பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்: விஞ்ஞானிகளுக்குப் பயன்படும் யூட்யூப் காணொளிகள்

செஸ்டர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஆசிய யானைகள்

பட மூலாதாரம், Chester Zoo

படக்குறிப்பு, இணைய காணொளிகள் யானைகளின் அறிவுத் திறனுக்கான கூடுதல் ஆதாரங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றன
    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

ஆசிய யானைகள், மயில் சிலந்திகள், ஸ்னோபால் என்றழைக்கப்படும் காக்கடூ பறவை ஆகியவற்றுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா?

அவையனைத்துமே இணைய காணொளிகளில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இந்தக் காணொளிகளில் சிலவற்றில் பதிவு செய்யப்பட்ட அந்த உயிரினங்களின் நடத்தைகள், அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சஞ்சீதா ஷர்மா போகரேல், நச்சிகேதா ஷர்மா ஆகியோர், தங்களுடைய சமீபத்திய ஆய்வில், யூட்யூப் காணொளிகளில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளை வைத்து யானைகள் இறப்புக்கு எதிர்வினையாற்றுவதைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

"மூன்றாண்டு காலத் தீவிரக் களப்பணியில், இறப்பு நிகழ்வுக்கு யானையின் எதிர்வினையைக் காண்பதற்கான ஒரேயொரு வாய்ப்பு தான் எனக்குக் கிடைத்தது. இது மிகவும் அரிதானது," என்கிறார் சஞ்சீதா. ஆனால், இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அனைவரின் கையிலுமே கேமரா உள்ளது. "யானைகளின் மரணம்", "இறப்புக்கான யானையின் எதிர்வினைகள்," போன்ற சொற்களைப் பயன்படுத்தித் தேடியதன் மூலம், அவர்கள் பல்வேறு உயிரினங்கள் இறந்த உடல்களோடு தொடர்புகொள்ளக்கூடிய 24 வகையான பதிவுகளைக் கண்டறிந்தனர்.

ஆய்வுக்கு உதவும் யூட்யூப் காணொளிகள்

யானைகள், தங்கள் மந்தையைச் சேர்ந்த உயிரிழந்த உறுப்பினர்களை தங்கள் தும்பிக்கையால் தட்டுவது அல்லது உதைத்து உயிர்ப்பிக்க முயல்வது போன்றவை காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை சடலங்களுக்கு அருகில் கூட்டமாகவும் கூடின. "அதோடு, நாங்கள் இதற்கு முன்பு கேட்டிராத, குறைந்த ரம்மியமான ஒலிகளைப் போன்ற சத்தங்களைக் கேட்டோம்," என்கிறார் நச்சிகேதா.

"எனக்கு மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் யானை ஒன்று தனது கன்றை சுமந்து சென்றதுதான். யானைகள் சிலநேரங்களில் உயிரிழந்த கன்றுக் குட்டியைத் தங்கள் தும்பிக்கையால் இழுத்துச் செல்வதுண்டு. ஒரு பெண் யானை தனது இறந்த குட்டியைத் தூக்கிச் செல்ல தந்தங்களைப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு," என்று அவர் கூறினார்.

இதை யானை துக்கத்தை வெளிப்படுத்தும் விதம் என்று விவரிக்க முடியுமா என்பதை முடிவு செய்வது கடினமானது என்று சஞ்சீதா கூறினார். இந்த உயிரினங்கள் மரணத்திற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதன் மீதான இவர்களின் ஆர்வத்துக்குக் காரணம், அந்த நடத்தைகள் இவற்றின் அறிவுத் திறனைக் காட்டுகின்றன. காணொளிகள் நிறைந்து கிடக்கும் யூட்யூபில் கிடைத்த பதிவுகளின் மூலம் அத்தகைய அரிதான அறிவுத்திறனுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

இணையத்தில் கிடைக்கும் காட்டுயிர்கள் தொடர்பான காணொளிகளுக்குள் தொலைந்து போவதற்கு ஒருவர் காட்டுயிர் ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஞ்ஞானிகளும் வெளிப்படையாகக் கிடைக்கும் இந்த காணொளி தரவு மூலத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்காக பதிவேற்றப்படும் இணைய காளொளிகளிலும் கூட, அறிவியல் நுண்ணறிவு சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

உயிரிழந்த தனது குட்டியை தும்பிக்கையில் இழுத்துச் செல்லும் தாய் யானை

பட மூலாதாரம், Prof. Raman Sukumar

படக்குறிப்பு, உயிரிழந்த தனது குட்டியை தும்பிக்கையில் இழுத்துச் செல்லும் தாய் யானை

பனிச்சறுக்கு செய்த காகம்

நியூசிலாந்தில் இருக்கும் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸிமேனா நெல்சன், "ஒரு நெகிழி மூடியைப் போன்ற ஒரு பொருளை, கூரையின்மீது ஸ்னோபோர்டாக பயன்படுத்தி பனிச்சறுக்கு செய்த ஒரு காகத்தின் காணொளி தான் எனக்கு மிகவும் பிடித்தது," என்று நினைவு கூர்கிறார்.

ஸிமேனா மேற்கோள் காட்டிய காணொளி, ரஷ்ய நகரத்திலுள்ள கட்டடத்தின் ஜன்னல் வழியாகப் பதிவு செய்யப்பட்டது. காகம் ஒரு நெகிழி மூடியில் நின்று பனிக் கூரையில் கீழே சரிந்து சென்றது. அது மீண்டும் மேலே பறந்து சென்று மீண்டும் அதைத் தொடர்ந்து செய்தது. அதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில், ஒரு கருவியைப் பயன்படுத்தும் காகத்தின் அறிவுக்கூர்மையை அந்தக் காணொளி காட்டுகிறது.

"அது விளையாடும் அதேநேரத்தில், ஒரு கருவியைப் புதுமையாகவும் பயன்படுத்துகிறது. இதில் வேடிக்கைக்காக ஒரு கருவியைப் பயன்படுத்து ஓர் உதாரணம் தான். அந்த காகம் எவ்வளவு புத்திசாலி என்பதைப் பற்றி அது நிறைய விவரங்களைக் கொடுக்கிறது. மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் புதுமைகளை உருவாக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்," என்று கூறுகிறார் ஸிமேனா.

பல மணிநேரங்களைச் செலழித்து காகங்களைப் புரிந்துகொள்ள முயலும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கு இத்தகைய நடத்தையை காணொளி ஆதாரமாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதையும் தாண்டி, அதை நேரடியாகப் பார்க்கக் கூட முடியாமல் போகலாம் என்று குறிப்பிடுகிறார் ஸிமேனா.

மற்ற உயிரினங்களோடு அல்லது அசாதாரண பொருட்களோடு "காட்டுயிர்கள் விளையாடுவதைப் போன்ற" காணொளிகள் இணையத்தில் பிரபலமானவை.

உயிரினங்களின் விளையாட்டு போன்ற வேடிக்கையான காணொளிகள் பொழுதைப் போக்க ஏற்றவையாக இருந்தாலும், இத்தகைய காணொளிகளில் இருக்கும் உயிரினங்களின் செயல்பாடுகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும். அவை எதற்காக விளையாடுகின்றன எனபதற்கு எந்தவித வெளிப்படையான நோக்கமும் இல்லை. ஸிமேனா சொல்வதைப் போல், "இந்தச் செயல்பாடு அவற்றுக்கு உணவிலோ அல்லது இனப்பெருக்கத்திலோ பங்கு வகிக்கப் போவதில்லை."

ரப்பர் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருக்கும் குதிரை

பட மூலாதாரம், THE DODO

படக்குறிப்பு, ரப்பர் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருக்கும் குதிரை

ஊரடங்கின் அறிவியல்

யூட்யூப் மற்றும் பிற இணைய வீடியோ தளங்கள், கடந்த இரண்டு வருட ஊரடங்குகளின் மூலம் பல ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல்களுக்கான ஆதாரமாக விளங்கின.

"எனது மாணவர்களில் ஒருவர், உதாரணமாக, ஊரடங்கின் போது உயிரினங்களின் இதுவரை விவரிக்கப்படாத செயல்பாடுகளைத் தேடினார். அதற்கு, தன்னால் ஊரடங்கு நேரத்தில் களத்திற்குச் சென்று தரவுகளைச் சேகரிக்க முடியவில்லை என்றும் அதனால் தான் அதை யூட்யூபில் இருந்து சேகரிப்பதாகவும் மாணவர் காரணம் கூறினார்," என்று கூறுகிறார் ஸிமேனா.

மேலும் பல பறவை இனங்களைப் பற்றியும் ஆய்வுக்குப் பயன்படக்கூடிய அதிகமான காணொளிக் காட்சிகள் உள்ளன. பூச்சிகள் அல்லது பிற முதுகெலும்பு இல்லாத உயிரினங்களின் காணொளிகளைப் படம் பிடித்து பதிவேற்றுபவர்கள் குறைவு தான். இது, கடினமான இடங்களுக்கும் ஆய்வு மேற்கொள்ள அணுகுவதற்குக் கடினமாக இருக்கக்கூடிய உயிரினங்களை அணுகவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

அன்டார்டிகாவுக்குச் சென்று காட்டுயிர்களைக் காணக்கூடிய அதிர்ஷ்ட மற்றும் பணக்கார சுற்றுலா பயணிகளால் பதிவேற்றப்பட்ட காணொளிகள் இதற்கு ஓர் உதாரணம்.

"ஓர்காவில் இருக்கும் வேட்டையாடி உயிரினங்களின் நடத்தைகளைக் காட்டும் காட்சிகளை அவர்கள் பதிவு செய்யலாம். அது அரிய நடத்தையாக இருக்கலாம். அதைப் பதிவு செய்ய, சரியான நேரத்தில் அங்கு இருக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் செலவு செய்து, விஞ்ஞானிகள் சரியான நேரத்தில் அந்த இடத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு," என்கிறார் ஸிமேனா. ஆகவே, இத்தகைய காணொளிகள் அவற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

அதேநேரம், இந்த காணொளிகளில் காணப்படும், அவற்றின் முலம் பிரபலமாகும் காட்டுயிர்கள் எப்போதுமே அரிதானவையாக இருப்பதில்லை.

ஸ்னோபால் தி டான்சிங் காக்கடூ

பட மூலாதாரம், Irena Schulz/Bird Lovers Only

படக்குறிப்பு, ஹார்வர்ட் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்னோபால் தி டான்சிங் காக்கடூ

போலந்தில் இருக்கும் வாழ்க்கை அறிவியலுக்கான போஸ்னாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூகாஸ் டைலெவ்ஸ்கி, சிவப்பு மற்றும் சாம்பல் நிற அணில்களின் ஆளுமை பண்புகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிய யூட்யூபை பயன்படுத்தினார். அவருடைய ஆய்வு, சிவப்பு நிற அணில்களைவிட சாம்பல் நிற அணில்கள் மிகவும் ஆக்ரோஷமானவை என்பதைக் காட்டியது. இந்தக் காணொளிகள், விஞ்ஞானிகள் காடுகளில் பார்த்ததைவிடத் துல்லியமாக அதை உறுதி செய்தது.

"இது உயிரின நடத்தை சார்ந்த ஆய்வுகளுக்கான புதிய அணுகுமுறை. இது ஆய்வாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஆய்வு செய்யப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் பிற கண்டங்களில் இருந்த உயிரினங்களின் நடத்தை பற்றிய ஆய்வுகளுக்கு இவை உதவலாம்," என்கிறார் லூகாஸ்.

ஸ்னோபால் தி டான்சிங் காக்கடூ என்ற காணொளி, அவருடைய சொந்த ஹார்வர்ட் ஆய்வுக்கு ஊக்கமளித்தது.

2019-ஆம் ஆண்டில் கரன்ட் பயாலஜியில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில், "ஸ்னோபால் பல்வேறு உடல் பாகங்களைப் பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க வித்தியாசமான தன்னிச்சையான இயக்கங்களோடு இசைக்கு பதிலளிக்கிறது. இதன் மூலம், கிளிகள் இந்த எதிர்வினையை மனிதர்களோடு பகிர்ந்துகொள்வது தெரிகிறது," என்று எழுதினார்.

இந்த காணொளிகள், விஞ்ஞான பண்புகளைக் கொண்டிருக்கும் அதேவேளையில், இயற்கையோடும் பிற உயிரினங்களோடும் மக்கள் இன்னும் கொஞ்சம் இணைந்திருக்க வைப்பதையும் செய்வதாகச் சொல்கிறார் சஞ்சீதா.

"தனிப்பட்ட முறையில், யானைகளைப் பார்க்கும்போது, அவற்றின் உணர்வுகளைப் பார்க்கிறேன். அவை, துயருற்று இருப்பதைக் காண்கிறேன். ஆனால், நிச்சயமாக என் அறிவியலுக்குக் கூடுதல் சான்றுகள் தேவை," என்கிறார் சஞ்சீதா.

அதேநேரம், "மக்கள் இந்த உயிரினங்களோடு இணைந்திருப்பதாக உணர்ந்து உணர்ச்சிவசப்படும்போது, அது யானைகளின் பாதுகாப்பிற்கும் உதவும் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, தஞ்சாவூரில் பிறந்து தான்சானியா வரை பயணிக்கும் புவனிதரன் பற்றித் தெரியுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: