ஜப்பான், இத்தாலி போல இந்தியாவில் நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் என்ன சிக்கல்?

வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்பைக் கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்
    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுப் பேரிடர் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. ஜூலை 30-ஆம் தேதியன்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால், மேப்பாடி, சூரல்மலை, அட்டமலை, நிலம்பூர் எனப் பல்வேறு இடங்களில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர்.

அதற்கு முந்தைய 48 மணிநேரங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகள் பெரியளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜூலை 23-ஆம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கேரள அரசு அதைப் பொருட்படுத்தவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 31-ஆம் தேதி தெரிவித்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்தார்.

இது நிலச்சரிவு குறித்த முன்னறிவிப்பு அமைப்புகள் (Early Warning System - EWS) பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி, இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய நிலவியல் ஆய்வு மையம் (Geological Survey of India - GSI), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கனமழை குறித்தும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பற்றியும் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அந்த முன்னறிவிப்புகள் துல்லியமாக இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மழைப்பொழிவின் வரலாற்றுப் பதிவுகள், நிகழ்நேர செயற்கைக்கோள் படங்கள், மலைச்சரிவுகளின் மண் பரப்பு ஆகியவற்றின் தரவுகளை வைத்து நிலச்சரிவுகளைக் கணிக்கும் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்பைக் கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி துவங்கி வைத்தார்.

இந்த முன்னறிவிப்பு மையங்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுக்க நிலச்சரிவு குறித்த முன்னறிவிப்புகளை வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிலும் நிலச்சரிவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே கணிப்பதில் சில சவால்கள் இருக்கின்றன.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் இந்தியா திணறுவது ஏன்? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பிராந்திய நிலச்சரிவு முன்னறிவிப்புகளை இந்தப் பருவமழை தொடங்கியது முதலே வழங்கி வருவதாக,” இந்திய நிலவியல் ஆய்வு மையம் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும், மேற்கு வங்கத்தின் கலிம்போங், டார்ஜீலிங் மாவட்டங்களிலும் சோதனை முறையில் இந்த முன்னறிவிப்பு மையங்களை நிறுவிச் செயல்படுத்திப் பார்த்த பிறகு, ஜூலை 19-ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக அவை செயல்பாட்டிற்கு வந்தன.

அதோடு “கேரளாவின் வயநாட்டிலும் இந்த முன்னறிவிப்பு மையம் வைத்திரி, மானந்தவாடி ஆகிய இரு பகுதிகளில் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு ஒருமுறை எனச் சோதனை முறையில் பிராந்திய நிலச்சரிவு முன்னறிவிப்புகளை இந்தப் பருவமழை தொடங்கியது முதலே வழங்கி வருவதாக,” இந்திய நிலவியல் ஆய்வு மையம் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

கடந்த கால மழைப்பொழிவு, நிலச்சரிவு தரவுகள், மழை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

ஜூலை 26 முதல் 30 வரையிலான நாட்களில், “சோதனை முன்னறிவிப்பு செயலிழந்த 28-ஆம் தேதியைத் தவிர அனைத்து நாட்களிலும்” இந்திய நிலவியல் ஆய்வு மையம் நிலச்சரிவு அபாயம் குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டதாகக் கூறியுள்ளது.

ஆனால், “ஜூலை 26-ஆம் தேதி வைத்திரி தாலுகாவிலும், 30-ஆம் தேதி வைத்திரி மற்றும் மானந்தவாடியிலும் மிதமான முன்னறிவிப்பைத் தவிர பிற நாட்களில் நிலச்சரிவு அபாயம் குறைவாகவே இருப்பதாக” இந்திய நிலவியல் ஆய்வு மையத்தின் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 'இந்தத் தரவுகள் சோதனை நிலையில் மட்டுமே இருப்பதாகவும், இந்தக் கட்டமைப்பு பொதுப் பயன்பாட்டிற்கானது இல்லை' என்றும் இந்திய நிலவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் இந்தியா திணறுவது ஏன்? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை 30 மற்றும் அதற்கு முன் சில நாட்கள் பெய்த கனமழை இந்த ஆற்றில் அதிக நீர்வரத்தை உண்டாக்கியது.

முற்றிலும் அழிந்த கிராமம்

வயநாட்டைப் பொறுத்தவரை, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் அதிக சேதங்களைச் சந்தித்துள்ளன. அங்குள்ள மலைமுகடுகளில் இருந்து பிறக்கும் சிற்றாறு சூரல்மலையை ஒட்டிக் கீழே சென்று இருவஞ்சி ஆற்றை அடைகிறது. இந்த ஆறு, இன்னும் சில கிளை நதிகளுடன் இணைந்து சாலியாறாக மாறி அந்த மாவட்டத்தில் ஓடுகிறது.

ஜூலை 30-ஆம் தேதி மற்றும் அதற்கு முன் சில நாட்கள் பெய்த கனமழை இந்த ஆற்றில் அதிக நீர்வரத்தை உண்டாக்கியது. ஜூலை 30-ஆம் தேதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவை முதலில் எதிர்கொண்ட முண்டகை கிராமம், கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டது.

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆற்றில் ஏற்பட்ட அதிக நீர்வரத்தால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது நிலச்சரிவுக்கான தொடக்கமாக இருந்துள்ளது.

அந்த ஆற்றின் அகலம் தொடர் வெள்ளங்களால் கடந்த 2011-ஆம் ஆண்டு இருந்ததைவிட பெரிதாகி இருப்பதாக ஐ.ஐ.டி சென்னையில் வளம்குன்றா நகரங்கள் மற்றும் நிலவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான முனைவர் கிருத்திகா முருகேசன் பகிர்ந்துள்ள செயற்கைக்கோள் படங்களின் மூலம் அறிய முடிகிறது.

இப்படிப்பட்ட சூழல்களில், “நிலச்சரிவின் தொடக்கப்புள்ளி ஓரிடமாக இருக்கும். ஆனால், அது சரிந்துகொண்டே வந்து வேறொரு பகுதியில் அதன் வீரியம் பெரிதாகி, சேதங்களை விளைவிக்கிறது. இத்தகைய நிலைமைகளில், குறிப்பாக இந்தப் பகுதிகள்தான் நிலச்சரிவால் பாதிக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்,” என்கிறார் கேரளா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியலாளர் சஜின் குமார்.

இவற்றோடு மண்ணின் தன்மை, அதன் அடர்த்தி போன்ற தரவுகளோ, மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதம் குறித்த நிகழ்நேர தரவுகளைச் சேகரிக்கும் தரவுத்தளமோ நம்மிடம் முழுமையாக இல்லாததும் ஒரு சவாலாக இருப்பதாகக் கூறுகிறார் சஜின்.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் இந்தியா திணறுவது ஏன்? சவால்கள் என்ன?
படக்குறிப்பு, "இந்தியாவில் நிலச்சரிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பங்கள் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன"

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் உள்ள சவால்கள் என்ன?

இந்தியாவில் ‘நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை’ இந்திய நிலவியல் ஆய்வு மையம் அடையாளப்படுத்தி வரைபடத் தொகுப்பாகப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும் குறிப்பாக, எந்த நேரத்தில், எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதைக் கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் அந்த ஆய்வுகளும் தொழில்நுட்பங்களும் ‘குழந்தைப் பருவத்திலேயே’ இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கிருத்திகா.

இந்தத் தொழில்நுட்பங்கள் ஆய்வு அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை அவற்றை முழுமையாகப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதில் சில சவால்கள் இருப்பதாக வல்லுநர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூறுகின்றனர்.

சில தொழில்நுட்பங்கள் நிலச்சரிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் செயல்பாட்டில் இருந்தாலும் அவை இந்தியாவில் இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கிறார் முனைவர் கிருத்திகா முருகேசன்.

நிலச்சரிவு ஏற்படுவதில் முக்கிய உடனடிக் காரணிகளாக இருப்பவை மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதம் ஆகிய இரண்டும்தான். ஆனால், “இவற்றைக் கணித்துத் துல்லியமாக இந்த இடத்தில்தான் நிலச்சரிவு ஏற்படப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது,” என்கிறார் முனைவர் கிருத்திகா.

அதாவது, “முன்னறிவிப்பு அமைப்புகளால் மழைப்பொழிவு அளவை வைத்து வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆபத்து இருப்பதாக முன்னறிவிக்க முடியும். ஆனால், துல்லியமாக எங்கே, எந்த நேரத்தில் எனச் சொல்லிவிட முடியாது. இத்தகைய நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கைகள் கூறுவது சில வேளைகளில் நடக்காமலும் போகலாம். அவை துல்லியமாக இருக்காது,” என்கிறார் அவர்.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் இந்தியா திணறுவது ஏன்? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “இந்தியாவின் நிலப்பரப்பும் ஒரு சவாலாக இருக்கிறது”

சவாலாக இருக்கும் இந்திய நிலப்பரப்பு

இதில் “இந்தியாவின் நிலப்பரப்பும் ஒரு சவாலாக” இருப்பதாகக் கூறுகிறார் நிலச்சரிவுகளைக் கணிக்கும் சென்சார்களை வடிவமைத்துள்ள இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஐ.ஐ.டி மண்டி-யில் இணைப் பேராசிரியராக இருக்கும் முனைவர்.கலா வெங்கட உதய்.

“இந்தியாவில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளின் அளவு, இத்தாலி நாட்டின் மொத்த நிலப்பரப்புக்கு நிகரானது. ஆகவே, நிலச்சரிவை முன்கூட்டியே கணிக்கும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இத்தாலி, ஹாங்காங், ஜப்பான் போன்ற அளவில் சிறிய நாடுகளுக்கு அதை அமல்படுத்துவதில் பெரிய பிரச்னைகள் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் கதை வேறு,” என்கிறார் முனைவர் உதய்.

நிலச்சரிவு மட்டுமின்றி எந்த இயற்கைப் பேரிடராக இருந்தாலும், அதை முன்கூட்டியே கணிக்கும்போது நம்மால் அது நடக்கப்போகும் இடம் மற்றும் நேரத்தைக் கணிக்க முடிய வேண்டும்.

ஆனால் நிலச்சரிவைப் பொறுத்தவரை, நம்மிடம் இப்போதிருக்கும் தொழில்நுட்பங்களை வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மட்டுமே நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அது ஏற்படப்போகும் நேரத்தையோ, இடத்தையோ துல்லியமாகக் கணிக்க முடியாது.

இந்தியாவில் இப்போதுள்ள தரவுத்தளம் மற்றும் தொழில்நுட்பங்களை வைத்து நிலச்சரிவுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பது மிகவும் சவாலானது மட்டுமின்றி உடனடியாகச் சாத்தியபடக்கூடிய விஷயமில்லை எனவும் கூறுகிறார் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி மண்டியில் பேரிடர்க்கால தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் இணைப் பேராசிரியர் டி.பி.ஷுக்லா.

இதே கூற்றை ஆமோதிக்கிறார் முனைவர் உதய். அவரது கூற்றுப்படி, நிலச்சரிவு முன்னறிவிப்பு மையங்களை இந்தியா மிகவும் தாமதமாகத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், “அதை நாடு முழுக்க உடனடியாக அமல்படுத்தி, பேரிடர்க்கால சேதங்களைக் குறைப்பது சவாலானது. ஆகவே, இதை தேவை அடிப்படையில் முன்னுரிமை அளித்துப் பணிகளைத் தொடங்கலாம். சான்றாக, அடுத்த ஆண்டில் எந்தெந்த காலகட்டத்தில் எங்கெல்லாம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கணித்து, முதலில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்,” என்கிறார் அவர்.

வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, பருவமழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது ஒரு வருடாந்திர நிகழ்வாக மாறி வருகிறது.

நிலச்சரிவை துல்லியமாகக் கணிப்பது சாத்தியமா?

நிலச்சரிவைக் கண்காணிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒன்று சென்சார்கள் பொருத்தி மண் பரப்பின் நகர்வுகளைக் கணிப்பது, மற்றொன்று பிராந்திய ரீதியிலான மழைப்பொழிவு, அந்த நிலப்பரப்பின் தாங்குதிறன் – அதாவது எவ்வளவு நீரை அதனால் கிரகிக்க முடியும் போன்ற தரவுகளின் தொகுப்பு.

இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை, “மாநில அரசு நாங்கள் வழங்கிய சென்சார்களை 60 இடங்களில் பொருத்தியுள்ளது. அவற்றில் தற்போது 45 சென்சார்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சென்சார்கள் இருந்தாலும்கூட, பிராந்திய தரவுகள் முழுமையாக இல்லாத காரணத்தால், நிலச்சரிவு ஏற்படுவதைத் துல்லியமாகக் கணிப்பது இன்னமும் சவாலாகவே உள்ளது,” என்கிறார் முனைவர் உதய்.

இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்கவே, இப்போது மிகத் தாமதமாகத் தொடங்குகிறோம் எனக் கூறும் அவர், முதலில் பிராந்திய தரவுத்தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

“இத்தகைய முன்னறிவிப்பு மையங்கள் சேகரிக்கும் தரவுகள், நிலச்சரிவை முன்கூட்டியே கணிப்பதை எதிர்காலத்தில் எளிமையாக்கும். அவற்றோடு சென்சார்களையும் பயன்படுத்தும் வகையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப அணுகுமுறையைக் கையாள்வது துல்லியத்தன்மையை அதிகரிக்கும்,” என்கிறார் அவர்.

உதாரணத்திற்கு, வயநாடு பேரிடரை எடுத்துக்கொண்டால், அத்தகைய அதிக சேதங்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்புகளோடு சேர்த்து “பேரிடர் அபாயத்தை முன்கூட்டியே கணிக்க நிலத்தில் சென்சார்களை பொருத்தலாம்,” என்கிறார் ஐ.ஐ.டி மண்டியின் இணைப் பேராசிரியர் முனைவர் கலா வெங்கட உதய்.

இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்கள், இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில், பருவமழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது ஒரு வருடாந்திர நிகழ்வாக மாறி வருகிறது.

கேரளா போன்ற ஒருபுறம் கடல் மறுபுறம் மேற்கு மலைத்தொடரைக் கொண்ட தனித்துவமான நிலவியல் அமைப்பில், நிலச்சரிவு என்பது தொடர் பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில், நிலச்சரிவு முன்னறிவிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியது சேதங்களைக் குறைப்பதற்கான உடனடித் தேவை என்பதை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)