ஆர்க்டிக் ஸ்குவா: துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி?

ஆர்டிக் ஸ்குவா பறவை

பட மூலாதாரம், RAVEENDRAN NATARAJAN

படக்குறிப்பு, ஆர்டிக் ஸ்குவா பறவை, தமிழ்நாடு அமைந்திருக்கும் கிழக்குக் கடல் பகுதியில் இதுவரை காணப்பட்டதில்லை
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

பூமியின் துருவப் பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை முதல்முறையாக தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தனுஷ்கோடியில் காணப்பட்டுள்ளது.

கடல் சார் உயிரினங்கள், பறவையினங்கள் உட்பட சிறந்த பல்லுயிரிய வளம் மிக்க கடல் பகுதியாக மன்னார் வளைகுடா உள்ளது. இந்தப் பகுதியில் ஜூன் 15-ஆம் தேதியன்று துருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தூத்துக்குடி மற்றும் பழவேற்காட்டில் காணப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தனுஷ்கோடியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பறவை, இந்த ஆண்டு தான் முதல்முறையாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மன்னார் வளைகுடா பகுதியில் வாழக்கூடிய மற்றும் அங்கு வலசை வரக்கூடிய பறவைகளைப் பற்றிய ஆய்வுகளை 2015-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, பறவைகள் கணக்கெடுப்புப் பணியைச் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் இரவீந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜூ ஆகியோர், அரிய வகை பறவையான "ஆர்க்டிக் ஸ்குவா" என்ற கடற்காகம் இனத்தைச் சேர்ந்த பறவையைக் கண்டனர்.

துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி?

பட மூலாதாரம், SAKTH MANIKKAM

படக்குறிப்பு, தூத்துக்குடியில் காணப்பட்ட ஆர்டிக் ஸ்குவா

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு காணப்பட்டதே இல்லை

இந்தப் பறவை வகை, பூமியின் வடதுருவ முனையில் அமைந்துள்ள ஆர்க்டிக்கிலும் தென்துருவத்திலுள்ள அன்டார்டிக்காவிலும் இனப்பெருக்கம் செய்பவை. இவை தமிழ்நாடு அமைந்திருக்கும் கிழக்குக் கடல் பகுதியில் இதுவரை காணப்பட்டதில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தூத்துக்குடியிலும் மே மாதத்தில் சென்னைக்கு அருகே அமைந்திருக்கும் பழவேற்காடு பகுதியிலும் காணப்பட்டன.

அதைத் தொடர்ந்து, ஜூன் 15-ஆம் தேதியன்று மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தனுஷ்கோடியில் காணப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் ஸ்குவா பறவை தமிழ்நாட்டில் இதற்கு முன்பு காணப்பட்டதே இல்லையா என்பதை உறுதி செய்ய, அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜூவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மேற்கு கடல் பகுதியில், பெரும்பாலும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகள், குஜராத் முதல் கேரளா வரையிலான மேற்கு கடல் பகுதிகளில் தான் இவை இதுவரை காணப்பட்டுள்ளன. கிழக்குக் கடல் பகுதியில் இதைக் காண்பது இதுதான் முதல்முறை.

துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி?

பட மூலாதாரம், SAKTHI MANIKKAM

நாங்கள் மன்னார் வளைகுடாவில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஆர்க்டிக் ஸ்குவா வகையைச் சேர்ந்த ஒரு பறவையைக் கண்டோம். இதுவரை இந்த இரண்டு பறவைகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் கூட இருக்கலாம்.

இவை பெரும்பாலும் கடலிலேயே வாழக்கூடிய பறவை தான். ஒன்றிரண்டு ஆண்டுகளில், பெரும்பாலும் இனப்பெருக்கத்திற்காக நிலப்பரப்பை நோக்கி அவ்வப்போது வரும். அதுகூட துருவப் பகுதிகளில் தான் நடக்கும்.

அதோடு, அவை ஜூலை முதல் செப்டம்பர் வரை தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இது அவற்றுக்கான இனப்பெருக்க காலமோ அவற்றுக்கான இனப்பெருக்கப் பகுதியோ கிடையாது. துருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரே பறவை இது தான்," என்று கூறினார்.

