சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு வருவதால் சிங்கங்கள் பாதுகாப்பிற்குப் பிரச்னையா?

இந்தியா வரவுள்ள சிவிங்கிப் புலிகளில் ஒன்று

பட மூலாதாரம், Adrian Tordiffe

படக்குறிப்பு, இந்தியா வரவுள்ள சிவிங்கிப் புலிகளில் ஒன்று
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அடுத்த வாரம், சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிலுள்ள அவற்றின் புதிய இல்லத்திற்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு முன்பே அழிந்துவிட்ட, உலகின் அதிவேக பாலூட்டி உயிரினமான சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு வரத் தயாராக உள்ளன.

ஒரு பெரிய வேட்டையாடி உயிரினம், ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் காடுகளில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. "இது உற்சாகமானது, சவாலானது. இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் முயற்சி," என்று இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்த முயற்சியில் ஈடுபட்ட வல்லுநர்களில் ஒருவரான யத்வேந்திரதேவ் ஜாலா கூறுகிறார்.

சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த சில முக்கியமான கேள்விகளும் அவற்றின் பதில்களும் இனி.

சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு எங்கிருந்து வருகின்றன?

உலகிலுள்ள 7,000 சிவிங்கிப் புலிகளில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகமானவற்றின் தாயகமான தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவிலிருந்து குறைந்தது 16 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு வருகின்றன.

உலகின் பாதிக்கும் மேற்பட்ட சிவிங்கிப் புலிகள் இந்த இரண்டு நாடுகளிலும் போட்ஸ்வானாவிலும் காணப்படுகின்றன.

இந்தியாவுக்குச் வரும் சிவிங்கிப் புலிகள், பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமானதாக இருக்கும் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் வாழ்வனவற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிலுள்ள இத்தகைய 50 பகுதிகளில் சுமார் 500 வயது வந்த சிவிங்கிப் புலிகள் வாழ்கின்றன.

இந்த சிவிங்கிப் புலிகளில் சிலவற்றைப் பிடிக்க கால்நடை மருத்துவர்கள் ஹெலிகாப்டர்களில் இருந்து மயக்க ஊசிகளைச் சுட்டனர்.

சிவிங்கிப் புலிகள் பிடிபட்ட பிறகு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டன மற்றும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்டன. மேலும், சொட்டு மருந்துகளுடன் மீண்டும் நீரேற்றம் செய்யப்பட்டதோடு, அவற்றின் டி.என்.ஏ-வுக்காக ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. பிறகு, அவற்றைப் பெட்டியில் வைத்து, தனிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு அனுப்பப்பட்டன.

ஆறுக்கும் மேற்பட்ட பெண் சிவிங்கிப் புலிகள் உட்பட, இந்தியாவுக்கு அனுப்பப்படும் சிவிங்கிப் புலிகள் முதன்மையான இனப்பெருக்க வயதில் இருக்கின்றன. :அவை ஏற்கெனவே தங்கள் தாயை விட்டுப் பிரிந்து சுயமாகப் பிழைக்கத் தொடங்கிவிட்ட, தம்மைத் தற்காத்துக் கொள்ளும் திறனுடையவை," என்று தென்னாப்பிரிக்காவில் சிவிங்கிப் புலிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மியூசஸ் வின்சென்ட் வான் டெர் மெர்வே கூறுகிறார்.

இந்தியாவுக்கு வரவுள்ள சிவிங்கிப் புலிகள் இப்போது எங்கே இருக்கின்றன?

தென்னாப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் இப்போது ஸூலுலாந்தில் இருக்கும் ரூயிபெர்க் மற்றும் ஃபிண்டா கேம் காப்பிடம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் உள்ளன. மேலும் நான்கு சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் சிவிங்கிப் புலியைத் துரத்தும் சிறுத்தை

பட மூலாதாரம், &BEYOND

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் சிவிங்கிப் புலியைத் துரத்தும் சிறுத்தை

அவற்றுக்குப் பல்வேறு நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ரேபிஸ், ரத்த ஒட்டுண்ணிகள், ஹெர்பெஸ், உட்படக் குறைந்தபட்சம் 6 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலில் சிவிங்கிப் புலிகளைக் கண்காணித்து, அவற்றுக்கு கவலைக்குரிய நோய்கள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்வதற்காகக் கண்காணிக்கின்றனர் என்கிறார் வான் டெர் மெர்வே.

