கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவாரா? அதிபர் பைடன் புதிய வேண்டுகோள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின் வாங்கிய நிலையில் தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். ஆனாலும், பைடனுக்கு ஆதரவு அளித்த பிரதிநிதிகள் அனைவரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் .
கமலா ஹாரிஸுக்கு 27 மாகாண பிரதிநிதிகள் ஆதரவு
குறைந்தது 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் தங்களின் ஒருமித்த ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக சிபிஎஸ் நியூஸ் கூறியுள்ளது.
ஞாயிறு அன்று தேர்தலில் இருந்து பைடன் பின்வாங்கிய சூழலில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதையே சுட்டிக்காட்டுக்கிறது இந்த கணக்கெடுப்பு.
பைடனின் அறிவிப்பு வெளியான சூழலில், லட்சக்கணக்கான டாலர்கள் கமலா ஹாரிஸின் பரப்புரைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தயாராகும் கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸின் பரப்புரை தலைமையகம் டெலாவரில் உள்ள வில்மிங்டனில் அமைந்துள்ளது. திங்கள் கிழமை மாலை, "தேர்தலுக்கு இன்னும் 106 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் சில கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று கமலா ஹாரிஸ் பேசியதாக பரப்புரை அதிகாரிகள் கூறினார்கள்.
அமெரிக்கா குறித்த தன்னுடைய பார்வையை பரப்புரை குழுவிடம் விவரித்த கமலா ஹாரிஸ், அந்த பார்வை தான் அவருடைய பரப்புரையை டிரம்பின் பரப்புரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"எங்களின் பரப்புரையில் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து இருவேறு பார்வைகள் உள்ளன. ஒன்று எதிர்காலத்தை மையப்படுத்தி மற்றொன்று கடந்த காலத்தைப் பற்றி. டிரம்ப் நம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல பார்க்கிறார்... நாங்களோ அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பைடனின் சாதனைகள் குறித்து பேசிய அவர், பைடனின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக செயல்பட்டது தன்னுடைய வாழ்வின் கவுரமான தருணங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ்.
தன்னுடைய உணர்வுகள் கலவையாக இருந்ததை தெரிவிக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளருக்கான வாய்ப்பைப் பெறவும், ஜனநாயகக் கட்சியினரையும் அமெரிக்க தேசத்தையும் ஒன்றாக இணைக்கவும் கடினமாக உழைக்க இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பைடன் வேண்டுகோள்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைடன், தேர்தலில் இருந்து பின்வாங்கிய பிறகு அலைபேசி வாயிலாக தன்னுடைய முதல் கருத்தை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கமலா ஹாரிஸ் சிறந்தவர் எனவே அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
"நேற்று என்னுடைய அறிவிப்பானது உங்களுக்கு கடினமானதாகவும், ஆச்சரியம் அளிக்க கூடியதாகவும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அது தான் சரியான முடிவு," என்று அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து குறிப்பிட்டிருந்தார்.
"இரண்டாவது முறையாக என்னை அதிபராக்க நீங்கள் அனைவரும் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினீர்கள். ஆனால் நான் எங்கும் செல்லவில்லை. இந்த பரப்புரை முழுவதும் உங்களுடன் தான் இருப்பேன்" என்றும் அவர் பரப்புரை குழுவினரிடம் பேசினார்.
என்னுடைய பரப்புரையில் நீங்கள் எப்படி முழுமனதாக செயல்பட்டீர்களோ அவ்வாறே கமலா ஹாரிஸின் பரப்புரையிலும் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'இந்த ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும். டிரம்ப் இந்த நாட்டிற்கு அபாயமானவர்' என்றும் பைடன் பரப்புரை குழுவினரிடம் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












