ஜவ்வாது மலையில் தொடர்ந்து பாக்கெட்களில் சகஜமாக விற்கப்படும் கள்ளச்சாராயம் - என்ன காரணம்?

கள்ளச்சாராய விற்பனை
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வேலூர் மாவட்டத்தில் மட்டும், கடந்த 3 மாதங்களில் மதுவிலக்கு தொடர்பாக 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 9,374 லிட்டர் சாராயமும் 145 கிலோ வெல்லம், 43 ஆயிரத்து 300 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டன என்கிறது போலீஸ் தரப்பு தகவல்.

மாவட்டத்தில் எரிசாராய விற்பனை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும், கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஆகியவற்றின் விற்பனை குறையவில்லை என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு சமூக ஆர்வலர்.

இந்த நிலையில், 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட, சுமார் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள, சுமார் 27 ஆண்டு காலமாக சாராய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டுவந்த மகேஸ்வரி என்ற பெண் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 லிட்டர் சாராய கேன் 1,000 ரூபாய்

"வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரந்து விரிந்துள்ள ஜவ்வாதுமலையில் பல கிராமங்களின் எதிர்ப்பையும் மீறி அடர்ந்த மலைப்பகுதிகளுக்குள் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. மலை முழுவதும் வனத்துறை மற்றும் கலால் துறையால் ரெய்டு செய்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் தடுமாறுகிறது. அடித்தட்டு மக்கள், கூலித் தொழிலாளிகளை குறிவைத்து சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. காய்ச்சும் கள்ளச்சாராயம் 35 லிட்டர் கேன் - 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சாராயத்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் அனைத்து சுக துக்க நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்று எரிசாராயம் ஒரு லிட்டர் விலை 200 ரூபாய். இதில் 100 மிலி பாக்கெட்டுகளை செய்து, ஒரு பாக்கெட் 20 ரூபாய் வீதம் விற்று வருகிறார்கள். இதனால், அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எப்போதும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது," என்கிறார் ஜவ்வாது மலையில் பணியாற்றும் ஒரு ஆர்வலர்.

முக்கியபுள்ளிகள்ஏன்கைதாகவில்லை?

கள்ளச்சாராய வழக்கில் முக்கிய புள்ளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்கிறார், வேர்கள் அமைப்பைச் சார்ந்த வடிவேல். குடி மறுவாழ்வு நிலையங்கள் வேண்டும் கோரிக்கை வைத்து வலியுறுத்தும் அமைப்பு இது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய வடிவேல், "ஆந்திரா, தமிழ்நாடு எல்லைகளில் கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசார் ரோந்து சென்றால் எளிதாக மாநிலம் விட்டு விட்டு மாநிலம் தப்பி சென்று பதுங்கிக் கொள்கிறார்கள். இது காவலர்களுக்கு மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்துகிறது. வனத்துறையால் எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. கலால் துறையினர் அவ்வபோது சாராய ஊறல்களை அழித்து வருகிறார்கள். காடுகள் நிறைந்த மலைப்பகுதி என்பதனால் எந்த இடங்களில் சாராய ஊறல் போட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.

எரி சாராயத்தில் தண்ணீர் ஊற்றி சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வது ஒரு ரகம் என்றால் ,சாராயத்தை ஊறல் போட்டு காய்ச்சி விற்பது மற்றொரு ரகம். தற்போது எரி சாராய விற்பனையின் முக்கிய புள்ளி மகேஸ்வரியை போலீசார் கைது செய்து இருப்பதால் எரிசாராயம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் வேறு வகை கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க போலீசார் தொடர்ச்சியாக திணறி வருகிறார்கள். கள்ளச்சாராயத்திற்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கும் முக்கிய புள்ளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மலைப்பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் பல வீடுகளில் நாட்டு துப்பாக்கி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சாராய வியாபாரிகள், நாட்டு துப்பாக்கியை தங்களது வியாபாரத்தின் பாதுகாப்புக்காக பயன்படுத்த தொடங்கி இருப்பது அதிகரித்துள்ளது என்கிறார் ஜவ்வாதுமலையில் பணியாற்றும் ஒரு ஆர்வலர்.

மலைப் பகுதிகளில்தான் சாராயம் அதிக அளவு காய்ச்சி வருகிறார்கள். எளிதில் சென்று வர முடியாத இடத்தை தேர்வு செய்து, அங்கு சாராயத்துக்கு ஊறல் போடுகிறார்கள். மலைப்பகுதிகளில் இருந்து கீழே இறங்கி, அரசு மதுபான கடைக்கு செல்வதை விட, மிகவும் எளிதாக சொற்ப விலைக்கு கிடைக்கும் சாராயத்தை லிட்டர் கணக்கில் வாங்கி குடிக்கிறார்கள் என்கிறார் அவர்.

மக்கள் வைக்கும் கோரிக்கைகள்:

  • அடர்ந்த மலைப்பகுதிக்குள் ரோந்து செல்ல காவலர்களே அச்சப்படுகிறார்கள். எனவே மலைப்பகுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு மேற்கொண்டு நாட்டு துப்பாக்கி வைத்திருப்போரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும்.
  • சாராய விற்பனையை குறித்து புகார் தெரிவிக்க சிறப்பு "டோல் ஃப்ரீ" எண் வழங்க வேண்டும்.
  • சாராய வியாபாரம் குறித்து அச்சமின்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க சிறப்பு "டோல் ஃப்ரீ" நம்பர் வழங்க வேண்டும்.
  • மாதந்தோறும் சாராயம் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த "டோல் ஃப்ரீ" நம்பரை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இது பற்றிக் கேட்டபோது, சாராய வியாபாரிகளின் முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்கிறார் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா
படக்குறிப்பு, காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா

"மலைப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் காவல்துறை உதவி எண் '100'ஐ தொடர்புகொண்டு சாராய விற்பனை குறித்து புகார் தெரிவிக்க முன்வரவேண்டும்.

சாராய விற்பனையில் முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் சமவெளியில் சாராயம் விற்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அவற்றையும் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் உதவியுடன் பள்ளி கல்லூரி,மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். ஒருவேளை அவர்களின் நடத்தையில் எதிலும் மாற்றம் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து, அதற்கு உடனடியாக ஒரு தீர்வை கொடுக்கிறோம்".

"பொதுவாக கள்ளச்சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமை குறித்து நெடுங்காலமாக தொடர்ச்சியாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் ஒன்றிணைந்து மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கள்ளச்சாராயம் என்பது ஓரளவுக்கு சமவெளியில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி கட்டுக்குள் வந்த பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன," என்றும் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :