ஞானவாபி அதிசயம்: மின்சாரமில்லா நீரூற்றுகள் - வியப்பூட்டும் வரலாறு

போலாந்து நீரூற்று

பட மூலாதாரம், BARTEK ODIAS

படக்குறிப்பு, போலாந்து நீரூற்று
    • எழுதியவர், சினேஹா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் ஆய்வு தொடர்பாக தொடங்கிய சர்ச்சை முற்றுப்பெறுவதாகத் தெரியவில்லை.

மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பு கூறியது. வஸுவில்(தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தம் செய்யும் இடம்) இருப்பது சிவலிங்கம் அல்ல, நீரூற்று என்று முஸ்லிம் தரப்பு விளக்கம் அளித்தது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஆனால் இதற்கு நடுவே இரு தரப்பினரும் ஒருவர் மற்றவரின் கூற்றை கேள்வி கேட்டு நிராகரித்து வருகின்றனர்.

"400 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இருந்ததா என்ன, ஔரங்கசீப் நீரூற்றை வாயால் ஊதி இயக்கினாரா?" என்று பாஜகவைச் சேர்ந்த நிகத் அப்பாஸ் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மின்சாரம் இல்லாமல் நீரூற்றுகள் இயங்குவது புவியீர்ப்பு விசையின் மூலம் சாத்தியம் என்று எழுத்தாளர் அனீஷ் கோக்லே உட்பட பலர் இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆனால் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு கூற்றுகளில் இருக்கும் உண்மை என்ன? மின்சாரம் இல்லாமல் உண்மையில் நீரூற்றுகள் இயங்க முடியுமா?

அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கட்டப்பட்ட நீரூற்றுகளின் அடிப்படையில் இதற்கான பதில்களைத் தேடுவோம்.

உதய்பூரின் 'சஹேலியோன் கி பாடி' நீரூற்று

பட மூலாதாரம், KIRANN S / EYEEM

படக்குறிப்பு, உதய்பூரின் 'சஹேலியோன் கி பாடி' நீரூற்று

நீரூற்று எப்படி வேலை செய்கிறது?

நீர் எப்போதுமே உயரத்திலிருந்து கீழ் நோக்கிச்செல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். மலைகளின் நீரூற்றுகள், ஆறுகள் அல்லது உங்கள் வீட்டுக் குழாய்களில் இருந்து வரும் நீர் என்று எல்லா இடங்களிலும் இதைப்பார்க்க முடியும். இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை என்பது தெளிவாகிறது.

தண்ணீர் குழாயின் மேல் பகுதியை அழுத்தி நீரூற்றை உருவாக்க முயற்சிக்கும் குழந்தைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குழாயின் ஒரு முனையை அழுத்தும்போது, நீரின் ஓட்டம் வேகமாக மாறி, வெளியேறும் நீர் நீரூற்று போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

உண்மையில், தண்ணீரின் ரப்பர் பைப்பை அழுத்துவதன் மூலம், வெளியேறும் நீரின் வேகம் அதிகரிக்கிறது அதாவது வெளியேறும் பாதை குறுகலாக இருக்கும்போது நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது.

தாஜ்மஹால், காஷ்மீரின் முகலாய தோட்டம் மற்றும் செங்கோட்டையின் நீரூற்றுகளின் மூலம் இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வரலாற்று இடங்கள் மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு பலகாலம் முன்பே கட்டப்பட்டவை. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நீரூற்று தயாரிப்பதில்தான் முதல் வேலைப்பாடே அமைந்துள்ளது. நீரூற்றுக்காக, ஒரு இடத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் இடம் வடிவமைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நீர், குறுகிய பாதைகள் அல்லது வடிகால்கள் வழியாகச்செல்லும். அப்படிச்செல்வதால் அங்கு நீரின் அழுத்தம் அதிகரிக்கும். இந்த அதிகரித்த அழுத்தமுள்ள நீர், நீரூற்றின் துளைகளில் இருந்து வெளியேறும்போது, அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

நீரின் வேகமும் நீரூற்றின் வடிவமைப்பிலிருந்து விழும் நீரும் நீரூற்றை அழகாக்குகிறது.

நீரூற்றுகளின் அறிவியல்

நீரூற்று எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். இப்போது அதன் அறிவியலைப் பற்றி பேசலாம்.

"முகலாயர் காலத்தில் நீரூற்றுக்கென டெரகோட்டா குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் வந்து மேலே ஏறி நீரூற்றில் இருந்து விழும் விதமாக சரிவுகள் மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டன. இதற்கு தண்ணீரின் சரியான வேகம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. முழு கணக்கீடும் அதன் செயலாக்கமும் அற்புதமாக இருந்தது,"என்று நகர்ப்புற திட்டமிடுபவரான ஷுபம் மிஷ்ரா கூறுகிறார்.

டெரகோட்டா என்றால் நெருப்பில் சுட்டு எடுக்கப்பட்ட களிமண் என்று பொருள்.

"முகலாய கட்டிடங்களில் கட்டப்பட்ட நீரூற்றுகளில் புவியீர்ப்பு மற்றும் நீரியல் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன" என்று வரலாற்றாசிரியர் ராணா சஃப்வி கூறுகிறார்.

இது நீர் ஆதாரங்களின் பயன்பாட்டில் வசதி, நிகழ்வு மற்றும் முழு செயல்முறையும் இருக்கும் ஓர் அமைப்பாகும். நீர் ஓட்ட செயல்முறை, நில பயன்பாடு, நிலப்பரப்பு, மண், மழை மற்றும் ஆவியாதல் போன்ற காரணிகளை இது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

"முகலாய கட்டிடக் கலையில் கல்லறையாக இருந்தாலும் சரி, மசூதியாக இருந்தாலும் சரி, அதில் உள்ள நீர் வழித்தடம் மிகவும் முக்கியமானது. கல்லறைகள் நான்கு தோட்டங்களின் முறையில் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவத்தில்தான் ஹுமாயூனின் கல்லறை கட்டப்பட்டுள்ளது. அதே போல காஷ்மீரின் தோட்டங்கள் கட்டப்பட்டு, அதில் நீரூற்றுகள் வைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையில் நஹர்-இ-பஹிஷத் இருந்தது. அது செங்கோட்டை முழுவதும் பாயும்படியாக அமைந்திருந்தது. ஆங்காங்கே நீரூற்றுகளைக் கொண்டிருந்தது. இதற்கான நீர் யமுனையில் இருந்து எடுக்கப்பட்டது. நஹர்-இ-பஹிஷத் மூலம் அது நீரூற்றை அடைந்தது. ஜம்மா மசூதியில் ஹவுஸ் (குளம்) வரை தண்ணீர் கொண்டு வர, நீர் இறைக்கும் கிணறு இருந்தது. அது இன்றும் உள்ளது,"என்று ராணா சஃப்வி குறிப்பிட்டார்.

மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரூற்றுகள்

பட மூலாதாரம், Getty Images

நீரூற்றுகளின் வரலாறு

பூமியின் 70 சதவிகிதத்தை நீர் ஆக்கிரமித்துள்ளது. ஆனாலும் அதே தண்ணீருக்காகத்தான் இன்றும் சண்டைகள் நடக்கின்றன.

குடிநீராக இருந்தாலும், பாசன நீராக இருந்தாலும் சரி, மனிதன் தன் வளர்ச்சிக்காக, தேவைக்கேற்ப தண்ணீருக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறான்.

தேவைகளை பூர்த்தி செய்வதை தவிர, அழகை அதிகரிக்கவும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீரூற்று இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

உலகின் ஆரம்பகால நீரூற்றுகளின் எடுத்துக்காட்டுகள் மெசபடோமியாவில் காணப்படுகின்றன. அவை கிமு 3000 க்கு முந்தையவை என்று 'தி கார்டியன்' வலைத்தளம் தெரிவிக்கிறது. மெசபடோமியா என்பது இன்றைய இராக், இரான், துருக்கி மற்றும் சிரியா ஆகும்.

இங்கே இயற்கை நீரூற்று ஒரு முக்கிய ஆதாரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

கிரேக்க, ரோமானிய கட்டடக்கலை எச்சங்களிலும் இத்தகைய முறைகள் காணப்பட்டதாக, கோர்டன் கிரிம்லேயின் 'The Origin of Everything' என்ற நூல் தெரிவிக்கிறது. இயந்திர நீரூற்றுகள் இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டில் செயல்படத் தொடங்கின.

மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரூற்றுகள்

பட மூலாதாரம், Getty Images

மிகவும் பிரபலமான நீரூற்றுகள்

நீரூற்றுகள் குறித்த ஒருசுவாரசியமான கதை பிரான்சுடன் தொடர்புடையது. அரச குடும்பம் மட்டுமின்றி அவரது அரசவையின் அமைச்சர்கள் மற்றும் சகாக்களையும் வருத்தப்படுத்தும் ஒரு முடிவை பிரான்சின் மன்னர் பதினான்காம் லூயி, எடுத்தார்.

அரசவையின் செயல்பாட்டை அதாவது அதிகார மையத்தை பாரிஸிலிருந்து வெர்சாய் என்ற தொலைதூரப் பகுதிக்கு நகர்த்துவது என்பதுதான் அந்த முடிவு.

இதுகுறித்து, பேலஸ் ஆஃப் வெர்சாய் ஆராய்ச்சி மையத்தின் பெஞ்சமின் ரிங்ட், நேஷனல் ஜியோகிராஃபியிடம் பேசினார்.

"லூயி தனது அதிகாரமையத்தை உருவாக்க விரும்பிய இடம், நிலத்தால் சூழப்பட்ட பகுதி. லூயியின் கனவுத்தோட்டம் மற்றும் நீரூற்றுகளுக்கு போதுமான தண்ணீர் அங்கு இல்லை."

"இதற்கு தீர்வு காண பெல்ஜியத்தில் இருந்து பொறியாளர்கள் அழைக்கப்பட்டனர். பம்பிங் ஸ்டேஷன்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மூலம் சீன் நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நீரூற்றுகளுக்கு தண்ணீர் கிடைத்தது. வெர்சாயின் ஷீஷ் மஹாலுடன் கூடவே, இந்தத்தோட்டம் மற்றும் நீரூற்று பிரான்சின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும் ஆண்டுதோறும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனைக்கு வருகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தாலி அதன் நீரூற்றுகளுக்கு உலகம் முழுவதும் பிரபலமானது. 'ஃபவுண்டன் ஆஃப் தி ஃபோர் ரிவர்' மற்றும் ட்ரிவி நீரூற்று, இதில் அடங்கும். ட்ரிவி நீரூற்றில் சுற்றுலாப் பயணிகள் நாணயத்தை எறிந்து ஆசி பெறுகிறார்கள்.

இதை மன்னர் பதினான்காம் லூயி அமைத்தார். இங்குள்ள நீரூற்றுகள் மிகவும் அழகானவை என்று கருதப்படுகிறது.

"இத்தாலி மிகவும் பழமையான நீரூற்றுகளுக்கு பிரபலமானது. பியாத்ஸா நவோனா நீரூற்று அவற்றில் ஒன்று. மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் பழைய நீரூற்றுகள் உள்ளன,"என்கிறார் வரலாற்றாசிரியர் ஃபிரோஸ் பக்த் அகமது.

புதிதாக கட்டப்பட்ட பெரிய நீரூற்றுகளில் துபாய் நீரூற்றும் அடங்கும்.

இப்போது உங்களுக்கு பிடித்த நீரூற்று எது, அது எங்கே உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: