கல் உப்பு - பொடி உப்பு வேறுபாடு என்ன? உடலுக்கு எது நல்லது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
உப்பு.
இன்று உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், பெரும்பாலும் பலரும் கேட்கும், அல்லது எதிர்கொள்ளும் கேள்விகள், ‘எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்?’, ‘ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்வது ஆரோக்கியமானது?’ ஆகியவைதான்.
இன்று பொதுவாக, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்களுடன் உப்பு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.
அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு என்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இவற்றில் எது ஆரோக்கியமானது என்பது பற்றியும் விவாதங்கள் அடிக்கடி நடக்கின்றன.
அதேபோல், இன்று சந்தையில் ராக் சால்ட், லோ சோடியம் சால்ட் அல்லது லைட் சால்ட், ஹிமாலயன் சால்ட் போன்ற பல புதிய வகை உப்புகளும் விற்கப்படுவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வித்தியாசமனவை? இவற்றை உட்கொள்வது ஆரோக்கியமானதா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண, பிபிசி தமிழ், மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் ஆகியோரிடம் பேசியது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு ஆகியவை தயாரிக்கப்படுவதில் உள்ள வித்தியாசம் குறித்து அறிந்துகொள்ள உப்பு உற்பத்தியாளர்களிடமும் பேசியது.
அவர்கள் கூறிய கருத்துகள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கல் உப்பு - பொடி உப்பு வேறுபாடு என்ன?
நமது அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளான கல் உப்பு மற்றும் பொடி உப்பு ஆகியவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள, தூத்துக்குடியைச் சேர்ந்த தன்பாடு உப்பு ஏற்றுமதி மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தணிக்கையாளர் எஸ்.ராகவனிடம் பேசினோம்.
முன்னர் கல் உப்பு, கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இன்று தூத்துக்குடி போன்ற இடங்களில் இருக்கும் உப்பளங்களில் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரைப் பயன்படுத்தியே உப்பு தயாரிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
கல் உப்பைப் பொருத்தவரையில், அது உப்பு நீரை உப்பளங்களில் செலுத்தி ஆவியாக்கி, மீந்திருக்கும் உப்புதான் என்கிறார் அவர். “சந்தைக்கு அனுப்பப்பட வேண்டிய கல் உப்பில் அயோடின் சேர்ப்போம்,” என்கிறார்.
இந்த அயோடின் இரு வழிகளில் சேர்க்கப்படுகிறது. ஒன்று, வயல்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தெளிப்பான்களில் மனித உதவியுடன் சேர்க்கப்படுகிறது. ஆனால் இதில் அயோடின் சமமாகக் கலக்காது என்கிறார் ராகவன்.
மற்றொரு முறையில், இயந்திரம் பயன்படுத்தி கல் உப்பில் அயோடின் சேர்க்கப்படுகிறது, இதில் அயோடின் உப்பு முழுவதும் சரிசமமாகச் சென்று சேர்கிறது, என்கிறார் அவர்.
டேபிள் சால்ட் அல்லது பொடி உப்பு தயாரிக்கப்படும் முறையைப் பற்றிப் பேசிய ராகவன், இதிலும் முதல் படியாக உப்பு நீர் உப்பளங்களில் செலுத்தப்பட்டு, முதலில் கல் உப்பு ஆக்கப்படுகிறது. பின்னர் அது ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதிலிருந்து மீண்டும் உப்பு நீரில் கழுவப்பட்டு, மண் தூசி ஆகியவை நீக்கப்படுகின்றன.
பின்னர், அது உலர வைக்கப்பட்டு, அரைப்பான்களில் (crusher) செலுத்தப்பட்டுப் பொடியாக்கப்படுகின்றது. அதன்பின் அதில் இயந்திர முறையில் அயோடின் சேர்க்கப்படுகிறது.
“இதில் பொடி உப்பு கட்டிகளாகாமல் மணல்-மணலாக இருக்கச் சிறிது சிலிகேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது,” என்கிறார் அவர்.
உணவுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் உப்பில் கண்டிப்பாக அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி. அதை உறுதி செய்ய உப்பு ஆலைகளில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்கிறார் ராகவன்.

பட மூலாதாரம், Getty Images
உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
சரி, கல் உப்பு, பொடி உப்பு இந்த இருவகை உப்புகளில், எது உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என உணவியல் நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள் ஆகியோரிடம் கேட்டோம்.
அதற்கு அவர்கள், இரண்டிலும் அயோடின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், சோடியம் அளவில் எந்த பெரிய மாற்றமும் இல்லை என்கின்றனர்.
“உப்பு என்பது பொதுவாக சோடியம் குளோரைட் தான். அது எந்த வடிவில் இருந்தாலும், சோடியம் அளவு ஒன்றுதான்,” என்கிறார் சென்னை மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத்தலைவர் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
இதே கருத்தைப் பிரதிபலிக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த தலைமை உணவியல் நிபுணர் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி, "அயோடின் அளவு மாறுபடுவதால் உப்பின் சுவையில் சற்று வித்தியாசம் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் இரு வகை உப்புகளிலும் சோடியம் அளவு ஒன்றுதான்," என்கிறார்.
அதனால், கல் உப்பு, பொடி உப்பு, இருவகை உப்புகளையும் எவ்வளவு குறைவாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று இருவரும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Dr Rajan Ravichandran
உப்பு உடலுக்கு என்ன செய்கிறது?
உப்பு உடலுக்குத் தேவை என்றாலும் கூட, அதிகளவில் உப்பை தொடர்ந்து உட்கொண்டால், அது உடலுக்குக் கேடு என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
இதுகுறித்துப் பேசிய அவர், சோடியம் நீரை உறிஞ்சும் தன்மையுடையது, அதனால் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கிறது என்கிறார்.
“அதிகளவில் உப்பை தொடர்ந்து உட்கொண்டால், இருதயத்தின் ரத்த நாளங்கள் சேதமடைந்து மாரடைப்பு ஏற்படலாம், மூளையின் நாளங்கள் சேதமடைந்து பக்கவாதம் வரலாம், சிறுநீரகத்தின் நாளங்கள் சேதமடைந்து சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன,” என்கிறார் அவர்.
அதிக உப்பால் சிறுநீரகத்துக்கு என்ன பிரச்னை?
உப்புக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள உறவு குறித்துப் பேசிய மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன், பொதுவாக சிறுநீரகங்கள் நமது உடலில் தினமும் 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன, என்கிறார்.
“அதில் 1.5 லிட்டர் தான் சிறுநீராக வெளிவருகிறது. சாதாரணமாகச் சிறுநீரில் புரதம் வெளியேறாது. ஆனால், சிறுநீரக நாளங்கள் சேதமடைந்தால், சிறுநீரில் புரதமும் வெளியேறும்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Dr Daphnee Lovesley
புதிய வகை உப்புகள்
இன்று சந்தையில் ‘லைட் சால்ட்’, ‘ராக் சால்ட்’ போன்றவை விற்கப்படுகின்றன. இவை என்ன? இவை உடலுக்கு ஆரோக்கியமானதா என மருத்துவர்களிடம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன், பொதுவாகக் கடல் நீரில் இருந்து எடுக்கப்படும் உப்புக்கு பதிலாகப் பாறைகளைக் குடைந்து எடுக்கப்படும் உப்புகள் தான் ராக் சால்ட், என்கிறார் அவர். “இதில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தனிமங்களும் இருக்கும்,” என்கிறார் அவர்.
அதேபோல், இப்போது சோடியத்தால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க, ‘லோ சோடியம் சால்ட்’ அல்லது ‘லைட் சால்ட்’ என்ற ஒரு வகை உப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், சோடியத்தின் அளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதில் 15%-20% பொட்டாசியம் சேர்க்கப்படுகிறது.
“சூப்பர் லைட் வகை உப்புகளில், 30% கூட பொட்டாசியம் சேர்க்கப்படலாம்,” என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
ஆனால்,பொட்டாசியம் சேர்க்கப்படும் உப்புகளை மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்களைக் கலந்தாசிக்காமல் உட்கொள்ள வேண்டாம், என்கின்றனர் மருத்துவர்கள்.
“லைட் சால்ட் வகை உப்பையும் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு உட்கொள்வதே நல்லது,” என்கிறார் உணவியல் நிபுணர் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி.
“ஏனெனில், இந்த லைட் உப்பு இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் உட்கொள்ளவது நல்லதல்ல, ஏனெனில், இது உடலில் பொட்டாசியம் அளவைச் சீர்குலைத்துவிடும்,” என்கிறார் அவர்.
உடலுக்கு எவ்வளவு உப்பு நல்லது?
இதற்கு பதிலளித்த மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் பரிந்துரையின் படி, நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு தான் உட்கொள்ள வேண்டும் என்கிறார்.
“ஆனால், நமது உணவுப் பழக்கத்தில், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை உண்பதால், நாளொன்றுக்கு 7 கிராம் முதல் 8 கிராம் வரைகூட உப்பை உட்கொள்கிறோம்,” என்கிறார் அவர்.
மேலும், “உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை உண்டாகப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உப்பு. புறக் காரணிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நாம் உட்கொள்ளும் உப்பின் அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதனால் உப்பு உட்கொள்ளும் அளவை நாம் கட்டுப்படுத்துவது அவசியம்,” என்கிறார் அவர்.
“குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே உப்பின் அளவைக் குறைவாகக் கொடுத்துப் பழக்க வேண்டும். அப்போது அவர்களது சுவை உணர்வு அதற்கேற்ப பழகிவிடும். பிறகு அவர்கள் சுவைக்காக அதிக உப்பைத் தேடிச்செல்ல மாட்டார்கள்,” என்கிறார் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












