தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு - திமுக அரசுக்கு என்ன நெருக்கடி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்திருப்பது எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்திருப்பதுடன் கூட்டணிக் கட்சிகளிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மதுவிலக்கு சாத்தியமா, அரசே மதுக் கடைகளை நடத்தலாமா என்பன போன்ற நீண்ட கால விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு இடையே கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்ற முந்தைய அதிமுக அரசின் முடிவை, தற்போதைய திமுக அரசும் எடுத்திருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சிப்பது எளிது, ஆனால் அரசை நடத்தும்போதுதான் சில நடைமுறைச் சிக்கல்கள் தெரியவரும் என்று அதிமுகவினர் பதிலுக்கு விமர்சிக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டதையும் அதிமுகவின் சுட்டிக் காட்டுகின்றனர். அதனால் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் அரசை நடத்த இயலாது என்பதை புதிய அரசு புரிந்து கொண்டிருப்பதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
அரசு கூறுவது என்ன?
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் கூறப்படுகிறது. "போலி மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன; கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்" என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பட மூலாதாரம், Getty Images
அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சிக்கிறார் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செம்மலை. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுக ஆட்சிக் காலத்தில் மூன்று மாதங்கள் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே மதுக்கடைகள் திறக்கப்பட்டன." என்றார்.
"அதிமுக ஆட்சியின்போது மதுக்கடைகளைத் திறந்தால் தொற்று பாதிப்பு அதிகமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கூறினார். அந்தக் காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இப்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று இருக்கிறது. இந்த நேரத்தில் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார் செம்மலை.
இதற்கு பிபிசி தமிழிடம் பதிலளித்த திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "அதிமுகவுக்குப் போட்டியாக எதையும் செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் நோக்கமல்ல" என்றார். "அதிமுக அரசு வருவாய் இலக்கை வைத்து டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. நாங்கள் அப்படிச் செய்யவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
"தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் வரை கள்ளச்சாராயம் பிடிபட்டிருக்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பு என்பதைத் தாண்டி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கள்ளச்சாராய உற்பத்தி பெருகியிருக்கிறது. மக்கள் குடிப்பதை நிறுத்தவில்லை என்பது தெரிகிறது. அதனால் மக்களை ஆபத்தில் தள்ளிவிடக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

பட மூலாதாரம், ANI
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா, டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் விவகாரத்தில் திமுக இரட்டை வேடும் போடுவதாக கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.
"இந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கப்படுவதைத்தான் பாஜக எதிர்க்கிறது. திமுகவின் பொய்யான முகத்தை மக்களுக்குக் காட்டுவதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம். மற்றபடி மதுவுக்கு பாரதிய ஜனதா எதிரியல்ல. மதுக்கடைகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கலாம்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை.
"கள்ளச்சாராயம் பெருகிறது என்றால் அதைத் தடுப்பதற்குத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, கொரோனா அதிகமாகப் பரவியிருக்கும் காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது தீர்வல்ல" என்றார் அண்ணாமலை.
திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு
இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அதிமுகவும் டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுவது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன. இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவின் முக்கியத் தோழமைக் கட்சியான காங்கிரஸில் இருந்து ஆதரவுக் குரல் வந்திருக்கிறது

பட மூலாதாரம், K Balakrishnan/ Facebook
"எங்களுக்கு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் உடன்பாடு இல்லைதான். ஆனால் கள்ளச் சாராயம் பெருகாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? இல்லையென்றால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை" என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
ஆனால் திமுக அரசின் முடிவை பிற தோழமைக் கட்சிகள் ஆதரிக்கவில்லை.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை இன்னும் திறக்கப்படாமல் இருக்கும்போது, டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக கட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அரசுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.
தங்களது கோரிக்கைக்கு அரசு செவிமெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பாலகிருஷ்ணன், தேநீர்க் கடைகள் மூடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் அதைப் பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைக் குறிப்பிட்டார்.
இதேபோன்ற கருத்தை பிபிசி தமிழிடம் வலியுறுத்தினார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். "டாஸ்மாக் கடைகளும், மதுபான ஆலைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். நிதிநெருக்கடியில் தமிழக அரசு இருப்பதாகக் கருதுகிறேன். அதற்காக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை ஏற்க முடியாது" என்றார்.

'மதுக்கடைகளை நிரந்தரமாக மூட முடியுமா?
தமிழ்நாடு வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கமே டாஸ்மாக். 1983-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். மாநிலத்தில் மதுவை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் உரிமை இந்த நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது.
சில்லறை மது விற்பனையைத் தொடங்கிய பிறகு டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் என்பது அரசின் வருவாய் மூலங்களில் முக்கியமானதாகிவிட்டது.
மாநிலம் முழுவதும் 5,200-க்கும் அதிமாக டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஓராண்டுக்கு சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது.
இந்த வருவாயை வேறு எதன் மூலமாகவும் ஈடுகட்ட முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். டாஸ்மாக் வருவாய் மாநில அரசுக்கு மிகவும் முக்கியம் என்று கூறும் அவர், இந்த அளவுக்கு வருவாய் கிடைக்கும் மாற்றுவழி எதுவும் இல்லை என்கிறார்.
"அரசு டாஸ்மாக் வருவாயை பெருமளவில் நம்பியிருக்கிறது. மாநிலங்களுக்கு பெருமளவு வருவாய் கிடைக்கும் நான்கு வழிகளிலும் முக்கியமானது டாஸ்மாக். ஜிஎஸ்டி, டாஸ்மாக், பத்திரப் பதிவு, பெட்ரோலியப் பொருள்களில் இருந்து கிடைக்கும் வரி ஆகியவை மூலமாகத்தான் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. " என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.

பட மூலாதாரம், Anand Srinivasan Twitter
கொரோனா தொற்று காரணமாக மற்று வருவாய் மூலங்கள் அனைத்தும் நெருக்கடியில் இருப்பதால் டாஸ்மாக் வருவாயை அரசு நம்ப வேண்டியதாகிறது என்கிறார் அவர்.
"ஜிஎஸ்டி வருவாய் குறைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகை வரவில்லை. ரியல் எஸ்டேட் துறை முடங்கிப் போயிருக்கிறது. பத்திரப் பதிவு அதிக அளவில் நடக்கவில்லை. அதனால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயும் கிடைக்கவில்லை. நாடு முழுவதுமே பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்திருக்கிறது. இதனால் அதில் வழக்கமாகக் கிடைக்கும் வருவாயும் குறைந்துபோனது. இப்போது அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கான ஒரே வழியாக டாஸ்மாக் இருக்கிறது"
இதுவரை எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு வெற்றிகரமாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறும் ஆனந்த் சீனிவாசன், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட குஜராத்தில் கள்ளச்சாராயம் பெருகியிருப்பதாகக் கூறுகிறார்.
கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இதைக் கடன் மூலமாகவே ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. மாநிலத்தின் மொத்தக் கடன் மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். நிதி நிலைமை மோசமாக இருப்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. இப்படியொரு சூழலில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அத்தியாவசிமாகிறது.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இதை ஒருவகையாக ஒப்புக் கொள்கிறார். "தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் விற்பவர்களும் வேறு மாநிலத்தவரும் பணம் ஈட்டுகிறார்கள். அந்த வருவாயை இழக்க மாநில அரசு விரும்பவில்லை" என்கிறார் அவர்.
இது அதிமுக அரசின் நிலைப்பாடுதான்.
பிற செய்திகள்:
- ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












