அழியும் கானுயிர்களை உயிர்ப்பிக்க இதோ புதிய தொழில்நுட்பம்

- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
"அவன் இறந்துவிட்டான்," என்று 28 வயதான சிவப்பு நிற வெப்பமண்டல கிளியின் இறகுகள் நிறைந்த மார்பில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக்கொண்டே முணுமுணுத்தார் செஸ்டர் உயிரியல் பூங்காவின் விலங்கு மருத்துவர் கேபி டிரேக்.
அது, செஸ்டர் உயிரியல் பூங்காவில் வசித்த வயதான பறவை. அதோடு, இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தால் அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் பட்டியலில் பட்டியலிடப்பட்ட உயிரினம்.
கவர்ந்திழுக்கக்கூடிய, சிறப்பியல்பு கொண்ட பறவை, நிரந்தரமாகத் தூங்க வைக்கப்படுவதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. அதன் சிறிய, நகங்களைக் கொண்ட பாதங்கள், ஆர்த்ரைடிஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சையளிக்க முடியாத அளவுக்கு அது கடுமையாகிவிட்டது.
அது இறந்திருந்தாலும், அதன் உயிரணுக்களில் உள்ளா தனித்துவமான மரபணு குறியீட்டிற்கு இது முடிவல்ல. அதன் உடலின் சில சிறிய பாகங்கள், அதைப் போன்ற நூறு வகையான உயிரினங்களின் உடல் பாகங்களோடு சேர்த்து, பிரிட்டனின் மிகப்பெரிய உயிரியல் திசு வங்கியான நேச்சர்ஸ் சேஃபில், உறையவைக்கப்படும்.
ஊட்டச்சத்து நிறைந்த, உயிரணு உறைவதைத் தடுக்கும் குப்பிகளில், இந்த மாதிரிகள் -196 டிகிரி செல்ஷியஸில் வைக்கப்படுகின்றன. அந்தச் சூழலில், உயிரணுக்களில் நிகழும் அனைத்து இயற்கையான வேதியியல் செயல்முறைகளும் நிறுத்தப்படும்.
அவற்றின் மூலம், எதிர்காலத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூட, அப்படிச் சேகரிக்கப்பட்டிருக்கும் உயிரணு மாதிரிகளை வைத்து அந்த உயிரினங்கள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படலாம் என்பதே இந்தச் சேகரிப்பின் பின்னணியில் இருக்கும் யோசனை. உயிரின அழிவு நடந்தால், அதைச் சரிசெய்வதற்கான மற்றொரு வழியாக இது பார்க்கப்படுகிறது.
மீண்டும் தொடங்கும் வாழ்க்கை
காட்டுயிர் பாதுகாவலர்கள், நாம் முன்னெப்போதையும் விட இப்போது தான் வேகமாக உயிரினங்களை இழந்து வருவதாகக் கூறுகிறார்கள். பல்லுயிரியம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நடுவே, 10 லட்சம் வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்துபோகக் கூடிய அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. அவற்றில் எதையெல்லாம் உறைய வைத்து உயிரணு பாதுகாப்பு செய்வது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
"இந்த முயற்சி அழிவை நிறுத்தப் போவதில்லை. ஆனால், நிச்சயமாக உதவும்," என்கிறார் நேச்சர்ஸ் சேஃப் உயிரணு உறைவு வங்கியின் நிறுவன டல்லிஸ் மேட்சன்.
டல்லிஸ் ஓர் உயரமான, நட்புமிக்க ஆர்வலர். காட்டுயிர்களின் உயிருள்ள திசுக்களைப் பாதுகாக்கும் அவருடைய சேவைப் பணிக்காக நன்கு அறியப்பட்டவர்.

பட மூலாதாரம், NATURES SAFE
"இங்கு தான் வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது," என்று அவர் ஒளிரும், நுண்ணோக்கியின் கீழ் சிறுத்தையின் தோல் உயிரணுக்கள் இருக்கும் குப்பியின் படத்தைக் காட்டினார்.
திரையில் அடர்த்தியாக, நிரம்பியிருந்த தோல் உயிரணுக்கள் தெரிந்தன. அதில், உயிரணுவின் நடுவில் இருக்கும் கரும்புள்ளி தான் தனித்த மரபணு வழிமுறைகள் இருக்கும் மையக்கரு. இது உயிரிழந்த ஒரு சிறுத்தையினுடையது.
"இந்த சிறுத்தை 2019-ஆம் ஆண்டில் இறந்தது. சில நாட்களுக்கு முன்பு நாங்கள் இந்த உயிரணுக்களுக்கு உயிர்கொடுத்து எழுப்பினோம். இப்போது, அவை திரை முழுவதும் எண்ணிக்கையில் பெருகி வளர்ந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்," என்று டல்லிஸ் விளக்குகிறார்.
இந்த முயற்சிக்கு தோல் பகுதியிலிருக்கும் உயிரணுக்கள், அதிலும் குறிப்பாக ஃபைப்ரோப்ளாஸ்ட் என்ற இணைப்பு திசுவின் உயிரணுக்கள் மிகவும் நல்லது. உயிரணுக்களை சரிசெய்யவும் குணப்படுத்தவும் இவை மிகவும் முக்கியமானவை. அதோடு, ஃப்ரீசரில் இருந்து அகற்றப்பட்டு, உடல் வெப்பநிலைக்கு நிகரான வெப்பநிலையில் தேவையான ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்ட பிறகு, அவை அழகாகப் பிரிந்து பெருகத் தொடங்கும்.
டிஎன்ஏவின் உறைபனியிலிருந்து நீக்கிய தொகுப்புகளைப் பயன்படுத்தி, புதிய உயிரினங்களை க்ளோனிங் செய்வது, இந்த உயிரணுக்களுக்கான எதிர்கால பயன்களில் ஒன்று. 1996-ஆம் ஸ்காட்லாந்தில் உள்ள விஞ்ஞானிக, ஓர் ஆட்டின் உயிரணுவை மற்றோர் ஆட்டின் கருமுட்டையுடன் இணைத்து, டாலி என்ற செம்மறி ஆட்டை க்ளோனிங் செய்தனர்.

பட மூலாதாரம், NATURES SAFE
இதுவோர் இனப்பெருக்க தொழில்நுட்பம். வளர்ப்பு உயிரினங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இது தற்போது காட்டுயிர் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்க உயிரிதொழில்நுட்ப நிறுவனமான ரிவைவ் அண்ட் ரீஸ்டோர், சமீபத்தில் பல தசாப்தங்களுக்கு முன்பு உயிரிழந்த ப்ளாக் ஃபூட்டட் ஃபெரெட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட தோல் உயிரணுக்களைப் பயன்படுத்தி க்ளோன் செய்து அதே உயிரினத்தை உருவாக்கியது. அதன் முட்டைகள் 1998-இல் உறைய வைக்கப்பட்டன. ஒரு ஃபெரெட் ஃபைப்ரோப்ளாஸ்டை ஒரு முட்டை உயிரணுவுன் இணைத்து ஒரு கருவை உருவாக்கியது. அதிலிருந்து, 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், எலிசபெத் ஆன் என்ற ப்ளாக் ஃபூட்டட் ஃபெரெட் பிறந்தது.
ப்ரெஸ்வால்ஸ்கியின் குதிரையை க்ளோன் செய்ய ரிவைவ் அண்ட் ரீஸ்டோர் அதே அடிப்படை அணுகுமுறையைப் பயன்படுத்தியது. இதுதான் உலகில் வாழும் கடைசி உண்மையான காட்டுக் குதிரையாகக் கருதப்படுகிறது. 60,000 டாலர் செலவில் இந்த செயல்முறையில் பிறந்த கர்ட் என்று பெயரிடப்பட்ட அந்தக் குதிரை, சான் டியாகோ உயிரியல் பூங்காவில் தற்போது வாழ்கிறது.
"உண்மையில் அமெரிக்க பல்லுயிரியத்திற்குள் எண்ணிக்கையில் அதிக உயிரினங்களைக் கொண்டு வருவது மற்றும் ஐரோப்பாவின் உயிரியல் பூங்காவில் இருந்து குதிரையைக் கொண்டு வருவது ஆகியவற்றைவிட, உயிரியல் பூங்காவில் ஒரு குதிரையை க்ளோனிங் செய்வது மலிவானது," என்று ரிவைவ் அண்ட் ரீஸ்டோர் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி டாக்டர் பென் நோவாக் விளக்குகிறார்.

பட மூலாதாரம், BEN NOVAK/REVIVE AND RESTORE
எந்த உயிரினங்களை நாம் உறைய வைக்க வேண்டும்?
மரபணு பன்மை மிகவும் முக்கியமானது. ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை குறைவதால், அது குறுகிய எண்ணிக்கைக்கு உள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும். பாலூட்டிகளில், பிறக்கும் சந்ததிகள் அவற்றின் பெற்றோரின் இரண்டு தரப்பிடம் இருந்தும் மரபணுத் தொகுப்பைக் கொண்டுள்ளன. அந்த பெற்றோர்கள், நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தால், மரபணுப் பன்மையைக் குறைந்து, ஏதேனும் மரபணு நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
உயிரணுக்களை வங்கியில் சேகரிப்பது, உயிர்த்தெழுப்புவதற்கான மலிவான வழி இல்லை என்றாலும், காட்டுயிர் பாதுகாவலர்கள் உயிரினங்களைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். ஆனால், அனைத்தையுமே நம்மால் காப்பாற்ற முடியவில்லை. அழிவு தொடர்ந்து நடக்கிறது.
முன்னோக்கிச் செல்வது, உயிரணு வங்கியில் சேமிப்பதும் எதிர்காலத்தில் நிலைமையை மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. இப்போது இதைச் செய்யாவிட்டால், நாம் பின்னர் வருத்தப்படுவோம்," என்கிறார் டாக்டர் நோவாக்.
"இப்போது உயிரினங்களைக் காப்பாற்றுவது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவற்றை உறைய வைக்கலாம் என்ற செய்தியை பயோ பேங்கிங் அனுப்பக்கூடிய அபாயம் உள்ளது," என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காட்டுயிர் பாதுகாப்பு உயிரியலாளரும் பேராசிரியருமான பில் சதர்லேண்ட் சுட்டிக் காட்டுகிறார்.

பட மூலாதாரம், BEN NOVAK/REVIVE AND RESTORE
"சேமிக்கப்பட்டவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில் சிக்கல் உள்ளது. 20 வெவ்வேறு இடங்களில் இருந்து 20 பனிச் சிறுத்தைகளிடமிருந்து திசுக்களைப் பெறுவது அற்புதமாக இருக்கும். ஆனால், அது மிகவும் கடினமானதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
அதற்கு மாறாக, நேச்சர்ஸ் சேஃப் ஐரோப்பாவில் உள்ள உயிரியல் பூங்காக்களுடன், குறிப்பாக செஸ்டர் உயிரியல் பூங்காவுடன், நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
ஓர் உயிரினத்தைக் கருணைக் கொலை செய்யும்போதோ அல்லது எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போதோ, உயிரியல் பூங்காவின் விலங்கு மருத்துவர்கள் உயிரணு வங்கிக்கு சில திசுக்களை எடுத்துச் செல்வார்கள்.
"இது ஓர் ஒளியைப் போன்றது. ஓர் உயிரினம் இறப்பது, உண்மையில் அந்த உயிரினத்தின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. ஏனெனில், அதன் மரபியலை நாம் உறைய வைக்க முடியும்," என்கிறார் டல்லிஸ்.
வங்கி, கிடைக்கக்கூடிய மாதிரிகளை எல்லாம் சேமிப்பது சரியான அணுகுமுறை இல்லையென்றாலும், மலை கோழித் தவளை(ஒரு பூஞ்சை நோயால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்ட ஆபத்தான நிலையிலுள்ள ஒரு வகை தவளை) உள்ளிட்ட உயிரினங்களின் மாதிரிகளை நேச்சர்ஸ் சேஃப் வங்கிக்கு அது வழங்கியுள்ளது.

மேலும் இதுவொரு ஜாவன் க்ரீன் மேக்பையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களையும் கொண்டுள்ளது. இது காட்டுப் பறவை வர்த்தகத்தால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளாது(அழகான பறவை, மிமிக்ரி திறன்களை அதிகமாக விரும்புகின்றன). செஸ்டர் உயிரியல் பூங்காவின் அறிவியல் துறைத் தலைவரான டாக்டர் சூ வாக்கர், "இது முடிந்த வரை மரபணு பொருட்களைச் சேமிப்பது என்கிறார். மேலும், "ஓர் உயிரினம் உயிரிழக்கும்போது நாம் அதைச் செய்யாவிட்டால், அந்த உயிரினத்தை இழந்துவிடுவோம்," என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் செஸ்டர் உயிரியல் பூங்காவில், கோஷி என்ற ஒன்பது வயது பெண் ஜாகுவார் அதன் காப்பிடத்திற்குள் உயிரிழந்து கிடந்தது. விலங்கு மருத்துவரான கேபி டிரேக், கோஷியை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அதன் இடது காதை கவனமாகத் துண்டித்து, குளிர்ந்த பேக்கேஜிங்கில் வைத்து நேச்சர்ஸ் சேஃப் வங்கிக்கு அனுப்பினார்.
"ஜாகுவார் அழியும் அபாயம் மிக அதிகமாக இருக்கும் பெரும்பூனை இல்லை. ஆனால், அவற்றின் எண்ணிக்கை வீழ்ந்து வருகின்றன. அவை மற்ற பெரிய வேட்டையாடிகளைப் போலவே மனித அழுத்தங்களை எதிர்கொள்கின்றன," என்று கேபி கூறுகிறார்.
மேலும், "அவள் மிகவும் இளமையாக இருந்தாள். துரதிர்ஷ்டவசமாக, அவளுக்கு குட்டிகள் எதுவுமில்லை. இது வருத்தமாக இருக்கிறது. ஆனால், அவளது உயிரோட்டமுள்ள திசுக்கள் அவளைத் தொடர்ந்து கொண்டு செல்லும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், CHESTER ZOO
இப்போது, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு ஊட்டச்சத்து கரைசலில் கலக்கப்பட்ட, பட்டாணி அளவிலான கோஷியின் கருப்பு நிற வெல்வெட் காதுகள், பெருகிய முறையில், திரவ நைட்ரஜன் குப்பியில் இருக்கின்றன
எதிர்காலத்தில் விஞ்ஞானம் எதையெல்லாம் சாத்தியப்படுத்தக்கூடும் என்பதில் டல்லிஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர், "மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் மூலம், நாம் புதிய மரபணு பன்மையை உருவாக்க முடியும்," என்று ஊகிக்கிறார்.
செஸ்டர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த டாக்டர் சூ வாக்கர், "இந்த மாதிரிகளின் மூலம் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்வதற்கான தொழில்நுட்பம் நமக்குக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள் கூட ஆகலாம்," என்று, நம்மிடம் இருக்கும் வரை இப்போது தனியாக இருக்கும் ஆண் ஜாகுவாரை பார்த்தபடி கூறினார்.
நீண்டகாலமாக உயிரிழந்த உயிரினங்களின் உறைந்த உயிரணுக்களைப் பயன்படுத்துவது ஒருபோதும் தேவைப்படாது என்பது அவருடைய நம்பிக்கையாகவும் பெரும்பாலான காட்டுயிர் பாதுகாவலர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
அதேவேளையில், "அதை நாம் சேகரிக்கவில்லை என்றால், அவற்றின் மரபியலை முற்றிலுமாக இழந்துவிடுவோம். அத்தகைய தனித்துவமான பல்லுயிரியம் அனைத்தையும் நாம் இழந்துள்ளோம்" என்றும் டாக்டர் சூ வாக்கர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













