கேமி சூறாவளி: தாய்வான், பிலிப்பைன்ஸில் மூழ்கிய கப்பல்கள்- 9 பேரை தேடிவரும் மீட்பு படை

கேமி சூறாவளி

பட மூலாதாரம், Taiwan Coastguard Administration

படக்குறிப்பு, சூறாவளி காரணமாக தாய்வானில் கரை ஒதுங்கிய ஒரு கப்பல்

தாய்வானின் தெற்கு கடலில் சரக்கு கப்பல் மூழ்கியதால் காணாமல் போன 9 பேரை, மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

கேமி சூறாவளி தாய்வானை தாக்கியபோது, இந்த சரக்கு கப்பல் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் இருந்துள்ளது.

தங்களது கடற்பகுதியில் மூழ்கிய ஃபு ஷுன் என்ற சரக்குக் கப்பலில் மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் இருந்ததாக தாய்வானின் கடலோர காவல்படை கூறியுள்ளது.

அத்துடன் இந்த சூறாவளியில் மேலும் 3 வெளிநாட்டு கப்பல்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆனால் அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளியால் பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்து. இங்கு 1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு கப்பல் கவிழ்ந்தது.

பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய 'எம்டி டெர்ரா நோவா' என்ற இந்த கப்பலிலிருந்து 16 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணவில்லை என போக்குவரத்து செயலாளர் ஜெய்ம் பாவுடிஸ்டா தெரிவித்தார்.

புதன் கிழமை தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் கேமி சூறாவளி கரையைக் கடந்தது. இதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்வானைத் தாக்கும் முன்,கேமி பிலிப்பைன்ஸில் மழை பொழிவை அதிகப்படுத்தியது. கடும் மழை காரணமாக அங்கு எட்டு பேர் இறந்தனர்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கேமி சூறாவளி தாய்வானை கடந்து சென்றபிறகு, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இரண்டாம் முறையாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில், மணிலா விரிகுடாவில் கவிழ்ந்த டேங்கர் கப்பல், மத்திய நகரமான இலோய்லோவை நோக்கிச் சென்றது எனவும், இது பல கிலோமீட்டர் நீளத்திற்கு எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் தங்கள் நடவடிக்கைகளை தடுக்கின்றன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த டேங்கர் கப்பல் "கவிழ்ந்து இறுதியில் மூழ்கியது" என கூறும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை, மோசமான வானிலை ஒரு காரணமா என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் அர்மாண்டோ பாலிலோ, கசிவைக் கட்டுப்படுத்த கடலோரக் காவல்படை விரைவாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

கப்பலில் உள்ள உள்ள அனைத்து எண்ணெய்களும் கசிந்தால், பிலிப்பைன்ஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய கசிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கேமி சூறாவளி

பட மூலாதாரம், Hualien Fire Department

அந்த எண்ணெய் அருகிலுள்ள பல மீனவ கிராமங்களின் கரையை அடைந்தது. இதனால் கடற்கரைகள் கருப்பு சேறாக காட்சியளிக்கின்றன.

கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றலை அனுபவிப்பதாக கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட கிராமமான போலாவுக்கு அனுப்பப்பட்ட துப்புரவு பணியாளர்களும் தங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

தாய்வானில், சூறாவளி காரணமாக தீவின் மிகப்பெரிய வருடாந்திர ராணுவ பயிற்சியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீவு முழுவதும் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூர் அதிகாரிகளால் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன் அன்று, பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.சூறாவளி கடந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கருதிய மக்கள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)