வெள்ளையனே வெளியேறு போராட்டம் - மதுரையில் என்ன நடந்தது? காமராஜர் என்ன செய்தார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இயக்கம். இந்தியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தின் தாக்கம் தமிழ்நாட்டிலும் மிக வலுவாக இருந்தது. அதனை நினைவுகூரும் கட்டுரை இது.
'வெள்ளையனே வெளியேறு' என தமிழிலும் Quit India Movement என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்படும் இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் திருப்பு முனையான இயக்கங்களில் ஒன்று.
பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமெனக் கோரி, 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார் காந்தி.
இப்படி ஒரு வெகுமக்கள் இயக்கத்தை நடத்த காந்தி முடிவெடுக்கும் முன்பாக, பல நிகழ்வுகள் நடந்தன. 1939ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியவுடனேயே, இந்திய மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளாமல், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் இந்தப் போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியது தவறு என 1939 செப்டம்பரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால், பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் விடுதலை குறித்து தெளிவான, உறுதியான வாக்குறுதிகளை அளிக்க வேண்டுமென காங்கிரசும் காந்தியும் வலியுறுத்தினர். ஆனால், பிரிட்டிஷ் அரசு அதற்குத் தயாராக இல்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
1941வாக்கில் உலகப்போர் உச்சகட்டத்தை அடைந்தது. அந்தத் தருணத்தில் பிரிட்டனில் யுத்த அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிளமன்ட் அட்லி, ஸ்டாஃபோர்ட் க்ரிப்ஸ் போன்றவர்கள், இந்திய விடுதலைக்கு ஆதரவான எண்ணங்களைக் கொண்டிருந்தனர்.
பிரிட்டனின் காலனியாதிக்கத்திற்கு எதிரானவர்களும் இந்தியா விடுதலையை வலியுறுத்தினர். ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள் இந்தியாவுக்கு உடனடியாக டொமினியன் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில், 1942 மார்ச் மாதம் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக் குழுவை அனுப்பி இந்தியர்களை ஆதரவைப் பெற தீர்மானிக்கப்பட்டது.
"போர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும், அதற்குப் பிறகு இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்டு அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படும் - எந்த ஒரு மாகாணமும் இதனை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். பதிலாக, பிரிட்டனின் போருக்கு இந்தியா உதவியாக இருக்க வேண்டும்" என்ற வாக்குறுதிகளை அவர் அளிக்கலாம் எனக் கூறப்பட்டது.
க்ரிப்ஸ் மார்ச் 23ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். மூன்று வாரங்கள் அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். காங்கிரஸ் தலைவர்கள், முஸ்லிம் லீகின் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தார். காங்கிரசின் தலைவராக இருந்த மௌலானா அபுல்கலாம் ஆசாதுடன் தொடர்ந்து பேசிவந்தார். ஆசாதைப் பொறுத்தவரை, மதிக்கத்தக்க வாக்குறுதிகளைத் தந்தால் போரில் ஈடுபடுவதில் தவறில்லை எனக் கருதினார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் எப்படி நிறைவேற்றப்பட்டது?
ஆனால், தொடர்ந்து நடந்து பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை. குறிப்பாக, வைசிராயின் எக்ஸிக்யூட்டிவ் கவுன்சிலில் உள்ள இந்திய உறுப்பினரிடம்தான் இந்தியாவின் பாதுகாப்புப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதனை பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை. அப்போது வைசிராயாக இருந்த லின்தோவும் க்ரிப்ஸின் முயற்சிகளில் ஆர்வம் காட்டவில்லை. ஏப்ரல் 12ஆம் தேதி வாக்கில் க்ரிப்ஸின் முயற்சிகள் தோல்வியடைந்தது உறுதியானது.
ஏப்ரல் மாத இறுதியில் காங்கிரசின் கூட்டம் அலகாபாத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காந்தி கலந்துகொள்ளவில்லை. ஆனால், தீர்மானம் ஒன்றை அனுப்பிவைத்தார்.
அந்தத் தீர்மானத்தில், இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிரிட்டன் வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது நேருவுக்கு ஏற்புடையதாக இல்லை. அப்படித் தீர்மானம் நிறைவேற்றினால், இந்தியா அச்சு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற தோற்றம் ஏற்படும் எனக் கருதினார்.
ஆனால், காந்தியைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் அரசுடன் ஒரு உடன்பாடு ஏற்படும் என நீண்ட காலமாகக் கருதிவந்தார். ஆனால், க்ரிப்ஸ் தூதுக் குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்த விரும்பினார் காந்தி.
மே 14ஆம் தேதி பர்மா ஜப்பானிடம் வீழ்ந்தது. ஆகவே, ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. பிறகு ஒரு வழியாக நேரு காந்தியின் யோசனையை ஏற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி பம்பாயின் கோவாலியா டாங்க் மைதானத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் துவங்கியது. அதற்கு அடுத்த நாள், ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ்காரர்கள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்தால் நேச நாடுகளின் கூட்டாளியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஃப்ரான்ஸ், நெதர்லாந்து ஆகியவையும் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால் காந்தியின் தலைமையில் மிகப் பெரிய அளவில் அகிம்சை வழியிலான ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும் என்றும் தீர்மானம் கூறியது.
இந்தத் தீர்மானத்தை நேரு முன் மொழிய, வல்லபாய் படேல் வழிமொழிந்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலையில் தீர்மானம் நிறைவேறியது.
இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை தனது Gandhi The Years that Changed the World நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.
''அடுத்த நாள் காலை ஐந்து மணியளவில் காந்தி கைதுசெய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்த மகாதேவதேசாய், சரோஜினி நாயுடு ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு ஆகா கான் அரண்மணையில் சிறைவைக்கப்பட்டனர். நேரு, படேல், அபுல்கலாம் ஆசாத் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு, ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.''
''காங்கிரசும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மூடி முத்திரையிடப்பட்டன. காங்கிரசின் தீர்மானம், அச்சு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு என அரசு குறிப்பிட்டது''.
''சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, காந்தியின் செயலரான மகாதேவ் தேசாய் மரணமடைந்தார். மற்றொரு பக்கம் இந்தியாவின் எல்லா மாகாணங்களிலும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடந்தன" என்று குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்திலும் தீவிரம் அடைந்த போராட்டம்
தமிழ்நாட்டிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகத் தீவிரமாக செயல்பட்டது. பம்பாயில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய காமராஜர், சென்னைக்கு வராமல் அரக்கோணத்திலேயே இறங்கினார்.
அங்கிருந்து ராணிப்பேட்டைக்கு வந்தவர், அடுத்த நாள் சுற்றுவட்டாரத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களைச் சந்தித்து என்ன செய்யவேண்டுமென ஆலோசனை நடத்தினார்.
இதற்குப் பிறகு, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் போன்ற இடங்களுக்கும் சென்று காங்கிரஸ்காரர்களைச் சந்தித்துப் பேசினார். பிறகு விருதுநகருக்கு வந்தடைந்து, கைதானார். அவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நடந்த சம்பவங்களை ஸ்டாலின் குணசேகரன் தொகுத்த ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூலில் இடம்பெற்றுள்ள என். உமாதாணுவின் கட்டுரை விரிவாக குறிப்பிடுகிறது.
"ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகலே மதுரை பரபரப்பானது. மதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகியான சிதம்பர பாரதி கைது செய்யப்பட்டார். அன்று மாலையே திலகர் திடலில் மிகப் பெரிய கூட்டம் கொட்டும் மழைக்கு நடுவில் நடந்தது. ஆகஸ்ட் 10ஆம் தேதி மிகப் பெரிய அளவில் மதுரையில் கடையடைப்பு நடத்தப்பட்டது.''
''அன்றும் கூட்டம் நடக்கலாம், தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்த்து திலகர் திடல் முன்பாக பெரும் கூட்டம் கூடியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டம் கலையாத நிலையில், காவல்துறை தடியடி நடத்தியது. சில சிறுவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசினர். இதற்குப் பிறகு மாலை 6 மணியளவில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இருபது பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் மூன்று பேர் சிறுவர்கள். மறு நாள் நகரம் முழுவதும் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.''
''சின்னக்கடைத் தெரு, தெற்குச் சித்திரைவீதியில் இருந்த தபால் நிலையங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மூன்று நாட்கள் மதுரையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்த நிலையில், மாவட்டம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகே மதுரையில் அமைதி திரும்பியது.''
''அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று ஊர்வலமாகச் சென்ற சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட இரண்டு பெண்மணிகளை கைதுசெய்த காவல்துறை, அவர்களை லாரியில் ஏற்றி 6-7 மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்று நிர்வாணப்படுத்தியது. இதில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட விஸ்வநாத நாயர் என்ற காவல்துறை ஆய்வாளர் மீது அமிலம் வீசப்பட்டது.''

பட மூலாதாரம், TWITTER
''கோயம்புத்தூரில் இருந்த சூலூர் விமான நிலையம் தாக்கப்பட்டது. ராணுவத் தளவாடங்கள் சூறையாடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர். கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப்பட்டனம் முதல் உடன்குடி வரையுள்ள தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. குலசேகரபட்டனத்தில் காவலர்களிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான லோன் கொல்லப்பட்டார்.''
''ராமநாதபுரத்தில் திருவேகம்புரத்தில் இருந்த பாலம் உடைக்கப்பட்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருவாடனை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தேவகோட்டையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்" என கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உமா தாணு.
1943க்குப் பிறகு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் தீவிரம் தணிய ஆரம்பித்தது. அதே காலகட்டத்தில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தியின் உடல்நலமும் மோசமடைய ஆரம்பித்தது. 1944 பிப்ரவரி 22ஆம் தேதி கஸ்தூரிபாய் காந்தி ஆகா கான் அரண்மனையிலேயே காலமானார்.
இந்தியாவின் வைசிராயாக இருந்த லிங்தோ பிரபு மாற்றப்பட்டு, வேவல் அந்தப் பதவிக்கு வந்தார். 1944 மே 5ஆம் தேதி காந்தி ஆகா கான் அரண்மனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் தாக்கம் குறித்து, வரலாற்றாசிரியர்களிடம் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய மக்கள் இயக்கம் என்பதில் முரண்பாடுகள் இல்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