சிவிங்கிப் புலிகளின் இந்த நீண்ட பயணம் எவ்வளவு சவாலானது?

காட்டு சிவிங்கிப் புலிகள், இந்தப் பயணத்தின்போது மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பதாலும், பெட்டிகளில் அடைத்து வைக்கப்படுவதாலும் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், அவற்றைக் கொண்டு செல்வது கடினமாக இருக்குமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்குச் செல்லும் சிவிங்கிப் புலிகள், ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து டெல்லிக்கு சரக்கு விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். பிறகு, சாலை அல்லது ஹெலிகாப்டர்கள் மூலம் மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவுக்குச் செல்ல வேண்டும்.

பயணத்தின் தொடக்கத்தில், அவற்றுக்கு மயக்க மருந்து கொடுத்து, கால்நடை மருத்துவர் உட்பட காட்டுயிர் வல்லுநர்களுடன் சேர்ந்து விமானத்தில் உலோகப் பெட்டிகளில் வைக்கப்படும்.

பெட்டிக்குள் சென்றது, சிவிங்கிப் புலிகளுக்கு மயக்க மருந்திலிருந்து விழிப்பதற்காக ஒரு மாற்று மருந்து வழங்கப்படும். ஆனால், பயணத்தின்போது விழித்திருக்கவும் அதேவேளையில் அமைதியாக இருக்கவும் லேசான அளவில் மயக்க மருந்து வழங்கப்படும். "இது இந்த உயிரினங்களைக் கொண்டு செல்வதை மிகவும் எளிதாக்கியுள்ளது," என்று பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் காட்டுயிர் மருத்துவ பேராசிரியர் ஏட்ரியன் டார்டிஃப் கூறுகிறார்.

சிவிங்கிப் புலிகள், கடந்த காலங்களில் நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிலிருந்து மலாவிக்கு 55 மணி நேர சாலைப் பயணத்தில் வாகனத்தின் பின்புறத்தில் பெண் சிவிங்கிப் புலியை ஏற்றிச் சென்றதாக வான் டெர் மெர்வே கூறுகிறார். மேலும், "அவை எளிதில் தகவமைத்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்," என்கிறார்.

சிவிங்கிப் புலிகள் இங்கு வந்த பிறகு என்ன செய்யும்?

முதல்கட்டமாக, குனோ தேசியப் பூங்காவில் வேலி அமைக்கப்பட்ட முகாமில் குறைந்தது ஒரு மாதமாவது தனிமைப்படுத்தப்படும்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிவிங்கிப் புலி

பட மூலாதாரம், Adrian Tordiffe

படக்குறிப்பு, மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிவிங்கிப் புலி

இது இனப்பெருக்கத்திற்காக அல்ல. அவற்றை குனோவின் மையப்பகுதியில் இருக்க வைப்பதற்காக. "அனைத்து பெரும்பூனைகளும் அவற்றின் இல்லத்தோடு உள்ளுணர்வைக் கொண்டுள்ளன. அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் செல்ல விரும்பும். அவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு இத்தகைய கட்டமைப்புகளில் வைத்திருப்பதன் மூலம், நாங்கள் அதை உடைக்கிறோம்," என்கிறார் வான் டெர் மெர்வே.

அதற்குப் பிறகு, 115,000 ஹெக்டேர் தேசியப் பூங்காவில் சிவிங்கிப் புலிகள் விடுவிக்கப்படும்.

சிவிங்கிப் புலிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன?

முதல் சவால், சிறுத்தைகள்.

குறிப்பாக, குனோ தேசியப் பூங்காவில் சிவிங்கிப் புலிகளின் குட்டிகளைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையை சிறுத்தைகள் கட்டுப்படுத்த முடியும்.

சிவிங்கிப் புலி மிகவும் நுட்பமான உயிரினம். அவற்றின் தனித்திறன் வேகம் தான். அவை மோதலைத் தவிர்க்கின்றன. அதோடு அவற்றுடன் போட்டியிடக்கூடிய வேட்டையாடிகளால் குறிவைக்கப்படுகின்றன.

இந்தியாவுக்கு வரும் சிவிங்கிப் புலிகள் வாழப்போகும் பகுதியைச் சுற்றி சிங்கங்கள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், காட்டு நாய்கள் ஆகியவை வாழ்கின்றன. குனோவில், சோம்பல் கரடிகள், வரிக்கழுதைப் புலிகள், ஓநாய்கள் ஆகியவற்றை சிவிங்கிப் புலிகள் முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தியாவில் அவற்றின் முக்கிய இரையாக புள்ளி மான், சிங்காரா, மறிமான் ஆகியவை இருக்கின்றன.

"குனோவில் இருக்கும் சிறுத்தைகளுடனான எந்தவொரு ஆபத்தான எதிர்கொள்ளலையும் கையாளும் அளவுக்கு சிவிங்கிப் புலிகள் அனுபவம் வாய்ந்தவை என்று நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் வான் டெர் மெர்வே.

மேலும், குனோ போன்ற வேலியில்லாத காப்பகங்களில் சிவிங்கிப் புலிகள் எந்தத் திசையிலும் சிதறி தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. இது செயற்கைக்கோள் அல்லது விஹெச்எஃப் கண்காணிப்பு காலர்களால் நிர்வகிக்கப்படும்.

குனோ தேசியப் பூங்கா

பட மூலாதாரம், Adrian Tordiffe

படக்குறிப்பு, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படும்

காட்டுயிர்களை இடமாற்றம் செய்வது எப்போதுமே அபாயங்கள் நிறைந்தது.

"நாம் ஒரு பழக்கமான சூழலில் இருந்து காட்டுயிர்களை வெளியே எடுக்கிறோம். அவற்றின் புதிய வாழ்விடத்தில் உண்மையில் வசதியாக உணர காலம் பிடிக்கும். சிவிங்கிப் புலிகள் மற்ற பெரிய வேட்டையாடிகளை விட புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உயிர் பிழைக்கும் விகிதம் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது," என்கிறார் பேராசிரியர் டார்டிஃப்.

ஆனால், மலாவியில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியதை நன்கு ஆவணப்படுத்தியதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். அங்கு 80% வயது வந்த சிவிங்கிப் புலிகள் ஓராண்டுக்குப் பிறகும் உயிருடன் இருந்தன. முதல் ஆண்டில் 20% சிவிங்கிப் புலிகளை இழந்த போதிலும், அவை எண்ணிக்கையில் வெற்றிகரமாக வளர முடிந்தது.

1px transparent line

சிவிங்கிப் புலிகளால் சிங்கங்களுக்கு சிக்கலா?

சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில், காட்டுயிர் ஆய்வுத் துறையிலேயே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பில் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவது தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிபிசி தமிழ் சார்பாக செய்தியாளர் க.சுபகுணம், காட்டுயிர் உயிரியலாளரும் காட்டுயிர் பாதுகாப்பு விஞ்ஞானியுமான ரவி செல்லத்திடம் சில கேள்விகளை முன்வைத்தார்.

சிவிங்கிப் புலிகளின் அறிமுகமும் சிங்கங்களின் பாதுகாப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவதற்கான செயல்திட்டத்தின்படி, சுமார் 15 ஆண்டுகளில் குனோவில் சிவிங்கிப் புலிகள் இனம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'சிவிங்கிப் புலி எண்ணிக்கை வலுவானவுடன், சிங்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது அல்லது புலிகளைக் குடியேற்றுவது, சிவிங்கிப் புலிகளின் நிலைத்தன்மைக்குத் தீங்கு விளைவிக்காது.'

முனைவர் ரவி செல்லம்

பட மூலாதாரம், Dr.Ravi Chellam

படக்குறிப்பு, முனைவர் ரவி செல்லம்

இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சிங்கங்களை இன்னும் 15 ஆண்டுகளுக்கு குனோவுக்கு மாற்ற முடியாது. ஆனால், 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதியன்றே, 6 மாதங்களுக்குள் சிங்கங்களை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவிங்கிப் புலிகளின் வருகை, சிங்கங்களின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இது சிங்கங்கள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ், பேபியோசிஸ் காரணமாக சிங்கங்கள் ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட அழிவை நோக்கிச் சென்றன. அதற்குப் பிறகு, இன்னும் பல சிங்கங்கள் நோய்களால் உயிரிழந்துள்ளன. அவற்றின் இடமாற்றத்தை மேலும் தாமதப்படுத்துவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதுடன், அவற்றின் விதியை மேன்மேலும் தூண்டுவதைப் போன்றது.

குஜராத்தில் மனித-சிங்க எதிர்கொள்ளலின் நிலை என்ன? மனித-சிங்க மோதலைக் குறைப்பதில், குறிப்பிட்ட அளவு சிங்கங்களை இடமாற்றம் செய்வது உண்மையாகவே உதவுமா?

சிங்கங்களால் கால்நடைகள் கொல்லப்படுவது இந்த எதிர்கொள்ளலில் முதன்மையான பிரச்னையாக உள்ளது. சிங்கங்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான மிக அதிகமான தினசரி தொடர்புகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்கொள்ளல்களின் அளவு குறைவாக இருப்பது மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. சிங்கங்கள் மக்களைத் தாக்குகின்றன, காயப்படுத்துகின்றன மற்றும் கொல்லவும் செய்கின்றன. ஆனால், இவை மிகவும் அரிதான சம்பவங்கள். உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், உள்ளூர் மக்கள் காயமடையும்போது அல்லது கொல்லப்படும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களை மாநில அரசு கொண்டுள்ளது.

ஆசிய சிங்கம்

பட மூலாதாரம், Getty Images

மனித-சிங்க மோதலைக் குறைப்பதற்கு இடமாற்றம் உதவுமா என்றால், இல்லை. காடுகளில் இருக்கும் சிங்கங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை இடமாற்றுவதன் பின்னணி, மனித-சிங்க மோதலைக் குறைப்பதற்காக அல்ல. அவற்றுக்கு இருக்கும் அழிவு அபாயங்களைக் குறைத்து அவற்றின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவது தான் இதன் முக்கிய நோக்கம். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்ளும் அதற்கு வெளியேயும் சிங்கங்கள் (பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே சுமார் 300 சிங்கங்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது) தொடர்ந்து கால்நடைகளைக் கொல்வதுடன், அவ்வப்போது மக்களையும் தாக்குகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே வாழும் சிங்கங்கள் உணவுக்காக கால்நடைகளையே பெரிதும் நம்பியுள்ளன. மேலும், அவை மக்களைத் தாக்குதவதற்கும் பெரும்பாலும் காரணமாகின்றன.

உங்கள் கருத்துப்படி, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவது, குனோவுக்கு சிங்கங்களை இடமாற்றம் செய்வது ஆகிய இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

இதற்கான பதில் மிகவும் வெளிப்படையானது. 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிங்கங்களை 6 மாதங்களுக்குள் குனோவுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இது இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உத்தரவு. வெளிப்படையாக, சிங்கங்களின் இடமாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவைத் தவிர்த்துவிட்டு, காட்டுயிர் பாதுகாப்பு அறிவியலின்படி மட்டுமே பார்த்தாலும் கூட,, ஆசிய சிங்கங்களுக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் பரவலாகப் பல்வேறு இடங்களில் 7000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் சிவிங்கிப் புலிகளுடன் ஒப்பிடும்போது, ஒரேயோர் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு 700-க்கும் அதிகமான எண்ணிக்கையில் மட்டுமே சிங்கங்கள் உள்ளன.

காணொளிக் குறிப்பு, அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: