ய பசுமையை அதிகரிக்கவேண்டும் என்ற சட்ட ரீதியான நெருக்கடி இருப்பதால் ஒரு சில தனியார் நிறுவனங்கள், மியவாக்கி காடுகள் முறையை தேர்வுசெய்து பசுமையை அதிகரித்ததாக கணக்கு காட்டுகிறார்கள் என்கிறார் நரசிம்மன்.

''குறைந்த காலத்தில் மரங்கள் இந்த காட்டில் வளரும். ஆனால் இங்கு சிறிய மரங்கள் தப்பிப்பது சிரமம். அதோடு பறவைகள், சிறிய விலங்குகளுக்கு தேவையான உணவு என்பது சரியாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான். காட்சிக்கு அழகாக இருக்கும் இந்த மியவாக்கி காட்டிற்குள் நாம் உலாவ முடியாது. பல்லுயிர் பெருக்கத்திற்கு இதில் இடமிருக்காது,''என்கிறார் நரசிம்மன்.

https://stitch.tools.bbc.co.uk/projects/3318/timelines/16:9/translate/ta?tab=EDITOR

பட மூலாதாரம், Thuvakkam

மாநகராட்சி என்ன சொல்கிறது?

மியாவாக்கி காடு வளர்ப்பில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் பிபிசி தமிழ் பேசியது. சென்னை ஆணையராகவும், சென்னை நகரவாசியாகவும் இந்த நகரத்தின் பசுமை அதிகரிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக கூறுகிறார் ககன்தீப்சிங் பேடி. ''நம் சென்னையில் பசுமை அதிகரிக்க பல வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

மியாவாக்கி காடுகள் விரைவாக வளர்கின்றன. உடனடி உதவியாக இதை கருதலாம். ஆனால் இதற்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ்நாடு முழுவதும் மியாவாக்கி காடு வளர்ப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது என்பதால் சென்னையிலும் அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அல்லாமல், தனியாக மரம் வளர்ப்பு என்பதற்கும் மாநகராட்சி முக்கியத்துவம் தருகிறது,''என்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,90,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. சென்னை நகரவாசிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன என்கிறார். பசுமையை அதிகரிக்க பூங்காக்களில் மரம் வளர்ப்பு, சாலை மீடியன்கள் என பல வகையில் திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :