டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் மீது எழும் கேள்விகள்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - அமெரிக்க ரகசிய சேவை முகமை மீது எழும் கேள்விகள்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், பென்சில்வேனியாவின் பட்லரிலிருந்து கேரி ஓ'டொனோக்&பெர்ண்ட் டெபுஸ்மன், லண்டனிலிருந்து மேட் முர்ஃபி
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரசார பொதுக்கூட்டத்தில் இருந்தபோது சுடப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு ரகசிய சேவை (Secret Service) பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது.

பட்லரில் பொதுக்கூட்ட மைதானத்தில் பார்வையாளர்கள் முன்பு நின்றுகொண்டிருந்தபோது தன் காதில் துப்பாக்கி தோட்டா துளைத்துச் சென்றதாக தெரிவித்துள்ள டிரம்ப், தற்போது தான் “நலமாக இருப்பதாக” தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரகசிய சேவை முகமையின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முதன்மை விசாரணை அமைப்பான மேற்பார்வை குழு முன்பு வரும் 22-ஆம் தேதி ஆஜராகி இதுதொடர்பாக சாட்சியம் அளிக்குமாறு, ரகசிய சேவை முகமையின் இயக்குநர் கிம்பெர்லி சீட்டில்-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ ரகசிய சேவை முகமை கொல்வதற்கு முன்னரே, அவரால் சுட முடிந்திருப்பது “ஆச்சர்யமாக” இருப்பதாக, உளவுத்துறை (FBI) சிறப்பு முகவர் கெவின் ரோஜெக் தெரிவித்தார்.

இந்த படுகொலை முயற்சி தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் உளவுத்துறை, ரகசிய சேவை முகமை, உள்துறை பாதுகாப்பு ஆகிய துறைகளும் ஈடுபட்டுள்ளன.

“முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பான பதில்களை அமெரிக்க மக்கள் கோருகின்றனர்,” என மேற்பார்வை குழு சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எப்படி நடந்தது?

சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்

சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 06:11 மணிக்கு டிரம்ப் தன் உரையை தொடங்கிய சில விநாடிகளிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அவர் விரைவாக வேறிடத்திற்கு, தயார் நிலையில் இருந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் அதிபர் கூட்டத்தை நோக்கி தன் முஷ்டியை உயர்த்தியபோது அவருடைய காதின் அருகே ரத்தம் வழிந்ததை காண முடிந்தது.

தன்னுடைய சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், “தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக” பதிவிட்டுள்ளார்.

"உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் வலது காதைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

“அதிக ரத்தம் வெளியானதால், பின்னர்தான் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன்.”

டிரம்ப் மீதான படுகொலை முயற்சியாக இதனை தாங்கள் கருதுவதாக கூறியுள்ள உளவுத்துறை, “துரிதமாக விசாரணை நடைபெற்று வருவதாக” தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய முகமையின் பாதுகாப்பு அதிகாரியால் கொல்லப்பட்டதாக, அந்த முகமையின் செய்தித்தொடர்பாளர் ஆண்டனி குக்லில்மி தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட பார்வையாளரும் படுகாயமடைந்த இருவரும் ஆண்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர்களின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேத்யூ க்ரூக்ஸ் “ஏ.ஆர் ரக துப்பாக்கி” மூலம் சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கட்டடத்திலிருந்து சுட்டதாகவும், சட்ட அமலாக்க வட்டாரங்கள் சிபிஎஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

துப்பாக்கியால் சுட்டது யார்?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், GETTY IMAGES

க்ரூக்ஸிடம் அடையாள அட்டை இல்லை என தெரிவித்துள்ள சிறப்பு முகவர் கெவின் ரோஜெக், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த படுகொலை முயற்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்து இனிதான் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

அரசு வாக்காளர் பதிவுகளின்படி, க்ரூக்ஸ் குடியரசு கட்சியில் பதிவு செய்யப்பட்ட நபர் என, அமெரிக்க ஊடக செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்கட்சியின் பிரசார குழுவுக்கு 15 டாலர்கள் (சுமார் ரூ. 1,250) நன்கொடை அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரகசிய சேவை முகமை எந்தளவுக்கு தயார்நிலையில் உள்ளது என்பது குறித்து கேள்விகள் எழுவதாக, டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்.

பிபிசி உலக சேவையிடம் பேசிய ஸ்டீஃபன் மூரே, “அச்சம் மிகுந்த நாள்” என இதனை குறிப்பிடுகிறார்.

“டிரம்ப்புக்கு நிச்சயம் மேலதிக பாதுகாப்பு தேவை. ரகசிய சேவை முகமை முற்றிலும் தயாராக உள்ளதா என்பது குறித்து இப்போது கேள்விகள் எழுகின்றன” என மூரே கூறுகிறார்.

எனினும், டிரம்ப்பின் பாதுகாப்பு குழு கூடுதல் பாதுகாப்பு கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கை “மறுக்கப்பட்டதாகவும்” “பொய்யான தகவல்கள்” பரப்பப்படுவதாக, ரகசிய சேவை முகமையின் செய்தித்தொடர்பாளர் ஆண்டனி குக்லில்மி தெரிவித்தார்.

“அத்தகவல் முற்றிலும் பொய்யானது. உண்மையில் பிரசார பயண டெம்போவில், பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பம், திறன்களை நாங்கள் அதிகப்படுத்தினோம்” என அவர் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் தன் ஆதரவாளர்களை நோக்கி டிரம்ப் பேசத் தொடங்கியபோதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய நிர்வாகம் குறித்து டிரம்ப் பேசியபோது, பலமுறை துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.

நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

பதாகைகள் ஏந்திய ஆதரவாளர்களும் டிரம்ப்புக்கு பின்னால் நின்றிருந்தவர்களும் துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு, சட்டென தலையை தாழ்த்திக்கொண்டனர்.

டிரம்ப் பேசிக்கொண்டிருந்த மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒற்றைதள கட்டடத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என, அங்கிருந்த பார்வையாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட கிரேக் என்பவர் பிபிசியிடம் கூறுகையில், டிரம்ப் மேடையில் ஏறிய சுமார் 5 நிமிடங்களில், அக்கட்டடத்தின் மேற்கூரையில் தான் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் "கரடி போன்று தவழ்ந்து வந்ததை” கண்டதாக தெரிவித்தார். அந்த நபரை தான் போலீசாரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.

“அவரிடம் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை எங்களால் தெளிவாக காண முடிந்தது,” என்கிறார் அவர், “அவரை நாங்கள் காண்பித்த பின்னர், போலீசார் மைதானத்தில் அங்குமிங்கும் ஓடினர், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை” என்றார்.

அப்பிரசாரத்தில் இருந்த டிம் என்ற நபரும், “சரமாரியாக” துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

“முன்னாள் அதிபர் டிரம்ப் கீழே படுத்ததைக் கண்டோம், உடனேயே நாங்களும் கீழே படுத்தோம்.”

தாங்கள் நான்கு தோட்டா சத்தத்தைக் கேட்டதாக, வாரென் மற்றும் டெபி பிபிசியிடம் கூறினர்.

ரகசிய சேவை முகவர்கள் கூட்டத்திற்கு மத்தியில் வந்து எல்லோரையும் கீழே இறங்குமாறு கூறியதையடுத்து தாங்கள் இறங்கியதாக அவர்கள் கூறினர். பார்வையாளர்கள் குழப்பங்களுக்கு மத்தியிலும் அமைதி காத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

“இது எப்படி நடந்தது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை” என வாரென் கூறுகிறார்.

தங்களுக்கு பின்னால் இருந்த ஒரு சிறுமி தான் இறக்க விரும்பவில்லை எனக்கூறி அழுததாகவும், “ஏன் இது நமக்கு நடக்கிறது?” என கேட்டதாகவும் டெபி கூறுகிறார்.

“அது என் இதயத்தை நொறுக்கியது,” என்கிறார் டெபி.

குடியரசு கட்சியின் பிரதிநிதி ரோனி ஜேக்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் தன் மருமகன் காயமடைந்ததாக கூறுகிறார். கழுத்தில் சிறுகாயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் சம்பவ இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

தலைவர்கள் கூறுவது என்ன?

ஜோ பைடன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோ பைடன்

தன்னுடைய சொந்த மாகாணமான டெலவாரில் பேசிய அதிபர் பைடன், இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

“இத்தகைய வன்முறைக்கு அமெரிக்காவில் எந்த இடமும் இல்லை,” என அவர் தெரிவித்தார். “எல்லோரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.”

வாஷிங்டனுக்கு திரும்புவதற்கு முன்னதாக பைடன், டிரம்ப்பிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

2020 தேர்தலுக்குப் பிறகு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனுக்கு டிரம்ப் கடும் போட்டியாளராக உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இரு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“நம்முடைய ஜனநாயகத்தில் இத்தகைய அரசியல் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை” என தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “டிரம்ப் படுகாயம் அடையாதது தன்னை ஆசுவாசப்படுத்தியதாக” தெரிவித்தார்.

டிரம்ப்பின் முந்தைய அரசில் துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் கூறுகையில், தானும் தன் மனைவியும் டிரம்ப்புக்காக பிரார்த்திப்பதாகவும், அதில் “அனைத்து அமெரிக்கர்களும் இணைய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

அவையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் அதிபர் டிரம்ப், என்னுடைய எண்ணங்களிலும் வேண்டுதல்களிலும் இருக்கிறார். இதில் சட்ட அமலாக்க துறைகளின் உடனடி எதிர்வினைக்கு நன்றி. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. அரசியல் வன்முறை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், “டிரம்ப்பின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்தவற்றை கண்டு திகைத்ததாக” தெரிவித்தார்.

“எத்தகைய அரசியல் வன்முறைக்கும் நம்முடைய சமூகத்தில் இடம் இல்லை. என்னுடைய எண்ணங்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கின்றன,” என தன் அறிக்கையில் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மில்வாக்கியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அதிபர் தேர்தலுக்கான தன் கட்சியின் வேட்புமனுவை டிரம்ப் ஏற்கவுள்ளார் என, அவருடைய பிரசார மேலாளர்கள் தெரிவித்தனர்.

குடியரசு கட்சியினர் சிலர் இந்த துப்பாக்கிச் சூடுக்கு அதிபர் பைடனை குற்றம்சாட்டினர். டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவது குறித்த அச்சத்தை பைடன் தூண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளர் இறுதிப்பட்டியலில் இருப்பதாகக் கருதப்படும் மேலவை உறுப்பினர் ஜே.டி.வான்ஸ், பைடன் பிரசாரத்தில் பேசிய கருத்துகள் நேரடியாக இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தது என்றார்.

குடியரசு கட்சியின் பிரதிநிதி மைக் காலின்ஸ், “படுகொலையை தூண்டியதாக” பைடன் மீது குற்றம்சாட்டினார்.

அவையின் மேற்பார்வை குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர், ரகசிய சேவை முகமையின் இயக்குநர் தன் குழுவின் முன் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)