வினேஷ் போகாட்: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குரல் முதல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை

பட மூலாதாரம், Getty Images
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தினார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆனால், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ்(Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வென்றால் பதக்கத்தை உறுதி செய்யலாம் என்பதால் வினேஷ் போகாட் தொடக்கத்திலேயே முழு தீவிரத்துடன் களம் கண்டார். கியூப வீராங்கனையின் சவாலை முற்றிலுமாக முறியடித்த அவர், 5-0 என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் அவர் கலந்துகொண்டு, வென்றிருந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றிருப்பார்.
முதலில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்திருந்தார். பின்னர் காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
ஜப்பான் வீராங்கனை யுய் சுசாகி நான்கு முறை உலக சாம்பியன் வென்றவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையும் ஆவார்.
சுசாகியின் சாதனைகள் பார்க்கும் போது, பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை கற்பனை செய்ய முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பிபிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பட மூலாதாரம், Getty Images
வினேஷ் போகட் 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது 2022'க்கு பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.
'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதின் நோக்கம், இந்திய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் சாதனைகளை கவுரவிப்பது ஆகும். வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பது மற்றும் உலகம் அறியாத அவர்களின் சொல்லப்படாத கதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் ஆகும்.
கடைசி 20 வினாடிகளில் மாறிய ஆட்டம்
ஜப்பானிய வீராங்கனை யுய் சுசாகி மல்யுத்த உலகில் மிகப்பெரிய வீராங்கனையாக கருதப்படுகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்பே வினேஷ் போகாட்டிற்கு ஒரு கடினமான சவால் காத்திருப்பதாக கருதப்பட்டது.
இந்தப் போட்டிக்கு முன்பாக, சர்வதேச போட்டிகளில் யுய் சுசாகி தோல்வியையே சந்திக்காதவராக வலம் வந்தார். வினேஷுக்கு எதிரான ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி 2-0 என முன்னிலையில் சுசாகி இருந்தார். இதற்குப் பிறகுதான், மல்யுத்த உலகில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதை வினேஷ் செய்தார்.
தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த வினேஷ் ஆட்டத்தின் கடைசி 20 வினாடிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு, வினேஷ் போகாட் கண்களில் வடிந்த ஆனந்தக் கண்ணீர் தெளிவாகத் தெரிந்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்குள், வினேஷ் காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார், இந்த ஆட்டத்தில் அவர் 7-5 என்ற கணக்கில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்தார்.
இந்த போட்டியில், வினேஷ் ஆரம்பத்தில் 4-0 என முன்னிலை பெற்றார். பின்னர் ஒக்ஸானா சவால் கொடுத்தாலும் அது மிகவும் தாமதமான ஒன்றாகிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி போராட்டத்தில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து வீராங்கனைகளில் வினேஷ் போகாட்டும் ஒருவர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு, அவர் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்தார்.
கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சில இந்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மறுத்தார்.
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தன. இந்த நேரத்தில், விளையாட்டு வரலாற்றில் இதுவரை கண்டிராத காட்சிகளும் அரங்கேறின.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாயும், வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளான 'கேல் ரத்னா' மற்றும் 'அர்ஜுனா விருது' ஆகியவற்றை டெல்லியில் நடைபாதையில் விட்டுச் சென்றனர். அதனை பிரதமரிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் இருவரும் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டனர்.
வினேஷ் போகட் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய திறந்த கடிதத்தில், பதக்கத்தை திருப்பித் தருவதாகக் கூறியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில், "இந்த விருதுகளுக்கு இனி என் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை அரசாங்கத்திடம் திருப்பி அளித்தார்.
இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தனது கருத்தில் கூறியுள்ளது.
சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்து

பட மூலாதாரம், Getty Images
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் பொகட்டின் மாமா மற்றும் பயிற்சியாளரான மகாவீர் போகத் உட்பட பலர் வினேஷின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில்,''நான்கு முறை உலக சாம்பியனையும் , நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் இன்று அடுத்தடுத்த போட்டியில், இந்தியாவின் சிங்கமான வினேஷ் போகாட் தோற்கடித்துள்ளார். மேலும்,காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், வினேஷ் தனது நாட்டில் உதைத்து நசுக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். நாட்டின் அமைப்பால் தோற்கடிக்கப்பட்ட இந்த பெண்தான் உலகை வெல்லப்போகிறார்'' என பதிவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த கிராமமே, இந்த சாதனையை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக மகாவீர் போகத் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “2016 ஆம் ஆண்டில், வினேஷ் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அது நடக்கவில்லை. இதே போலதான் 2020 ஆம் ஆண்டில் நடந்தது, அவர் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டார். முதல் சுற்றிலே மிகவும் வலுவான ஜப்பானின் வீராங்கனையை வினேஷ் தோற்கடித்து உள்ளார்.’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












