வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டு வாருங்கள் வினேஷ் போகாட்' என ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது என்றும், வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேச்சு
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசினார்.
மக்களவையில் பேசிய அவர், "வினேஷ் போகாட்டின் எடை இன்று 50 கிலோ 100 கிராம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, பாரிஸில் இருக்கிறார். அவருடன் பிரதமர் பேசியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளர்கள் உள்பட வினேஷ் போகாட்டிற்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது." என்று கூறினார்.

பட மூலாதாரம், SAMSAT
வினேஷ் போகாட் தகுதி நீக்கம்
நேற்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார்.
இந்த நிலையில், அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால், அவரது பதக்க கனவு பறிபோயுள்ளது.
“வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம்'

பட மூலாதாரம், EPA
புதன்கிழமை காலை பிபிசி இந்தி நிருபர் அபினவ் கோயலுடன் பேசிய, இந்திய மல்யுத்த பஜ்ரங் புனியாவும் வினேஷ் போகாட்டின் எடை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
"எந்த வீரரும் வெற்றியை முதலில் கொண்டாடுவதில்லை, முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனத் தெரியும். ஆனால் 50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம். ஆண்களுக்கு விரைவில் உடல் எடை குறையும், காரணம் அதிகமாக வியர்க்கும். பெண்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். 50 கிலோவுக்கும் கீழ் எடையைக் கொண்டுவர அவர்கள் போராட வேண்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "வினேஷ் கடந்த 6 மாதங்களாக உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டிகள் மட்டுமே சாப்பிட்டார். ஆனாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் தான்" என்றார்.
வினேஷ் போகாட் இறுதிப்போட்டி வரை சென்றதே எங்களுக்கு பதக்கம் வென்றது போல தான் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், @WeAreTeamIndia
பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், @narendramodi
பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர்.
இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை, என் வார்த்தைகள் வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோதி, இந்த விவகாரம் மற்றும் வினேஷின் பின்னடைவை அடுத்து, இந்திய அணியின் முன் உள்ள வழிகள் குறித்து நேரடியாகத் தகவல்களைக் கேட்டறிந்தார் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வினேஷுக்கு உதவுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராயும்படி அவர் பி.டி.உஷாவிடம் கூறியுள்ளார்.
மேலும் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் அவர் பி.டி.உஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வினேஷ் போகாட்டின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
“நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நாடே தங்க பதக்கத்தை எதிர்பார்த்தது. இவ்வளவு தூரம் வந்தபிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நான் மட்டுமல்ல நாடே வருத்தத்தில் உள்ளது. அவர் எதிர்காலத்தில் பதக்கம் வெல்வார்'' என வினேஷ் போகாட்டின் மாமா மகாவீர் போகாட் கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களின் கருத்து
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவமானம் என கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது வினேஷ் போகாட்டுக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே அவமானம். உலக சாதனை படைக்கவிருந்தார் வினேஷ் போகாட், 100 கிராம் எடை அதிகம் என்பதைக் காட்டி தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரிய அநீதி. ஒட்டுமொத்த நாடும் வினேஷுடன் நிற்கிறது. இந்திய அரசு இதில் தலையிட வேண்டும், தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
"வினேஷ் போகாட் இறுதிப்போட்டியில் விளையாட முடியாதது பற்றி விசாரிக்கப்பட வேண்டும், மேலும் அதன் உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்." என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












