கல்வராயன் மலைவாசிகள்: கொடுமையின் உச்சத்தை அனுபவிக்கும் கிராமங்கள் - கள நிலவரம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை மீது உள்ள பல உள்ளடங்கிய கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் பிரதான சாலையை அடைவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள். களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்.
கல்வராயன் மலையில் உள்ளடங்கி அமைந்திருக்கும் சின்னக் கருவேலம்பாடியிருந்து கீழே இறங்கும் மலைப் பாதை. அந்தக் கரடுமுரடான மலைப்பாதையில் கடுமையான மே மாத வெயிலில் தன் மனைவியுடன் நடந்துவந்து கொண்டிருக்கிறார் சின்னத் தம்பி.
ஒரு மரத்தடியில் சிறிய நிழலைப் பார்த்ததும் இருவரும் இளைப்பாறுகிறார்கள். "இந்தக் கருவேலம்பாடியிலிருந்து ஓர் அவசரத்திற்குக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. இருசக்கர வாகனம் இருந்தால், அதில் போகலாம். அது இல்லாதவர்கள் நோயாளிகளைத் தூக்கித்தான் செல்ல வேண்டும். மைசூருக்குப் போய்வந்த ஒருவர் இடுப்பொடிந்து போய் கிடக்கிறார். அவரை வைத்தியத்திற்காக காரில் அழைத்துச் செல்ல முடியவில்லை. மெயின் ரோடு வரை கார் வருவதற்குக்கூட ஆறாயிரம் ஏழாயிரம் கேட்கிறார்கள். இதனால், அவர் வைத்தியமில்லாமல்தான் கிடக்கிறார்" என்கிறார் சின்னத்தம்பி.
சின்னத்தம்பியின் சொந்த ஊர் வெள்ளேரிக் காடு. திருமணமான பிறகு கருவேலம்பாடிக்கு வந்துவி்டடார். "இங்கே 24 வருடமாக இருக்கிறேன். போக்குவரத்து வசதியே கிடையாது. மிகச் சிறிய தார்ச் சாலையைப் போட்டுத்தந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், அதைச் செய்ய மறுக்கிறார்கள்" என்கிறார் சின்ன முத்து.
இது வெறும் கருவேலம்பாடி என்ற ஊரின் பிரச்னை மட்டுமல்ல. கல்வராயன் மலையில் அமைந்துள்ள பல கிராமங்களில் வசிப்பவர்கள் நிலை இதுதான்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. 2,000 அடி முதல் 3,000 அடிவரை உயரமுள்ளது இந்த மலை. இந்தப் பகுதியில் 44 பெரிய கிராமங்களும் 150க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களும் அமைந்திருக்கின்றன. இதில் பெரும்பாலான சிறிய கிராமங்களை அணுகும் பாதையென்பது, சாதாரண மண் சாலையாகவே இன்னமும் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக எப்போதோ போடப்பட்ட இந்த மண் சாலைகள், மழையின் காரணமாக கரடுமுரடாக மாறி, ஆட்கள் நடந்து செல்லவே இயலாத சாலையாக மாறியிருக்கிறது.

இந்த மலையில் அமைந்துள்ள புழுவப்பாடி, தாழ்மதூர், மேல் முருவம், வண்டகப்பாடி, வெங்கோடு என பல கிராமங்கள் இதுபோல வாகனங்களால் அணுக முடியாத நிலையில் இருக்கின்றன. அதிலும் மேல் முருவம் கிராமத்திற்குச் செல்லும் பாதை என்பது நடக்கவே இயலாத பாதையாக இருக்கிறது.
"எங்க முப்பாட்டன் தலைமுறையில் இருந்து இந்த கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். எங்க ஊரில் சுமார் 120 குடும்பங்கள் இருக்கின்றன. மொத்தமாக 700 பேர் வரை வசிப்பார்கள். என் ஊரில் இருந்து பிரதான சாலைக்கு வர வேண்டுமென்றால் 3 கி.மீ.வரை மலைப் பாதையில் நடக்க வேண்டும். இங்கேயிருந்து வெள்ளிமலை (அருகில் உள்ள சிறிய டவுன்) செல்ல வேண்டுமென்றால் 15 கி.மீ. செல்ல வேண்டும். ஒரு பெரிய சந்தைப் பகுதிக்குப் போக வேண்டுமென்றால் தலைவாசல் (சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்) வரை செல்ல வேண்டும்.
எங்கள் ஊரிலிருந்து பிரதான சாலைக்கு வருவதற்கு அடிப்படை வசதியே கிடையாது. கரடு முரடாக ஒரு காட்டுப் பாதையில்தான் நடந்து வர வேண்டும். உடம்பு சரியில்லை என்றாலோ, பிரசவத்திற்கு செல்வதாக இருந்தாலோ தூளி போல கட்டித்தான் தூக்கி வர வேண்டும். இதனால், சரியான நேரத்தில் மருத்துவமனையை சென்றடைய முடியாது. நிறையப் பேர் இறந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் எழுத்தூர் பிரிவு வரைதான் வரும். இங்கே வரை, 3 கி.மீ. நடந்துதான் வர வேண்டும். ஒரு சிறிய தார் சாலை அமைத்துக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும்" என்கிறார் மேல் மருவம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்.
இதுபோன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே விவசாய வேலையோ, காட்டு வேலைகளையோ பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், மருத்துவத்திற்குக் கண்டிப்பாக வெள்ளிமலையோ, கள்ளக்குறிச்சியோ போயாக வேண்டும்.

"யாருக்காவது பிரசவ வலி வந்தால், மேலே இருந்து கீழே வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆஸ்பத்திரிக்குப் போக இரண்டு - மூன்று மணி நேரம் ஆகிவிடும். பல பேருக்கு நடுவழியில் பிரசவம் ஆகியிருக்கிறது. குழந்தை இறந்துபோயிருக்கிறது. சாதாரண உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தாலே மாலை நேரமாகிவிடும். இரு சக்கர வாகனத்தில் சிரமப்பட்டு போகலாம். ஆனால், பல சமயங்களில் நோயாளிகள் கீழே விழுந்திருக்கிறார்கள்" என்கிறார் ஆயத்துறைக் காட்டைச் சேர்ந்த செல்வி.

வெள்ளிமலையிலும்கூட ஒரு சிறிய அளவிலான அரசு மருத்துவமனையே இருக்கிறது. பெரிய பிரச்னைகள் என்றால், கள்ளக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும். சாலைகளை எளிதில் அணுக முடியாதது, அவசர மருத்துவ உதவியை உடனடியாகப் பெற முடியாதது போன்ற பிரச்னைகள் தவிர, வேறு சில பிரச்னைகளும் இந்தப் பகுதி மக்களுக்கு இருக்கின்றன.
"இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயப் பணிகளுக்கோ கூலிவேலைகளுக்கோதான் செல்கிறார்கள். இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது. இதனால் பலர் வேறு மாநிலங்களுக்கு விவசாயக் கூலிகளாகவும் செல்கிறார்கள். பலர் வேறு மாநிலங்களுக்கு மரம் வெட்டச் செல்கிறார்கள். அதில் சட்டரீதியாகவும் பல சிக்கல்கள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கஜேந்திரன்.
கல்வராயன் மலையில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களின் பிரச்னை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதரிடம் கேட்டபோது, இந்த கிராமங்களின் பல பகுதிகள் வனத்துறைக்குக் கீழ் வருவதால், சாலைகள் அமைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தார்.
"மலை மேல் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதிக்குள் வருவதால், சாலைகளை போடுவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிரமம் இருக்கிறது. கடந்த வாரம்தான் வனத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆனால், கண்டிப்பாக இந்தப் பகுதிகளுக்கு சாலை போடும் திட்டம் இருக்கிறது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