ஆர்க்டிக் ஸ்குவா

பட மூலாதாரம், RAVEENDRAN NATARAJAN

படக்குறிப்பு, மன்னார் வளைகுடாவில் ஆர்க்டிக் ஸ்குவா வகையைச் சேர்ந்த ஒரு பறவை கடந்த 15-ஆம் தேதி காணப்பட்டது

புயல் காற்றில் திசை மாறியிருக்கலாம்

ஆர்க்டிக் ஸ்குவா பறவை கிழக்கு கடல் பிராந்தியத்தில் இதற்கு முன்பு காணப்பட்ட பதிவுகளே இல்லையெனச் சொல்லப்படுகிறது. அது குறித்தும் இப்போது அவை இங்கு வந்துள்ளதற்கான காரணம் குறித்தும் கேட்டபோது, "கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகியவற்றின் கடல் பரப்பில் இவை காணப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கு கடல் பரப்பு அவற்றின் பயணப் பாதையிலேயே கிடையாது. அதனால் தான் அவை குறித்த பதிவுகள் எதுவும் இந்தப் பகுதியிலேயே இல்லை.

இது இங்கு வந்துள்ளதற்கான காரணத்தை ஆழமான ஆய்வுகளைச் செய்யாமல் சொல்லமுடியாது என்றாலும், பொதுவாக பறவைகள் வலசை வருவதிலுள்ள காரணங்களில் எது வேண்டுமானாலும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

உணவுத் தேவை, பறவைகளுக்கு இருக்கக்கூடிய திசை அறிதல் திறன், இனப்பெருக்க காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் என்றழைக்கப்படும் செயலூக்கிகளில் நிகழும் மாற்றங்கள் ஆகியவை காரணங்கள் பொதுவாக பறவைகளின் இனப்பெருக்கக் காரணங்களில் பங்கு வகிக்கின்றன.

ஆர்டிக் ஸ்குவா

பட மூலாதாரம், SAKTHI MANIKKAM

படக்குறிப்பு, துருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஆர்டிக் ஸ்குவா, தமிழ்நாட்டில், தூத்துக்குடி, பழவேற்காடு மற்றும் தனுஷ்கோடியில் காணப்பட்டுள்ளது

அதோடு, மழைப் பொழிவின் வடிவங்கள், புயல் போன்றவற்றை பறவைகளால் நமக்கு முன்பே கணிக்க முடியும். அந்த நேரத்தை ஒட்டியும் பறவைகள் வலசை செல்லும்.

இவைபோக, சில நேரங்களில் வலசை செல்லும் சில பறவைகள், மிக அரிதாக அவற்றின் பாதையிலிருந்து திசை மாறி வரக்கூடும். பழவேற்காடு, தனுஷ்கோடி பகுதிகளில் காணப்பட்ட ஆர்க்டிக் ஸ்குவா, அப்படி வந்தவையாகக் கூட இருக்கலாம்.

இது தென்மேற்குப் பருவ காலம் என்பதால், மேற்கு கடல் பகுதி வழியாக அவை பயணிக்கும்போது, கடல் நீரோட்ட திசை, புயல் போன்ற காரணங்களால் அவை திசைமாறி இந்தப் பக்கமாக வந்திருக்கக் கூடும்," என்று கூறினார்.

கடற்கொள்ளையன்

பெரும்பாலும் ஆழ் கடல் பரப்பிலேயே வாழக்கூடிய ஆர்க்டிக் ஸ்குவா பறவைகள், இனப்பெருக்க காலங்களில் மட்டுமே நிலப்பரப்புகளை நாடி வருகின்றன.

ஆர்டிக் ஸ்குவா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நார்வேக்கும் வடதுருவத்துக்கும் இடையே இருக்கும் கடல் பகுதியில் காணப்படும் ஆர்க்டிக் ஸ்குவா

"சென்னை அருகே காணப்பட்ட பறவை, இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்துள்ளது. தூத்துக்குடியில் காணப்பட்டது ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்துள்ளது.

கடற்கரையிலிருந்து 40 கி.மீ உள்ளே, ஆழ்கடல் பகுதியில் தான் இவை அதிகமாக வாழ்கின்றன. துருவப் பகுதியில் இனப்பெருக்க காலத்தில் பிறந்து பறக்கத் தொடங்கும் பறவை முழுவதுமாகப் பருவமெய்த இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இவை, உணவுக்காக மற்ற கடற்காகங்கள், ஆலா போன்ற கடற்பறவைகளின் உணவை வழிமறித்துப் பிடுங்கிக் கொள்வதால், ஐரோப்பாவில் இவை கடற்கொள்ளையன் என்றும் அழைக்கப்படுகின்றன. குஞ்சுகளுக்கு இரையூட்டும் காலகட்டத்தில் தான் இவை அதிகளவில் தாமாக வேட்டையாடுகின்றன. மற்றபடி, பெரும்பாலும் இவை மற்ற பறவைகள் பிடிக்கும் இரையை அவற்றிடம் சண்டையிட்டுப் பிடுங்கிக் கொள்வதால் தான் அந்தப் பெயர் அவற்றுக்கு வழங்கப்பட்டது.

அந்த இடைப்பட்ட காலத்தில், அவை நிலப்பகுதிக்கு வருவதே இல்லை. கடல்நீரில் நீந்திக்கொண்டு, மணல் திட்டுகளில் ஓய்வெடுத்தபடி, ஆழ்கடலிலேயே உணவு தேடிக்கொண்டு வாழ்கின்றன. இவற்றின் தனிச்சிறப்பே அதுதான். இனப்பெருக்க காலத்தில், குஞ்சுகளுக்கு இரையூட்ட சிறிய வகை ஊர்வன உயிரினங்கள், பாலூட்டிகள், பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளை இவை வேட்டையாடுகின்றன," என்கிறார் இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் இரவீந்திரன்.

துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி?

பட மூலாதாரம், SAKTHI MANIKKAM

மேற்கொண்டு பேசியவர், "முதல்முறையாக இத்தகைய அரிய வகை பறவை, தமிழ்நாட்டில், தூத்துக்குடி, பழவேற்காடு மற்றும் தனுஷ்கோடியில் காணப்பட்டுள்ளது கூடுதல் சிறப்புமிக்க விஷயம்.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் வலசை வரும் பறவையினங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், இந்தப் பகுதியில் ஏற்படும் மனித தேவைகளுக்கான வளர்ச்சிப் பணிகளாலும் சுற்றுலாப் பயணிகளின் முறைசாரா நடவடிக்கைகளாலும் பவளப்பாறைகள் சூழ்ந்த கடல் பகுதி பெரும் அழிவை எதிர்கொள்கிறது," என்று கூறினார்.

ஆர்டிக் ஸ்குவா

பட மூலாதாரம், RAVEENDRAN NATARAJAN

மேலும், சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களால் கடற்கரையின் ஈரப்பதம் நிறைந்த மணல் பகுதிகள் அழிந்து, கரையின் மேற்பரப்பு இறுகி, கல்லும் சரளை மண்ணுமாக மாறிப் போவதாகக் கூறுகிறார் பைஜூ.

இந்தக் காரணத்தால், "கடலில் வாழும் சிறிய மெல்லுடலிகள், நண்டுகள் மற்றும் பூச்சி வகைகள் அழிந்துபோகின்றன. இவற்றின் அழிவால் வலசை வரும் பறவைகளின் உணவுக்கான ஆதாரம் அழிந்து போகிறது," என்று கூறியவர், "சுற்றுலா பயணிகள் இங்கு வீசிச் செல்லும் உணவுக் கழிவுகளும் நெகிழிக் குப்பைகளும் இந்தப் பகுதியின் சூழலை நாசம் செய்கின்றன. அரிய வகை பங்குனி ஆமைகள் முட்டையிடும் கடற்கரையோரம் முழுவதும் தெருநாய்களின் வேட்டை நடைபெறுகிறது," என்றார்.

"இந்தக் காரணங்களால் அடுத்த 10 ஆண்டுகளில், தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பறவைகளைப் பார்க்க முடியுமா என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது," என்கிறார் பைஜூ.

காணொளிக் குறிப்பு, தண்ணீருக்காக திருமணத்தை மறுக்கும் பெண்கள் - என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: