பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் 11 நட்சத்திரங்கள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: நீங்கள் கவனிக்க வேண்டிய 11 நட்சத்திர வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சோனியா ஆக்ஸ்லே
    • பதவி, பிபிசி விளையாட்டு

பாரிஸில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகமெங்கிலும் உள்ள சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள 11 நட்சத்திரங்கள் யார்? அவர்களின் கதைகள், முந்தைய சாதனைகள் உலகப் பார்வையுடன் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

லியோன் மார்ச்சண்ட் (பிரான்ஸ்) - நீச்சல்

லியோன் மார்ச்சண்ட்

பட மூலாதாரம், Getty Images

ஐந்து முறை உலக சாம்பியனான இவர், ஒலிம்பிக் போட்டிகளின் முகமாக இருந்துள்ளார். இம்முறை நீச்சல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வெல்வதற்கான முயற்சியில் உள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் 22 வயதான இவர், படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் வேடிக்கையாகப் பல சாதனைகளை முறியடித்து வந்தார். அதில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தம் வசம் 15 ஆண்டுகளாக வைத்திருந்த 400 மீட்டர் தனிநபர் மெட்லி உலக சாதனையை 2023இல் முறியடித்ததும் ஒன்று.

இரு ஒலிம்பிக் நீச்சல் வீரர்களின் மகனான மார்ச்சண்ட், 200 மீட்டர் தனிநபர் மெட்லி (நான்கு வித நீச்சல் போட்டிகளை உள்ளடக்கியது), 400 மீட்டர் தனிநபர் மெட்லி மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டிகளில் உலக சாம்பியன் ஆவார்.

இவர், 200 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை டபுள் போட்டிகளில் வெல்லும் முதல் நீச்சல் வீரராக முயன்று வருகிறார். அதற்காக, ஒரே நாளில் நடைபெறும் இரு போட்டிகளில் அவர் போட்டியிட வேண்டும்.

மைக்கேல் ஃபெல்ப்ஸின் முன்னாள் பயிற்சியாளர் தான் மார்ச்சண்ட்க்கு பயிற்சி அளித்துள்ளார். நான்கு தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை தங்கள் நாட்டு ரசிகர்கள் முன்பு வெல்வதற்கான வாய்ப்பு மார்ச்சண்ட்க்கு உள்ளது.

சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) - ஜிம்னாஸ்டிக்

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுவதைக் கடைசியாக ஒருமுறை பார்த்ததாகப் பலரும் நினைத்திருந்தனர்.

தன்னிடம் உள்ள நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மேலும் சில பதக்கங்களைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்னாஸ்டிக்கில் காற்றில் சுழலும்போது ஏற்படும் மனத்தடை (twisting moves) காரணமாக டோக்கியோ போட்டிகளில் இருந்து விலகினார் சிமோன் பைல்ஸ்.

மீண்டும் உணர்ச்சிபூர்வமாக போட்டிகளுக்குத் திரும்பிய அவர், ஏழாவது ஒலிம்பிக் பதக்கமாக வெண்கல பதக்கத்தை வென்றார். பின்னர் விளையாட்டில் இருந்து விலகியிருந்த அவர், ஜூன் 2023 முதல் மீண்டும் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்.

அப்போதிருந்து பைல்ஸ் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார். அவர் தன்னுடைய சிகிச்சையாளரைத் (therapist) தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

“மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன். இதற்காக மிகவும் உழைத்திருப்பதால், டோக்கியோவில் நடந்தது மீண்டும் நடக்காது” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நோவக் ஜோகோவிச் (செர்பியா) - டென்னிஸ்

நோவக் ஜோகோவிச்

பட மூலாதாரம், Getty Images

கிராண்ட் ஸ்லாம் எனும் டென்னிஸ் விளையாட்டின் பெரு வெற்றித் தொடர் போட்டிகளில் 24 முறை வென்றுள்ள ஜோகோவிச்சின் பதக்கங்களில் ஒலிம்பிக் தங்க பதக்கம் மட்டும்தான் இன்னும் சேரவில்லை.

அவருடைய முக்கிய இலக்காக பாரிஸ் 2024 இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

நான்கு முக்கியமான தொடர் போட்டிகளில் வெற்றியுடன், டோக்கியோ 2020 போட்டிகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலக்குடன் இருந்த ஜோகோவிச், அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் தோற்றார், மேலும் வெண்கல பதக்கத்தையும் அவரால் வெல்ல முடியவில்லை.

கடந்த காலங்களில் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றியுடன் திரும்பி வந்த ஜோகோவிச், இப்போதும் பெரும் ஏமாற்றம், தடைகளைக் கடந்து வலுவுடன் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 37 வயதான அவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையல்லை, எந்த வெற்றியையும் அவர் பெறவில்லை, உலக தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் இல்லை.

காலிறுதிச் சுற்றுக்கு முன்னதாகவே முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் பங்கெடுப்பது முடிவுக்கு வந்தது. பிரேஸ் எனும் முழங்கால் பட்டையை அணிந்துகொண்டு விம்பிள்டன் இறுதிச்சுற்று வரை வந்த ஜோகோவிச், கார்லஸ் அல்கராஸால் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் அவர் உடல் தகுதியுடன் இருந்தால் பெய்ஜிங்கில் 2008இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதைவிட இந்த முறை முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

கேட்டி லெடெக்கி (அமெரிக்கா) - நீச்சல்

கேட்டி லெடெக்கி

பட மூலாதாரம், Getty Images

ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை யாராவது நிறுத்த முடியுமா?

நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் 27 வயதான லெடெக்கி, தனது நாட்டைச் சேர்ந்த சக போட்டியாளர் ஜென்னி தாம்ப்சனின் சாதனையை முறியடித்து, மிகச் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் ஒரு பதக்கத்தை வெல்ல வேண்டியுள்ளது.

அவர், 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் மற்றும் 4*200 மீட்டர் ரிலே ஆகிய நான்கு போட்டிகளில் பங்கெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜென்னி தாம்ப்சனின் 12 பதக்கங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையையும் 10 பதக்கங்களைக் கொண்டுள்ள லெடெக்கி முறியடிக்கலாம்.

லெடெக்கி 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் கனடிய இளம் வீராங்கனை சம்மர் மெக்கின்டோஷிடம் தோற்றதுதான் கடந்த 13 ஆண்டுகளில் லெடெக்கியின் முதல் தோல்வியாக இருக்கும் நிலையில், இதனால் அவருடைய போட்டியாளர்களுக்குச் சிறு நம்பிக்கையும் தென்படுகிறது.

நோவா லைல்ஸ் (அமெரிக்கா) - தடகளம்

நோவா லைல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க தடகள வீரரான இவர், இம்முறை சில பெரிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் , 100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் என நான்கு தங்க பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவற்றில் முதல் மூன்று போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். உலக தடகள உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற இவர், 4*400 மீட்டருக்கான போட்டியில் தனக்கான இடத்தைப் பெற முயன்று வருகிறார்.

இதுவும் போதவில்லையெனில், ஜமைக்காவின் சிறந்த வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் உலக சாதனைகளை முறியடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017ஆம் ஆண்டில் உசைன் போல்ட் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபெயித் கிபிகோன் - தடகளம்

ஃபெயித் கிபிகோன்

பட மூலாதாரம், Getty Images

இருமுறை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ள கிபிகோன், “பிரகாசமான கோடைக்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாக” ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1500 மீட்டர் - 5,000 மீட்டருக்கான போட்டிகளில் தான் வென்றதைப் போன்று, இம்முறையும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல 30 வயதான இவர் முயன்று வருகிறார்.

அவர், 5,000 மீட்டருக்கான உலக சாதனையை முன்பு படைத்தார். கடந்த ஆண்டு பாரிஸில் எட்டு ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் முத்திரையைப் பதித்தார். அதன் பின்னர் இச்சாதனை எத்தியோப்பியாவின் குடாஃப் செகேயால் தோற்கடிக்கப்பட்டது.

தனது தடகள வாழ்க்கையை 16 வயதில் ஆரம்பித்த கிபிகோன், 2011இல் நடைபெற்ற உலக ஜூனியர் நாடு கடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றுக் காலில் ஓடித் தன்னுடைய முதல் தனிநபர் உலக சாதனையைப் படைத்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தாயானபோது அது எப்படித் தனது மனநிலையை மாற்றியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். நான்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களில் மூன்று பட்டங்களை அவர் தாயானதற்குப் பின்பே பெற்றார்.

அன்டோயின் டுபோன்ட் (பிரான்ஸ்) - ரக்பி செவன்ஸ்

அன்டோயின் டுபோன்ட்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு சொந்த நாட்டு ஒலிம்பிக்கில் போட்டியிடும் தனது கனவைத் தொடர XVகளில் இருந்து செவன்ஸுக்கு மாறுவதாக டுபோன்ட் (Dupont) அறிவித்தபோது, ​​அது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

XV-a-சைடில் உலகின் சிறந்த வீரராகப் பலரால் கருதப்படும் பிரான்ஸ் கேப்டன் மற்றும் ஸ்க்ரம்-ஹாஃப் டுபோன்ட் (scrum-half), உலக ரக்பி செவன்ஸ் சர்க்யூட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சிக்ஸ் நேஷன் போட்டிகளைத் தவிர்த்துவிட்டார்.

கனடாவின் வான்கூவரில் நடந்த தனது தொடக்கப் போட்டியில் அந்த அணிக்கு வெண்கலப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர், மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்கள் செவன்ஸ் பட்டத்தை வெல்ல பிரான்ஸ் அணியை ஊக்கப்படுத்தினார். கடந்த 19 ஆண்டுகளில் அவர்கள் பெறும் முதல் பட்டம் இது.

"நாங்கள் மிகவும் லட்சியம் கொண்ட அணி, தங்கப் பதக்கத்தை வெல்ல விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் அதற்காகப் பாடுபடுகிறோம்" என்று 27 வயதான அவர் கூறினார்.

மற்ற அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. 2016ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் செவன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஃபிஜி (Fiji) இரண்டு ஆண்களுக்கான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

ரியோ 2016இல் நடந்த காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் ஜப்பானிடம் தோற்கடிக்கப்பட்டு டோக்கியோ 2020க்கு தகுதி பெறவில்லை.

ஆனால் புதன்கிழமை தொடங்கும் பாரிஸில் நடக்கும் காலிறுதியில் பிரான்ஸ் ஏற்கெனவே தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் டுபோன்ட் ஓர் அற்புதமான தனி முயற்சி மூலம் இந்த விளையாட்டுகளின் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

நீரஜ் சோப்ரா (இந்தியா) - தடகளம்

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம், Getty Images

நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் `டிராக் மற்றும் ஃபீல்ட்’ தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரரான சோப்ரா, பாரிஸில் தனது ஈட்டி எறிதல் போட்டியின் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளார்.

டோக்கியோவில் அபார வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய தடகள வீரர் என்னும் பெருமையைப் பெற்றார்.

இந்தியாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் தலைசிறந்த விளையாட்டு வீரரான பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் என்பவர்தான் நீரஜ் சோப்ராவின் வலிமையான எதிரி.

டோக்கியோ 2020இல் ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்ட் பைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் ஆன பிறகு நதீம் தனது சொந்த நாட்டு வரலாற்றைப் பெருமைப்படுத்தி உள்ளார்.

அவர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ராவுக்கு அடுத்த இடத்தில், வெள்ளி வென்றார். அதோடு தடகளத்தில் தனது பாகிஸ்தானில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார்.

ஓல்ஹா கர்லன் (யுக்ரேன்) - வாள்வீச்சு

ஓல்ஹா கர்லன்

பட மூலாதாரம், Getty Images

நான்கு முறை உலக சாம்பியனான ஓல்ஹா கர்லன், ரஷ்ய எதிராளியுடன் கைகுலுக்க மறுத்ததற்காக விதிக்கப்பட்ட தடையின் காரணமாக இம்முறை போட்டிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

அன்னா ஸ்மிர்னோவாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கைகுலுக்குவதற்குப் பதிலாகக் கத்திகளை தட்டிக் கொள்ளும் நோக்கத்தில் தன் கத்தியை வழங்கியதால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து கர்லன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், கர்லானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய "தனித்துவமான சூழ்நிலை" காரணமாக அவர் தகுதிபெற முடியாவிட்டால், அவரது அணி "கூடுதல் இடத்தை ஒதுக்கீடு செய்யும்" என்று அவர் கூறினார்.

நான்கு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நிலவி வரும் போர் சூழல்களுக்கு மத்தியில் யுக்ரேனியர்களுக்கு "நம்பிக்கையை" கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.

பாரிஸில் நடுநிலை விளையாட்டு வீரர்களாகப் பங்கேற்க எந்த ரஷ்ய அல்லது பெலாரஷ்ய வாள்வீச்சு வீரர்களும் அழைக்கப்படவில்லை, 33 வயதான கார்லன் இதை "வெற்றி" என்று விவரித்தார்.

ஸ்டீபன் கறி (அமெரிக்கா) - கூடைப்பந்து

ஸ்டீபன் கறி

பட மூலாதாரம், Getty Images

என்பிஏ-வின் தலைசிறந்த வீரரான ஸ்டீபன் கரி பாரிஸில் ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறார்.

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியின் `பாயின்ட் கார்டு’ என்று அழைக்கப்படும் ஸ்டீபன் நட்சத்திர ஆட்டக்காரர்கள் நிறைந்த அமெரிக்க ஆண்கள் அணியின் ஒரு பகுதியாக விளையாடுகிறார்.

இந்த அணியினர், கடந்த 2004 முதல் ஒவ்வொரு முறையும் தங்கத்தை வென்றுள்ளனர். அந்த அணியின் 16 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மற்றொரு தங்கத்தையும் சேர்ப்பதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

இரண்டு முறை `மிகவும் மதிப்புமிக்க வீரர்’ ( MVP ) பட்டம் உட்பட 4 என்பிஏ விருதுகள், இரண்டு உலகக் கோப்பைகள் என வென்று குவித்த கரியின் பதக்க சேகரிப்பில் இல்லாத ஒரே விஷயம் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே.

என்பிஏ அணியின் அதிக மதிப்பெண் பெற்றவரான லெப்ரான் ஜேம்ஸ், லண்டன் 2012க்குப் பிறகு முதன்முறையாக விளையாட உள்ளார். மேலும் கெவின் டுரான்ட் கூடைப்பந்தாட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் ஆண் தடகள வீரர் என்ற சாதனையைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (ஜமைக்கா) - தடகளம்

ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்

பட மூலாதாரம், Getty Images

வெற்றி தோல்வி என எல்லா சூழலையும் 37 வயதான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் சந்தித்திருந்தாலும், அவரது ஐந்தாவது மற்றும் இறுதி ஒலிம்பிக்கில் சிறந்த திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எப்போதும் முடிவென்பதே கிடையாது" என்று மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஹெல்லி இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.

ஐந்து முறை 100 மீட்டர் உலக சாம்பியனான ஃப்ரேசர்-பிரைஸ் இந்த சீசனில் காயங்களுடன் போராடினார். ஆனால் தனது முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக விளையாடும் சக வீராங்கனை ஷெரிக்கா ஜாக்சனுடன் இணைந்து பாரிஸில் போட்டியிடுவார்.

அவர்கள் 4x100 மீ தொடர் ஓட்டக் குழுவில் இடம் பிடித்திருப்பதால், ஜமைக்கா தங்கள் பட்டத்தைக் காக்க முயல்கிறது.

கவனிக்க வேண்டிய மற்ற வீரர்கள்

ஜெர்மன் குதிரையேற்ற வீராங்கனையான இசபெல் வெர்த், தான் பங்கேற்ற எந்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்லத் தவறியதில்லை. அவருக்கு இப்போது 55 வயதாகிறது.

தனது ஏழாவது போட்டியில் பங்குபெறும் அவர், தனது ஏழு தங்கம் மற்றும் ஐந்து வெள்ளிப் பதக்கங்களைச் சேர்த்து, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் பெறும் வீராங்கனை என்ற சாதனையைத் தக்க வைப்பார் என்று நம்புகிறார்.

ஜார்ஜியாவை சேர்ந்த 55 வயதான பிஸ்டல் ஷூட்டர் நினோ சலுக்வாட்ஸே தனது 10வது ஒலிம்பிக்கில் பங்கேற்று, கனடிய குதிரையேற்ற தடகள வீரர் இயன் மில்லரின் சாதனையைச் சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்தால் சலுக்வாட்ஸே இதை முதன்முதலில் சாதித்தவராக இருப்பார்.

கியூபாவின் மிஜைன் லோபஸ், கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் தொடர்ச்சியாக ஐந்து தனிநபர் தங்கம் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஜெஸ் ஃபாக்ஸ் கேனோ ஸ்லாலோமில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மேலும் கயாக் கிராஸின் புதிய ஒழுக்கத்துடன், ஒரே விளையாட்டுப் போட்டிகளில் மூன்று கேனோ தங்கங்களை வென்ற முதல் நபராக இருக்க வாய்ப்புள்ளது.

டேபிள் டென்னிஸில், பிரேசிலின் புருனா அலெக்ஸாண்ட்ரே, ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலியா பார்ட்டிகாவுக்கு பிறகு, பாராலிம்பிக்ஸில் போட்டியிடும் இரண்டாவது தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)