பாரிஸ் ஒலிம்பிக் 2024: தடகளத்தில் புதிய சாதனைகள் படைப்பது ஏன் அரிதாகிவிட்டது?

பட மூலாதாரம், Reuters
யுக்ரேன் வீராங்கனை யாரோஸ்லாவா மஹுசிக், ஜூலை மாதம் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் 37 ஆண்டுகளாக இருந்த சாதனையை முறியடித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் வீராங்கனைகளில் அவரும் ஒருவர். விளையாட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, தடகளத்தில் அவர் புரிந்த சாதனை ஒரு தனித்துவமான வெற்றிக் கதை. ஏனெனில் தடகளத்தில் பெரும்பாலான உலகச் சாதனைகள் 1980களில் தான் முறியடிக்கப்பட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மஹுசிக்கின் வரலாற்று சாதனை

பட மூலாதாரம், Getty Images
உலக சாம்பியனான யாரோஸ்லாவா மஹுசிக் (22 வயது) ஜூலை 7 அன்று பாரிஸ் டயமண்ட் லீக்கில் 2.10 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார். இதற்கு முன் 1987இல் ரோம் நகரத்தில், பல்கேரியாவின் ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா 2.09 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார்.
மஹுசிக்கின் புதிய சாதனையை ‘வரலாற்றுச் சாதனை’ என்று விவரித்துள்ளார் கோஸ்டாடினோவா.
“காரணம், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, மனித திறன்களுக்கு வரம்பு இல்லை என்பதற்கும், எப்போது வேண்டுமானாலும் தடகளச் சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்பதற்கும் இது ஆதாரமாக விளங்கும்” என்கிறார் கோஸ்டாடினோவா.
மஹுசிக், 2022இல் யுக்ரேனில் உள்ள தனது சொந்த ஊரான நிப்ரோவை விட்டு வெளியேறினார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பெற்றோரைப் பிரிந்தார்.
நிப்ரோவிலிருந்து செர்பியாவின் பெல்கிரேடுக்கு, 2,000 கிமீ பயணம் செய்து மூன்று நாட்களில் சென்றடைந்தார். உலக உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.02 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.
மஹுசிக், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் யுக்ரேன் நாட்டிற்காக தங்கம் வெல்லும் முனைப்புடன் இருக்கிறார்.
தடகளத்தில் முந்தைய சாதனைகள்

பட மூலாதாரம், Getty Images
உலக வரலாற்றின் அதிவேகமாக ஓடக்கூடிய மனிதர் உசைன் போல்ட். 2008ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 9.6 வினாடிகளுக்குள் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 9.58 வினாடிகளில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
கென்யாவின் ஃபெயித் கிபிகோன், 1,500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் 2024 மற்றும் 2023இல் உலக சாதனை படைத்தவர்.
பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (Triple Jump) போட்டியில் வெனிசுவேலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.74 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளாக உடைக்க முடியாத பெரும்பாலான சாதனைகள் 80களின் பிற்பகுதியில் தான் படைக்கப்பட்டன என்றும், அவை "ஊக்கமருந்து குறித்த சர்ச்சைகள் பிரபலமாக இருந்தபோது படைக்கப்பட்டன” என்றும் பத்திரிகையாளர் மற்றும் இப்போது யுக்ரேனிய ஆயுதப் படைகளின் ராணுவ அதிகாரியாக இருக்கும் யூரி ஒனுஷ்செங்கோ கூறுகிறார்.
ஊக்க மருந்து குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், Getty Images
"பல விளையாட்டு வீரர்கள் ஹார்மோன் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் கலவைகளை எடுத்துக் கொண்டனர். 35-40 ஆண்டுகளுக்குப் பிறகும், விளையாட்டு, ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி ஆகியவற்றில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இக்கால விளையாட்டு வீரர்களால் அந்த சாதனைகள் பலவற்றை உடைக்க முடியவில்லை.” என்கிறார் சஃபோல்க் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அறிவியல் பேராசிரியர் ஜான் ப்ரூவர்.
"அந்த சகாப்தத்தில் படைக்கப்பட்ட பல சாதனைகள், செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் உதவியுடன் படைக்கப்பட்டவை என்று ஓரளவு உறுதியாகச் சொல்லலாம். அப்போது அந்த மருந்துகள் சட்டப்பூர்வமாக கிடைத்தன, ஆனால் இப்போது அவை சட்டவிரோதமானவை" என்று ஜான் கூறுகிறார்.
"போதை மருந்து சோதனை மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமாக தேசிய ஊக்கமருந்து நிறுவனம் இருக்கும், இது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் (WADA) வழிகாட்டுதலின் கீழ் செயல்படும்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கிழக்கு ஜெர்மன் தடகள வீராங்கனையான மரிட்டா கோச் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, 400 மீட்டர் ஓட்டத்தை 47.6 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட கோச்சின் சாதனை பல விவாதங்களுக்கு வித்திட்டது. முக்கியமாக அந்தச் சாதனையை யாராலும் நெருங்க முடியவில்லை. கிழக்கு ஜெர்மனி தனது விளையாட்டு வீரர்களுக்கு முறையாக ஊக்கமருந்து அளிக்கிறது என பேசப்பட்ட காலத்தில் கோச் போட்டியிட்டார்.
இருப்பினும், கோச் ஒருபோதும் போதைப்பொருள் சோதனையில் தோல்வியடையவில்லை. மேலும் தான் எந்த தவறும் செய்ததில்லை என்பதை அவர் உறுதியாகக் கூறி வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை புளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர், 1988ஆம் ஆண்டு பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் உலக சாதனைகளை படைத்தார். 1988 கோடைகால ஒலிம்பிக்கில், 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 10.54 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 200 மீட்டர் அரையிறுதியில் 21.56 வினாடிகளில் ஓடிக் கடந்து உலக சாதனை படைத்தார்.
பின்னர் இறுதிப்போட்டியில் தனது சொந்த சாதனையை அவரே முறியடித்து, 21.34 வினாடிகளில் வெற்றி பெற்றார்.
அந்த இரண்டு சாதனைகளும் இன்றும் முறியடிக்கப்படவில்லை.
கிரிஃபித் ஜாய்னரின் வியத்தகு வெற்றிகளுக்கு ஊக்க மருந்துகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் தொடர்ந்து ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், குறிப்பாக 1988இல் மட்டும் 11 முறைகள் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
நீளம் தாண்டுதலில் பெண்களின் உலக சாதனையும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 1988ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி லெனின்கிராட்டில் 7.52 மீட்டர் உயரம் தாண்டிய முன்னாள் சோவியத் யூனியனின் கலினா சிஸ்டியாகோவா இதைப் படைத்தார்.
மனித உடலின் வரம்புகள்

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் ஜான் ப்ரூவரின் கூற்றுப்படி, உலக தடகளத்தில் சாதனைகளை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருகிறது.
"பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நிகழ்விலும், போட்டியாளர்களின் செயல்திறன்கள் மேம்பட்டுள்ளன. ஆனால் இறுதியில், மனித உடல் அதன் செயல்திறனின் வரம்பை எட்ட தான் செய்யும்," என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "காலப்போக்கில் நாம் பார்த்தது என்னவென்றால், சமயங்களில் ஒப்பீட்டளவில் செயல்திறன் அதிகரித்தாலும், மனித உடல் அதன் வரம்பை அடையும்போது தவிர்க்க முடியாத வகையில் மனித செயல்திறன் படிப்படியாக சரிய ஆரம்பிக்கும்."
"இருப்பினும் பயிற்சி, விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து நிகழ்வுகளிலும் நாம் தொடர்ந்து செயல்திறன் முன்னேற்றங்களை எதிர்பார்ப்போம் என்று நினைக்கிறேன். இருப்பினும், முன்னேற்றத்தின் அளவு படிப்படியாக குறையும். பல விளையாட்டுகளில் நாம் ஏற்கனவே அதைப் பார்த்து வருகிறோம்” என்று கூறுகிறார்.
பேராசிரியர் ப்ரூவரின் கூற்றுப்படி, போட்டித் தடங்களின் வளர்ச்சி மற்றும் கார்பன் ஃபைபர் கொண்டு இயங்கும் ஷூக்கள் ஆகியவை தொழில்நுட்ப முன்னேற்றங்களின் சிறந்த உதாரணங்கள்.
"அவை தரையில் கால்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை உள்ளிழுத்து, ஒரு ஓட்டப்பந்தயப் போட்டியாளர் முன்னோக்கி செல்ல அந்த ஆற்றலைப் பயன்படுத்த உதவுகின்றன".
"இதனால், ஓடுபவர்கள் குறைந்த ஆற்றல் மற்றும் முயற்சியுடன் வேகமாக ஓட முடியும். அதுமட்டுமில்லாது அவர்கள் அதிக தூரம் விரைவாக ஓட முடியும்" என்று அவர் கூறுகிறார்.
“விளையாட்டு வீரர்களின் செயல்திறனை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மதிப்பிட முடியும் என்றாலும், செயல்திறனின் சில அம்சங்களை அளவிடுவது எளிதல்ல. அதாவது லட்சியம், உந்துதல் சக்தி மற்றும் மனநிலை போன்றவை" என்று கூறுகிறார் விளையாட்டு உளவியலாளர் சோஃபி புரூஸ்.
"சாதனைகள் என்பது முறியடிக்கப்படுவதற்கு மட்டுமே இல்லை, அவை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் அடையாளமும் கூட. வரலாற்றில் போட்டியாளர்கள் சந்தித்த அசாதாரணமான, மிகச்சிறந்த தருணங்களையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன." என்கிறார் சோஃபி புரூஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












