ஒலிம்பிக்ஸ் 2024: விண்ணை அலங்கரித்த ராட்சத பலூன், இந்தியாவின் 117 வீரர்கள் - சுவாரஸ்ய நிகழ்வுகள்

ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்ணில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்
    • எழுதியவர், சோனியா ஓக்ஸ்லே
    • பதவி, பிபிசி விளையாட்டு

பாரிஸில் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. தொடக்க நிகழ்வில் சென் நதியில் படகுகள் அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.

அப்போது பாலங்கள், நதிக்கரை மற்றும் மேற்கூரைகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதன்முறையாக இந்த நிகழ்ச்சி அரங்கத்தில் நடைபெறாமல், நகரின் மையப் பகுதியில் நடைபெற்றது.

நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவாக, புகழ்பெற்ற பிரெஞ்சு ஜூடோ நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூடோ வீரர் டெடி ரைனர் மற்றும் தடகள வீரர் மேரி-ஜோஸ் பெரெக் இருவரும் மிகப்பெரிய காற்று நிரப்பப்பட்ட பலூனை விண்ணில் பறக்கவிட்டனர்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒலிம்பிக்ஸ் தொடக்க நிகழ்வில் 250 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,800 வீரர்கள் 85 படகுகள் மற்றும் ஓடங்களில் அணிவகுத்தனர். அப்போது, தலைநகரின் முக்கிய அடையாளமாகத் திகழும் ஆஸ்டர்லிட்ஸ் பாலம், சிவப்பு, வெள்ளை மற்றும் நீலநிற வான வேடிக்கைகளால் ஒளிர்ந்தது.

தொடக்க நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அமெரிக்க பாடகர் லேடி காகா, கனடிய பாடகர் செலின் டியான் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆனால், கனமழை காரணமாக கலை இயக்குநர் தாமஸ் ஜோலியின் கலை நிகழ்ச்சி தடைபட்டது. மேலும், தொடக்க நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, பிரான்ஸின் அதிவேக ரயில் நெட்வொர்க்கை குறிவைத்து நாச வேலைகள் நடைபெற்றதால் அச்சேவை பாதிக்கப்பட்டது.

கடைசியாக வந்த அமெரிக்க மற்றும் பிரான்ஸ் படகுகள்

ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடக்க நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் படகு கடைசியாக வந்தது.

கனமழை காரணமாக விளையாட்டு வீரர்கள் ரெயின்கோட் மற்றும் குடைகளின் உதவியை நாடினர். ஆனால், அது அவர்களின் பெரும் ஆர்வத்தைக் குறைக்கவில்லை.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் மற்ற கலைஞர்கள் பிரெஞ்சு வரலாறு, கலை, விளையாட்டு ஆகியவற்றை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அமெரிக்காவின் படகு மற்றும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் படகு அணிவகுப்பில் கடைசியாக வந்தன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்லில் தான் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படகுகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.

படகோட்டி வீராங்கனை ஹெலன் குளோவர் மற்றும் டைவர் டோம் டேலே ஆகியோர் பிரிட்டனின் கொடியை ஏந்திச் சென்றனர்.

மூன்றாவது முறையாக பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக பாரிஸில் ஒலிம்பிக் நடைபெறுகிறது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் சிக்கல்களுக்கு இடையே 33வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக், உலகில் அமைதியை ஒருங்கிணைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக விளையாட்டு வீரர்களிடம் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்கள் 32 விதமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11இல் நிறைவடையும்.

தனித்துவமான தொடக்க நிகழ்ச்சி

ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images

அரங்கத்தில் அல்லாமல் நதிக்கரையில் தொடக்க நிகழ்ச்சியை நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டபோது, இத்தகைய பெரிய நிகழ்வில் அங்கு எப்படி பாதுகாப்பு வழங்கப்படும் எனப் பலரும் ஆரம்பத்தில் கேள்வி எழுப்பினர்.

சென் நதியின் தூய்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆறு கிலோமீட்டர் தொலைவு பயணத்தில் வீரர்களை ஒத்திகையின்றி பயணிக்க வைப்பது லட்சிய திட்டமாகக் கருதப்பட்டது.

ஆனால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பாரிஸ் தனது திட்டத்தை வண்ணமயமாக நிறைவேற்றியது.

மோசமான வானிலை காரணமாக, முன்கூட்டியே திட்டமிட்டபடி ஒலிம்பிக் சுடர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொண்டு வரப்படவில்லை.

பிரெஞ்சு கால்பந்து வீரரான ஜீனடின் ஜிதேன் ஒலிம்பிக் சுடரைக் கொண்டு வந்தபோது, அவர் வந்த ரயில் தடைபட்டது. பாலே நடனம், பிரெஞ்சு கேன்-கேன் நடனம், ஓபரா ஆகிய கலை நிகழ்ச்சிகள் தொடக்க நிகழ்வை உயிர்ப்பித்தன.

ஆஸ்டர்லிட்ஸ் பாலம் முதல் பாண்ட் எலெனா பாலம் வரை மேற்கூரையில், முகம் முழுவதும் மூடப்பட்ட நிலையில் ஒருவர் ஒலிம்பிக் சுடருடன் ஓடியதைக் காண முடிந்தது.

புகழ்பெற்ற லூவ் அருங்காட்சியகம், ஈஃபிள் டவர், பெரிய அரண்மனை, புகழ்பெற்ற நினைவுச் சின்னமான ஆர்க் டே ரியோம்ப் ஆகியவற்றை படகுகளில் வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் கடந்து சென்றனர்.

இந்தியாவின் 117 வீரர்கள்

ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images

நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இந்திய வீரர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

படகில் இந்திய கொடியை பி.வி. சிந்து அசைக்கும் காட்சியைக் காண முடிந்தது. அப்போது, அனைத்து இந்திய வீரர்களும் தேசியக் கொடியைத் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.

இந்தியா சார்பாக இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 117 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்பாக இது உள்ளது.

இரட்டை இலக்கத்தில் பதக்கங்களைப் பெறுவதை இந்தியா தன் இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், இதை அடைவது இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ராவை தவிர, மற்ற விளையாட்டு வீரர்கள் அந்தந்த போட்டிகளில் சிறந்த போட்டியாளர்கள் அல்ல.

அமைதிக்கான அழைப்பு

ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மற்றும் காஸாவுக்கு இடையிலான போர், பெய்ஜிங்கில் 2022இல் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கியபோது ஆரம்பித்தது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக், போர்கள் மற்றும் நெருக்கடிகள் நிரம்பிய உலகில் இத்தகைய ஒற்றுமைக்காக நன்றி கூறினார்.

“இந்த இரவில் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அகதிகள் ஒலிம்பிக் குழுக்களின் வீரர்கள் ஒன்றிணைந்துள்ளனர்” என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ‘ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை’ ஆகியவை அமைதி கீதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் சண்டைகளும் இந்த ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பிரதிபலித்தன. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் பெலாரூஸ் அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவை சேர்ந்த 15 வீரர்கள் மற்றும் பெலாரூஸை சேர்ந்த 17 வீரர்கள் மட்டுமே தனிநபர் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். அவர்கள் இந்தத் தொடக்க நிகழ்வில் பங்கேற்கவில்லை.

அகதிகள் ஒலிம்பிக் குழு மற்றும் பாலத்தீன ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பிரிட்டனின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் சர் கெய்ர் ஸ்டாமர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங் ஆகியோரும் பங்கேற்றனர்.

இன்று (சனிக்கிழமை) 14 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

டைவிங், வாள்வீச்சு, ஜூடோ, சைக்கிளிங், எழுவர் ரக்பி, ஸ்கேட்டிங், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இதில் அடங்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)