ஜே.டி.வான்ஸ்: டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை

வான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ்
    • எழுதியவர், மைக் வென்ட்லிங்
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில், டொனால்ட் டிரம்பை மிக கடுமையான விமர்சனம் செய்த வான்ஸ் இப்போது டிரம்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வளர்ந்தது எப்படி?

"டிரம்ப் வேண்டாம் என்று கூறுபவன் நான். அவரை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை"

"என்ன ஒரு முட்டாள்?"

"கண்டனத்துக்கு உரியவர் டிரம்ப்!"

இப்படியாக டிரம்ப் பற்றி ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜே.டி.வான்ஸ். 2016ம் ஆண்டு வான்ஸ் எழுதிய ஹில்பில்லி எலெஜி (Hillbilly Elegy) என்ற புத்தகம் அவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றபோது ட்விட்டரிலும், நேர்காணலிலும் டிரம்ப் குறித்து வான்ஸ் இதைத் தான் கூறினார்.

அதே ஆண்டு பேஸ்புக்குக்கு வான்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தியில் "டிரம்ப் ஒரு மோசமான ஆள் அல்லது அமெரிக்காவின் ஹிட்லர் என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஒரு சில வருடங்களில் டிரம்பின் நெருங்கிய அரசியல் வட்டாரங்களில் ஒருவராக மாறியிருக்கிறார் வான்ஸ்.

ஓஹையோ மாகாணத்தில் முதன்முறையாக செனட்டராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது டிரம்பின் பக்கம் நிற்கிறார். துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், 2028-ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறார் வான்ஸ். கடினமான இளமைப் பருவத்தில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் மிகப்பெரிய உயரத்தை இவர் அடைந்தது எப்படி?

BBC Tamil Whatsapp channel

பட மூலாதாரம், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகழுக்கு அழைத்துச் சென்ற புத்தகம்

வான்ஸ், ஓஹையோவின் மிடில்டவுனில் ஜேம்ஸ் டேவிட் பெளமனாக பிறந்தவர். அம்மா போதைப் பழக்கத்துக்கு ஆளானவர். அவரின் அப்பா, வான்ஸ் சிறுவயதாக இருக்கும் போதே, வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் வான்ஸ். தன்னுடையை ஹில்பில்லி எலெஜி என்ற நினைவுக்குறிப்பு புத்தகத்தில் "மாமாவ்", "பாப்பாவ்" என்று வாஞ்சையோடு பாட்டி, தாத்தாவை நினைவு கூறியிருப்பார் வான்ஸ்.

தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வந்த ஓஹையோவில் மிடில்டவுன் இருந்தாலும் தன்னுடைய பூர்வீகம் பற்றி பேசும் போது தெற்கே இருக்கும் அப்பலாச்சியா மலைப்பிரதேசத்தை குறிப்பிடுகிறார் வான்ஸ். அமெரிக்காவின் தெற்கு பிராந்தியத்தில் இருந்து மத்தியமேற்கு பகுதி வரை பரவியிருக்கும் மலைத்தொடரே இந்த அப்பலாச்சியா. அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராந்தியங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

தன்னுடைய புத்தகத்தில் அவர் சந்தித்த சவால்கள், வலி நிறைந்த முயற்சிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எடுத்த மோசமான முடிவுகள் பற்றி மிக நேர்மையுடன் எழுதியிருப்பார் வான்ஸ்.

பழமைவாதிகள் குறித்த பார்வையும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். அவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் நபர்கள் என்றும், நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை நம்பி வாழ்பவர்கள் என்றும், தங்களின் சொந்த முயற்சியில் முன்னேறுவதில் தோல்வி அடைந்துவிட்டனர் என்றும் அந்த புத்தகத்தில் வான்ஸ் விவரித்திருப்பார்.

அப்பலாச்சியர்கள் பற்றி எழுதும் போது, "அவர்கள் மோசமான சூழலை படுமோசமான வழியில் எதிர்கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூக வீழ்ச்சியை எதிர்ப்பதற்கு பதிலாக ஆதரிக்கும் கலாச்சாரத்தின் விளைவுகள் அவர்கள் என்றும் மேற்கோள்காட்டியுள்ளார் வான்ஸ்.

"உண்மை மிகவும் கடினமானது. மலைவாழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நிலைப் பற்றி அவர்கள் கூறுவது மிகக் கடினமான உண்மை," என்று அவர் எழுதினார்.

மேட்டுக்குடி மக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த வான்ஸ், தன்னுடன் வாழ்ந்தவர்களின் நீடித்த தோல்விக்கு முற்றுப்புள்ளியாக தன்னை முன்னிறுத்தியிருப்பார்.

ஜே.டி.வான்ஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக மாற்றியது மட்டுமின்றி ஹில்பில்லி எலேஜி புத்தகம் அவரை கருத்தாளராகவும் மாற்றியது.

புத்தகம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

இந்த புத்தகம் வெளிவந்த போது வான்ஸின் விடாமுயற்சி அவரை மிடில்டவுனில் இருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்டது. முதலில் அமெரிக்க ராணுவத்துக்கு, பின்னர் ஈராக்குக்கு. பின்பு ஓஹையோ பல்கலைக்கழகத்திற்கும், யேல் சட்டப் பள்ளிக்கும், கலிஃபோர்னியாவில் கேபிடலிஸ்ட்டாவும் அவரை வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றன.

நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக மாற்றியது மட்டுமின்றி ஹில்பில்லி எலெஜி புத்தகம் அவரை கருத்தாளராகவும் மாற்றியது. உழைக்கும் வர்க்க வெள்ளை வாக்காளர்களுக்கு டிரம்ப் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி வான்ஸிடம் தொடர்ந்து கருத்து கேட்கப்பட்டது.

அன்றைய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட டிரம்பை விமர்சிக்கும் எந்த வாய்ப்பையும் அவர் விட்டுவைக்கவில்லை.

2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேர்காணல் ஒன்றில், "இந்த தேர்தல் வெள்ளை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார் வான்ஸ்.

"இது (தேர்தல்) என்ன செய்கிறது என்றால் மெக்சிகோ குடியேறிகள், சீன வர்த்தகம், ஜனநாயகக் கட்சியில் உள்ள பணக்காரர்கள் என்று யாரோ ஒருவர் மீது மக்கள் கைகாட்ட ஒரு வாய்ப்பை வழங்குகிறது," என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஜேடி.வான்ஸ், டிரம்ப்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்புடன் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ்

வென்ச்சர் கேபிடலில் இருந்து அரசியலுக்கு வந்தது எப்படி?

2017ம் ஆண்டு ஓஹையோவுக்கு திரும்பி வந்த வான்ஸ் தொடர்ச்சியாக வென்ச்சர் கேபிடல் துறையில் பணியாற்றினார். யேல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பழகி, திருமணம் செய்து கொண்ட வான்ஸ் - உஷா தம்பதியினருக்கு ஈவான், விவேக் என இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர்.

சான் டியாகோவில் இந்திய வம்சாவளியினருக்கு மகளாக பிறந்த உஷா, தன் கணவரின் பின்னணிக்கு முற்றிலும் மாறாக இருந்த சூழலில் வளர்க்கப்பட்டார். உஷா பட்டபடிப்பை யேலில் படித்தார். பட்டமேற்படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். சட்டப்பள்ளியில் படிப்பை முடித்தவுடன் அவர், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜான் ராபர்ட்ஸிடம் எழுத்தராக பணியாற்றினார். உஷா தற்போது ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

நீண்ட காலமாகவே அரசியல் வேட்பாளராக வான்ஸின் பெயர் அடிபட்டு வந்தது. 2022ம் ஆண்டு, ஓஹையோவின் குடியரசுக் கட்சியின் செனட்டர் ராப் போர்ட்மென், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்க, அதனை ஒரு வாய்ப்பாக பார்த்தார் வான்ஸ்.

ஆரம்பத்தில் அவரின் பரப்புரை மிகவும் மெதுவாக நகர்ந்தது. அவரின் முன்னாள் முதலாளி, சிலிக்கான் வேலியின் பீட்டர் தியேல், சுமார் 1 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க பரப்புரை சூடுபிடிக்க துவங்கியது. ஆனால் டிரம்ப் மீதான அவர் வைத்த கடுமையான விமர்சனம், ஓஹையோவின் குடியரசுக் கட்சியில் தேர்வு செய்யப்படுவதற்கு தடங்கலாக மாறியது.

தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கூறினார் வான்ஸ். நிலையை சீராக்கி டிரம்பின் அனுமதியையும் நம்பிக்கையும் பெற்றார். பிறகு குடியரசுக் கட்சியில் முன்னிலை தலைவராக உயர்ந்து இறுதியில் செனட்டிற்கு சென்றார்.

இந்த பயணத்தில், Make America Great Again என்ற கொள்கையில் முக்கிய பங்காற்றி, டிரம்பின் அஜென்டாவில் முழுதாக தன்னை இணைத்துக் கொண்டார்.

டொனால்ட் டிரம்பும், ஜே.டி.வான்ஸும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஜே.டி.வான்ஸ்

சர்வதேச பிரச்னைகளில் வான்ஸின் நிலைப்பாடு என்ன?

செனட்டில் பழமைவாதிகளின் ஆதரவுகளை கணிசமாக கொண்டிருக்கும் அவர், ஜனரஞ்சக பொருளாதார கொள்கைகளை ஆதரித்து வருகிறார். மேலும் யுக்ரேனுக்கு போரில் உதவுவது குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்ட செனட்டில், அவர் அறிமுகம் செய்த மசோதாகள் அரிதாகவே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அவை, கொள்கை ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக கருத்துகளை சொல்வதாகவே இருந்தது.

சமீபத்தில், காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான நிதியையும், ஆவணங்களற்ற புலம்பெயர் மக்களை பணிக்கு அமர்த்தும் கல்லூரிகளுக்கான நிதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மசோதாவை அறிமுகம் செய்தார்.

சர்வதேச வணிக சட்டங்களை சீனா பின்பற்றாத சூழலில், அமெரிக்க முதலீட்டு சந்தைகளில் இருந்து சீன அரசை நீக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு மார்ச்சில் ஆதரவு அளித்தார் வான்ஸ்.

கத்தோலிக்கராக வான்ஸ் 2019ம் ஆண்டு ஞானஸ்தானம் பெற்றார். ஆரம்பத்தில் தேசிய அளவில் 15 வாரங்களுக்கு பிறகான கருக்கலைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில், மாகாணங்கள்தான் இதில் முடிவெடுக்கும் என்ற டிரம்பின் கருத்தையே அவரும் ஏற்றுக் கொண்டார்.

2022ம் ஆண்டு ஹிட்லர் என டிரம்பை அழைத்தது தொடர்பான செய்தி வந்த போது, வான்ஸின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அதை மறுக்கவில்லை. ஆனால் வான்ஸின் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

ஜேடி.வான்ஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பும், ஜே.டி.வான்ஸும்

குடியரசுக் கட்சியினரும் மற்றவர்களும் எப்படி இதைப் பார்க்கிறார்கள்?

திங்கள்கிழமை அன்று மில்வாக்கி வளாகத்தை அடைந்த போது வான்ஸிற்கு பெரிய அளவில் வரவேற்பு வழங்கப்பட்டது. ஓஹையோ அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து நின்ற அவரை அறிமுகம் செய்த போது அதிகாரிகள், தலைவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

"பணிவான ஆரம்ப காலத்தை கொண்டவர். இளையவர்" என்று வடகிழக்கு ஓஹையோவில் உள்ள போர்டாஜ் பகுதியின் கட்சித் தலைவராக உள்ள அமெண்டா சஃப்கூல் கூறினார்.

சனிக்கிழமை அன்று டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், ஜனநாயக கட்சியினரைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த முதல் குடியரசு கட்சியினர்களில் வான்ஸும் ஒருவர்.

"பைடனின் பரப்புரையில் மையமாக இருந்தது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகார பாசிசவாதி. அவரை எந்த சூழலிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான். இந்த பிரச்சாரம் தான் பிறகு டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு வித்திட்டது," என்றும் ட்வீட் செய்திருந்தார் வான்ஸ்.

இந்த தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் வரை வான்ஸை ஜனநாயக் கட்சியினர் டிரம்பின் பிரதியாகத்தான் காண்பார்கள் என்று திங்கள் கிழமை வான்ஸின் விமர்சனத்துக்கு பதில் கூறிய பைடன் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)