வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் இந்த 'ஏழைகளின் வங்கியாளர்'- யார் இந்த யூனுஸ்?

வங்கதேசத்தின் இடைக்கால அரசை வழிநடத்தப்போகும் நோபல் பரிசு பெற்ற நிபுணர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா
    • எழுதியவர், கெல்லி எங் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா
    • பதவி, பிபிசி செய்தி

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்றவரும், ஷேக் ஹசீனாவின் நீண்டகால அரசியல் எதிரியுமான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹசீனா பதவி விலக வேண்டும் என்று பல வாரங்களாக வங்கதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே, 84 வயதான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா. யூனுஸ் மீது பல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மேல் முறையீடு செய்து, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் யூனுஸ். ‘அரசியல் ரீதியாக என் மீது போடப்பட்ட வழக்கு’ என்று யூனுஸ் அதை விவரித்திருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வங்கதேச மாணவர்களின் அழுத்தம்

வங்கதேச மாணவர்களின் அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மாணவர்கள், ராணுவம் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை ஏற்க மறுத்து, பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர்.

அதிபர் முகமது ஷஹாபுதீன், இராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பேராசிரியர் யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

"இவ்வளவு தியாகம் செய்த மாணவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசை வழிநடத்துமாறு என்னைக் கோரும் போது, ​​நான் எப்படி மறுக்க முடியும்?" என பேராசிரியர் யூனுஸ் கூறியிருந்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக பாரிஸ் சென்றுள்ள யூனுஸ், உடனடியாக டாக்கா திரும்புவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், ஒரு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது.

அரசுப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

திங்கட்கிழமை மட்டும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது வங்கதேசத்தின் கறுப்பு நாளாக அமைந்தது. நூற்றுக்கணக்கான காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை

வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா

தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா சென்றார். இதன் மூலம் அவரது 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

கடந்த பத்தாண்டுகளில் ஒருபுறம் வங்கதேசத்தின் பொருளாதாரம் வளர்ந்தாலும், மறுபுறம் முன்னாள் பிரதமர் ஹசீனா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்கி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்ததாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமூக ஆர்வலர் அஹ்மத் பின் குவாசெம் போன்றோர் ஹசீனா அவசரமாக வெளியேறிய உடனேயே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஹசீனா ஆட்சியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்று கூறி, 2014 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான ‘பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்’ தலைவர் தான் கலீதா ஜியா.

78 வயதான அவர் 2018இல் ஊழல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியிருந்தார்.

சமூக ஆர்வலர் குவாசெம் 2016ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஹசீனாவின் பதவிக்காலத்தில் அரசால் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களில் குவாசெமும் ஒருவர்.

'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’

யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா மற்றும் யூனுஸ் (வலது ஓரம் இருப்பவர்) (2008- கோப்புப் படம்)

தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக ஜனவரியில், பேராசிரியர் யூனுஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹசீனாவின் கோபத்திற்கு ஆளானவர்களில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அரசியல்வாதிகள் குறித்து அவர் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

1983ஆம் ஆண்டில், அவர் கிராமின் வங்கியைத் தொடங்கினார். இது ஏழை மக்களுக்கு சிறு தொழில்களைத் தொடங்குவதற்கான குறுங்கடன்கள் மற்றும் நீண்ட காலக் கடன்களை இந்த நிதியமைப்பு வழங்குகிறது. அதன் பின்னர் இந்த திட்டம் உலகம் முழுவதும் பரவியது.

அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைத் தாண்டி கிராமின் வங்கியில் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார், இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று பேராசிரியர் யூனுஸ் கூறினார்.

"மிகவும் ஏழ்மையானவர்கள் கூட தங்களுக்கான வளர்ச்சியை உழைப்பின் மூலம் அடைய முடியும்" என்பதைக் காட்டினார் என 2006ஆம் ஆண்டு வங்கியுடன் இணைந்து அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவர் சர்வதேச அளவில் ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அறியப்பட்டார், ஆனால் ஹசீனா அவரை 'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’ என்று அழைத்தார் மற்றும் அவரது வங்கி அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்.

ஹசீனாவுடனான பகையின் தோற்றம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு அரசியல் கட்சியை அமைப்பதற்கான யூனுஸின் தோல்வி முயற்சிகள் தான் காரணம் என்று பலர் நம்புகிறார்கள்.

ஹசீனாவின் இறுதி இலக்கு

ஹசீனாவின் இறுதி இலக்கு

பட மூலாதாரம், Getty Images

ஹசீனா இன்னும் இந்தியாவில் இருக்கிறார், ஆனால் அதுதான் அவரது இறுதி இலக்காக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பர் என்ற போதிலும் அது சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வங்கதேசத்துடன் 4,096-கிமீ (2,545-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, டாக்காவில் அமையவுள்ள புதிய அரசாங்கத்திடமிருந்து விலகி இருக்காது.

எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் யூனுஸின் நியமனம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், வங்கதேசத்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"இடைக்கால அரசு எடுக்கும் எந்த முடிவும், ஜனநாயகக் கொள்கைகளை மதிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் மற்றும் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும்," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங், ‘வன்முறையில் இருந்து விலகி இருக்குமாறும், உலகளாவிய உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும்’, வங்கதேசத்தின் அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)